— அழகு குணசீலன் —
வணக்கம் …!
வாருங்கள்…. !!
இது மாநகர சபையின் வரவேற்பு வளைவு.
மட்டக்களப்பு மாநகர சபை உங்களை வரவேற்கின்றது.
மட்டக்களப்பு மாநகர சபை குறித்து அண்மைக்காலமாக பல செய்திகள் சமூக ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆரம்பத்தில் இவை மாநகரசபையின் செயற்பாடுகள் குறித்தும், முதல்வரின் செயற்றிறன் அற்ற தன்மை குறித்தவையாகவே அமைந்தன.
ஆனால் சமகாலத்தில் பாதீட்டு விவகாரம் மற்றைய பிரதேசங்களைப் போன்று மட்டக்களப்பு மாநகர சபையையும் விட்டு வைக்கவில்லை. உண்மையில் பாராளுமன்ற தேர்தல் காலத்தில் கூட்டாளிகள் கட்சிகளான தமிழரசுக்கும், ரெலோவுக்கும் இடையே ஏற்பட்ட இந்த வெடிப்பு இப்போது மெல்ல மெல்ல அகல விரிந்துள்ளது.
இந்த நிலையில் இது முதல்வர் சரவணபவானுக்கும், பிரதி முதல்வர் சத்தியசீலனுக்கும் இடையிலான ஒரு பதவிப் போட்டியா? என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது. பிரதி முதல்வர், ஊடகவியலாளர் மாநாட்டில் முதல்வர் சரவணபவான் மாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார். இது வெறும் பத்தோடு பதினொன்றான கோரிக்கை அல்ல.
ரேலோ அடைக்கலநாதனுக்கு கூட்டமைப்பு பேச்சாளர் பதவி வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை தேர்தலுக்குப் பின்னர் இருந்து பேசு பொருளாக உள்ளது. சுமந்திரன் தனக்கு இல்லை என்றால் சிறிதரனுக்கு கிடைக்கவேண்டும் என்று வாதிடுகிறார். இந்த நிலையில் பிரதம கொறடா பதவியை துறந்துள்ள சிறிதரன் பேச்சாளர் பதவிக்கு தன்னை வெற்றிடமாக்கி உள்ளார்.
இது ரெலோவுக்கும், தமிழரசுக்கும் இடையிலான உறவை ஆழ, அகல தோண்டுவதாக உள்ளது.
வெளிவந்து கொண்டிருக்கும் இன்னொரு விடயம் பாராளுமன்றத்தில் பேசுவதற்கான நேர ஒதுக்கீட்டில் ரெலோ, புளட் உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவதாகும். ‘ஜனா’வின் நேரத்தை சாணக்கியன் சுருட்டிக் கொள்வதாக குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளன. சாணக்கியனின் முதல் பாராளுமன்ற உரையும் திட்டமிட்டு பின்கதவால் பெறப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
சித்தார்த்தனுக்கு ஒரு தடவை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. அடைக்கலநாதனுக்கு பேச்சாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதில் சித்தார்த்தன் உறுதியாக உள்ளார். அதற்கான தண்டனையா இது?
அடைக்கலநாதன், சிறிதரனுக்கு தலா நான்கு தடவைகள் மாத்திரமே பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒப்பீட்டளவில் தமிழரசார் அதிக தடவையையும் நேரத்தையும் பெற்றுள்ளனர்.
இது ரெலோவுக்கும் தமிழரசுக்குமான உறவை வடக்கு கிழக்கில் கேள்விக்குட்படுத்தி உள்ளது. எத்தனையோ தடவை கூட்டம் நடாத்தியும் உட்கட்சிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாத பதவி மோகத் தலைமைகள் தேசியம் குறித்து வாய்கிழிய பேசுகிறார்கள்.
இந்த தமிழரசு -ரெலோ மோதலை அரங்கம் வாசகர்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் காலக்கண்ணாடி கடந்தகால வரலாற்றுடன் கூடிய ஒரு சம கால பயணத்தை காட்சிப்படுத்துகின்றது.
வரலாறு:
1796 இல் இலங்கையின் கரையோரங்கள் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்ட பின்னும், தொடர்ந்து 1815 இல் கண்டி கைப்பற்றப்பட்டதன் பின்பும், 1884 முதல் 1932 வரை மட்டக்களப்பு நகரப்பகுதி உள்ளூர்சபை ஒன்றினால் நிர்வகிக்கப்படுவதாக இருந்துள்ளது.
1933 இல்தான் முதன் முதல் நகரசபை அந்தஸ்தை மட்டக்களப்பு பெற்றது. எட்டு வட்டாரங்களைக் கொண்ட ஒரு நகரசபையாக மட்டக்களப்பு அப்போது தரமுயர்த்தப்பட்டது.
1934 இல் மட்டக்களப்பு நகரசபையின் வட்டாரங்கள் எட்டில் இருந்து பத்தாகவும், பின்னர் 1956 இல் பத்தில் இருந்து பதின்நான்காகவும் அதிகரிக்கப்பட்டன.
1967 இல், மண்முனை வடக்கு-கிழக்கு நிர்வாகப் பிரிவில் இருந்து மேலும் பல கிராமங்கள் உள்வாங்கப்பட்டு மட்டக்களப்பு மாநகரசபை பிறந்தது.
அப்போது மட்டக்களப்பு மாநகரசபை பத்தொன்பது வட்டாரங்களைக் கொண்ட ஒன்றாக இருந்தது.
இந்த வரலாற்று மாற்றத்தின் ஊடான மாநகரசபையின் முதல் மாநகரபிதா முடி சூடா மன்னன், சொல்லின் செல்வர், செல்லையா இராசதுரை. 1967 முதல் 1968 வரை இந்த வரலாற்றுப் சிறப்பு மிக்க மிகக் கௌரவமான இருக்கையை அலங்கரித்தவர் அவர். கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மாநகரபிதாக்களுக்கு சமமான உயர் அந்தஸ்தையும், கௌரவத்தையும் அவர் கொண்டிருந்தார்.
இராசதுரைக்குப் பின்…..
தியாகராசாவின் சேவை!.
திரு.திஸவீரசிங்கம் 68-70, திரு.கே.தியாகராசா 71-73, திரு .அம்பலவாணர் 1983, திரு.செழியன் பேரின்பநாயகம் 94-99, திருமதி சிவகீதா பிரபாகரன் 2008-13, திரு.சரவணபவான் 2018 முதல்….. இப்படி மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர்களாக பலர் இருந்துள்ளனர்.
இதற்கிடையில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் பூகம்பங்களுக்கும், விருப்பு வெறுப்புக்கும் ஏற்பவும், மத்திய அரசின் அரசியல் தலையீடு காரணமாகவும் மாநகர சபை கலைக்கப்பட்டும், தேர்தல் இழுத்தடிப்பு செய்யப்பட்டும் மாநகர ஆணையாளரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் பல தடவைகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக மட்டக்களப்பின் தலைசிறந்த கல்விமானும், மட்டக்களப்பின் சமூக பொருளாதார அரசியல் அபிவிருத்தியில் விட்டுக் கொடுப்புக்களுக்கு இடமற்ற நேர்கொண்ட பார்வையும், அஞ்சா நெஞ்சமும் கொண்ட அமரர் கே.தியாகராசாவின் “கட்சி அரசியல் அற்ற சேவை” இங்கு வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.
சமகாலத்தில் சிவானந்தாவின் அதிபராகவும், மாநகர முதல்வராகவும் அவர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. அவர் விட்டுச் சென்ற இடைவெளி மட்டக்களப்பில் இன்னும் நிரப்ப்படவில்லை என்பது குறுகிய கட்சி அரசியலுக்கு அப்பால் மட்டக்களப்பு மாநகர மக்களின், கல்வியாளர்களின், அறிவு ஜீவிகளின் அசைக்க முடியாத கருத்தாக உள்ளது.
குடியரசு அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழர் அரசியல் மெல்ல மெல்ல ஆயுத அரசியல் வடிவத்தைப்பெற்ற இக்கட்டான காலகட்டம். அபிவிருத்திக்கும், உரிமைக்கும் இடையே இராசதுரை செயலிழந்து கிடந்தார்.
மட்டக்களப்பு சிறுபான்மை முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை இழந்து இரு தமிழ்ப் பிரதிநிதிகளை பெற்றிருந்த காலம். அனைத்து விமர்சனங்களுக்கும் அப்பால் மட்டக்களப்பின் அபிவிருத்தியில் ராஜன் செல்வநாயகமும், மாநகரசபையின் அபிவிருத்தியில் தியாகராசா முதல்வர் அவர்களும் சமாந்தரமாகப் பயணித்தார்கள்.
1974 முதல் 1983 தேர்தல் வரையும், குறுகியகால இடைவெளியின் பின் தொடர்ந்தும் 1994 தேர்தல் வரையும், மேலும் 1999 தொடர்ந்து 2008 வரையும், பின்னர் 2018 வரையும் விசேட மாநகர ஆணையாளர்களின் நிர்வாகம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
அரசியல் திருப்பு முனை
1970 களின் ஆரம்பத்தில் திரு.தியாகராசாவுக்குப் பின்னர் 1983 இல் அம்பலவாணர் தெரிவு செய்யப்படும் வரை மட்டக்களப்பு மாநகர சபை ஜனநாயக அரசியல் அடிப்படையில் செயற்பட முடியவில்லை.
பல் கட்சி ஜனநாயகப் சூழலிலும், ஜனநாயகக் தேர்தல்களிலும் போராட்ட அமைப்புக்கள் நம்பிக்கை இழந்து இவற்றைப் பகிஸ்கரிக்கின்ற கோரிக்கைகளை முன் வைத்தன.
இதன்மூலம் வடக்கு கிழக்கின் நிறுவனமயப் படுத்தப்பட்ட உள்ளூராட்சித் கட்டமைப்புக்களை செயலிழக்கச் செய்து கொழும்பு நிர்வாகம் வடகிழக்கில் தனது கட்டுப்பாட்டை இழந்து விட்டது என்பதைக் காட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சூழலில் தான் அம்பலவாணர் நிர்வாகம் பதவி ஏற்று மிகக் குறுகிய காலத்தில் கூண்டோடு இராஜினாமாச் செய்யவேண்டி ஏற்பட்டது.
1983 யூலைக்கலவரமும் அதைத் தொடர்ந்து வந்த அசாதாரண அரசியல் சூழ்நிலைகளும் இளைஞர்கள் இயக்கங்களில் இணையும் ஒரு வீக்கத்தை ஏற்படுத்தியது. அரசாங்கம் அசாதாரண நிலைமைகளைக் காரணம் காட்டி ஜனநாயகத் தேர்தலை நடத்தாது இழுத்தடித்தது. மறு பக்கத்தில் போராட்ட அமைப்புக்கள் சகல வழிகளிலும் மாநகரசபையின் மீள் இயக்க செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதில் அக்கறை கொண்டிருந்தனர்.
வரையறுக்கப்பட்ட ஜனநாயகக் தேர்தல்கள்
1983 மாநகரசபைத் தேர்தல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், ஐ.தே.கட்சிக்கும் இடையிலான போட்டியாக அமைந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி சுமார் 11,000 வாக்குகளைப்பெற்று 13 ஆசனங்களையும், யு.என்.பி 6,000 க்கும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களையும் வென்றன. 19 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
2008 மாநகரசபைத் தேர்தல் கடந்த கால் நூற்றாண்டு யுத்த அனர்த்தங்களுக்குப் பின் இடம்பெற்ற ஒன்றாகும். அரசாங்கத்தரப்பில் இது கிழக்கு மீட்கப்பட்டதன் பின்னரான ஜனநாயகக் தேர்தல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ரி.எம்.வி.பி யும் இணைந்து 11,000 வாக்குகளைப் பெற்று 11 இடங்களைப் பெற்றனர். ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி., புளொட் இணைந்த சுயேட்சை அணி சுமார் 9,600 வாக்குகளைப் பெற்று 6 இடங்களைப் பெற்றது. முஸ்லீம் காங்கிரஸ், ஈரோஸ் என்பன தலா ஒரு இடங்களைப் பெற்றன. சிவகீதா பிரபாகரன் மட்டக்களப்பின் வரலாற்றில் முதல் பெண் மாநகர முதல்வியானார்.
இத்தேர்தல் ஜனநாயக, மனித உரிமை மறுப்புக்களும், வன்முறைகளையும் கொண்ட தேர்தலாக அடையாளப் படுத்ததப்பட்டும் இருந்தது.
2018 தேர்தல் மட்டக்களப்பு மாநகர சபையின் விரிவாக்கம் இடம்பெற்று மாநகர சபை உறுப்பினர்களின் தொகை 50 வீத்தினால் அதிகரிக்கப்பட்ட பின் இடம்பெற்றது. இதில் தமிழரசு கூட்டுக் கட்சிகள் 17, ரி.எம்.வி.பி. 5, யு.என்.பி. தமிழர் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன தலா நான்கு இடங்களைப் பெற்றன. தமிழரசு சரவணபவான் முதல்வராகவும், ரெலோ சத்தியசீலன் பிரதி முதல்வராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
தமிழரசு, ரெலோ மோதல்
கடந்த பொதுத் தேர்தலில் சரவணபவான் முழுமையாக முன்னாள் அரசாங்க அதிபர் திரு.உதயகுமாரை ஆதரித்திருந்தார். சத்தியசீலன் ஜனாவின் வெற்றிக்காக உழைத்தார். உதயகுமாரின் தோல்வியும், ஜனாவின் வெற்றியும் நீறு பூத்த நெருப்பாக தொடர்ந்தது. இப்போது தணல் தட்டப்பட்டு பிரச்சினை எரியும் நெருப்பாக மாறியுள்ளது.
மாவையின் தமிழரசு வடக்கிலும் கிழக்கிலும் முகமும் முகவரியும் இழந்து நிற்கின்ற நிலையில் ரெலோ தன்னைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலும் இதற்கு ஒரு காரணம்.
மறுபக்கத்தில் சாணக்கியனுக்கும், ஜனாவுக்கும் இடையேயும் சில விடயங்களில் கருத்து வேறுபாடு உண்டு. சுமந்திரனின் ஆபிஸ் பையை தூக்கிக் கொண்டு சாணக்கியனும், சரவணபவானும் திரிவதை ரேலோ விரும்பவில்லையாம். சுமந்திரன் அடைக்கலநாதனுக்கு பேச்சாளர் பதவி கிடைப்பதை முழுப்பலம் கொண்டு மூர்க்கத்தனமாக எதிர்த்து வருகிறார்.
இந்த அரசியலை விடுத்து மாநகர மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் என்று சத்திய சீலன் கோருகிறார்.
மாநகர முதல்வர் சரவணபவானின் உச்சம் தலைக்குமேல் சிறிலங்கா ஒற்றை ஆட்சியின் சிங்கக் கொடி பறந்து கொண்டிருக்க, பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் கொடி எங்கோ ஒரு பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.
ஆம்! சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுடன் பாதீடு தப்பிப் பிழைத்திருக்கிறது. தமிழ்த் தேசியத்தை நிராகரித்தும், சிங்கள தேசியத்தின் ஊடான இலங்கைத் தேசியமே ஒரே தேசியம் என்கின்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு பாதீட்டிற்கு கிடைத்திருக்கிறது.
இங்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர் கட்சி வேலிகளைக் கடந்து முன்மாதிரியாக செய்யப்பட்டுள்ளனர். இது பழம் பெரும் தமிழ் தேசியத்திற்கு ஒரு படிப்பினையாகவும் அமையமுடியும்.
ஆனால் சரவணபவான் – சத்திய சீலனுக்கு எதிராக தப்பிப் பிழைப்பாரா? என்பதுதான் இன்றைய கேள்வியாக உள்ளது.
38 உறுப்பினர்களைக் கொண்ட மாநகர சபையில் 17 பேர் மட்டுமே தமிழரசு கூட்டைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் 21 பேர் மற்றைய கட்சிகளின் உறுப்பினர்கள். இது மிகவும் பலவீனமான நிலையாகும்.
ரி.எம்.வி.பி, யு.என்.பி, ரி.யு.எல்.எப், எஸ்.எல்.எப்.பி இவர்கள் ஒன்றிணைந்தால் ரெலோவுடன் இணைந்தோ, இணையாமலோ மிகவும் இலகுவாக ஆட்சியைக் கைப்பற்றமுடியும்.
இது விடயமாக சாத்தியமான காட்சிகள் குறித்து ரெலோவுக்கும் மற்றைய சிறிய கட்சிகளுக்கும் இடையே மந்திர ஆலோசனை இடம்பெறுவதாக அறியக் கிடக்கின்றது.
இதன் ஒரு பகுதியாகத்தான் ரி.எம்.வி.பி. புதிய ஐந்து உறுப்பினர்களை அண்மையில் நியமித்தாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ஜனா மற்றும் சத்தியசீலன் ஆகியோரின் மற்றைய கட்சிகளுடனான அணுகுமுறையும், பொதுப் பிரச்சினைகளில் கட்சி அரசியல் வேலிகளுக்கு அப்பால் இணைந்து செயற்படும் போக்கும் பலராலும் பாராட்டப்படுகிறது.
மட்டக்களப்பு பாதீடு விடயமாக அடைக்கலநாதன் தனது கட்சியினரை சமாதானப்படுத்தி ஒட்டுப்போட்டு பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால் இருதரப்பினருக்கும் இடையே தோண்டப்பட்டுள்ள கிடங்கு அப்படியேதான் கிடக்கிறது.
ஆக, சரவணபவானா? அல்லது சத்தியசீலனா? அல்லது குழம்பிய குட்டையில் கரப்புக் குத்தப்போவது மூன்றாவது அணியா?
சம்பந்தன் ஐயா முதுமையின் உச்சத்தை எட்டிவிட்டார். சவால்கள் நிறைந்த சமகால தமிழர் அரசியலுக்கு அவரது தலைமை பொருத்தமற்றது. எந்த தும்புத்தடியையும் வேட்பாளராக நிறுத்தி தேர்தலில் வெற்றி பெறுவது போன்றதல்ல இது.
ஆளுமையும், ஆணித்தரமும், துணிச்சலும் மிக்க முடிவுகளை எடுக்கவேண்டிய காலத்தின் கட்டாய தேவை கூட்டமைப்பிற்கு உண்டு. ஆனால் தலைமையை முதுமை வாட்டுகின்றது.
முதுமை அவருக்கு இடம் கொடுப்பதாக இல்லை. துணிச்சலான முடிவுகளை எடுக்க முடியாதபடி பலவீனமாக உள்ளார் சம்பந்தன் ஐயா.
அரசியல் முடிவுகளை எடுக்கின்ற உள, உடல் சிந்தனை செயற்பாட்டு ஆற்றலை முதுமைக்கு பறிகொடுத்து நிற்கிறார் அவர்.
மாவை குழு ஒத்துழையாமையை கடைப்பிடிக்கிறது. சுமந்திரன் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெட்டி தனித்து ஓடுகிறார்.
தந்தை செல்வாவின் முதுமையில் பார்த்தசாரதியானார் அமிர்தலிங்கம். இன்று சில்லறைப் பிரச்சினைகளுக்கே தீர்வு இல்லாமல் திண்டாடுகிறது தமிழரசு.
தமிழரசின் டைட்ரானிக் மெல்ல மெல்லத் தாண்டு கொண்டிருக்கிறது. கப்டன் என்ன செய்வது என்று தெரியாது திகைத்து நிற்கிறார்.
இதை மட்டக்களப்பில் சொல்லுவார்கள் காலும் ஓடவில்லை, கையும் ஓடவில்லை என்று.
தீர்வுகள் அற்ற இழுத்தடிப்பு நாளுக்கு நாள் சிதைவுகளையே ஏற்படுத்தும்.
மாநகர சபையை ஆளப்போவது யாராக இருந்தாலும் தமிழரசுக்கு இந்த விவகாரம் ஒரு தீராத தலையிடியாகவே அமையும்.
மட்டக்களப்பில் மற்றொரு மாற்றம் சாத்தியமா?
சாத்தியத்தின் பெயர் சத்தியசீலனா??
தை பிறந்தால் வழிபிறக்கும் என்கிறார்கள் மட்டக்களப்பார்.!