தமிழ் திரையுலகில் ஒரு அமெரிக்க இயக்குனர் : எல்லிஸ் ஆர் டங்கன்

தமிழ் திரையுலகில் ஒரு அமெரிக்க இயக்குனர் : எல்லிஸ் ஆர் டங்கன்

— சீவகன் பூபாலரட்ணம் —

அண்மைக்காலத்தில் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியவர்களாக அல்லது தமிழ் சினிமாவுக்கு ஒரு மாற்றத்தை கொடுத்தவர்களாக நாம் பாலுமகேந்திரா, பாரதிராஜா, மகேந்திரன் என்று ஒரு பட்டியலை கூறமுடியும். ஆனால், தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் பல மாற்றங்களையும் மறுமலர்ச்சியையும் அவ்வப்போது கண்டுதான் இன்றைய நிலையை அடைந்துள்ளது. 

அந்த வகையில் அதன் ஆரம்ப கட்டத்தில் அதில் ஒரு பெரு மாற்றத்தை ஏற்படுத்தியவராக வெளிநாட்டுக்காரர் ஒருவரும் பார்க்கப்படுகிறார். 1935 முதல் 1950 வரை தென்னக தமிழ் சினிமாவில் இவர் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் கணிசமானதாகப் பார்க்கப்படுகின்றது. 

அந்தக்கால பழைய படங்களான சதிலீலாவதி, அம்பிகாபதி, மீரா, அவ்வளவு ஏன் எம்ஜிஆர் முதன் முதலில் முக்கிய வேடத்தில் நடித்த மந்திரிகுமாரி ஆகிய படங்களில் அந்தக்கால தமிழ் சினிமாவுக்கே பொருத்தமில்லாத ஒரு ஆங்கிலேயப் பெயரை இயக்குனராக நாம் பார்க்கலாம். அவர்தான் எல்லிஸ் ஆர் டங்கன். 

நாம் இங்கு பேசவிருப்பது இவரைப் பற்றித்தான். 1909 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி அமெரிக்காவின் ஒஹியோவில் பிறந்த இவரது முழுப்பெயர் எல்லிஸ் ரொட்றிகோ டங்கன்.  

தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சினிமா கற்ற மாணவர்களில் முதல் தொகுதி மாணவர்களில் ஒருவரான டங்கன் தனது சக மாணவரான எம்.எல்.டாண்டன் என்பவரின் அழைப்பின் பேரிலேயே இந்தியாவுக்கு 1935இல் வந்தார். இந்தியாவின் சினிமாத் துறையில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக இந்தியாவுக்கு வந்த அவர்,  சுமார் 6 மாதங்கள் இந்தியாவில் சுற்றித்திரிந்திருக்கிறார்.  

ஆனால், அந்தப் பயணம் சுமார் 15 ஆண்டுகள் இவரை இந்தியாவில் தங்கச் செய்ததுடன், தமிழ் சினிமாவுக்கு அருமையான பல படங்களையும் இயக்கச் செய்திருக்கிறது. தனது முதல் படமான “சதி லீலாவதி”யில் எம்ஜிஆரை அறிமுகம் செய்த இவர், பிரபல தென்னிந்திய பாடகியும் கதாநாயகியுமான எம்.எஸ். சுப்புலக்‌ஸ்மி, அந்தநாளைய சுப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோரையும் இயக்கியுள்ளார். அவ்வளவு ஏன், எம்ஜிஆர் முதன் முதலில் கதாநாயகனாக நடித்த “மந்திரிகுமாரி”யும் இவரது இயக்கத்தில் வெளிவந்ததே. அது மாத்திரமல்லாமல், எம்.எஸ்.சுப்புலக்ஸ்மி நடித்த “மீரா” மற்றும் “சகுந்தலை” ஆகியவை  எல்லிஸ் ஆர் டங்கனின் இயக்கத்தில் அந்தக் காலத்தில் பெரும் சாதனை படைத்த படங்களாகும். 

அதுமாத்திரமல்லாமல், சரோஜினி நாயுடு இந்த “மீரா” படத்தை இந்திக்கு கொண்டுபோனார். அங்கு இதே தென்னிந்திய நாயகியுடைய படம் அப்போது சக்கைபோடு போட்டது. ஆக, அப்போதே தென்னிந்திய கதாநாயகி வட இந்திய சினிமாவில் அறிமுகமாகியது நடந்துவிட்டது. 

ஆரம்ப நடவடிக்கைகள்  

இந்தியாவுக்கு வந்த டங்கன் முதலில் பக்த “நந்தனார்”(1935) என்னும் தமிழ் படத்தில் டாண்டனுக்கு உதவியாக செயற்பட்டுள்ளார். ஆனால், மறு ஆண்டே எஸ்.எஸ் வாசனின் நாவலை அடிப்படையாகக் கொண்டு “சதிலீலாவதி”(1936) என்ற படத்தை அவர் தமிழில் இயக்கினார். இந்தப் படத்தில் எம்.கே.ராதா, டிஎஸ் பாலையா, என்.எஸ்.கிருஸ்ணன் ஆகியோருடன் பின்னாளில் தமிழக முதல்வரான எம்.ஜி. ராமச்சந்திரனும் அறிமுகமாகிறார். ஆனால், இதில் எம்ஜிஆருக்கு மிகவும் சிறிய வேடமே. 

எப்படியிருந்த போதிலும் அதே ஆண்டில் வெளிவந்த இன்னுமொரு படமான, “இரு சகோதரிகள்”(1936) என்ற படத்தின் மூலமே டங்கன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறுகிறார். புராணப் படங்களுக்கு பேர்போன அப்போதைய தமிழ் சினிமாவில் இந்தப்படம் அந்தக்கால சமூகப் படமாகப் பார்க்கப்படுகின்றது. கூட்டுக்குடும்ப முறையின் பெறுமானங்கள் அதில் ஏற்படும் முரண்பாடுகள் ஆகியவற்றை அது பேசுகின்றது.  

சினிமா மொழி பேசிய முதல் படம் 

அந்தக்காலத்தில் நாடக மேடைகளில் இருந்தே தமிழ் சினிமாவுக்கான ஆரம்பம் தோன்றியதால், அப்போதைய படங்களெல்லாம், ஒரு மேடை நாடகத்தை ஒரு கமெராவை நிறுத்தி படமெடுத்தால் எப்படி இருக்குமோ அப்படியே இருக்குமாம். அந்தப் போக்கை மாற்றியவர் டங்கன் என்று கூறப்படுகின்றது. தமிழ் திரையுலகுக்கு நுட்பமாக கதை சொல்லும் ஒரு புதிய சினிமா கதை சொல்லும் பாணியை அவர் அப்போது அறிமுகம் செய்தார். “இரு சகோதரிகள்” படம் அப்போதைய பம்பாயின் சரோஜ் மூவிடோன் ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டுள்ளது. பாடலே படமாக இருந்த நிலைமையை மாற்றி தனது படத்தில் டங்கன் பாடல்களின் எண்ணிக்கையை குறைத்தார். அவர்தான் படத்தின் தொகுப்பாளரும்கூட. அது மாத்திரமல்லாமல், நகைச்சுவைக்காட்சிகளில், மூலக்கதைக்கு பொருத்தமில்லாத பகுதிகளையும் கத்தரித்து அகற்றினார்.  

நகர்ந்த கமெரா 

அந்தக்காலத்தில் கமெராவை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, அதன் முன்பாக நடிகர்கள் ஒரு நாடகம் போல நடிப்பார்களாம். அதுதான் அப்போதைய சினிமா. அது ஒரு கமெரா நாடகம். ஆனால், கமெராவை நகரச் செய்து படம் பிடிப்பது, சொட்டுகளை பிரித்து எடுத்து இணைப்பது போன்றவற்றை டங்கன் அறிமுகம் செய்துள்ளார். அதன் பின்னர்தான் உண்மையில் தமிழ் சினிமாவில் கமெரா பேசத்தொடங்கியதாகக் கூறுவார்கள். காட்சிகளைப் பிரித்து எடுத்ததன் மூலம் உணர்வுகளை துலாம்பரமாக வெளிப்படுத்துவதுடன், ஒரு பிரமாண்டத்தையும் தமிழ் சினிமாவில் அவர் அறிமுகம் செய்துள்ளார்.  

பாத்திரங்கள் அருகருகே இருந்தாலும் கத்திப் பேசுவது, பாடி உணர்வை வெளிப்படுத்துவது அந்த நாளைய நாடக மரபு அதனை மாற்றி, உரையாடலை உணர்வுடன் தேவையான அளவுக்கு வெளிப்படுத்துவது, அளவுக்கு அதிகமான நடிப்பை குறைப்பது போன்றவையும் அப்போது டங்கனால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

அத்தோடு, நாடகத்துக்கான மேக்கப்(கிட்டத்தட்ட மாத்துப் போடுவது) முறைக்கு பதிலாக சினிமா ஒப்பனையிலும்  நவீன விடயங்களை அவர் அறிமுகம் செய்துள்ளார்.  

வெளிப்புறப் படப்பிடிப்பு 

இவையெல்லாவற்றுடன் இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் அவர் அப்போதே செய்திருக்கிறார். அதாவது, இப்போதெல்லாம், ஸ்டூடியோயில் அடைபட்டிருந்த சினிமாவை ஸ்டூடியோவுக்கு வெளியே வெளிப்புறங்களுக்கு, ஊருக்குள் கொண்டு சென்றது பாரதிராஜாதான் என்று தமிழ் சினிமாவில் கூறப்படுவது வழக்கம். ஆனால், அன்றைய 1930களிலேயே வெளிப்புறங்களில் படம்பிடிக்கும் போக்கை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர் டங்கன். அன்று தமிழ் சினிமாவில் நடந்த இந்த மாபெரும் மாற்றத்தை பம்பாய் திரையுலகமே கன்னத்தில் கையைவைத்துப் பார்த்துக்கொண்டிருந்ததாம். 

மொழி தெரியா இயக்குனர் 

டங்கனுக்கு தமிழோ, வேறெந்த இந்திய மொழிகளோ அடியோடு தெரியாது. ஆனால், மொழிபெயர்ப்பாளர்களை அவர் பணிக்கு அமர்த்திக்கொண்டார். ஆங்கிலமும் தமிழும் தெரிந்தவர்களை மொழி பெயர்ப்புக்காக “ரஸ் டிரக்டர்” என்ற பெயரில் அவர் வைத்துக்கொண்டார். ஒரு பக்கத்தில் நடிப்பு விபரமும் அதன் எதிர்ப்பக்கத்தில் உரையாடலையும் ஆங்கிலத்தில் அவர் எழுதிக்கொண்டார். நடிகர்களின் நடிப்பில் அவர் அதிக கவனம் செலுத்தினாலும் தமிழ் சினிமாவின் பேச்சு மொழியிலும் அவர் அதிகம் அக்கறை காட்டினார். 

தனது படங்களான “அம்பிகாபதி”(1937)யில் தமிழ் விற்பன்னரான தணிகாச்சலம் என்பவரை இளங்கோவன் என்ற பெயரில் திரைக்கதையை எழுதவைத்தார், அதேபோல “பொன்முடி”(1949) படத்துக்காக பாரதிதாஸனையும், மந்திரிகுமாரி திரைப்படத்துக்கு பின்னாளில் தமிழகத்தின் முதல்வரான கலைஞர் கருணாநிதியையும் டங்கன் பயன்படுத்தியுள்ளார். 

“அம்பிகாபதி” கதை பெரும்பாலும் எல்லோரும் அறிந்ததுதான். மன்னனின் மகளைக் காதலிக்கும் ஒரு கவிஞனின் கதை அது. ஆக வர்க்கப் படிநிலையில் உயர்ந்த ஒரு பெண்ணை, கீழ் நிலையில் இருக்கும் ஒருவன் காதலிக்கும் கதை இது. இது கிட்டத்தட்ட வில்லியம் சேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் காவியத்தை ஒத்தது. அதனையே மனதில் வைத்து டங்கன் இந்தப் படத்தை ஒரு ஆங்கில பட பாணியில் படமாக்கியிருப்பார்.  

அதிலும் குறிப்பாக உப்பரிகையில் நிற்கும் இளவரசி அமராவதியைக் காண அம்பிகாபதி மேலே ஏறிச் செல்வார். அதாவது ரோமியோ ஜூலியட்டை சந்திக்கப்போவதுபோல. இதுபோன்ற காட்சிகள் அந்தக் காலத்தில் பெரிதாகப் பேசப்பட்டன. இந்தப் படம் கல்கத்தாவின் ஈஸ்ட் இந்தியா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது. கட்புலனற்ற பாடகரும், இசையமைப்பாளருமான கேசி டே என்பவரே இதற்கு பின்னணி இசையமைத்துள்ளார். பாடலும் அதற்கான இசையும் பாபநாசம் சிவன். 

சுப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் 

அந்த நாளைய சுப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜ பாகவதர் “அம்பிகாபதி”யில் கதாநாயகன். அவரோடு ஜோடியாக நடித்தவர் அந்தக்கால பிரபல பாடகியான எம்.ஆர். சந்தானலக்ஸ்மி. என்.எஸ்.கிருஸ்ணன் – மதுரம் ஜோடியுடன் டி.எஸ்.பாலையாவும் இதில் நடித்துள்ளார். உண்மையில் ஒரு தேவதாசியே இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டாராம். ஆனால், தியாகராஜ பாகவதர் ஒரு பிராமணர் அல்ல என்ற காரணத்தினால் அவரோடு ஜோடியாக நடிக்க அந்த நடிகை மறுத்துவிட்டாராம். ஆகவே அந்த நடிகைக்கு ஒரு பிராமணருடன் ஜோடியாக ஒரு பாத்திரம் வழங்கப்பட்டதாம். 

சர்ச்சையை ஏற்படுத்திய படுக்கையறைக் காட்சி 

“அம்பிகாபதி” படத்தில் ஒரு காட்சி அந்த நாளைய தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குறிப்பிட்ட காட்சியில் அம்பிகாபதி, அமராவதியின் அறைக்கு வந்து, அவரை படுக்கையில் கிடத்தி அவர் அருகே சாய்ந்து சல்லாபம் செய்யும், கிட்டத்தட்ட ஒரு முத்தக்காட்சி அதில் வரும். அதில் தியாகராஜபாகவதரும், சந்தானலக்ஸ்மியும் நடித்திருப்பார்கள். அந்த நெருக்கமான காட்சியைப் பார்த்ததும் தமிழ் நாட்டில் பெரும் சர்ச்சையே உருவாகிவிட்டது. விமர்சனங்கள் குவிந்தன. டங்கன் தமிழ் நாட்டில் ஆங்கில கலாச்சாரத்தை புகுத்த முனைகிறார் என்று குற்றச்சாட்டுக்கள் குவிந்தன. உண்மையில் அந்தக் காட்சியை இப்போது பார்க்கும் போதும் கொஞ்சம் ஒரு நெருடலாகத்தான் இருக்கிறது. 

அவரது “பொன்முடி” படத்திலும் இப்படியாக ‘விரசம்’ என்று விமர்சிக்கப்பட்ட ஒரு காட்சி வருகின்றது. காதலியை தனியாக காதலன் சந்திக்கும் போது, இருவரும் காதலின் உச்சத்தில் முகத்தோடு முகம் உரசும் காட்சி அது. அதுவும் அந்தக்காலத்தில் கடுமையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. 

உண்மையில் அப்போதே நாடகப் படங்களாக வந்த தமிழ் படங்களில் இடையே, ஒரு ஆங்கிலப் பாணியை பார்க்க முடிகிறது. இந்த விரசங்கள் குறித்த விமர்சனங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அவர் சினிமாவுக்கு கதை சொல்லும் ஒரு புதிய பாணியை தமிழில் அப்போதே அறிமுகம் செய்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.  

“சகுந்தலை”(1940) 

எல்லிஸ் ஆர் டங்கனின் இயக்கத்தில் தென்னகத்தின் இசைக்குயில் எம்.எஸ். சுப்புலக்ஸ்மி கதாநயகியாக நடிக்க வெளிவந்த படம் “சகுந்தலை”. அதில் கதாநாயகனாக இன்னுமொரு பிரபல இசைக்கலைஞரான ஜி.என். பாலசுப்ரமணியம் நடித்திருப்பார். “பிரேமையில் யாவும் மறந்தோமே…” மற்றும் “ஆனந்தமென் சொல்வேனே…” ஆகிய பாடல்கள் அந்தப் படத்தில் பிரபலமானவை. 

காளிதாசனின் காவியமான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்ட படம் இது. ஆனாலும், இந்தப்படத்தைவிட எம்.எஸ்.சுப்புலக்ஸ்மி நடிக்க, டங்கன் இயக்கிய “மீரா” திரைப்படந்தான் இந்தியா எங்கிலும் பெரிதாக பேசப்பட்ட படமாகும். 

காற்றினிலே வரும் கீதம் 

தனது அடுத்த முக்கிய படைப்பாக “மீரா”(1945) என்னும் படத்தை பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலக்ஸ்மியை கதாநாயகியாகக் கொண்டு இயக்கினார் டங்கன். அது ஒரு பெரும் வெற்றிப்படம். இன்றுவரை தமிழ் மக்கள் நெஞ்சங்களில் ஒலிக்கும் “காற்றினிலே வரும் கீதம்….” என்ற பாடல் அந்தப் படத்தில்தான் வருகிறது. அதன் ஹிந்தி வடிவத்தின் மூலம் சரோஜினி நாயுடு எம்.எஸ்.சுப்புலக்ஸ்மியை வட இந்திய சினிமாவுக்கு அறிமுகம் செய்தார். அந்தப் படத்தைப் பார்த்த இந்தி ரசிகர்கள் ‘கண்ணனின் காதலியான மீரா மீண்டும் பிறந்துவந்துவிட்டார்’ என்று நினைத்தார்களாம். இந்திப்படத்தில் மீரா பாடும் மீரா பஜனைப்பாடல்கள் இன்றும் அங்கு சாகாவரம் பெற்றவையாகத் திகழ்கின்றன. அந்தப் பாடல்காட்சியில் எம்.எஸ்.சுப்புலக்ஸ்மியை ஒரு தேவதைபோல காண்பித்திருப்பார் டங்கன். அதற்காக புதுமையான லைட்டிங் நுட்பங்களை அவர் பயன்படுத்தியிருப்பார். இளம் மீரா பாடும் “நந்தபாலா என் மணாளா…” மற்றும் பெரிய மீரா பாடும் “முரளி மோகன….” போன்ற பாடல்களும் மிகவும் பிரபலம்.  

இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி உதவியாக பாலையா முக்கிய பாத்திரத்தில் நடித்த Returning Soldier (1945) என்ற குறும்படத்தையும் டங்கன் தயாரித்துள்ளார். அப்போதைய மதராஸ் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ படப்பிடிப்பாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். பல விவரணப் படங்களையும் அவர் தயாரித்துள்ளார். 

மாடர்ன் தியேட்டர்ஸ் 

1948 இல் சேலத்தில் உள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டங்கன் பணியாற்றத் தொடங்கியுள்ளார். முதலில் அவர்களுடன் அவர் சேர்ந்து பணியாற்றிய படம் “பொன்முடி”. அது இரு சைவ முதலியார் குடும்பங்களின் கதை. அதில் எடுக்கப்பட்ட ஒரு நெருக்கமான காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை முன்னதாகவே சொல்லியிருக்கிறேன். 

மாடர்ன்ஸ் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரி.ஆர் சுந்தரம் அவர்கள் ஒரு தயாரிப்பாளரும் இயக்குனருமாவார். இந்தக்கூட்டு தயாரித்த அடுத்த படந்தான் டங்கனின் இறுதி தமிழ் படம் என்பதுடன், எம்ஜிஆரை கதாநாயகனாக அறிமுகமாக்கிய படமும்.  

தமிழ் காப்பியமான குண்டலகேசியை மையமாக கொண்டு உருவான அந்தப் படம் “மந்திரிகுமாரி”. இதன் கதை வசன கர்த்தா கலைஞர் கருணாநிதி. உண்மையில் திராவிடர் இயக்கம், திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவற்றின் கொள்கைகளை மையமாக வைத்து இதன் வசனங்களை கருணாநிதி எழுதியிருப்பார்.  

எம்ஜிஆரை நிராகரித்த டங்கன் 

இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு முக்கிய வேடம் கொடுக்க டங்கனுக்கு உண்மையில் விருப்பமில்லையாம். எம்ஜிஆருக்கு முகத்தாடையில் ஒரு வெட்டு போன்ற அமைப்பு இருக்கும். அது டங்கனுக்கு பிடிக்கவில்லை. ஆனால், கருணாநிதியும், ரிஆர் சுந்தரமும் மிகவும் வலியுறுத்தியதால்தான் அந்த பாத்திரம் எம்ஜிஆருக்கு வழங்கப்பட்டதாம். அந்த வெட்டு போன்ற இடத்தில் ஒரு குறுந்தாடியை ஒட்டியே எம்ஜிஆரை நடிக்க டங்கன் அனுமதித்தாராம். ஆனால், அந்த திரைப்படம் வெற்றி பெறவே எம்ஜிஆரின் கொடி உயரப் பறக்கத்தொடங்கிவிட்டது. 

“மந்திரிகுமாரி” படத்தில் மிகவும் முக்கியமான பாடல் “வாராய்… நீ… வாரய்…” என்ற பாடல். மந்திரிகுமாரி தனது கணவனோடு பாடும் பாடல். பாடலின் இறுதியில் கணவன் அவரை மலையுச்சியில் இருந்து தள்ளிவிட முயல, அவரை ஏமாற்றி அங்கிருந்து தள்ளி அந்தப் பெண் கொல்லும் காட்சி அந்தநாளின் மிகவும் பலமாக பேசப்பட்ட காட்சியாம். 

நடு வெயிலில் படம்பிடிக்கப்பட்ட இரவுக்காட்சி 

அதேபோல அந்தப் படத்தில் வரும் “உலவும் தென்றல் காற்றினிலே…” என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் குறித்து டங்கனின் உதவியாளர் ஒருவர் டங்கன் பற்றிய ஆவணப்படம் ஒன்றில் அழகாக விபரித்திருப்பார். அதாவது காட்சி ஒரு முழு நிலவு இரவில், ஆற்றில் படகில் வருவது போல அமைந்திருக்கும். ஆனால், டங்கன் சுட்டெரிக்கும் வெயிலில் அதனை படமாக்கினாராம். எல்லோரும் இவர் என்ன செய்கிறார் என்று திகைத்து நிற்க, கறுப்பு வெள்ளைப் திரைப்படக்காலத்தில், அதிக வெயிலில் படமாக்கினால் காட்சி இருட்டாக வரும் என்ற யுக்தியை பயன்படுத்தி அவர் அதனை இரவுக்காட்சியாக அமைத்துள்ளார். படப்பிடிப்பில் வரும் சூரியனோ, ஒரு முழு நிலவு போல காட்சி தரும். அதனை இப்போதும் யூடியூப்பில் ரசிகர்கள் பார்க்கலாம். அந்த இரவு நேரக் காட்சி சுட்டெரிக்கும் வெயிலில் படமாக்கப்பட்டதாம். 

அமெரிக்கா திரும்பிய டங்கன் 

மந்திரிகுமாரி முக்கால்வாசி முடிந்த நிலையில் டங்கன் அமெரிக்காவுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது. அவரது மனைவியோடு ஏற்பட்ட குடும்பப்பிரச்சினை அதற்கு காரணம். தான் ‘ஒரு இந்தியராக மாற முன்னதாக அமெரிக்காவுக்கு திரும்ப வேண்டும்’ என்று வாதிட்ட அவரது மனைவி, நாடு திரும்ப காலக்கெடு விதித்தாராம். அதனால், தனது வெற்றிகரமான தொழிலை விட்டு விலக மனமில்லாமல் விலகி, டங்கன் அமெரிக்கா திரும்பியுள்ளார். ஆனாலும், அவர் மனைவிக்காக செய்த தியாகம் பிரயோசனமற்றே போனது. சில நாட்களிலேயே இருவரும் விவாகரத்து செய்துகொண்டார்களாம். 

அதன் பின்னரும் அமெரிக்க திரைப்படக் குழுக்களுடன் அவ்வப்போது இந்தியா வந்த டங்கன் சில ஆங்கில படங்களுக்கு பணியாற்றியுள்ளார். The Jungle (1952) என்ற படத்தில் இணை இயக்குனராக இந்தியா வந்து அவர் பணியாற்றியுள்ளார். அதே ஆண்டில் காடு என்ற பெயரில் அது தமிழிலும் வெளிவந்திருக்கிறது. Harry Black (1958) மற்றும் Tarzan Comes to India (1962) ஆகிய படங்களில் பணியாற்றவும் அவர் இந்தியா வந்துபோயிருக்கிறார்.  

பிற்காலத்தில் அமெரிக்காவில் Ellis Dungan Productions என்ற நிறுவனத்தை ஆரம்பித்து பல ஆவணப்படங்களை அவர் தயாரித்துள்ளார்.  

1958 இல் அமெரிக்காவுக்கு திரும்பியது முதல் அங்கு மேற்கு வேர்ஜினியாவில் வீலிங் என்ற இடத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார். 2001 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி அவர் காலமானார். அவரைப் பற்றி  An American in Madras (2013) என்ற ஒரு ஆவணப்படமும் வந்திருக்கிறது. 

சுமார் 15 ஆண்டுகள் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கழித்த எல்லிஸ் ஆர் டங்கன் அங்கு 13 தமிழ் படங்களையும் தலா ஒரு ஆங்கில மற்றும் இந்திப் படங்களையும் இயக்கியுள்ளார்.  

உண்மையில் நாடக சினிமாவாக இருந்த தமிழ் திரையுலகை புதிய போக்குக்கு அப்போதே மாற்ற முனைந்தவர் எல்லிஸ் ஆர் டங்கன். அதனை ஓரளவு வெற்றிகரமாகவும் அவர் செய்தார். ஆனால், அவர் தமிழ் திரையுலகை விட்டு அமெரிக்கா சென்ற பிறகு தமிழ் திரையுலகு மீண்டும் நாடக பாணிக்கே திரும்பி விட்டதாகவும் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அது பின்னர் அதிலிருந்து மீண்டு இன்றைய நிலையை எட்ட நீண்ட காலம் பிடித்துவிட்டது.