— பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —
“இது என் கதையல்ல, என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை”
எம்ஜீஆர் மன்ற நூல் நிலையத்தை அமைத்தமை. எனது அரும்பு மீசைக்காலத்தில் ஊருக்காக நான் விரும்பிச் செய்த பணி. வஞ்சகர்களால் அது எரிக்கப்பட்டமை எனக்கு மட்டுமன்றி, தோளோடு தோள் நின்று அந்தப் பணியில் தம்மை ஈடுபடுத்திய அத்தனை இளைஞர்களுக்கும் தீராத வேதனையக் கொடுத்தது. மீண்டும் நூலகத்தை அமைக்கின்ற எண்ணம் தோன்ற முடியாத அளவுக்கு எங்கள் இதயங்களில் நீண்ட நாட்களுக்கு அந்தச் சோகம் பரவி நின்றது.
அதேவேளை, ஊரில் நடைபெறும் ஊழல்களையும், தகிடுத் தனங்களையும் மட்டுமன்றிச் சமுதாயச் சீர்கேடுகளையும் நேரில் கண்டும், உணர்ந்தும் கொள்ளுகின்ற வாய்ப்பையும், அவற்றை எதிர்கொள்ளுகின்ற அனுபவத்தையும் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களும் எங்களுக்கு வழங்கின.
வேலைகள் எதுவும் இல்லாமல் தனித்திருக்கும்போதும், மாலை வேளையில் கூடிக் கதைத்திருக்கும்போதும், பலநூறு விடயங்களைப் பற்றி அலசிப்பார்க்கவும், ஆலோசிக்கவும் அவகாசம் கிடைத்தது. அந்தக்காலத்தில் ஊரிலிருந்த பெரும்பாலான வீடுகளின் கூரைகள் தென்னோலைக் கிடுகளினாலேயே வேயப்பட்டிருந்தன.
இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கிடுகுகள் மாற்றப்பட வேண்டும் அல்லது மழை பெய்தால் ஒழுக்கு ஏற்படும். அவ்வாறு புதிய கிடுகுகளை மாற்றுவதைக் “கிடுகு கட்டுதல்” என்று சொல்வார்கள்.
கிடுகு கட்டுவதற்கு இரண்டு போத்தல் சாராயமும், மதிய உணவும், ஆளுக்கு இரண்டு ரூபா சம்பளமும் கொடுக்க வேண்டும். அதற்கென்றே சிலர் இருந்தார்கள். உறவினர், நண்பர்கள் சம்பளம் வாங்காமல் உதவியாகவும் செய்வார்கள் ஆனால் எல்லோருக்கும் சாப்பாடும் சாராயமும் கொடுக்கவேண்டும்.
குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்குச் சாப்பாடாவது கொடுக்க வேண்டும் ஏழைகளுக்கு இது ஒருபாரிய செலவாக இருந்தது. அதிலும் வாழ்க்கைத் துணைவரை இழந்தவர்களுக்கும் வருவாய் போதியளவு இல்லாதவர்களுக்கும் கிடுகு கட்டுவது ஒரு சுமையான செயலாகவே இருந்தது.
இந்த விடயம் எங்கள் சிந்தனைக்கு வந்தது, இலவசமாக வீடுகளுக்குக் கிடுகு வேய்ந்து கொடுப்பதை சமூகசேவையாகச் செய்வதற்குத் தீர்மானித்தோம். செயலில் இறங்கினோம். ஒரு நாளைக்கு ஒருவீடு என்று தொடங்கி சில நாட்களில் மூன்று வீடுகளுக்குக்கூட கிடுகு கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அதனால், சனி, ஞாயிற்றுக் கிழமைகள் எங்களுக்கு வேலைப்பழு மிகுந்த நாட்களாக விடியத் தொடங்கின. சம்பளம் கொடுக்காமல், சாராயம் கொடுக்காமல் சாப்பாட்டுச் செலவும் இல்லாமல் தங்கள் வீடுகளுக்குக் கிடுகு வேயும் இந்த நிலைமை ஊர்மக்களுக்கு மிகவும் உதவியாயிருந்தது. எங்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது சில வீடுகளில் மரவள்ளிக் கிழங்கு அவித்து மாங்காய்ச் சம்பலுடன் எங்களுக்குப் பரிமாறினார்கள், அவர்களது மனத் திருப்திக்காக மறுக்காமல் அதனை ஏற்றுக்கொண்டோம். எங்களில் ஒருவரின் வீடாக இருந்தால் தங்கு தடையற்றுச் சாப்பிட்டும் மகிழ்ந்தோம். இரண்டு வருடங்களுக்கு மேல் இந்தப்பணி இனிதே தொடர்ந்தது.
இந்தக் காலத்தில்தான் நாடகக் கலையில் நாட்டம் உண்டானது. ஏற்கனவே, பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது சோக்கிரடீஸ் நாடகத்தையும், சாப்பாடா சமிபாடா என்ற நாடகத்தையும் நெறியாள்கை செய்து பாடசாலையின் பரிசளிப்பு விழாவிலே அரங்கேற்றிய அனுபவம் எனக்கு இருந்தது.
சோக்கிரடீஸ் – கலைஞர் கருணாநிதி எழுதியது. சாப்பாடா சமிபாடா – நான் எழுதியது. நண்பர்கள் நாங்கள் சும்மா பேசிக்கொண்டிருப்பதே சிலவேளைகளில் நாடகம்போல இருக்கும். அதனால் அவற்றை அப்படியே மெருகேற்றி மேடையில் ஏன் போடக்கூடாது என்ற எண்ணம் கருவானது. நாடகத்திற்கான மூலக்கதையினை நண்பர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கினோம். அதனால் அரங்கேற்றத்தின்போது மூலக்கதை “நவநடேசஅருள்ஸ்ரீஸ்” என்று குறிப்பிடப்பட்டது.
நவ என்பது, மருத்துவர் கு.நவரெத்தினசாமி, நடேஸ் என்பது இப்போது இலண்டனில் இருக்கும் இயன் மருத்துவர் ச.நடேசன். அருள் என்பது, இப்போது வணக்கத்திற்குரிய போதகராக இருக்கும் கு.ஜெ.அருள்ராஜா. ஸ்ரீஸ் என்பது இருவரைக் குறித்தது – என்னையும், சா.ஸ்ரீஸ்கந்தராசாவையும். நாடகத்தை எழுதும் பொறுப்பு என்னுடையதாயிற்று.
நம்மைச்சுற்றி நடைபெறுகின்ற சமுதாயச் சீர்கேடுகளையும், ஒழுக்க முரண்பாடுகளையும், தமிழ்மொழிப் புறக்கணிப்புக்களையும் வெளிப்படுத்தும் விதமாக வசனங்களை எழுதினேன்.
நரக லோகத்தில் இருந்த இலங்கையின் முன்னாள் நீதிபதி ஒருவரைத் தேவலோகத்திற்குத் தருவித்து விசாரணை நடாத்துவதாக நாடகத்தின் காட்சியை அமைத்தேன். ஐந்தாறு நாட்களில் எழுதி முடித்தேன். “கற்பனையில் தேவலோகம்” என்று பெயரிட்டேன்.
பாடசாலையில், மாலை வேளையில் நாடகப் பயிற்சி நடைபெற்றது. நாடகத்தின் பாத்திரங்களை ஏற்று நடித்த நண்பர்கள் எல்லோருமே க.பொ.த. உயர்தரம் படிப்பதற்குக் காத்திருந்தவர்கள்.
நாரதராக – நான்
சித்திரபுத்திரர் – கு.ஜெ.அருள்ராசா
யமதர்மன் – சா.ஸ்ரீஸ்கந்தராசா
நீதிபதி – அமரர் சா.கருணானந்தன்
குடிகாரக் குடும்பத் தலைவர் – ச.நடேசன்.
முதல் அரங்கேற்றம் களுவாஞ்சிகுடி வீரபத்திரர் ஆலயத் திருவிழாவின்போது, ஆலய வீதியில் அமைக்கப்பட்ட மேடையில் நடைபெற்றது. எதிர்பாராத அளவு வரவேற்பையும், புகழையும் அந்த நாடகம் எமக்குப் பெற்றுத்தந்தது.
அந்தக் கால கட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரவையினர் மாவட்டம் முழுவதும் கலாசாரப் போட்டிகளைப் பிரதேச ரீதியாக வருடா வருடம் நடாத்திவந்தார்கள்.
சில மாதங்களில் மண்முனை தென் எருவில் போரதீவுப்பற்று பிரதேச கலாசாரப் போட்டிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது எங்களையும் விண்ணப்பிக்குமாறு ஊரவர்கள் பலர் உற்சாகமூட்டினார்கள்.
முக்கியமாக, “கற்பனையில் தேவலோகம்” என்ற நாடகத்தைப் போட்டிக்கு விடுமாறு, சைவமகாசபைச் செயலாளராக இருந்த திரு.கோ.பாக்கியராசா அவர்கள் எங்களை மிகவும் ஊக்கப்படுத்தினார். மட்டக்களப்பு கச்சேரியில் தட்டெழுத்தாளராகப் பணியாற்றிய அவர் களுவாஞ்சிகுடி கிராமத்தின் இன்றியமையாத பிரமுகராகவும், சமூக சேவகராகவும், பின்னாளில் ஆலய பரிபாலன சபையின் ஆளுமைமிக்க உறுப்பினராகவும் இருந்தவர். அவரைப் பற்றிய பதிவுகளைப் பின்னர் தனியொரு அத்தியாயத்தில் தருவதற்கு எண்ணியுள்ளேன். அவரும் எங்களை நாடகப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு கூறியதனால் நாங்களும் போட்டியிடும் தீர்மானத்தை எடுத்தோம். அப்போதுதான் என்ன பெயரில் விண்ணப்பிப்பது என்ற கேள்வி எழுந்தது. உடனே தற்காலிகமாக “இளம் நாடக மன்றம்” என்று விண்ணப்பிப்போம் என்று நான் கூறவே எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். பின்னாளில் அதுவே நிரந்தரப் பெயராகி விட்டது.
பிரதேச கலாசாரப் போட்டிகள் அதற்கு முன்னர் சில வருடங்களாக நடைபெற்று வந்தாலும், களுவாஞ்சிகுடியின் சார்பில் அந்தப் போட்டிகளில் கலந்துகொண்டமை அதுவே முதல் தடவையாகும்.
பல கிராமங்களில் இருந்து நாடகங்கள் போட்டியில் கலந்துகொண்டன. எங்களது “கற்பனையில் தேவலோகம்” நாடகத்திற்கு சிறந்த நாடகத்திற்கான முதற்பரிசு கிடைத்தது.
அத்துடன், சிறந்த இயக்குனர், சிறந்த வசன கர்த்தா ஆகிய விருதுகளையும் எனக்குப் பெற்றுத்தந்தது.
உதவி அரசாங்க அதிபர் திரு. ஆ. தில்லைநாதன் அவர்களும், நாடகப் போட்டியின் நடுவனர்களாகப் பணியாற்றியிருந்த அமரர் அன்புமணி இரா.நாகலிங்கம் அவர்களும், பின்னாளில் மாகாணக் கலாசாரப் பணிப்பாளராகப் பணியாற்றிய திரு.எதிர்மன்னசிங்கம் அவர்களும் பல மேடைகளில் அந்த நாடகத்தினை நினைவுகூர்ந்து பாராட்டியுள்ளார்கள்.
பிற்காலத்தில் அவர்களது நட்பு எனக்குக் கிடைத்தமைக்கு அந்த நாடகமும், அதனைத் தொடர்ந்த எனது கலை முயற்சிகளுமே காரணங்களாகும்.
பாடசாலையில் நாங்கள் நாடகப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது திரு,பா.அரங்கநாதன் அண்ணன் பார்வையாளராக வந்து பின்னர் எங்களுடன் சேர்ந்துகொண்டார். பிற்காலத்தில் “கற்பனையில் தேவலோகம்” நாடகத்தின் கதையினைச் சற்று விரிவுபடுத்தி, சிவபெருமான் என்று ஒரு பாத்திரத்தினைச் சேர்த்தேன். சிவபெருமானாக அரங்கநாதன் அண்ணனை நடிக்க வைத்தோம். அவரது இணைபிரியாத நண்பராக இருந்த புலேந்திரன் அண்ணனும் எங்களுடன் வந்து இளம் நாடக மன்றத்தில் சேர்ந்து பல கலை நிகழ்ச்சிகளில் பக்குபற்றினார். பாண்டிருப்பு, நீலாவணை, தேற்றாத்தீவு, குருக்கள்மடம், மட்டக்களப்பு, முறக்கட்டான்சேனை முதலிய பல இடங்களில் கற்பனையில்தேவலோகம் நாடகம் அவ்வந்த ஊர்மக்களின் கோரிக்கையின்பேரில் அரங்கேறியுள்ளது.
(நினைவுகள் தொடரும்)