— கமல் பத்திநாதன் —
‘பெண்ணைக் பெண்ணாகப் பாருங்கள்’ என்ற எண்ணவோட்டம் முற்றிலும் உணரப்பட வேண்டியவொன்று. இப் பெண் என்ற மந்திரச்சொல் இவ்வுலகியல் சமனிலைக்கான ஆணிவேரென்பதை பெண்ணொருத்தியால் உலகு கண்ட யாவரும் ஒரு கணமேனும் உணர்ந்து விட்டுச் சாதலே உத்தமம்.
பெண், பெண்ணியம் என்ற சொற்களும், அதனூடே செய்யப்படுகின்ற செயற்பாடுகளும் இயந்திர உலகிலும் மிகையாகவே பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு நாளில் ஒரு முறையாவது செய்தி பரப்பும் ஊடகங்கள் இச் சொற்கள் கொண்டு தமது செய்தித் தலைப்புக்களைப் போட மறக்கவில்லை அல்லது போடாமல் இருக்க முடியவில்லை. அவ்வாறான பல பரபரப்பான பரந்துபட்ட விளைவுகளையும் கண்கண்ட, கண்காணாத துயரக் கொடுமைகளையும் பெண்ணென்ற புனிதம் பல பெயர் வடிவம் கொண்டு தினந்தோறும் அனுபவித்து வருகின்றதென்பது திட்டவட்டமான வடிகட்டிய உண்மை.
பெண்ணைப் பாதுகாகக் வேண்டும், பெண்ணியத்தை சமூகமட்டத்தில் சமனாக நிறுத்த வேண்டும் என்று பெண்ணியம் சார்பான மற்றும் ஏனைய கட்டமைக்கப்பட்ட பல நிறுவனங்கள் இன்று பலவாறான திட்டவரையறைகளை தீவிரமாக முன்னெடுத்த வண்ணமிருந்தாலும், நாளுக்கு நாள் பெண்ணுக்கெதிரான வன்கொடுமைகள் நிகழ்ந்த வண்ணமிருப்பதை தடுக்கமுடியாது உள்ளது. இதற்கான தீர்வை உளவியல் அடிப்படையில் காணமுற்படவில்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது. அல்லது கண்டவற்றை நடைமுறைப்படுத்த முடியவில்லை. காரணம் பெண் கொடுமை என்பதை பெரும்பாலும் கணவன் மனைவி(அதுவும் அடி நிலை சமூகத்திடையே) மற்றும் சிறுவர் கொடுமை என்ற நிலைப்பாட்டில் மட்டுமே -பெரும்பாலும் காணவிளைதல் ஆகும்.
ஒரு பெண்ணானவள் தாய், மனைவி, சகோதரி, மகள், தோழி இன்னும் வேறுபட்ட உறவு நிலைகளை உறவு முறைகளின் அடிப்படையில் பெறுகின்றாள். அதேசமயம் தொழில்முறை ரீதியான சகல படிநிலைகளையும் சமூக அடிப்படையில் பெறுகின்றாள். இவ்வாறு தனது வீட்டிலே தானேற்கும் பாத்திரமாகவும், வெளிச்சமூகத்தின் இடையே சமூகம் கொடுக்கும் பாத்திரமாகவும் மாறி மாறி தனது கடமைகளுக்காக உழைக்கின்றாள். இவ்வாறான பாரிய பொறுப்புக்களைப் பேணும் பெண்ணென்னும் புனிதத்தைச் சீர்குலைக்கும் இழி செயல் கொடுமைகளுக்கு யார் பாத்திரமாவது?. அது ஆண், பெண் என்ற இரு சமூக விலங்குகளையும் சாருமென்றே சொல்லத் தோணுகின்றது. பெண்ணடிமைத் தனம், ஆணாதிக்கம் என்பன எவ்வாறான சூழ்நிலையில் உண்டாயின?, ஏன் உண்டாயின?, எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டன அல்லது நடைமுறையில் உள்ளன? என்ற வினாக்களுக்கான விடைகளை உளவியல் சார் உணர்வு நிலைகளின் அடிப்படையில் காண, பெரிதும் எவரும் முன்வரவில்லை என்றே சொல்லலாம். எல்லாவற்றுக்குமான காரணங்களை குறித்த சமூகக்கட்டமைப்பின் விழிப்பற்ற நிலையே எனக்கூறி தாழ்வான உணர்வுச் சிக்கல்களைக் களையாது தள்ளிப் போடடும் விடுகின்றோம்.
சமூகக்கட்டமைப்பின் மீது பழியைப் போடுவோர் எமது முன்னோர்கள் பெண்ணை வைத்திருந்த நிலையையும், பெண்ணுக்கு அளித்த மரியாதையையும், அவளைத் தமது தெய்வமாக, தமது வாழ்வின் ஆதாரமாக, அவளிடமிருந்தே அனைத்தையும் பெறுகின்றவர்களாக இருந்துள்ளனர் என்பதை பழம் பெரும் இலக்கிய ஆதாரங்களையும் இன்னும் தெளிவிற்கு “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலையும் சற்றுப் புரட்டி விட்டுத் தெளியலாம். எமது ஆரம்ப காலங்களிலே இவ்வாறு பெண் என்ற புனிதத்தைப் போற்றிவிட்டு இடைப்பட்ட காலங்களில் எவ்வாறு தூற்ற முனைந்தோம் என்பது ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவொன்று. கடந்த காலங்களிலே எமது வாழ்வியலில் இடம்பெற்ற உரிமைப் போராட்டத்தின் போது பெண் ஒருத்தி கொண்ட வீர வகிபங்கினையும், அவளின் மிடுக்கான நடத்தைகளையும் பற்றி அறியும் போது பெண் கொண்ட சமூகச் சமனிலைப் பண்பினை அழகாக உணர முடியும். இன்றும் கிராம மட்டங்களில் எந்தவொரு மங்கல, அமங்கல நிகழ்வுகளின் போதும் அச்சபையில் உள்ள ஒரு முதுமைப் பெண் நிகழ்வின் அனைத்து விடயங்களையும் இருந்த இடத்தில் இருந்தே முகாமை செய்பவளாக காணப்படுவாள். இதை பெண்ணியம் பற்றி பேசுகின்ற எத்தனை பேரால் உணர்ந்திருக்க முடியும். இவற்றை எல்லாம் அறியாதோரும், அறிய முற்படாத நிறுவன அமைப்புக்களும் எவ்வாறு பெண்ணியம் பற்றியதான தகவல் விழிப்புக்களை காத்திரமாக எழுத முடியும் அல்லது ஆற்றுகை செய்ய முடியும்?.
அண்மையில் பால்நிலை சமத்துவம் பற்றியதான வதிவிடக் கலந்துரையாடல் ஒன்றுக்கு களனிப் பல்கலைக்குப் போயிருந்தேன். மூவின இரு மொழி கொண்ட, பல சமூக மட்டங்களைச் சேர்ந்த பலரின் நேரடிச் சங்கம நிகழ்வாக அது அமைந்திருந்தது. நாட்டின் பல்வேறுபட்ட பெண்ணிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும், கிராம மட்டம் தொடக்கம் நகர மட்டம் வரையிலான இளைஞர் யுவதிகளும் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பெண்ணியத்தைப் பாதுகாகக் வேண்டும், பெண்ணைப் பாதுகாகக் வேண்டும் என்ற எண்ணப்பாடானது நமது நாட்டைப் பொறுத்த மட்டில் வளர்ந்த வயது வந்தவர்களில்தான் பெரும்பாலும் உண்டு பண்ணப்பட்டு வருகின்றது. பெண்ணியத்தைப் போற்ற வேண்டுமாயின் முதலில் ஆண், பெண் என்று பிரிவினையை உண்டாக்கும் கல்விக் கூடங்களை தடை செய்ய வேண்டும். பாடசாலை மட்டத்திலிருந்தே பெண் மதிக்கப்பட வேண்டியவள் என்பதையும், அவளின்றேல் இவ்வுலகில்லை என்ற வலுவான நிலைப் பாட்டையும் ஒவ்வொரு பிள்ளைகளிடையேயும் ஏற்படுத்த வேண்டும்.
அங்கு பெண்ணியம் சார்ந்த விடயங்கள் தொடர்பாக பல விவாதங்கள் எழுப்பப்பட்டன. அத்தருணம் எமது நாட்டைப் பொறுத்த மட்டில் இனத்துக்கினம், மொழிக்கு மொழி கலாசாரப் பிணைப்புக்களின் நிமித்தம் பெண்ணும், பெண்ணிய அடக்கு முறைகளும், அவை பற்றிய சிந்தனைகளும் வேறு வேறாக வடிவமைக்கப்பட்டுள்ளமை தெளிவானது. அங்கு பெண்ணியம் என்ற சிந்தனையினூடே மேலெழும்பிய விடயங்களாக பெண்ணொருத்தியின் நாகரிக உடையமைப்பு, பெண்களின் உடைகளை ஆண்கள் அணிய முடியாதா? ஆண் செய்யும் அணைத்தையும் பெண் செய்ய வேண்டும்,(இரு பாலாரின் உடலியல் சார் பௌதீக அமைப்பு கருத்தில் கொள்ளப்படவில்லை) ஏன் பெண் கர்ப்பம் தரிக்க வேண்டும்?, போன்றனவே காணப்பட்டன. அவை பெண்பக்க நியாயங்களைக் கூறும் பெண்ணியல் வாதிகளின்(பெண்) சுயநிர்ணயமாக இருந்ததே ஒழிய ஓர் சாதாரண பெண்ணின் உளவியல் சார்ந்த விடயங்களுக்கும், அவை சார்ந்து மேற்கொள்ளப்படுகின்ற கொடுமைகளுக்கும் மருந்தாக முன்வைக்கப்படாததை நன்குணர முடிந்தது. இவ்வுலகில் பிறந்த பெண்ணொருத்திக்கு தாய்மை என்னும் புனித நிலையை விட வேறொன்று இருக்க முடியுமா? என்று தெரியவில்லை.
பெண்ணின் பருவமடைதல் என்றால் என்ன?, ஒவ்வொரு மாதச் சுழற்சியின் போதும் அவளுக்கு உண்டாகும் மாதவிடாய் இரத்தப் போக்கு, அதன் போது அவள் அனுபவிக்கும் உடலியல், உளவியல் ரீதியான தாக்கங்கள் போன்ற விடயங்களையும், பெண் இல்லாவிடின் ஆணில்லை ஆணில்லா விடின் பெண்ணில்லை என்ற பரஸ்பர எண்ணப்பாட்டையும் கற்கை நெறியாக வடிவமைத்து ஒவ்வொரு பிள்ளைகளின் (குறிப்பாக ஆண் பிள்ளைகள் இடத்து) உள்ளத்திலும், சிந்தனையோட்டத்திலும் பதியப் பண்ண வேண்டும்.
பருவமடைந்த ஆண்களிடம் பெண்ணொருத்தியின் ஜோனியானது வெறும் காம இச்சையைப் போக்கும் பண்டமில்லை என்பதை உணர்வுகள் அடிப்படையில் விளக்கப் பண்ண வேண்டும். ஒரு பெண்ணின் ஜோனித் துவாரத்தின் ஊடாகத்தான் ஒவ்வொரு குழந்தையும் புதிய உலகைக் காண்கின்றது என்ற அதன் இன்னொரு புனித வினையைப் பற்றி எடுத்துரைக்க வேண்டும். ஓர் ஆணிடம் உயிரொன்றை புதிதாகப் பண்ண பெண்ணொருத்தி படுகின்ற வலிகள், குறித்த காலம் வரை அவள் எதிர் நோக்குகின்ற அசாதாரண நிலைமைகள், பிரவத்தின் போது அவளுக்குண்டாகும் சொல்லிலடங்காத வலிகள், குருதிப் போக்கு, சதை கிழிவு, என்புடைப்பு போன்ற விடயங்களை அவனது தாயை, சகோதரியை உதாரணமாக முன்னிறுத்தி விளங்கப் பண்ணும் போது எந்தவொரு ஆணும் பெண்ணுக்கு தாழ் பணிய தயங்கமாட்டான். அவ்வாறு விளங்கிக் கொண்ட ஆண் ஓர் சிறப்பான இல்லறத்தை நிச்சயம் மேற்கொள்வான். இவ்வாறான செயற்பாடுகளை பெண்ணிய அமைப்புக்கள் முன்னுரிமை கொடுத்து நடை முறைப்படுத்தல் எத்துணை வலுவான தீர்வாக அமையும்.
பெண்ணுக்கெதிரான வன்முறைகளானது ஆண்களினால் மட்டுமே சம்பவிக்கின்றது என்று நிச்சயமாக சொல்லி விட முடியாது. கொடுமையிலும் கொடுமையாகக் காணப்படுகின்ற விடயம் யாதெனில் பெண் தரப்பினராலேயே பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளாகும். செவிலித்தாய்மார், சித்திமார், மகள்மார், மருமகள் மாமியார், முதலாளிப் பெண்கள் என்று பலதரப்பட்ட பெண் வர்கக்த்தினாலேயே பெண்களுக்கெதிரான கொடூரச் செயல்கள் இடம் பெறுகின்றமை மிக்க மனவேதனைக்குரிய விடயமாகும். இதிலே சித்திமாரினால் தாயை இழந்த பெண் பிள்ளைகள் சொல்லொண்ணத் துயர்களை தினம் தினம் அனுபவிக்கின்றனர். தன்னால் பிரசவிக்கப்பட்ட சிசுவை தானே குப்பையோடு குப்பையாக வீசி எறியும் அவலங்களும் நாளுக்கு நாள் இடம் பெற்றுக் கொண்டுதான் உள்ளன. பெண் என்ற வகையில் தமது உடலுள் நிலமைகளை உணர்ந்தவர்களாக இருந்து கொண்டு இவ்வாறான வன்முறைகளைப் பிரயோகிக்கின்ற பெண்களை என்னவென்று சொல்வது.
பிறர் மீது வன்முறையைப் பிரயோகித்தலுக்கு முக்கிய காரணமாக அமைவது பிரயோகித்தலுக்கு உட்படுத்துபவரின் உடலுளம் சார் உணர்வுகளின் தாகங்களை விளங்கிக் கொள்ளாத தன்மையே ஆகும். இது ஒத்த தன்மையை உடையோரிலியே இடம்பெற்று விடுகின்றது எனில் நேரெதிரான உடலுளப் பண்புகளையுடைய பெண்களின் மீது பிரயோகித்தல் என்பது இயல்பாகவே அமைந்து விடுமொன்றாக மாறிவிட்டதை நமது சூழலில் மலிவாகவே காணமுடிகின்றது. ஆகவேதான் பெண்ணொருத்தி வெறும் பாலியல் பண்டம் என்ற எண்ணம் பலர் மத்தியில் விரைவாகவே புகுந்துள்ளது எனலாம்.
இவற்றை இலகுவில் மாற்றிவிட நாம் முயன்றால் முடியும் அதற்கு கட்டமைக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டும் பாத்திரவாளியாக முடியாது. பாடசாலைகளில் இன்றும் கூட இனப்பெருக்க தொகுதி தொடர்பான கற்றல் நடவடிக்கைகளின் போது அதை கற்றுக்கொள்ளல் என்ற ரீதியில் பாரத்தை விடுத்து, அதை ஏதோ பாரதூரமான விடயப் பொருளாகப் பார்க்கும் தாழ்வுச் சிக்கல் மனப்பான்மையானது மாணவர்களிடம் மட்டுமல்லாது கற்பிக்கும் ஆசிரியரிடமும் உண்டு. இவ்வாறான எளிய சிந்தனைகளை இல்லாது துரத்த வேண்டும். அதுபோல் வீட்டிலும் தமது பிள்ளைகளிடம் விளங்கிக்கொள்ளும் அளவிற்கு பாலியல் விடயங்களையும் அதில் பெண் பிரதானமானவளும், பாதிப்புக்குள்ளாக்கப்படுபவள் என்ற உண்மை நிலமையை விளங்க வைக்க வேண்டும். இவ்வாறான மாற்றுச் சிந்தனைகளும், கட்டவிழ்ப்பு நடவடிக்கைகளை எமது சமூகத்தே செயற்படுத்துமிடத்து பெண் என்னும் புனிதத்தை இன்னும் புனிதமாக நினைத்துப் போற்ற முடியும். காரணம் பெண் போற்றப்பட வேண்டியவள்.