சோதி என்னும் பன்முக ஆளுமை

சோதி என்னும் பன்முக ஆளுமை

— கருணாகரன் — 

கலை இலக்கியச் செயற்பாடுகளிலும் ஊடகத்துறையிலும் செயற்பட்ட சிவஜோதியை இழந்து விட்டோம். தேசிய கலை இலக்கியப் பேரவை, கொழும்புத் தமிழ்ச்சங்கம், கிளிநொச்சி கலை இலக்கிய நண்பர் வட்டம்,  மக்கள் சிந்தனைக்களம் மற்றும் நூலகம் ஆவணமாக்கல் பிரிவு,  இலக்கியச் சந்திப்புகள் போன்ற பலவற்றோடு இணைந்து பங்காற்றிய சிவஜோதி, நல்லதொரு ஆற்றற் கலைஞர்.  

தினகரன் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றியவர். இறுதியாக கிளிநொச்சியில் உள்ள Little Aid  பொது அமைப்பின் இலவசக் கணினிக் கல்வி மையத்தின் நிர்வாக இயக்குநராகச் செயற்பட்டிருந்தார். சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியின் பழைய மாணவரான சிவஜோதியின் பயணப்பாதை வித்தியாசமானது. அந்த வித்தியாசமே அவருடைய இழப்பைக் குறித்து ஆழமாக உணரவும் அவரைப் பற்றிப் பேசவும் வைக்கிறது. 

தலைமுறைகளைக் கடந்து எல்லோருடைய மனதிலும் ஒருவர் மதிப்பாகப் பதிகிறார் என்றால் நிச்சயமாக அவரிடம் பல சிறப்பியல்புகளும் திறன்களுமிருக்க வேண்டும். அதிலும் எந்த விதமான அதிகாரமும் இல்லாமலே பலருடைய மனதிலும் அன்பாக அவர் விளைகிறாரென்றால், அவர் அன்பாலான இனிய குணங்களும் எல்லோரையும் சமநிலையில் கொள்ளக் கூடிய உறவையும் கொண்டிருக்க வேண்டும். அப்படியான ஒரு நண்பரே சிவஜோதி. தன்னை எப்போதும் மற்றவர்களுக்குப் பின்னே வைத்துக் கொள்வதும் மற்றவர்களின் உணர்வுகளை முன்னிறுத்திச் செயற்படுவதும் சிவஜோதியின் இயல்பு. இந்தப் போட்டியுலகில் இப்படியான இயல்போடு வாழ்வது கடினம். வாழ்ந்தாலும் ஒரு வெற்றிகரமான அடையாளமாக உருப்பெறுவது அதை விடக் கடினம். எல்லாவற்றையும் விட இந்த இயல்போடு குடும்பத்திற்குள் நின்று பிடிப்பது மிகமிகச் சவாலானது. 

ஆனால், இந்த இயல்பை மாற்றிக் கொள்ளாமல்தான் சிவஜோதி வாழ்ந்திருக்கிறார். இதற்காக அத்தனை சவால்களையும் ஏற்றிருக்கிறார். எதிர்கொண்டிருக்கிறார். இதற்குக் காரணம், தன்னிலும் தான் கொண்டிருக்கும் நிலைப்பாட்டிலும் உள்ள தெளிவும் உறுதிப்பாடுமே.  

ஒருவரிடமுள்ள தெளிவே அவருக்கான உறுதிப்பாட்டைக் கொடுக்கும். அந்த உறுதிப்பாட்டுக்கு தெளிவான நல்ல சிந்தனை வேண்டும். அந்தச் சிந்தனை பொது நிலைப்பட்டதாக இருப்பது அவசியம். தன்னுடைய இளமையிலேயே பொதுநிலைப்பட்ட இடதுசாரியச் சிந்தனைக் குழாத்தினருடன் தன்னை இணைத்துக் கொள்ளும் வாய்ப்பு சிவஜோதிக்குக் கிடைத்திருக்கிறது. தேசிய கலை இலக்கியப் பேரவையின் தொடர்பு இதில் முக்கியமானது. அதில் பெற்றுக் கொண்ட அறிவும் அனுபவமும் மனப்பாங்கும்தான் பின்னாளில் சிவஜோதியை வழிப்படுத்தியிருக்கின்றன என்று எண்ணுகிறேன். 

சிவஜோதியை 2009 க்குப் பிறகே  நேரில் சந்தித்தேன். அதற்கு முன்பு அவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, சந்தித்ததில்லை. தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்பாடுகள், அது முன்னெடுத்த புத்தகப் பண்பாட்டு நிகழ்வுகளில் சிவஜோதி கூடுதலாகப் பங்களித்துக் கொண்டிருந்தார் என தேவராஜாவும் அழ. பகீரதனும் சொன்னார்கள். பின்பு, சந்தித்த சில நாட்களிலேயே நெடுங்கால நண்பரைப் போல உணர்வில் நிறைந்து விட்டார் சிவஜோதி. 

சிவஜோதியினுடைய பழகும் விதம், பண்பான நடத்தை, சமூக அக்கறை,  பொதுச்செயற்பாடுகளில் கொண்டுள்ள ஆர்வம், கலை, இலக்கியப் பிடிப்பு,  வாசிப்பில் உள்ள ஈடுபாடு, நட்பை உறவாகக் கொண்டாடும் முறை,  சமத்துவ நோக்கு,  வெளிப்படைத்தன்மை, கூடிச் செயலாற்றும் பாங்கு எனப் பல விசயங்கள் அவருடன்  நெருக்கமாக்கின. என்னை மட்டுமல்ல, பலரையும்தான். உலகம் முழுவதிலும்  உள்ள சோதியின் நண்பர்கள்  அனைவரையும் சோதி இவ்வாறான  விசயங்களின் மூலம்  ஆட்கொண்டிருக்கிறார். வானமே சோதியின் எல்லை. சமத்துவச் சிந்தனையாளர்களுக்கு எப்போதும் இப்படி விரிந்த உறவே உண்டு. 

சிவஜோதியைப் பற்றிச் சொல்லும்போது முக்கியமாக குறிப்பிட வேண்டியது, கிளிநொச்சியில் ஒரு இளைய தலைமுறை சிவஜோதியினால் உருவாகியிருக்கிறது என்பதை.  2015இல் தன்னுடைய நண்பரான தேசம் ஜெயபாலனின் ஏற்பாட்டினால், கிளிநொச்சிக்கு வந்த சிவஜோதி அங்கே இயங்கிக் கொண்டிருந்த கலை, பண்பாட்டு மன்றத்தின் Little Aid என்ற தொழில் திறன் விருத்திக்கான கணினிக் கல்வி  மையத்தின் நிர்வாக இயக்குநராகச்  செயற்பட்டார். Little Aid போரினால்  பாதிக்கப்பட்ட பிரதேசத்தின்  இளைய தலைமுறையைக்கான  தொழில் வழிகாட்டல், தொழிற் பயிற்சி, கணினி அறிவூட்டல் மையமாகும். இது தொண்டு அடிப்படையில் இலவசமாக அறிவையும் ஆளுமை விருத்தியையும்  செய்யும் நிறுவனம். லண்டனில் உள்ள  ஈழத்தமிழர்கள் சிலர் இந்தப்பிரதேச  மக்களின் – குறிப்பாக இளைய  தலைமுறையின் எதிர்காலத்தைக்  குறித்துச் சிந்தித்து உருவாக்கிய  அமைப்பே Little Aid. அதைப்  பொறுப்பேற்று நடத்திய சோதி,  ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களை  பயிற்று வித்திருக்கிறார். ஒவ்வொரு  மாணவரையும் அவர்களுடைய பல்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் Little Aid இன் செயற்பாடுகளையும்  கற்றலையும் மாற்றியமைத்தது  சோதியின் சிறப்பு. முக்கியமாக  ஒவ்வொருவரையும்  ஆளுமையுள்ளவர்களாக சோதி  மாற்றினார். அல்லது அவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்வதற்கான  களமாகத் தன்னை மாற்றி வாய்ப்புக்  கொடுத்தார். இதனால் இளைய தலைமுறையினரின்  மனதில் பேரிடத்தைப் பெற்றார். அதில் பயில வந்த இளைய தலைமுறையினருடன் தொடங்கிய சிவஜோதியின் செயற்பாட்டுப் பயணம், முல்லைத்தீவு வரையில் விரிந்தது. பயிலும் மாணவர்களோடு கொண்ட உறவும் பாதிக்கப்பட்ட சூழலைச் சேர்ந்த மாணவர்களைப் பற்றிய புரிதலும் சிவஜோதியை அவர்களோடு நெருங்க வைத்தது.  

பயில்தல் – பயிற்றுவித்தல் என்பதற்கு அப்பால், எல்லோருமாகக் கூடிச் செயற்படுதல் என்றவாறாக சிவஜோதி செயற்பாடுகளை வடிவமைத்தார். இதனால் அந்த மாணவர்களின் பெற்றோரோடும் அவர்கள் வழியாக சமூகத்தோடும் நெருங்கினார். இந்த நெருக்கத்தின் மூலம் சமூகத்தின் நிலையைத் தெரிந்து கொண்டு தன்னுடைய நண்பர்கள் வழியாகவும் தனக்குத் தெரிந்த அமைப்புகள் மூலமாகவும் இந்த மக்களுக்கான உதவிகளைச் செய்யத் தொடங்கினார். ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏராளமான உதவிகளை, வளர்ச்சியை நோக்கிய திட்டங்களை தனியாளாகச் செய்து முடித்த சிவஜோதி, இதைப்பற்றி எங்கும் பிரஸ்தாபித்ததும் கிடையாது. பதிவு செய்ததும் இல்லை. ஆனால், தொடர்ந்து வேலை செய்து கொண்டேயிருந்தார். 

இதுதான் சிவஜோதியை எல்லோரும் விரும்பக் காரணம்..  குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும். இளைய தலைமுறையினரிடம் மூத்த தலைமுறையினர் மதிப்பைப் பெறுவது இன்றைய வாழ்க்கைச் சூழலில், வாழ்க்கை முறையில் எளிதான விசயமல்ல. ஆனால், சிவஜோதி அதிலே வெற்றியடைந்திருக்கிறார்.  

Little Aid இன் பணிகளோடு  கிளிநொச்சி கலை இலக்கிய நண்பர் வட்டம், மக்கள் சிந்தனைக்களம் – கிளிநொச்சி ஆகியவற்றிலும் சோதி இணைந்து  செயற்பட்டார். கிளிநொச்சியில் நடந்த இலக்கியக் கூட்டங்கள், சந்திப்புகள், திரையிடல்கள், ஓவியக் காட்சிகள், நாடகங்கள் எல்லாவற்றிலும் சோதியிறுப்பார். எங்கள் வீட்டுக்கு வருகின்ற எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்  பலரோடும் சோதிக்கு உறவிருந்தது.  அல்லது உறவைக் கொண்டாடினார். 

இதன்போதெல்லாம் சோதி தன்னை  வெளிப்படுத்திக் கொண்ட விதம்  ஈர்ப்பானது. எந்தப் பணியையும்  பொறுப்பெடுத்துச் சிறப்பாகச் செய்யும்  திறனும் இணைந்து செயற்படுவதில்  கொள்ள வேண்டிய அடிப்படைப்  பண்புகளும் சோதியின்  அடையாளங்கள். 

முக்கியமாக கிளிநொச்சியில் நடந்த  வன்னி இலக்கியச் சந்திப்பிற்காக சிவஜோதி தீவிரமாகச் செயற்ப்பட்டார்.  அதற்கான திட்டமிடலில் தொடங்கி,  நிகழ்வுக்கான நிர்வாகப் பொறுப்பில்  சோதியும் அவருடைய துணைவி  கௌரியும் தயாளனுமாக இணைந்து  செயற்பட்டனர். இப்படிப் பன்முக ஆற்றலோடும் பல தளங்களிலும் நின்று வானவில் வண்ணமாக ஒளிர் முகம் கொண்டு செயற்பட்டு வந்த சிவஜோதியை எதிர்பாராத நிலையில் இழந்து விட்டோம். இது மரணங்களை அதிகமாகச் சந்திக்கும் கொவிட் 19 யுகம். ஆனாலும் சிவஜோதியின் இழப்பு மிகத் துயரமாக, தாங்கிக் கொள்ள முடியாததாகவே உள்ளது. 

சோதி பற்றியும் சோதியின் அடையாளம் குறித்தும் நிறைய எழுதலாம். எழுத  வேண்டும். இன்று எல்லாவற்றுக்கும்  அப்பால் மிக அன்பான ஒரு தோழனை,  இனிய சகோதரனை இழந்து  நிற்கிறோம்.