— தேசம்நெற் ஆசிரியர் த. ஜெயபாலன் —
பிரித்தானியர்கள் முட்டாள்களா அல்லது அவர்களது பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அவர்களை முட்டாள்கள் எனக் கருதுகின்றாரா?
பிரித்தானியா மீண்டும் ஒரு லொக் டவுனுக்குச் சென்றுள்ளது. இந்த அறிவிப்பு சனிக்கிழமை மாலை பிரித்தானியப் பிரதமரால் வெளியிடப்பட்டது. அதற்கு முன்பாக புதன்கிழமை டிசம்பர் 16 அன்று ‘மெரி லிற்றில் கிறிஸ்மஸ்’ என்ற பிரித்தானிய பிரதமர், ‘விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் வராது. லொக்டவுன் கொண்டு வருவது மனிதாபிமானமற்ற செயல்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் கியர் ஸ்ராமர் முன்வைத்த கேள்விக்குப் பதிலளித்தார்.
‘கிறிஸ்மஸ் புத்தாண்டு காலத்தையொட்டி சமூக இடைவெளியயைப் பேணும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தவறு’ என்றும் ‘கொரோனா வைரஸ் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை’ என்றெல்லாம் அரசினுடைய நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் எதனையும் செவிமடுக்கவில்லை.
தனது முட்டாள்தனமான நடவடிக்கைகளால் பிரிதானிய மக்களும் பிரித்தானிய பொருளாதாரமும் எதிர்கொள்ளும் கடுமையான நிலைதொடர்பில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவரது கொன்சவேடிவ் கட்சியும் எதனையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. வெறும் வெற்று வார்த்தைகளின் சோடனையாலும் ‘பஞ்ஜ் டயலக்’ பேசியும் மக்களை வசீகரிக்கலாம் என்ற எண்ணத்தோடு, தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார். அவரது பேச்சுக்களில் ஒரு போதும் உள்ளடக்கம் இருப்பதில்லை. வார்த்தை ஜாலங்களை அப்புறப்படுத்தி உள்ளடக்கத்தைப் பார்ப்பவர்களுக்கு எதுவும் கிடைக்காது. ‘பஞ்ஜ் டயலக்’ தான் எஞ்சியிருக்கும்.
கிரீன்விச் பாடசாலை மீளத் திறப்பு – கவுண்டமணி – செந்தில் நகைச்சுவை:
டிசம்பர் 19ம் திகதி புதிய லொக் டவுன் அறிவிப்பிற்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக கிறீவிச் கவுன்சில் தனது உள்ளுராட்சிப் பிரிவில் உள்ள பாடசாலைகளுக்கு டிசம்பர் 14ம் திகதி விடுமுறையயை அறிவித்தது. அதாவது 17ம் 18ம் திகதிகளில் கிறிஸ்மஸ் கால தவணை விடுமுறையயை, வெள்ளிக் கிழமைக்குப் பதிலாக திங்கட்கிழமையே விடுமுறையயை வழங்கியது. அதற்குக் காரணம் லண்டனின் பல பகுதிகளில் கொரோனா வேகமாகப் பரவுவதால், குறிப்பாக பாடசாலை மட்டத்தில் பல ஆசிரியர்கள் அரச விதிமுறைப்படி தனிமைப்படுத்தலுக்குச் சென்றனர். பாடசாலை வகுப்புகளை நடாத்த ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் கிறின்விச் கவுன்சில் தனது உள்ளுராட்சிப் பிரிவில் உள்ள பாடசாலைகளை மூடுவதாக அறிவித்தது. பாடசாலைகள் பலவும் ஆசிரியர் பற்றாக்குறையினால் பல வகுப்புகளை இடைநிறுத்தி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். உண்மையில் டிசம்பர் மாத ஆரம்பம் முதலே பாடசாலைகளில் மாணவர், ஆசிரியர் வரவில் வீழ்ச்சி ஏற்பட்டு பாடசாலைகள் சீராக இயங்கவில்லை.
ஆனால் அரசு என்ன செய்தது? தொழிற்கட்சியின் அதிகாரத்தில் இருந்த உள்ளுராட்சி சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி, மறுநாள் மூடிய பாடசாலைகளை மீளத் திறக்க வைத்தது. மக்களுக்கு எதிரும் புதிருமான தகவல்கள் வழங்கப்பட்டு, குழப்பத்திற்குள் தள்ளப்பட்டனர். கிறின்விச் கவுன்சில் தலைவர் தனது முடிவு சரியானது தான் என்றாலும், அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் நிலையில் கிரின்விச் கவுன்சிலின் நிதியை விரயமாக்க விரும்பவில்லை என்பதால், அரசின் வேண்டுகோளின்படி பாடசாலைகளை மீளத் திறக்குமாறு அறிவித்தார்.
டிசம்பர் 20 நேற்று ‘ஜனவரியில் பாடசாலைகள் வழமைபோல் ஜனவரி 4 இல் திறக்கப்படமாட்டாது’ என்றும் ‘இரு வாரங்களின் பின்னதாகவே பாடசாலைகள் திறக்கப்படும்’ எனவும் அரசு அறிவித்துள்ளது. இந்த அரசின் கோமாளித் தனம் தமிழ்பட நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி – செந்திலின் நகைச்சுவையளவுக்கு மலிந்துவிட்டது.
ஒரு படத்தில் வீட்டிற்கு பிச்சை எடுக்க வந்தவரை ‘பிச்சை தர முடியாது’ என்று செந்தில் விரட்டியடித்துவிடுவார். அப்போது அங்கு வரும் கவுண்டமணி, அதே பிச்சைக்காரரை திருப்பிக் கூட்டி வந்து பிச்சை கேட்கும்படி சொல்வார். அந்தப் பிச்சைக்காரரும் அதன்படி ‘பிச்சை போடுங்க தாயே ஐயா’ என்று இரந்து நிற்பார். உடனே கவுண்ட மணி ‘பிச்சை தரமுடியாது நாயே! வெளியே போ!’ என்று திட்டி துரத்திவிடுவார். இந்த நகைச்சுவைக்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் செய்யும் கோமாளி அரசியலுக்கும் ஏதும் வித்தியாசம் தெரிகின்றதா? பள்ளிக் கூடத்தை நீ பூட்டக் கூடாது நான்தான் பூட்டுவேன் என்ற மாதிரித்தான் கிரின்விச் விவகாரம் அமைந்தது.
பிரதமர் பொறிஸ் என் முகநூலையாவது படித்திருக்கலாம்:
தனக்கு கிடைத்த விஞ்ஞானபூர்வமான தகவலின் அடிப்படையில் தான், தனது முடிவை தான் மாற்றியதாக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது செயலை நேற்று நியாயப்படுத்தினார். ஒக்ரோபர் 31ம் திகதி எனது முகநூல் பதிவு இது: பிரித்தானியாவில் ஒரு நாளுக்கு 4000 மரணங்கள் சம்பவிக்கலாம்!!! – கோவிட்-19 ஒரு நாளைக்கு நாலாயிரம் உயிர்களை பலி எடுக்கும் அபாயம் இருப்பதாக அரசின் விஞ்ஞான மருத்துவக்குழு எச்சரித்து உள்ளது. அரசின் விஞ்ஞான மருத்துவக்குழு விடுத்த இந்த எச்சரிக்கையயை பிரதமர் எங்கு சொருகி வைத்தார்? அன்று அனைவரும் கேட்டுக்கொண்டது இடைத் தவணை விடுமுறையை இரு வாரங்கள் மேலும் நீடித்து முழுமையான லொக் டவுணைக் கொண்டு வந்து இந்த வைரஸைக் கட்டுப்படுத்தி, ரெஸ்ற் அன் ரேஸ் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி இருந்தால், இந்த கிஸ்மஸ் கால விடுமுறையயை மக்கள் ஓரளவு சந்தோசமாக களித்திருப்பார்கள்.
பிரித்தானியாவின் பொருளாதாரத்தின் ஒரு முக்கியமான வாரமான இந்த வாரத்தில் பல நிறுவனங்களும் தங்கள் வியாபாரத்தை நடத்தி இருக்கும். ஏற்கனவே விளிம்புக்குத் தள்ளப்பட்ட பொருளாதாரத்தை பாதாளத்தில் வீழ்ந்துவிடாமல் தடுத்திருக்க முடியும். தேவைப்பட்டால் ஜனவரி முதல் ஒரு லொக்டவுணைக் கொண்டு வந்திருக்க முடியும். இது எவ்வித திட்டமிடலும் இன்றி எழுந்தமானமாக அவ்வப்போது வீட்டில் எழும் பிரச்சினைகளுக்கு கணவன் மனைவியர் எடுக்கும் கடுகதி எதிர்வினைகள் போல் தான் பிரித்தானியா பிரதமரின் ஆட்சி நகர்கிறது.
விஞ்ஞானத்தை பின்பற்றுகின்றேன் பொருளாதாரத்தை காப்பாற்றுகின்றேன் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கின்றேன் என்று சொல்லிச் சொல்லி அவற்றை அரசு சீரழித்து வருகின்றது.
அரசின் பொய்யும் புரட்டும்:
அரசின் விஞ்ஞான மருத்துவக்குழுவின் ஆலோசனைகளை அரசு உதாசீனப்படுத்தியது மட்டுமல்ல அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை; இதுவெல்லாம் கற்பனைக் கதைகள் என்றெல்லாம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் அரச தரப்பு கொன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். பிரித்தானிய பிரதமரும் கொன்சவேடிவ் கட்சியும் அவர்களது பிரச்சாரப் பீரங்கிகளான சன் மற்றும் டெய்லி மெயில் ஊடகங்களும்; 1980களில் தைப்பொங்கலுக்கு தமிழீழம் என்று தமிழ் இயக்கங்கள் ரீல் விட்டது போல கிறிஸ்மஸ் இற்குள் வைரஸை வென்றுவிடுவோம் என்றெல்லாம் ரீல் விட்டன.
புதிய வக்சினுக்கு விழுந்துகட்டி அனுமதியை வழங்கிவிட்டு தாங்கள் தான் உலகத்திலேயே முதல் முதல் வக்சீன் போடுவதாக பீலாவிட்டனர். சீனா, கொரியா, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகள் வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தை கட்டி எழுப்பி வரும் நிலையில் பிரித்தானிய அரசு இன்றும் ‘வாய்ச் சொல் வீரன்’ என்ற நிலையில் தப்பட்டம் அடிப்பவர்களாகவே உள்ளனர்.
சீனா, ரஸ்யா போன்ற நாடுகளும் புதிய வக்சீனை அறிமுகப்படுத்தி வருகின்ற நிலையில் அவர்கள் வக்சீன் தவிர்ந்த ஏனைய கட்டுப்பாடுகளாலும் நோயைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். மேலும் ரஸ்யாவின் ஸ்புட்னிக்-5 வக்சீனை பரீட்சித்துப் பார்க்க அஸ்ராசெனிக்கா என்ற பெரும் பார்மஸிட்டிகல் நிறுவனமும் முன்வந்துள்ளது. ஸ்புட்னிக் – 5 வக்சீனுக்கு பயன்படுத்திய கூறுகள் வைரஸுக்கு எதிராக கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் அதன் கூறுகள் இயற்கையான வைரஸ் கூறுகளில் இருந்து தயாரிக்கப்பட்டதால் அந்த வக்சீன் நீண்ட கால பாதுகாப்பை வழங்கும் என்றும் கருதப்படுகின்றது. இவை பற்றியெல்லாம் பிரித்தானிய ஊடகங்கள் மூச்சுவிடுவதில்லை. நினைப்பு பிழைப்பை கெடுத்த கதையாக பிரித்தானியாவின் கோவிட்-19 மரணங்கள் இந்த ஆண்டு முடிவதற்குள் 70,000 தை தாண்டிவிடும் நிலைக்கு வந்துவிட்டது.
பிரித்தானிய அரசின் ஊழல் மோசடி:
கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலைமையை கையாள பிரித்தானிய அரசு 200 பில்லியன் பவுண்களை கடன் வாங்கியது. அதில் 10 வீதமான நிதி 20 பில்லியன் பவுண்கள் பாதுகாப்பு அங்கிகளை வாங்குவதற்கு செலவிடப்பட்டது. இந்தப் பாதுகாப்பு அங்கிகளை வாங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பலவும் அது தொடர்பான எவ்வித முன் அனுபவங்களும் அற்ற நிறுவனங்கள் மட்டுமல்ல, அவைகளில் பெரும்பாலானவை கொன்சர்வேடிவ் கட்சியுடன் நெருக்கமானவர்களின் நிறுவனங்களாகவும் இருக்கின்றது. மேலும் இந்நிறுவனங்கள் பாதுகாப்பு அங்கிகளை உற்பத்தி செய்வதனிலும் அதனை சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளன.
ஒரு சில பெனிகளுக்கு சீனாவிடம் இருந்து பொருட்களைத் தருவித்து, அதனை ஐம்பது முதல் ஆயிரம் மடங்கு வரை விலைகளை உயர்த்தி பிரித்தானிய மருத்துவமனைகளுக்கு விற்றுள்ளனர். 20 பில்லியனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அங்கிகளின் உண்மையான பெறுமதி 10 பில்லியன் பவுண்களே என மதிப்பிடப்படுகின்றது. உயிர்களைப் பணயம் வைத்து கொள்ளை இலாபம் ஈட்டிக்கொள்வதில் பிரித்தானிய ஆளும் கட்சி – கொன்சர்வேடிவ் கட்சி ஈடுபட்டு இருந்தமை நியுயோர்க் ரைம்ஸ் புலனாய்வுக் கட்டுரையில் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் ‘ரெஸ்ற் அன் ரேஸ்’ போன்ற கோவிட்-19 பரிசோதனை செயற்பாடுகள் கூடி அனுபவமிக்க பல்கலைக்கழகங்கள், பிரித்தானிய மருத்துவமனைகளுக்கு வழங்கப்படாமல் எவ்வித அனுபவமுமற்ற தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி, அவர்களுக்கு மில்லியன் கணக்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறைகாலத்தில் மாணவர்களின் பட்டினியயைப் போக்க நான்கு மில்லியன் பவுண்களை ஒதுக்க மனமிரங்காத பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது நெருங்கிய வட்டங்கள் 10 பில்லியனை சூறையாடுவதற்கு அனுமதித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னதாக யுனிசெவ் பிரித்தானியச் சிறார்கள் பட்டினியயை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து விசேட திட்டத்தை பிரித்தானியாவில் நடைமுறைப்படுத்த உள்ளனர். இவ்வாறாக பிரித்தானியச் சிறார்களை பட்டினியில் இருந்து காக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை கடந்த பத்து ஆண்டு கொன்சர்வேடிவ் ஆட்சிக்காலத்தில் தான் ஏற்பட்டு உள்ளது.
பில்லியனெயர்களின் வருமானம் அதிகரிப்பு:
2020ம் ஆண்டின் சமாதானத்திற்கான நோபல் பரிசு உலக உணவுத் திட்டத்தின் தலைமை அதிகாரியான டேவிட் பெய்ஸ்லிக்கு வழங்கப்பட்டது. அவருடைய கணிப்பின் படி கோவிட்-19 இன் பாதிப்பினால் உலகெங்கும் 270 மில்லின் மக்கள் ஒரு நேர உணவுக்கு வழியில்லாமல் பட்டினியயை நோக்கித் தள்ளப்பட்டு உள்ளனர். இவர்களை பட்டினியில் இருந்து மீட்க 15 முதல் 20 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுகின்றது. ஆனால் அதனை பெற்றுக்கொள்வது மிகக் கடினமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் 2020 ஏப்ரல் முதல் யூலை வரையான நான்கு மாதங்களில் உலகில் உள்ள 2200 பில்லியனெயர்கள் – செல்வந்தர்கள் 2.7 ரில்லியன் டொலர்களைச் சம்பாதித்து உள்ளனர். அதாவது 1000 பில்லியன் ஒரு ரில்லியன். 2.7 ரில்லியன் சம்பாதித்தவர்களுக்கு ஒரு 20 பில்லியன் வழங்கி 270 மில்லியன் மக்களை காப்பாற்ற முடியாத ஒரு விலங்கினக் கூட்டத்தில் தான் நாங்கள் வாழ்கின்றோம்.
அதிஸ்ரவசமாக உழைத்த உழைக்காத அசையும் அசையாத சொத்துக்கள் எதையும் பரலோகத்திற்கு எடுத்துச் செல்ல முடியாததால் இன்னும் மனித இனம் இப்பூமியில் வாழ முடிகின்றது. தசம் ஒரு வீத சொத்தை பரலோகம் கொண்டு செல்ல முடியும் என்றொரு நிலை இருந்திருந்தால் இந்த 2200 செல்வந்தப் பிசாசுகளும் ஒட்டுமொத்த மனித இனத்தையே அழித்து, சொத்துக்களை பரலோகம் கொண்டு போயிருக்கும். இந்தப் பரலோகத்தில் இருக்கும் கடவுளர்களின் தொலைபேசி இலக்கம் இருந்தால் பதிவிடுங்கள் ஒரு சூம் மிற்றிங் போட்டு இதற்கான தீர்வு பற்றி டிஸ்கஸ் பண்ணலாம்!