காணாமல்போன தான்தோன்றிகளுக்கான போராட்டம்

காணாமல்போன தான்தோன்றிகளுக்கான போராட்டம்

— சிக்மலிங்கம் றெஜினோல்ட் —

காணாமலாக்கப்படுதலின் இழப்புத் தருகின்ற ஒரு கதையை அண்மையில் படித்தேன். யோசுவா அடிகள் எழுதிய கதை அது. ஆனால், அந்தக் கதையில் நீங்கள் அறிந்த மாதிரிக் காணாமலாக்கப்பட்ட சங்கதிகளில்லை. அது வேறு. இது வேறு. கதை இப்படித்தான் தொடங்குகிறது.  

காணாமலாக்கப்படுதலுக்கு எதிராக முதியவர் ஒருவர் உண்ணாவிரதமிருக்கிறார். “இப்படி உண்ணா விரதமிருக்கிறதால என்ன பயன்? தேவையில்லாத பிரச்சினைகள்தான் வரும்” என்று அந்த ஊரவர்கள் சொல்கிறார்கள். ஆனால், முதியவர் அசைவதாக இல்லை. 

அப்பொழுது அங்கே ஒரு வெள்ளை வான் (white van) வருகிறது. சனங்கள் என்னவோ ஏதோ என்ற அச்சப்படுகிறார்கள். வந்த வாகனம், முதியவர் உண்ணாவிரதமிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் நிற்கிறது. அதிலிருந்து ஒரு பெண் இறங்குகிறாள். அவள் அந்த முதியவரைப் படம் பிடிக்கிறாள். தொடர்ந்து மற்றவர்களும் இறங்குகிறார்கள். அவர்களில் சிலர் வெளிநாட்டுப் பிரதிநிதிகள். அச்சத்தோடு கலைந்த சனங்கள் இப்பொழுது  மெல்ல மெல்ல அந்த இடத்தை நோக்கி வருகிறார்கள். 

சனங்கள் கூடி வந்தபோது வாகனத்தில் வந்த பெண்ணின் தந்தை சனங்களைப் பார்த்துச் சொல்கிறார், “இந்தப் பெரியவரின் உண்ணாவிரதத்தை நாங்கள் முடித்து வைக்க வந்திருக்கிறோம். அவருடைய கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றப்போகிறோம். அதை நாங்களும் நீங்களுமாக இணைந்தே நிறைவேற்ற  வேண்டும். அது நம்மால் முடியும். இந்தச் சேதியை இன்று உலகம் அறிந்து ஆச்சரியப்படப்போகிறது. இது காணாமலாக்கப்படுவதற்கு எதிரான ஒரு போராட்டம் மட்டுமல்ல, அந்தப் போராட்டம் இன்று செயல்வடிவம் பெறப்போகிறது. எந்தப் போராட்டமும் செயல் வடிவம் பெறும்போதே அது வெற்றியளிக்கும். ஆனால், இந்தப் போராட்டத்தை ஆரம்பித்து, அது செயல்வடிவம் பெறுவதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்தப் பெரியவரை நாங்கள் மதிக்கிறோம். காணாமலாக்கப்படுவதைப் பற்றிய இந்தப் பெரியவரின் துயரக் கதைகளைச் சொல்கிறோம், கேளுங்கள்….” என. 

சனங்கள் வியப்போடு பார்க்க, அவர்கள் சொல்லும் அந்தக் கதைகளே நமக்கான சேதி.  

முதியவர் உண்ணாவிரதமிருந்தது, தன்னுடைய வாழ்விலும் அயற் சூழலிலும் காணாமலாக்கப்படும் பச்சரசிக் காளான்கள் தொடக்கம் பல்வேறு வகையான இயற்கைக் காளான்கள், பாலவரைகோழியவரைகொத்தவரை, பறுகவரைபுளியவரைகுமுட்டில்,  முல்லைமுசுட்டைமொசுமொசுக்கை, முடக்கொத்தான்குப்பைக்கீரை, புளிக்கீரைபனங்கீரை, குப்பைமேனி, கொவ்வைகீழ்காய் நெல்லி, பொருத்துமான்கொடிதூதுவளை, குறிஞ்சாவாதநாராணிநாயுருவி, புளியோதரைமுடிதும்மைதகரை என்ற தான்தோன்றிகளெல்லாம் காணாமலாக்கப்படுவதற்கு எதிராகவே. 

ஏனென்றால், இந்த ஒவ்வொரு தான்தோன்றிகளும்தான் முன்பு – முப்பது ஆண்டுகளுக்கு முதல் – எங்கள் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்தவை. இவையில்லாமல் எங்களுடைய நாளாந்த உணவிருக்கவில்லை. வாழ்வுமிருக்கவில்லை.  இதனால் நோயும் அதிகமிருக்கவில்லை. அப்படித்தான் உடலில் ஏதாவது நோயோ பிணியோ அண்டினால், அதையும் இந்தத் தான்தோன்றிகளே விரட்டியடித்தன. மூலிகைகளாக.  

ஆனால், இதையெல்லாம் நாங்கள் இன்று காணாமலாக்கி விட்டோம். வளவுகளிலும் சூழலிலும் இவை இன்றில்லை. இதையெல்லாம் இப்பொழுது யாரும் ஆக்கிச் சாப்பிடுவதுமில்லை. அப்படியே எல்லாவற்றையும் கைவிட்டாயிற்று. ஏதாவது வியாதி என்றால் சிலர் மூலிகைக்காக தேடித்திரிகிறார்கள்.  அவ்வளவுதான். 

ஆனால், இதைப்பற்றியெல்லாம் ஏராளம் கதைகளுண்டு என்று அங்கே ஒரு கதை சொல்லப்படுகிறது. அது அங்கே உண்ணாவிரதமிருந்தவரோடு சம்மந்தப்பட்ட கதை. அதுதான் காணாமலாக்கப்பட்ட கதை.   

“பச்சரசிக் காளான் என்ற ஒரு வகைக் காளான் முன்பு நம்முடைய ஊர்களிலிருந்தது. அது அருமையான வாசனையும்  நல்ல ருசியுமாக இருக்கும். அந்தக் காளானைச் சமைத்துச் சாப்பிடுவோம். அதிலுள்ள விசேச குணம் என்னவென்றால், பெண்கள் கருவுறுவதற்கு அது கூடுதல் வாய்ப்பைத் தரும். அப்படிச் சாப்பிட்டுப் பிறந்தவள்தான் இதோ இந்தப் பெண். இந்த முதியவரின் தாய்தான் என்னுடைய மனைவிக்கு பச்சரசிக் காளானில் கறியாக்கிக் கொடுத்தார்” என்கிறார் அந்தப் பெண்ணின் தந்தை. 

”பச்சரசிக் காளானா?”  என்று எல்லோரும் ஆச்சரியமாகக் கேட்கிறார்கள். “அதைப்பற்றித் தெரியாதே” என்கிறார்கள் அங்கே நிற்கிற சிலர்.  

“எனக்குத் தெரியும். அதைப்பற்றி நான் சொல்கிறேன்” என்று அங்குள்ள இன்னொரு பெண், தனக்குத் தெரிந்த கதையைச் சொல்கிறார். அந்தக் கதையில் வருகின்றவர்களே இப்பொழுது இந்த உண்ணாவிரதமிருக்கும் முதியவரிடம் வந்திருக்கிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள்… 

“இப்படி ஒரு காலம் எல்லோருடனும் கூடியிருந்த காளான்களும் இன்றில்லை. முல்லை, முசுட்டை, கொவ்வை என்ற கொடிகளும் பனங்கீரை, பசளி, குப்பைக் கீரை, குப்பை மேனி, புளிக்கீரை, குமிட்டில் என்ற கீரைகளும் இல்லை. அவரையினங்கள் அத்தனையும் அற்றுப் போய்விட்டன. இதையெல்லாம் விட்டு விட்டு இப்பொழுது நாங்கள் hybrid உற்பத்திகளிலும் விதையற்ற (Seedless)வற்றிலும் அடமானமாகியிருக்கிறோம்.  

எல்லாமே hybrid மயமாகி விட்டன. Hybrid கோழி. Hybrid மாடு. Hybrid மரக்கறிகள்… அல்லது  கருவற்ற முட்டை, கருவற்ற (Infertile) கோழிகள்” என்று எங்கள் வாழ்க்கையை அடமானம் வைத்திருக்கிறோம். இந்த அடமானத்திலிருந்து எங்கள் வாழ்க்கையை மீட்க வேண்டும். இல்லையென்றால் எங்களுடைய வாழ்க்கையாக – எங்களுக்குரிய வாழ்க்கையாக இருக்காது. அது மற்றவர்களின் கையில் இருக்கும் வாழ்க்கையாகவே இருக்கும்.  

நீங்கள் காணாமலாக்கப்பட்டதுக்காகப் போராடுவதாக இருந்தால் இப்படி எல்லாவற்றையும் சேர்த்து, அதற்காகவே போராட வேணும். அதுதான் சரியான போராட்டம். இங்கே இந்த முதியவரின் போராட்டம் உங்களின் விழிகளை, மனதை, சிந்தனையைத் திறக்க வேணும் என்பதற்கான போராட்டம். உங்களுடைய கைகளில் இருந்தவற்றை மீளப் பெறுவதற்கான விழிப்புணர்வைத் தரும் போராட்டம். உங்களின் சூழலில் இருந்ததையெல்லாம் மீளக் காண்பதற்கான போராட்டம். உங்கள் இழந்த வாழ்வை மீளப் பெறுவதற்கான போராட்டம். அதற்கான கண் திறப்புக்காகவே அவர் இங்கே இப்படி இருக்கிறார்…” 

இந்த கதையைக் கேட்கும்போது உண்மையில் காணாலாக்கப்பட்டதும் காணாமற் போனதும் என்ன என்று நமக்குத் தெரியவருகிறது. 

எல்லாவற்றையும் இந்தச் சிறிய காலத்துக்குள் (முப்பது ஆண்டுகளுக்குள்) காணாமலாக்கி விட்டு கிளினிக் (Clinic card) காட்டுடன் மருத்துவனைகளுக்கு அலைந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவருடைய வீட்டிலும் பாமர்ஸிக்கென தனியான ஒரு Deparment உருவாகியுள்ளது. 

காணாமலாக்கப்படுதலின் துயரத்தை தாங்க முடியாமல் திணறிக் கொண்டிருப்போர் நாம். அது எதிராளிகளினால் ஏற்பட்ட இழப்பும் துயரும். இந்தக் காணாமலாக்கப்படுதலைச் செய்தது நாமே. நமக்குள் நாம் செய்த இழப்பும் துயரும் இது. 

தேசமொன்றுக்காகப் போராடியவர்கள். இன்னும் அந்தக் கனவோடு இருக்கிறோம் என்று சொல்வது முக்கியமல்ல. அதற்கான அடிப்படைகள், சுயாதீனத்தன்மை, தனித்துவ அடையாளம், பண்பாடு, வாழ்க்கை முறை, நம்முடைய சூழலின் வேர்கள் என்பதற்காகவெல்லாம் போராடும் நாம் இதைக் குறித்தெல்லாம் சிந்திக்காமலிருப்பது ஏன்?  

யோசுவா காட்டுகின்ற திசை வேறுதான். அது யதார்த்தமான, உண்மையான, தேவையான அடிப்படைகளை – வேர்களைத் தேடும் பயணத் திசை.