— எழுவான் வேலன் —
மட்டக்களப்பு தமிழர்களின் பண்பாடு இறந்த உடல்களை எரிப்பதா? புதைப்பதா? என்கின்ற ஒரு வாதம் அரங்கம் பத்திரிகையின் ஊடாக முகநூலில் எழுப்பப்பட்டிருப்பதைக் காணக் கிடைத்தது. இது தொடர்பாக எனது நண்பருடன் இடம்பெற்ற உரையாடல் ஒன்றை அடிப்படையாக வைத்து இப்பத்தியினை எழுதுகின்றேன்.
எனது நண்பரிடம் தமிழ் சமூகம் மேலைத்தேய மயமாதல் மற்றும் சமஸ்கிருத மயமாதல் ஆகிய இரண்டு விதமான தாக்கங்களுக்கு உட்பட்டு தனது பண்பாட்டை, தனது சுயத்தை, அடையாளத்தை இழந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டேன். அதற்கு சில உதாரணங்களையும் முன்வைத்தேன். மட்டக்களப்பின் திருமணச் சடங்குகள், கோயில் சடங்குகள், மரணவீட்டுச் சடங்குகள் எவ்வண்ணம் எமது கண்முன்னே மாறிக் கொண்டு வந்துள்ளன என்பதை உதாரணங்காட்டினேன்.
அதாவது மணவறை அமைத்து அதில் மணமக்களை இருத்தி குருக்களைப் பிரதானப்படுத்தி அவரின் எடுபிடிகளாக பெற்றோர்களும் மணமக்களும் இருக்கின்ற திருமணச்சடங்கு மட்டக்களப்புக்கு உரியதல்ல என்றும் “கலத்தில் போடுதல்”தான் மட்டக்களப்பின் திருமணச்சடங்காக இருந்து வந்தது என்பதையும் அதில் பெற்றோர்களுக்கு இருந்த முக்கியத்துவத்துவமும் திருமணத்தின் உண்மைத்தன்மையும் தற்போதய திருமணங்களில் இல்லை என்பதையும் தற்போதைய திருமணங்கள் சமஸ்கிருத மயமாதலின் விளைவு எனவும் விளங்கப்படுத்தினேன். இது போன்றே மரணவீட்டுச் சடங்கும் புதைப்பதிலிருந்து எரிப்பதற்கு மாறிக் கொண்டு போவதை உதாரணங்களுடன் விளக்கினேன்.
முஸ்லிம்களுக்கு இந்த சமஸ்கிருதமயமாதல் பொருந்தாது அல்லவா? என நண்பன் கேட்டான், ஆம் அவர்களுக்கு சமஸ்கிருதமயமாதல் பொருந்தாது ஆனால் அவர்கள் சமஸ்கிருதமயமாதலுக்கு ஒப்பான அடிப்படை இஸ்லாமியமயமாதலுக்கு உள்ளாகிறார்கள் என்றேன். அது எவ்வாறு என்று கேட்டான், இரண்டு உதாரணங்களை எடுத்துக்காட்டினேன்.
ஒன்று நாம் சின்ன வயதாக இருக்கும் போது இலங்கையில் நான்கு இன மக்களையும் அடையாளப்படுத்துவதற்காக புத்தகங்களில் வரையப்பட்டிருக்கும் நான்கு இன மக்களுடைய உடை அடையாளம். அவ்வாறான அடையாளம் கொண்ட மக்களை இன்று காணமுடிகிறதா? என வினவினேன், குறிப்பாக முஸ்லிம் பெண்கள் தங்களுடைய முக்காட்டை விட்டு பர்தாவுக்குள் 1980களுக்குப் பின்புதான் போனார்கள். திறந்த பொருளாதாரக் கொள்கையின் விளைவால் ஏற்பட்ட மத்தியகிழக்கு நாடுகளுடனான உறவினால் உருவான அடிப்படை இஸ்லாமியமயமாக்கம் அது எனக் குறிப்பிட்டேன்.
இரண்டாவதாக இறந்த மதப்பெரியவர்களைப் புதைத்து வழிபடும் மரபு இஸ்லாமியர்களிடம் இருக்கின்றது, உதாரணமாக கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல், சம்மாந்துறையில் இருக்கும் மல்கம்பிட்டி பள்ளிவாசல், காத்தான்குடியிலும் ஒரு சில பள்ளிவாசல்கள் இருக்கின்றன. இந்தப் பள்ளிவாசல்களெல்லாம் அங்கு இருக்கும் சியாரங்களுக்காக வழிபடப்படுகின்றன. ஆனால் அடிப்படை இஸ்லாமியமயவாதம் இவ்வாறான வழிபாட்டையும் சடங்குகளையும் நிராகரிக்கின்றது. உதாரணமாக காத்தான்குடியில் வாழ்ந்த ‘பயில்வான்‘ எனும் மதப்பெரியவர் ஒருவரை அவருடைய போசகர்கள் அவரால் கட்டப்பட்ட பள்ளிவாசலுக்குள் புதைத்தபோது அவருடைய உடல் அடிப்படை இஸ்லாமியவாதிகளால் தோண்டி வெளியே எறியப்பட்டதோடு அந்தப் பள்ளிவாசலும் உடைக்கப்பட்டது.
பள்ளிவாசல்களில் வருடாவருடம் வழங்கப்படும் கந்தூரி எனப்படும் அன்னதானமும் இப்போது தடைசெய்யப்பட்டுள்ளது. இவையெல்லாம் அடிப்படை இஸ்லாமியமயவாதத்தின் பண்பாட்டு வெளிப்பாடுகள் ஆகும்.
எனவே சமஸ்கிருதமயமாதல், அடிப்படை இஸ்லாமியமயமாதல் எனும் இரு போக்குகளையும் தெளிவாக விளங்கிக் கொள்கின்றபோதுதான், கொரானாதொற்றின் காரணமாக இறக்கின்றவரது உடலை எரிப்பதா? புதைப்பதா? எனும் பின்னால் உள்ள மதநிலை அரசியலைப் புரிந்து கொள்ளமுடியும் என்றேன்.
எல்லா மதங்களும் இறந்தவர்களைப் புதைத்து அவர்களை நினைவுகொள்ளும் மரபினைக் கொண்டிருந்திருக்கின்றன. புதைப்பதும் அந்த இடத்தில் ஒரு நினைவுச்சின்னத்தை அமைப்பதும் அவர்களை நினைவு கொள்வதற்காகத்தான். இந்த நினைவு கொள்ளல் அவரவர் அரசியல், பொருளாதார சமூகநிலைக்கேற்ப வேறுபடலாம். ஆனால் நினைவு கொள்ளல் எனும் அடிப்படை ஒன்றுதான். அதாவது சாஜகான் தனது மனைவி மும்தாயஜுக்காக காட்டிய தாஜ்மகாலும் ஒன்றுதான் சம்மாந்துறையில் மல்கம்பிட்டியில் இருக்கும் சியாரமும் ஒன்றுதான். இங்கு “ஒன்று” என்பது அவற்றினுடைய நோக்கத்தையே தவிர அதனுடைய கட்டட அமைப்பையோ அல்லது கலை நுணுக்கத்தையோ அல்ல.
புதைக்கின்றதன் நோக்கம் மதநிலைப்படுகின்றபோது புதைப்பதன் உண்மையான நோக்கம் இல்லாமல் போய்விடுகின்றது. அடிப்படை இஸ்லாத்தில் நடந்திருப்பது இதுதான். அந்த மதநிலையை கறாராகக் கடைப்பிடிக்கின்ற இஸ்லாமியர்கள் பயில்வான் மௌலவியின் உடலைத் தோண்டி வெளியே எறிந்தபோது தாங்கள் பின்பற்றுகின்ற மதநிலையை பயில்வானுக்கும் அவனுடைய குடும்பத்துக்கும் மற்றும் பயில்வானைப் பின்பற்றிய இஸ்லாமியர்களுக்கும் வழங்க மறுத்திருந்தார்கள். இவ்வாறு இவர்கள் மறுத்தபோது அந்த மௌலவிக்காக எந்த அரசியல்வாதியோ அல்லது ஊடகங்களோ எதுவும் பேசாது, அது அவர்களின் உள்வீட்டுப் பிரச்சினையாக மட்டுமே பார்த்தார்கள். இன்று அந்த மறுப்பை இஸ்லாமியர்களுக்கு பௌத்தம் செய்கின்றபோதுதான் அதன் வலியை உணர்கின்றார்கள்.
இவ்வாறு நான் கூறுகின்றபோது இஸ்லாமியர்களுக்கு இலங்கை அரசு செய்வது சரி என நியாயப்படுத்துவதற்கு அல்ல. தனிமனிதனாக இருந்தாலும் அவனுடைய நம்பிக்கைக்கும் சடங்குகளுக்கும் நாம் மதிப்பளிக்கின்ற பண்பாட்டை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே எனது வாதமாகும். எனவே பயில்வான் மௌலவிக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் செய்த தவறை உணர்ந்து அவர்கள் மனதார மன்னிப்புக் கோருவார்களாக இருந்தால் மட்டுமே இலங்கை அரசாங்கத்தை கண்டிக்கின்ற உரிமையும் அவர்கள் செய்வது மிக மோசமான செயல் எனக் கூறுவதற்கும் அதற்கெதிராகப் போராடுவதற்கும் அருகதையுடையவர்களாவார்கள்.
துரதிர்ஸ்ட்டவசமாக தங்கள் தவறினால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட வலியினை உணர்ந்து அதற்காக மன்னிப்புக் கோருகின்ற பக்குவம் அல்லது சமூகக் கடமை பெருமளவான முஸ்லிம் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், ஜனநாயகவாதிகள், கலைஞர்கள், மதப்பெரியோர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் காண்பது அரிதாகவே இருக்கின்றது. ஆனால் தங்களுக்குச் சார்பாக யாராவது எழுதினால், பேசினால் அது பற்றிக் கருத்துச் சொல்வதற்கு ஓடோடி வந்துவிடுவார்கள். அதையே சார்பாக அன்றி நியாயத்தின் பக்கமும் நேர்மையின் பக்கமும் நின்று நாம் எழுதினால் கள்ள மௌனம் காத்து கடந்து செல்வதை பல சந்தர்ப்பங்களில் முகநூல்களில் காணக்கிடைக்கின்றது.
உதாரணத்திற்கு வாழைச்சேனையிலுள்ள காளிகோயிலை இடித்து சந்தை கட்டுவித்தேன் என ஹிஸ்புல்லா பெருமிதமாக கூறுகின்றபோது அந்தக் காளிகோயிலை தங்கள் வழிபாட்டிடமாக வணங்கிய மக்களின் வேதனையை, உணர்வை எந்தவொரு முஸ்லிமும் உணர்ந்து அவர்களுக்கு ஆறுதலளிக்கக் கூடிய வகையில் எதுவுமே செய்ததாக அறியமுடியவில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போன்று பாபர் மசூதி உடைக்கப்பட்ட போது அதில் தொழுகை செய்யும் இஸ்லாமியர்களுக்கு இருந்த உணர்வும் வாழைச்சேனை காளிகோயில் உடைக்கப்பட்டபோது அங்கு வழிபடும் மக்களுக்கிருந்து உணர்வுக்கும் இடையில் எனக்கு எவ்வித வித்தியாசமும் தெரியவில்லை. இந்த மற்றையோர்களின் உணர்வை மதிக்காத பண்பாட்டைப் பேணிக் கொண்டு, அடிப்படை இஸ்லாமிய பெருங்கதையாடல்களுக்குள் கட்டுப்பட்டுத்தான் பௌத்த பேரினவாதத்துக்கு எதிராகப் பேசுகின்றனர்.
அடுத்து, மட்டக்களப்பாரின் மரணச் சடங்கிற்கு வருவோமென்றால் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று இங்கும் புதைப்பதுவும் அவரை நினைவு கொள்ளலுமே பண்பாடாக இருக்கின்றது. புதைத்த 3ம் நாள், 31ம் நாள் பின் ஒவ்வோர் ஆண்டும் அந்தப் புதைத்த இடத்திற்கு பாலூற்றி தீபம் ஏற்றுவது இன்றும் வழக்கத்திலுள்ள ஓர் நடைமுறையாகும். அப்பாவைப் புதைத்ததற்குப் பக்கத்தில் அம்மாவைப் புதைப்பதும் பின்பு அவர்களின் பிள்ளைகளை அவர்களின் அருகில் புதைப்பதும் இன்றும் வழக்கிலுள்ள பண்பாடுதான். இவ்வாறு அருகருகே புதைப்பதினால் அவர்கள் இறப்பிலும் ஒன்றாக அருகருகே இருக்கிறார்கள் எனும் நம்பிக்கையும் ஆறுதலும் கிடைக்கின்றது. இந்தப் பண்பாடு ஒன்றும் மட்டக்களப்புத் தமிழர்களுக்கு மட்டும் உரியதல்ல புராதன மொத்த தமிழ் பண்பாடுமே இறந்தவர்களைப் புதைத்து அவர்களை நினைவு கொள்வதுமாகத்தான் இருந்திருக்கின்றது. இந்தத் தொன்மைக் காலத்தின் தமிழ் பண்பாட்டின் எச்சங்கள் இன்றும் மட்டக்களப்பில் பேணப்படுவதை அவதானிக்கலாம். மட்டக்களப்பை புராதன தென்னிந்திய தமிழ் பண்பாட்டிலிருந்து பிரித்து நோக்காமல் இணைத்து நோக்குதல் வேண்டும்.
பேராசிரியர் கா.இந்திரபாலா அவர்கள் கூறுவார், ‘இலங்கையையும் தென்னிந்தியாவையும் பிரித்து நிற்கும் கடல் உண்மையில் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் கடல். அக்கடலின் இரு பக்கங்களிலுமுள்ள நிலப்பகுதிகள் ஒரு பொதுப் பண்பாட்டுப் பிரதேசத்தின் பாகங்கள். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வடக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் இந்நிலப் பகுதியில் மக்கள் பெயர்ச்சிகளும் பண்பாட்டுப் பரவலும் கடல் கடந்து நடைபெற்று வந்துள்ளன. பெரும் அரசியலமைப்புக்கள் இப்பிரதேசத்தில் தோன்றும் வரை, இத்தகைய மக்கள் நடமாட்டத்தையும் பண்பாட்டுப் பரப்பலையும் ‘அந்நியர் படையெடுப்பு‘ ‘அந்நியர் செல்வாக்கின் வருகை‘ என்றெல்லாம் வர்ணிப்பது தவறாகும். இவை ஒரே நிலப்பகுதிக்குள் ஏற்பட்ட பரிமாறல்களும் பெயர்ச்சிகளுமாம். இலங்கைத் தீவானது தொல்காலத்தில் தூர தென்னிந்தியப் பண்பாட்டு வலயத்துள் அடங்கிய ஒரு பாகம் என்பதை ஏற்றுக் கொண்டால், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலும் வரலாற்றுத் தொடக்க காலத்திலும் இங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளை ஒரு புதிய கண்ணோட்டத்தில் அவதானிக்க முடியும். அக்கண்ணோட்டம் இலங்கை தொடர்பாக, அதாவது இலங்கையின் வரலாற்றைப் பொறுத்தமட்டில், தென்னிந்தியாவை ஒரு அந்நியப் பிரதேசமாக நோக்காத கண்ணோட்டமாகும்.‘ என்பார்.
இந்தகைய புரிதலுடன் ஈழத்தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் அணுகுதல் முக்கியமானதாகும். அவ்வாறு அணுகுகின்ற போது புராதன தமிழ் சமூகத்தில் இறந்தவர்களது உடல் எரிக்கப்படாமல் புதைக்கப்பட்டு அவ்விடத்தில் நடுகற்கள் அமைக்கப்பட்டு வந்துள்ளதை சங்க இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
‘காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்த மரபில் பெரும்படை வாழ்த்தலென்று
இருமூன்று மரபிற் கல்லொடு புணரச்
சொல்லப்பட்ட எழு மூன்று துறைத்தே‘
என தொல்காப்பியம் உயிரிழந்தவர்களுக்கு நடுகற்கள் அமைத்தல் பற்றிக் குறிப்பிடுகின்றது. களுதாவளையில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்லொன்று தமிழர்களின் இந்த நடுகற் பண்பாடு அண்மைக்காலம் வரை மட்டக்களப்பில் புழக்கத்தில் இருந்ததை எடுத்துக்காட்டுகின்றது.
(களுதாவளைப் பொதுநூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது)
இக்கல்வெட்டானது மட்டக்களப்புத் தேசத்து வன்னிமை ச.கா.பி.நொ.சிதம்பரப்பிள்ளை 87 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 9 ஆம் திகதி மரணமடைந்தார் என்ற செய்தியைக் கூறுகின்றது. இந்த 87 என்பது 1887ம் ஆண்டாக இருந்தல் வேண்டும். அவ்வாறெனில் இன்றைக்கு 133 வருடங்களுக்கு முற்பட்ட கல்வெட்டு இதுவாகும். இங்கு வன்னிமை ஒருத்தரை எரிக்காமல் புதைத்திருக்கிறார்கள் என்பது கவனம் கொள்ளத்தக்கது.
இந்த நடுகற் பண்பாடு கிறிஸ்தவ மதத்தாக்கம் காரணமாக கல்லறை கட்டும் மரபாக மாறியிருக்கின்றது. சனத்தொகைப் பெருக்கம், இடுகாடுகளின் அளவு போதாமை என்பவை காரணமாக இன்று பல பிரதேச சபைகள் கல்லறைக்குப் பதிலாக இறந்தவருடைய நினைவாக இடுகாட்டினைச் சுற்றிக் கட்டப்படும் மதிலின் ஒரு பகுதியினைக் கட்டுமாறு கோருகிறார்கள். மட்டக்களப்பின் பல இடங்களில் இவ்வாறான மதில்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
யாழ்ப்பாணமும் தமிழகமும் சமஸ்கிருத மயப்பாட்டுக்குள்ளானதன் காரணத்தினால் உயிரிழந்தவர்கள் புதைக்கப்படாமல் எரிக்கப்படும் மரபு பின்பற்றப்படுகின்றது. தமிழகத்தில் சில சமூகங்களில் உயிரிழந்தவர்கள் புதைக்கப்படுவது அவர்களின் சாதிநிலையினைப் பொறுத்தமைகின்றது. இந்தச் சாதிநிலையினையும் எரியூட்டலையும் சமூகநிலைப்படுத்தியதுதான் சமஸ்கிருதமயமாக்கமாகும். அதாவது தமிழகத்தில் எரிக்கப்படாமல் புதைத்தால் அது மிகக் கீழ் சாதித்தனமாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால் மட்டக்களப்புச் சமூகத்தில் சாதி வேறுபாடுகளைக் கடந்து இறந்தவர்கள் அனைவரும் புதைக்கப்படுவதே இன்றும் மரபாக இருந்து வருகின்றது.
இந்த மட்டக்களப்பு மரபைப் புரியாத பணக்காரர்கள் பலர் சமஸ்கிருதமயப்பாட்டுக்குள்ளாகி புதைப்பது கீழான பண்பாடாகவும் எரிப்பதை உயர் பண்பாடாகவும் கருதுகின்றனர். இவ்வாறு கருதுகின்றவர்கள் தங்களுடைய உறவினர்களின் உடலை எரிக்கின்றனர். இவ்வாறு எரிப்பதினால் புதைப்பவர்களை விட தாங்கள் ஏதோ பெரிய மரணச்சடங்கைச் செய்து இறந்தவருக்கு பெரிய கௌரவம் வழங்கியிருக்கின்றோம் என உளத் திருப்தி கொள்வதோடு தங்களுடைய பணப் பெருமையையும் இதனூடாக வெளிப்படுத்துகின்றனர்.
தமிழ்த் தேசியம், தமிழ் பண்பாடு பற்றிப் பேசுகின்றவர்கள் தமிழர்களின் இறந்த உடலை புதைப்பதுதான் பண்பாடு என்பதை விளங்கிக் கொள்தல் வேண்டும். அவ்வாறு விளங்கிக் கொண்டதன் காரணத்தினால்த்தான் விடுதலைப்புலிகள் மாவீரர் துயிலும் இல்லங்களை அமைத்து, அங்கு தமது போராளிகளை புதைத்து, நடுகற்களை நட்டு நினைவுபடுத்தினார்கள். ஆனால் தமிழ்த் தேசியத்தின் காவலனாய் புதிதாய் அவதாரமெடுத்திருக்கும் சாணக்கியன் தமிழர் பண்பாடு தெரியாமல் உடலை புதைக்கின்ற உரிமை முஸ்லிம்களுக்கு வேண்டும் எனப் பேசுகின்றார். முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் புதைக்கின்ற உரிமை வேண்டும் என்பது அவருக்குத் தெரியாமலுள்ளது. சமஸ்கிருதமயமாதலின் பெருங்கதையாடலுக்குள் இவர்கள் கட்டுண்டு கிடப்பதினால் சமஸ்கிருதமயமாதல் அற்ற மட்டக்களப்பின் கிராமப்புற தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத மக்கள் பிரதிநிதிகளாக இருந்து அவர்களின் குரலாக ஒலிப்பது வேடிக்கையானதாகும்.
நான் இறந்ததும் எனது உடல் எனது அம்மாவுக்குப் பக்கத்தில் புதைக்கப்படவேண்டும் என்கின்ற ஒரு சாராசரி மட்டக்களப்புத் தமிழனின் நம்பிக்கையினையும் அவாவினையும் பூர்த்தி செய்வதற்கு அல்லது அந்தக்குரலை செவிமடுப்பதற்கு எந்த தமிழ் அரசியல்வாதியும் தயாராக இல்லை. நிலத்தை மீட்கும் அரசியல் செய்யும் இவர்கள் தமிழர்களின் பண்பாட்டை அழிக்கின்ற செயலை முதலில் நிறுத்தவேண்டும்.
எனவே முடிவாக சமஸ்கிருதமயமாதல் தமிழர்களின் சுயபண்பாட்டை அழித்து இன, சமூக வேறுபாட்டைக் கூர்மைப்படுத்துகின்றது. அடிப்படை இஸ்லாமியமயமாதலும் இந்நாட்டுக்குரிய இஸ்லாம் எனும் தனித்துவத்தை அழித்து மற்றவைகளின் உரிமையினை அடக்குகின்றது. எம்மைப் பொறுத்தவரையில் சமஸ்கிருதமயமாதல், அடிப்படை இஸ்லாமியமயமாதல் ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வு கொண்டவர்களாக இருப்பதுடன் அவரவர் அவரவராக இருப்பதற்கும் வாழ்வதற்கும் சிந்திப்பதற்கும், இறப்பின் பின் அவரது இறுதிக்கிரிகைகள் எவ்வாறு இருக்கவேண்டும் என விரும்பினாரோ அவ்வாறு செய்வதற்கும் உரிமையுடையவராக இருக்க வேண்டும் என்பதே எமது பேரவாவாகும்.