பாடம்  — (உருவகக்கதை)

பாடம் — (உருவகக்கதை)

— செங்கதிரோன் —

பாரிய ‘லாறி’களில் ஏற்றிவந்த மண்ணைக் கொட்டி பள்ளத்தை நிரப்பிக் கொண்டிருந்தான் அவ்வேலையை ஒப்பந்தம் எடுத்துக் கொண்ட முதலாளி. வரிசை வரிசையாக ‘லாறி’கள் போவதும் வருவதுமாக இருந்தன. ஒப்பந்தகார முதலாளி வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தான். அயலிலே நின்றிருந்த மரங்களின் மீது கொக்குக் கூட்டங்கள் தங்கள் எதிர்காலம் பற்றிய ஏக்கங்களுடன் அமர்ந்திருந்தன. ஒப்பந்தகாரனை நோக்கிக் கொக்கு ஒன்று கேள்வி தொடுத்தது. 

‘ஏய்! மனிதனே! காடுகளை அழித்துக் கட்டிடங்களைக் கட்டியது காணாதென்று இப்போது நீர்த்தேக்கங்களையும் நிரப்பிக் குடிமனைகள் நிர்மாணிக்கத் தொடங்கி விட்டாய். இது எங்குபோய் முடியப்போகிறதோ தெரியாது. காடுகள் அழிக்கப்பட்டதால் பலகாட்டு மிருகஜாதிகள் கூட அருகிவிட்டன அல்லது அழிந்து விட்டன. காட்டு மிருகங்கள் உணவும் உறைவிடமும் தேடி ஊருக்குள்ளும் நுழைய ஆரம்பித்து விட்டன. நீர்த்தேக்கங்கள் மண்மூடி நிரப்பப்பட்டதால் கொக்குகளாகிய நாங்கள் மீன்களைத்தேடி குளங்களை நாடிய காலம்போய் இப்போது குளங்களைத் தேடும் காலம் வந்து விட்டது. இயற்கை வளங்களை ஏன் இவ்வாறு அழித்துக் கொண்டிருக்கிறீர்கள்?’  

‘ நகரங்களிலே சனப்பெருக்கமும் வணிகச் செயற்பாடுகளின் விரிவாக்கமும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டிருக்கும்போது கட்டிடங்களின் தேவையும் குடிமனைத் தொகுதிகளின் தேவைப்பாடும் அதிகரிக்கும்போது காடுகளை அழிக்காமல் நீர்த்தேக்கங்களை நிரப்பாமல் நிலத்தை நாம் எங்கே தேடுவது’ என்று பதில் கொடுத்தான் மனிதன்.  

‘மனிதர்களுக்கு மட்டும்தானா குடிமனைகள் வேண்டும். காடுகளை அழித்தும் குளங்களை மண்கொண்டு நிரப்பியும் ஐந்தறிவு படைத்த உயிரினங்களின் வாழ்வாதாரங்களை நாசமாக்கி விட்டால் அவை எங்கே போவது? என்ன செய்வது? சுயநலமாகப் பேசுகிறாயே? சூழல் பாதுகாப்பு, இயற்கைச் சமநிலையைப் பேணுதல் என்றெல்லாம் வார்த்தைகளை உச்சரித்து உலகளாவிய மாநாடுகளையெல்லாம் ஒருபுறத்தில் நடாத்திக் கொண்டு மறுபுறத்தில் கட்டுப்பாடற்ற மனித நடத்தைகள் மூலம் இயற்கை வளங்களை அழித்துக் கொண்டிருக்கிறாயே. அப்படியானால் உன் பேச்சும் செயலும் பொய்தானே. போலித்தனம் மிக்கதே. உலக சமாதானம் பேசிக்கொண்டு அணுக்குண்டு தயாரிப்பதுதானே உனது புத்தி’ என்று கிண்டல் அடித்தது கொக்கு. ஆறறிவுபடைத்த மனிதன் அதனைக் காதில் வாங்கிக் கொண்டதாக இல்லை.  

காலச் சக்கரம் சுழன்றது.  

ஒருமுறை பருவமழை கொட்டுக் கொட்டென்று கொட்டியது. மழைவீழ்ச்சி வழமைக்கு மாறாக கூடியதால் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. நகரங்கள் வெள்ளக் காடாகின. மக்கள் கட்டிடங்களின் உச்சிகளிலும் கூரைகளிலும் மொட்டைமாடிகளிலும் மரங்களிலும் ஏறியும் பாதுகாப்புத் தேடினார்கள். ஆடு, மாடு, கோழிகளுடன் மனிதர்களும் கூட வெள்ளத்திலே அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நீர் தேங்கி நிற்கவும் வழிந்தோடவும் இடமில்லாமல் நகர்ப்புறங்களில் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே சென்றது. ஆறறிவு படைத்த மக்கள் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஐந்தறிவு படைத்த பறவைக் கூட்டங்கள் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.