— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இச் சம்பவம் நடைபெற்று பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்தேகத்தின் பேரில் 2015ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் இந்நாள் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட இந்த வழக்கின் ஐந்து சந்தேகநபர்களும் 24.11.2020 அன்று மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி விளக்கமறியலில் கைதிகளாக இருந்தவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டது இதுதான் முதற்தடவையல்ல. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏதோ இதுதான் முதல் தடவைபோல் கூக்குரலிடுகின்றனர். அப்படியானால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி விளக்கமறியலில் இருக்கின்ற கைதிகள் எவரும் பிணையில் வெளிவரக்கூடாதென்றா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட 1979 இல் இருந்து இன்றுவரை சுமார் 40 வருட காலத்தில் பலருக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிணை வழங்கப்பட முடியாது என்றல்ல.
காலஞ்சென்ற ஜோசப் பரராஜசிங்கத்தின் மனைவியின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி மேற்படி பிணை வழங்கப்படுவதை ஆட்சேபித்திருந்தாரெனப் பொதுவெளியில் கூறப்பட்டிருந்தாலும்கூட இப்போது காலஞ்சென்ற ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் கனடாவில் வதியும் மனைவியும் லண்டனில் வதியும் அவரது மகனும் தங்கள் குடும்பத்தின் சார்பில் இவ்வழக்கில் ஆஜராவதற்கு சுமந்திரன் அவர்களை ஒருபோதும் தாங்கள் நியமிக்கவில்லை என்று சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்திருக்கிறார்கள்.
இதில் புதைந்துள்ள அரசியல் பகிரங்கமானது.
2015ல் கைதாகிய சி.சந்திரகாந்தன் சிறையில் இருக்கும்போதுதான் முன்னர் மாகாண சபை உறுப்பினராக விளங்கிய அவர் கிழக்கு மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொண்டிருந்தார். அப்போது இதற்கு ஆட்சேபனை தெரிவிக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்போது அவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராகவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டமையை ஆட்சேபித்து அண்மையில் பாராளுமன்றத்தில்கூட கேள்விகள் எழுப்பியிருந்தனர். இக் கூட்டங்களில் பிள்ளையான் கலந்து கொண்டதால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நட்டம் ஏற்பட்டதா? இல்லையே. அப்படியானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏன் இதை எதிர்த்தார்கள்? ஏனெனில் நட்டம் அவர்களுக்கு மட்டுமேதான்.
இங்கேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் படுபிற்போக்குத்தனமான அரசியலைப் புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. சந்திரகாந்தன் அவர்கள் மாகாணசபை உறுப்பினராக இருக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘பாராளுமன்றக் கதிரை’ அரசியலுக்குச் சவாலாக இருக்க மாட்டார் அல்லது குறைந்த அளவிலேயே சவாலாக இருப்பார் என்ற எடுகோளில்தான் அப்போது அவர் மாகாணசபை உறுப்பினராக இருந்தபோது ஆட்சேபனை எதுவும் எழுப்பப்படவில்லை.
ஆனால் இப்போது கடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அவர் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு அவரது கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் 67 692 வாக்குகளைப் பெற்றது மட்டுமல்லாமல் அவர் அதிகூடிய விருப்பு வாக்குகளையும் பெற்று வெற்றியீட்டியிருப்பதால் எதிர்காலத்தில் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் கதிரை அரசியலுக்குப் பாரிய சவாலாக மேற்கிளம்பிவிடுவார் என்கின்ற அச்சம் காரணமாக அவரின் அரசியல் எதிர்காலத்தைச் சிறைக்குள்ளேயே பூட்டி வைக்க வேண்டும் என்பதற்காக அவருக்குப் பிணை வழங்கப்படுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகி ஆட்சேபித்திருந்தார்.
நான் எனது அரசியல் பத்தி எழுத்துகள் பலவற்றில் அடிக்கடி சுட்டிக்காட்டி வருகின்ற யாழ் மேலாதிக்க அரசியலும் இதனுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அவருடைய கைதிலும்கூட யாழ் மேலாதிக்க அரசியல் பின்னணி இருந்ததாகவே பேசப்பட்டது.
பிள்ளையானுக்குப் பிணை வழங்க முடியுமென்றால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகிப் பல வருடங்களாக விசாரணைகள் ஏதுமின்றிச் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்ய முடியாது? என்ற கேள்வியை இப்போது பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எழுப்புகின்றனர். இக்கேள்வி என்னமோ எழுந்தமானத்தில் நியாயமாகத்தான்படுகிறது.
ஆனால், இது சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டும் ‘போலி’ அக்கறையாகும். இது உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பிள்ளையானின் விடுதலையைக் காட்டி சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதிலும் பார்க்க சிறையில் வாடும் தமிழ் கைதிகளைக் காட்டி பிள்ளையானை மீண்டும் சிறையில் அடைப்பதிலேயே சிரத்தை கொள்வதாகத் தெரிகிறது. உண்மையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆத்மார்த்தமான அக்கறை இருந்திருந்தால் இவர்கள் என்ன செய்திருக்க வேண்டுமென்றால், பிள்ளையான் பிணையில் விடுதலை செய்யப்படும் வரை அமைதியாகக் காத்திருந்து அவருடன் சேர்ந்து ஏனைய சந்தேக நபர்களும் விடுதலையாகி வெளியே வந்த பின்னர், இப்படிப் பாராளுமன்றத்தில் பேசியும் பத்திரிகைகளுக்கு அறிக்கையிட்டும் ஆரவாரப்படுத்தாமல் சிறையில் விசாரணையின்றிப் பல வருடங்களாக வாடும் தமிழ் அரசியல் கைதிகளை அடையாளம் கண்டு அவர்களின் பெயரில் உரிய நீதிமன்றத்தில் பிணை மனுக்களைத் தாக்கல் செய்து பிள்ளையானுக்கும் ஏனையோருக்கும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியதை முன்னுதாரணமாகக் காட்டி, வாதாடி, வென்று அவர்களையும் பிணையில் வெளிவரச் செய்திருக்க வேண்டும். இதுதான் அறிவுபூர்வமான சட்ட நடவடிக்கையாகும்.
ஆனால், இதற்கு எதிர்மறையாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கம் நடைபெறுகின்றபோது பிணை வழங்குவதில்லையென்கின்ற சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை எடுத்துக்கூறி பிள்ளையானின் வழக்கில் பிணை வழங்கப்படுவதைச் சுமந்திரன் ஆட்சேபித்திருந்தாரென்றால் அதன் அர்த்தமும் பின்விளைவும் தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பிணை வழங்கக் கூடாது என்றல்லவா ஆகிவிடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தேவை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையல்ல. கைதிகள் உள்ளே இருக்க வேண்டும்; இதை வைத்துத் தாங்கள் வெளியே அரசியல் செய்ய வேண்டுமென்பதுதான்.
இங்கேதான் தமிழ் மக்கள் தெளிவாக ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்வது தமது கட்சி நலன்களுக்காகவும்–பாராளுமன்றக் கதிரைகளுக்குமாகவே தவிர மக்களுக்காகவல்ல. ‘தமிழ்த் தேசியம்’ என்று உரக்கச் சொல்லிக் கொண்டு இவர்கள் செய்வது படு பிற்போக்குத்தனமான சந்தர்ப்பவாதத் தேர்தல் அரசியலே தவிர வேறொன்றுமில்லை. இனிவரும் காலங்களிலாவது தமிழ் மக்கள் குறிப்பாகக் கிழக்கு மாகாணத் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தயவு தாட்சண்யமின்றி முற்றாக நிராகரிக்கவேண்டும். இதற்குப் பிள்ளையான் விவகாரம் நல்ல படிப்பினையாக அமையட்டும்.
சுமந்திரனிடம் ஒரு வேண்டுகோள். பிள்ளையானுக்கு பிணை வழங்கப்படுவதை ஆட்சேபிப்பதற்காகத் ‘கொரோனா’ப் பிரச்சனைக்கு மத்தியிலும் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு வந்து நீதிமன்றில் ஆஜராகிய நீங்கள், கொழும்பிலேயே பல வருடங்களாக விசாரணையின்றி சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை அடையாளம் கண்டு அவர்களுக்காக உரிய நீதிமன்றத்தில் பிணை மனுக்களைத் தாமதியாது தாக்கல் செய்யுங்கள்.