மட்டக்களப்பு எல்லையில் வாகரையின் ஆதங்கம்…

மட்டக்களப்பு எல்லையில் வாகரையின் ஆதங்கம்…

— பார் மைந்தன் —

மட்டக்களப்பின் எல்லைப்பகுதியான பெரும் நிலப்பரப்பை கொண்ட பிரதேசமே வாகரைப் பிரதேசமாகும். மட்டக்களப்பின் ஏனைய பகுதிகளுக்கு இல்லாத சிறப்பம்சங்கள் வாகரைக்கு உள்ள போதிலும் அப்பிரதேசத்தை யாரும் பொருட்டாக கொள்வது இல்லை. காரணம் மட்டக்களப்பின் பின்தங்கிய கிராமங்களை கொண்ட பிரதேசமே இது எனலாம். 

போராட்ட காலத்தில் அதிக மாவீரர் மற்றும் போராளிகளைக் கொண்ட பிரதேசமாக காணப்பட்டதோடுபுலிகளின் கட்டுப்பாட்டு பகுதியாகவே தொடர்ந்து இருந்து வந்தமையால் தமிழரின் எல்லைப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட போதிலும்கல்வி பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையும் நிலையை அடையாத பகுதியாகவே இருந்து வந்தது. 

எவ்வாறு இருந்த போதிலும் யுத்தம் முடிவுக்கு பின்னரும் இப்பகுதி கவனத்தில் கொள்ளப்படாத காரணத்தால் எல்லைப்பகுதிகளும் பறிபோவதுடன் மட்டுமல்லாது அதற்கு துணைபோகும் அதிகாரிகளை கொண்ட நிலையே தொடர்கின்றது. 

இங்கே இது தொடர்பில் பேச நினைத்தமைக்கு ஓர் காரணம் உண்டுஅதாவது அன்மையில் பிணையில் விடுதலையான தமவிபு கட்சியின் தலைவர் வாகரைக்கும் தனது ஆதரவாளர்களை பார்வையிட சென்றிருந்த போது தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போது ஓர் விடயத்தை முன்வைத்திருந்தார். 

அதாவது வாகரையின் வளர்ச்சி கல்வியினால் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற வகையில் கூறியிருந்தார். அதை நான் வாகரையின் வளர்ச்சின் மீது அவாவுடன் இருப்பவன் என்ற அடிப்படையில் வரவேற்பதோடு மட்டமல்லாது, என்னுடைய ஆதரவையும் தர பின் நிற்க போவதில்லை. ஆனாலும் அவருக்கும்அவர் சார்ந்த ஆதரவாளர்களுக்கும் சில விடயங்களை நினைவுபடுத்த விரும்புகின்றேன். 

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பல அபிவிருத்திகளை தன்னுடைய முதலமைச்சர் காலத்தில் கொண்டு வந்ததாக அவரது ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் கூறி வருவதை அவதானிக்க முடிந்தது. ஆனாலும் தங்கள் கட்சியின் அதிக வாக்கு வங்கியை கொண்டுள்ள வாகரைக்கு இதுவரை ஆக்கபூர்வமாக செய்த ஓர் விடயத்தையேனும் அவரது ஆதரவாளர்களால் சொல்ல முடிந்ததா என்பதை சிந்திக்க வேண்டும். 

இனியும் எவ்வாறான விடயங்களை செய்ய வேண்டும் என்ற திட்டங்களும் வாகரை சார்ந்த ஆதரவாளர்களிடமோ அல்லது கட்சியின் உயர்மட்ட நபர்களிடமும் உள்ளதா என்பதை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 

சரி நான் விடயத்துக்கு வருகின்றேன். அதாவது பாராளுமன்ற உறுப்பினர் திரு சந்திரகாந்தன் அவர்களது முதலமைச்சர் காலத்தில் வாகரையின் முன்னேற்றத்துக்கு சாதக நிலைகளை உருவாக்காது விடினும் பாதக நிலை காணப்பட்டதை இங்கே நினைவுபடுத்தி அதை மீண்டும் செய்யாது இருக்கவேண்டும் என்னும் நோக்கிலேயே இதனைக் கூற நினைக்கின்றேன். 

அந்தவகையில் வாகரை பிரதேசத்தின் முதன்நிலை பாடசாலையாக காணப்பட்ட வாகரை மகா வித்தியாலத்தின் வீழ்ச்சிக்கு அவர் காலத்தில் கவனிப்பாரற்ற நிலை இருந்ததும் ஒரு காரணம் என்று சுட்டிக்காட்ட வேண்டியது என்னுடைய கடமை என்று உணர்கின்றேன். 

அதாவது வாழைச்சேனையின் பிரபல உயர்தர அரசியல் பாட ஆசிரியர் ஒருவர் வாகரை மகா வித்தியாலயத்தில் 2015 களில் கடமை புரிந்தார். அதேவேளை சங்கீத பாடத்தின் சிறந்த ஆசிரியராக திகழ்ந்து பன்ட் (Band) குழுவை உருவாக்கி அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை வாகரை மகா வித்தியாலயத்துக்கு கொண்டு வந்து பெருமை சேர்த்த ஓர் ஆசிரியரையும் தன்னுடைய (பேத்தாளை-வாழைச்சேனை) பிரதேசத்துக்கு இடமாற்றியதில் அவரது பங்கு இருந்ததை அப்பிரதேச மக்கள் அடிக்கடி அங்கலாய்ப்பதை அங்குள்ள மக்கள் அறிவர். 

அதேவேளை அப்பாடசாலைக்கு வினைத்திறன் அற்ற அதிபர் ஒருவரை கொண்டு வருவதிலும் அவர் கட்சி சார்ந்தோரின் பங்களிப்பு இருந்ததையும் ஏற்றுக்கொண்டு அப்பாடசாலையின் வளர்ச்சிக்கு பங்களிப்பை கொடுக்க அக்கட்சியின் ஆதாரவாளர்கள் நிர்ப்பந்திக்க வேண்டும். 

அதேவேளை வாழைச்சேனையின் தமிழ் பாட பிரபல ஆசிரியர் ஒருவரும் வாகரையின் இன்னொரு பாடசாலையில் இருந்து வாழைச்சேனைக்கு அவரது அரசியல் செல்வாக்கினூடாகவே இடமாற்றம் பெற்றார் என்கின்ற பொதுவான விமர்சனங்களும் உண்டு. 

எனவே கல்வியால் வாகரையை கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறும் அதேவேளை அதன் பாதக நிலைக்கான பங்கும் தங்களிடம் உண்டு என்பதை கருத்தில் கொண்டு இனியாவது செயல்பட வேண்டும். 

இவ்வேளை இதனை படிக்கும் கட்சிக்காரர்கள் என்னிடம் அவற்றுக்கான ஆதாரத்தை கேட்கவும் நினைக்கலாம். அவ்வாறான புத்திஜீவிகளுக்காக ஓர் கருத்தையும் பதிவு செய்ய விரும்புகின்றேன். அதாவது அரசியல் தலையீட்டுடன் நடக்கும் செயல்பாடுகளுக்கு ஆதாரம் வைத்து அரசாங்க அதிகாரிகள் செயல்படுவதில்லை. அதை தங்களது சுயபுத்தி கொண்டு அன்றைய சம்பவங்களை சிந்தித்துப் பாருங்கள் என்பதே என்னுடைய பதிலாக அமையும். 

இங்கு இவ்விடயங்களை கூறுவதன் நோக்கத்தை புரிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு. 

அதேவேளை ஆதாரம் கேட்போருக்கு இல்மனைட் இவர்கள் காலத்திலையே முன்னெடுப்பு நடைபெற்றதை தகவலறியும் சட்டத்தினுடாக பெற்றுக்கொண்ட தகவல்கள் ஆதாரமாக என்னிடம் உண்டு என்பதை மட்டும் கூற நினைக்கின்றேன். 

நான் இல்மனைட்டுக்கோ அல்லது வாகரைக்கு கொண்டுவரப்படும் அபிவிருத்திக்கோ எதிரானவன் அல்ல. அன்றைய காலத்தில் வாகரைக்கு கொண்டுவரப்பட இருந்த நன்னீர் மீன்வளர்ப்பை கூட நான் எதிர்க்க விரும்பவில்லை. 

ஏனெனில் எமது சமூகத்துக்காக நிலையான அபிவிருத்தி திட்டங்களே தேவை. அவை எமது நில அமைவிடத்துடன் ஒத்துப்போவதாக இருப்பதோடு மட்டுமல்லாது அவை பெருவாரியாக எமது சமூகத்தின் பங்களிப்பையும்பயனையும் அடிப்படையாகக்கொண்டிருக்க வேண்டும். 

அண்மையில் மீன்பிடி அமைச்சரிடம் ததேகூ பாராளுமன்ற உறுப்பினர் திரு சாணக்கியன் அவர்கள் வாகரையில் ஓர் மீன்பிடித்துறைமுகத்தின் தேவை தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார். தங்களது காலத்திலும் இவ்வாறான திட்டமொன்று ஆராயப்பட்டதையும் அறிய முடிந்தது.  

அந்தவகையில் பாரம்பரிய தொழில் மற்றும் வளத்தை பாதக நிலைக்கு கொண்டு செல்லாது இருப்பதும் அவசியமானது. அதிலும் மிக முக்கியமானது எமது தமிழ் மக்களின் இருப்பை பாதிக்காத வகையில் அவை அமைவது கட்டாயத்தேவையாக இருக்க வேண்டும். 

எனவே தமவிபு கட்சியின் தலைவர் வாகரைக்கு சென்றமைக்காக ஆதரவாளர்களை மகிழ்விக்கும் பேச்சுக்களை மட்டும் நடத்தாது, எமது மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இனியாவது இதயசுத்தியுடன் நடக்க அவரும்அவர் சார்ந்தோரும் செயல்பட வேண்டும் என்கின்ற நோக்கிலையே இவற்றை கூற நினைத்தேன். 

இதற்கு மாறாக என் கருத்தை எதிர்வாதமாக கொண்டு எதிர்கொள்வார்கள் எனின் அதை நான் என்றும் நேசிக்கும் எம் மக்கள் புரிந்து நடப்பார்கள் என்று கடந்து செல்வதை விட வேறு வழி இல்லை. ஏனெனில் எங்கள் பிரதேசம் மட்டக்களப்பில் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது வவுணதீவு மற்றும் வாகநேரி போன்ற பிரதேசங்கள் போன்று விசேட கவனம் கொண்டு பார்க்கப்பட வேண்டிய பகுதியாகும். 

அபிவிருத்தி அடையாத பகுதியை கருத்தில் கொள்ளாது அபிவிருத்தி அடைந்த பகுதிக்கு மேலும் மேலும் திட்டங்களை முன்னெடுப்பதானது பாடசாலைகளில் ஒரு சில ஆசிரியர்கள் மெல்லக்கற்கும் மாணவர்களை கைவிட்டு மீத்திறன் கொண்ட மாணவர்களுக்கு அறிவை ஊட்டி மிகச்சிறந்த சித்திக்காக பாடுபடுவதற்கு ஒப்பாகும். எனவே அவற்றை உணர்ந்து அபிவிருத்தி அரசியல் செய்ய நினைப்போர் முன்னெடுப்பர் என நம்புகின்றேன்.