— சபீனா சோமசுந்தரம் —
‘டேய் மச்சான் இதோட சரிடா.. இனிமேல் அவளோட நான் கதைச்சிட்டா பாரேன்..‘ என்றான்ஒருவன்.
‘டேய்.. என்னடா நடந்த.. இப்ப மூணு மாசமோ என்னவோ தானோ நீ அவள லவ் பண்ற.. அதுக்குள்ள என்னடா சண்ட..‘ என்றான் இன்னொருவன்.
‘பொண்ணாடா அவ.. ராட்சசி.. ஒரு கிஸ் பண்ணன்டா.. ஏதோ ரேப் பண்ண மாதிரி ஓவரா பண்றாடா..‘என்றான் கையிலிருந்த பியரை குடித்தபடி.
‘டேய் லவ்ல இந்த சண்டெயல்லாம் ஒரு விசயமே இல்ல.. கல்யாணம் முடிச்ச அனுபவசாலி சொல்றன் கேட்டு நடந்துகொள்ளு..‘ என்று சொல்லி நக்கலடித்தான் மற்றவன்.
‘ஆமா ஆமா நீயும் உன் கலியாணமும்.. டேய்.. மச்… மச்சான்.. ராஜ்.. அடேய்.. பிருத்விராஜ்..‘ என்று உளறிக்கொண்டு அந்தபக்கமாக திரும்பி கைபேசியில் ஏதோ பேசிக்கொண்டிருந்த பிருத்விராஜீன் தோளை தட்டினான் பிருத்வியின் நண்பன்.
அன்று ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் மூவரும் சேர்ந்து குடித்துக் கொண்டிருந்தனர் அந்த ரெஸ்டோரன்டில். அழைப்பை துண்டித்து விட்டு திரும்பி ‘டேய் மனுசனாடா நீங்க.. ஒரு போன் கதைக்க விடாம கத்துறீங்களேடா..‘என்றான் பிருத்வி.
‘மச்சான்.. நீ பிறகு கதை.. இப்ப சொல்லு.. லவ் பண்ணுறவள கிஸ் பண்ணா தப்பா?.‘ என்றான் அவன் நண்பன்.
‘டேய் இவன் என்னடா கேக்கிறான்..‘என்று மற்ற நண்பனை பார்த்தான் பிருத்வி.
‘மச்சான் அவன் ஆளோட ஏதோ கசமுசா.. பொடியன் ஓவரா குடிச்சிட்டான்.. வா வெளிக்கிடுவம்.. பிறகு நான் வீட்ட போகேலாது.. என்ட பொஞ்சாதி தும்புத்தடியோட நிப்பாள்..‘ என்றபடி எழுந்தான் அவன்.
அதிகம் குடித்த நண்பணை வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தான். நேரம் பதினொன்றை காட்டியது. வர தாமதமாகும் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு போனதால் கதவை தாழிடாமல் விட்டிருந்தார் அவன் அம்மா. கதவை மெல்ல திறந்து உள்நுழைந்து, மீண்டும் கதவை தாழிட்டுவிட்டு நேராக தன் அறைக்கு போய் கட்டிலில் விழுந்து படுத்தான் பிருத்விராஜ்.
குடித்துக்கொண்டிருக்கும் போது இடையில் அலுவலக விடயமாக அழைப்பு வரவும் பேசிக்கொண்டிருந்தான் பிருத்வி. ஆனாலும் நண்பர்கள் இருவரினதும் உரையாடல் அவன் காதில் விழாமல் இல்லை. நண்பன் தனது காதலிக்கு முத்தம் கொடுத்ததை பற்றி பேசிக்கொண்டிருந்தது ஞாபகம் வர, அவன் மனதை ஆக்கிரமித்தாள் நிருஜா.
பிருத்வியும் நிருஜாவும் ஆறு வருடங்களாக காதலிக்கிறார்கள். ‘இப்ப தானே அவன் லவ்பண்ண ஸ்டார்ட் பண்ணான்.. கிஸ் பண்றான்.. நான் ஏன் இதுவரைக்கும் நிருஜாவ கிஸ் பண்ணவேயில்ல..‘ என்று மனதிற்குள் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.
வேகமாக எழுந்து கைபேசியை எடுத்து அழைப்பை ஏற்படுத்தினான்.
‘ஏய் தூங்கிட்டியாடி..‘ என்றான்
‘பின்ன இந்த நேரத்தில என்ன செய்யிறது.. தூங்கிறவள எழுப்பி தூங்கிட்டியா என்ற..‘ என்றாள் அவள் தூக்கக்கலக்கத்தோடு.
‘இல்லடி ஒரு வேள தூங்காம முழிச்சிட்டு இருப்பியோன்னு எடுத்தன்..‘ என்று குழைந்தான் அவன்.
‘நல்லா குடிச்சிருக்க தானே.. பின்ன என்ன.. போய் தூங்கு போ..‘ என்றாள் அவள்.
‘அடியேய் ப்ரண்ஸோட குடிக்க போறன்னு சொல்லிட்டு தானே போனன்.. எதுக்கு இப்ப கோவம் உனக்கு..‘ என்றான் அவன்.
‘கடவுளே.. வதைக்காதாடா.. கோவமில்ல.. டைம் ஆகிட்டு தூங்குன்னு சொன்னன்.. நாளைக்கு எனக்கு வேலடா..‘ என்றாள் அவள் கொஞ்சலாக.
‘ம்ம்ம்… ஆமா என்ன.. சரி ஒரே ஒரு நிமிசம்.. ஒன்டு கேக்கிறன் உன்னட்ட.. கோவிப்பியா என்ன..?என்றான் குரலை கொஞ்சம் குறைத்து.
‘என்னவோ சரியில்ல நீ.. என்ன குடிச்ச நீ.. இல்ல வேற ஏதும் பண்ணிட்டு வந்திருக்கியா..‘ என்றாள் கொஞ்சம் அதிகாரமாக.
‘ஐயோ அப்டி இல்லடி.. ம்ம்ம்… சரி.. விடு.. வேணா.. நா வைக்கிறன்.. நாளைக்கு கதைக்கிறன்..‘ என்றான் அவன்.
‘டேய் வைக்காத.. பிருத்வி நீ ஓகேவா இருக்க தானே.. சாப்பிட்டியாடா.. ஏதும் பிரச்சினையா..‘ என்றாள் அவள் கவலை தோய்ந்த குரலில்.
‘ச்சேக்.. தூங்கிட்டு இருந்தவள எழுப்பி வீணா கஸ்டப்படுத்திறனே..‘என்று மனதிற்குள் திட்டிக்கொண்டு‘இல்லம்மா.. ஒரு பிரச்சினையும் இல்ல.. ப்ரண்ட் அவன் ஆளபத்தி கதைச்சிட்டு இருந்தான்.. அதான் எனக்கு ஒன் ஞாபகம் வந்தது.. கோல் எடுத்தன்..‘ என்றான் அவன்.
‘அடேய்.. சீரியஸா.. எனக்கு வாற கோவத்துக்கு.. இரு நான் நாளைக்கு கதைச்சிக்கிறன்.. மரியாதையா போய் தூங்கு .. சொல்லிட்டன்..‘ என்று கோபமாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள் அவள். புன்னகைத்துக்கொண்டே கைபேசியை கட்டிலில் போட்டுவிட்டு மறுபடியும் விழுந்து படுத்து தூங்கிபோனான் பிருத்விராஜ்.
பிருத்விராஜ் முப்பதியொரு வயது இளைஞன். அதிகம் பேச மாட்டான் ஆனால் கடும் உழைப்பாளி. நெருங்கிய இரண்டு நண்பர்கள் அம்மா அப்பா தம்பி தங்கைகள் என அவன் உலகம் ஒரு வட்டத்துக்குள்ளேயே இருந்தது. நடுத்தர குடும்பம் பிருத்வியினுடையது. அவன் நெட்வேர்க்கிங் படிக்க என்று ஆசைப்பட்டு அதை படித்தான். படிப்பு முடிந்ததோடு வேலை தேடி அலைவதை விட்டு தன் படிப்போடு சம்மந்தப்பட்ட தொழிலை தொடங்கினான். ஆரம்பத்தில் பணவிரயங்கள் தோல்விகள் ஏமாற்றங்கள் என பலவற்றை எதிர்கொண்டான் பிருத்வி ஆனால் தனிமையை மட்டும் அவன் வாழ்வில் அனுபவிக்கவில்லை காரணம் நிருஜா.
நிருஜாவை அவன் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் பேருந்து பயணத்தில் தான் முதன்முதலாக சந்தித்தான். அவன் ஒரு நாள் வகுப்புக்கு போகும் போது பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிய நேரம் ஸ்கூட்டியில் வந்த நிருஜா வேகக் கட்டுப்பாடில்லாமல் அவன் மீது மோதி விட்டாள். அந்த மோதல் அப்படியே காதலில் வந்து முடிந்தது.
அவன் படிப்பை முடித்து தொழில் ஒன்றை தொடங்கி வாழ்வில் ஒரு நிலையை எட்டிப்பிடிக்கும் அத்தனை தருணங்களிலும் அவனோடு இருந்தவள் அவள். அவன் எதை செய்ய முயன்றாலும் ‘சரிடா நீ ஸ்டார்ட் பண்ணு.. நான் எதுக்கு இருக்கன்.. நாம பாத்துக்கலாம் எல்லாத்தையும்..‘ என்பாள். பல நாட்கள் மணிக்கணக்கில் நெருங்கி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். சில நேரங்களின் அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதுகூட இருக்கிறாள் அவனும் ஆதரவாக அணைத்து தலையை வருடி சமாதானப்படுத்தியிருக்கிறான். ஆனாலும் ஒரு முறை கூட அவளை அவன் முத்தமிட்டதில்லை.
அன்றைய சம்பவத்திலிருந்து பிருத்விக்கு அவளை முத்தமிட வேண்டுமென்ற ஆசை பேராசையாக உருவெடுத்தது. ‘ஒருவேளை தவறாக எடுத்துக்கொண்டு அவள் கோபித்துக்கொண்டால் என்ன செய்வது.. எனக்கு உரிமை இருக்கிறது தானே.. இதில என்ன பிழையிருக்கு முத்தம் தானே..‘ என்று தனக்குத்தானே குழம்பிக்கொண்டிருந்தான்.
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலைநேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. நிருஜா கைபேசியில் அழைத்தாள்.
‘எங்கடா இருக்க.. நான் ஒருக்கா ப்ரண்ட் வீட்ட போகணும்.. வாவன் போய்வருவம்..‘ என்றாள்.
‘மழ வாற மாதிரி இருக்கேடி..‘என்றான் அவன்.
‘நீ இப்ப வாறியா.. இல்லயா..?’என்றாள் அவள் குரலை உயர்த்தி.
‘சரி வெளிக்கிடு வாறன்..‘ என்று சொல்லிவிட்டு தயாராகி கிளம்பினான்.
நிருஜாவின் வீட்டுக்கு முன்னால் பைக்கை நிப்பாட்டிவிட்டு அவளுக்காக காத்திருந்தான். அவள் வந்தாள் சேலை அணிந்திருந்தாள் காதில் சின்ன ஜிமிக்கியும் நெற்றியில் பொட்டும் வைத்து தலைமுடியை ஒதுக்கி கழுத்தின் ஒருபுறமாக விட்டிருந்தாள். தினமும் அவளை பார்க்கும் அவனுக்கு இன்று ஏனோ அவளின் அழகு மட்டும் தனித்து தெரிந்தது.
‘ப்பாபா.. என்ன அழகுடா இவள்.. இவ்வளவு நாளா நமக்கு கண் தெரியலாயா என்ன..?’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டு நின்றான்.
பக்கத்தில் வந்த அவள் ‘டேய் என்ன நின்டிட்டே கனவு காணுற..‘ என்று அவன் தோளில் தட்டினாள்.
‘ச்சேச்சே.. அப்டில்லாம் ஒன்னும் இல்லடி.. சும்மா தான்.. இந்த சாறி.. நல்… நல்லாஆஆ.. இருக்கு.. அதான் பாத்தன்..‘ என்று தலையை கோதியபடி திக்கினான்.
‘ஓஹோ.. நீ இப்டியெல்லாம் கதைக்கிற ஆளில்லையே.. ம்ம்ம்.. இப்ப ஒரு கிழமையா நீ நல்லாவே இல்லயே..’
‘ஏதோ நேத்துதான் பழகின மாதிரி தள்ளி நிக்கிற.. கதைக்கேக்க ரொம்ப திக்கிற.. ஒரு மாதிரி நெளியிற.. என்னடா.. வீட்ட கலியாணத்துக்கு பொண்ணு பாத்திட்டாங்களோ..‘என்றாள் ஒரு மாதிரி நக்கலாக.
‘ஏய்.. லூசு.. அப்டி இல்லடி.. ம்ம்ம்… ஐயோ உனக்கு லேட் ஆகுது பாரு.. வா போவம்..‘ என்று ஒருவழியாக பேச்சை மாற்றி அவளை ஏற்றிக்கொண்டு பைக்கை ஸ்டார்ட் பண்ணினான் பிருத்விராஜ்.
போகும் வழியில் மழை தூறத்தொடங்கிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக மழை பெருக்கத் தொடங்கியது. பைக்கை நிப்பாட்டிவிட்டு அங்கிருந்த பேருந்துத் தரிப்பிடத்தில் போய் நின்றார்கள். மழைச்சாறல் வேகமாக அடிக்கவும் நிருஜா அவனை சுவர் பக்கமாக விட்டு தான் எதிர்பக்கமாக வந்து நின்று கொண்டாள் அவனுக்கு தூறல் படாத வண்ணம்.
‘நிரு நீ நனையிறடி.. இங்கால வா..‘என்று அவன் சொல்லவும்
‘இல்லடா உனக்கு தான் மழைல நனையிறது ஒத்துவாறதில்ல.. உடனயே காச்சல் வந்திடும்..‘ என்று சொல்லி புன்னகைத்து இன்னும் அவனை நெருங்கி வந்து நின்று கொண்டாள்.
‘உனக்கு ஞாபகம் இருக்கா பிருத்வி..‘ என்று தொடங்கி ஏதோ பழைய கதை ஒன்றை அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். அவனுக்கு அவள் பேசுவது எதுவும் காதில் விழவில்லை. சில்லென்று காற்றோடு சேர்ந்து அடிக்கும் மழைசாரலும் அவளது நெருக்கமும் அவனுக்கு முத்தத்தை ஞாபகப்படுத்தியது.
நிருஜாவுக்கு நகை அணியும் பழக்கம் இல்லை. காதில் காதணி மட்டும் விதம்விதமாக போட்டுக்கொள்ளுவாள். நெற்றியில் பொட்டு வைக்க மறக்க மாட்டாள். அவளுடைய அந்த பழக்கம் கூட பிருத்விக்கு அவளிடம் இருக்கும் ஈர்ப்புக்கு ஒரு காரணம். மழையில் நனைந்து ஈரமாகிய தலைமுடி அவள் கழுத்தில் நீர் சொட்ட விழுந்து கிடந்தது. அவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டே நின்றான்.
மழையும் ஓய்ந்துவிட்டது. ‘டேய் மழ விட்டுட்டு.. வா போவம்..‘ என்று திரும்பியவளது கையை பிடித்து தன் பக்கம் இழுத்து அவள் கழுத்தில் முத்தமிட்டான் பிருத்வி.
நிருஜாவுக்கு அங்கு நடந்ததை உணர சில கனங்களானது. மழையில் நனைந்து குளிராக இருந்த போது திடீரென கழுத்தில் உணர்ந்த அந்த வெப்பமும் நொடியில் அந்த சூடு உடல் முழுவதும் பரவியதை உணர்ந்த போது தான் அவளுக்கு புரிந்தது பிருத்வி தன்னை முத்தமிட்டான் என்பது.
ஆறு வருடமாக அவனை தெரியும் அழுகை சிரிப்பு வெற்றி தோல்வி என்று எல்லாவற்றிலும் கூடவே இருந்த துணை அவன். ஆனாலும் இந்த நொடி தான் அவன் தன்னை காதலிக்கிறான் என்பதை அவள் மனம் உணர்ந்தது போல் தோன்றியது நிருஜாவுக்கு.
நிமிர்ந்து அவன் கண்களை பார்த்து ‘இண்டைக்கு தான் உனக்கு கிஸ் பண்ண தோணிச்சா..‘ என்றாள். கண்களாலேயே பேசியபடி.
ஒரு வேகத்தில் மனம் கட்டுப்பாடிழந்து முத்தமிட்டுவிட்டான். இனி அவள் என்ன சொல்வாளோ? கோவித்துக்கொண்டு பேசாமல் இருப்பாளோ என்றெல்லாம் கலங்கிக் கொண்டு நின்றவன் அவள் அப்படி கேட்கவும்
‘ஏய்.. சொறிடி.. தப்….பா… நினைக்கிறியா..? நான்… வந்து… எப்டி சொல்….ல…‘ என்று அவன் தடுமாறிக்கொண்டிருக்க அவனை இன்னும் நெருங்கி அவனது நெஞ்சில் கைவைத்து அழுத்தி மெல்ல எட்டி அவனது உதடுகளில் முத்தமிட்டாள் நிருஜா. அந்த அழகான காதலின் முதல் முத்தத்தை நனைக்க மீண்டும் தூறலை ஆரம்பித்தது மழை.