— பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —
“இது என் கதையல்ல,
என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை”
எம்ஜீஆர் மன்ற நூலகம் எரிக்கப்பட்ட கதை!
தேர்தல் முடிந்துவிட்டது. தலைவர் சீ.மூ.இராசமாணிக்கம் அவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டார். ஆனால், தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற சிறுசிறு வன்முறைச் சம்பவங்களில் சம்பத்தப்பட்டோருக்கான வழக்குக் கணக்குக்கள் முடிந்தபாடில்லை. களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மிகவும் கடுமையான போக்கைக் கடைப்பிடித்தார்.
இந்த நிலையில், தேர்தல் முடிந்து சில நாட்கள் கடந்தபின்னர் ஒருநாள் நள்ளிரவில் எம்.ஜீ.ஆர். மன்றம் விசமிகளால் தீவைக்கப்பட்டது.
கொளுந்துவிட்டெரியும் தீச் சுவாலையின் ஒளியும் சத்தமும் அம்மாவையும், என்னையும் எழுப்பியதைப்போலவே அயல் வீடுகளில் இருந்தவர்களையும் எழுப்பியிருக்க வேண்டும். ஓடிச்சென்று, உள்ளேயிருந்த நூல்களை எடுக்க நான் முயன்றும் அருகில் செல்ல முடியவில்லை. அதற்குள் முழுக் கட்டிடமுமே தீயின் வாயில் நுழைந்துகொண்டது.
குப்பென்று எழுந்த தீச்சுவாலையின் அகோரத்தால், பக்கத்தில் நின்றிருந்த தென்னைமரங்களின் பச்சை ஓலைகளும் கருகி, எரிந்துகொண்டிருந்தன!
வேடிக்கை பார்ப்பதற்கும் ஒரு கூட்டம் அந்த நள்ளிரவில் வந்திருந்ததை அப்போதைய அதிர்ச்சியிலும், பதற்றத்திலும், துயரத்திலும் நான் உணரவில்லை. அனுதாபத்தில் உதவிசெய்ய வந்தவர்கள் என்றே நினைத்தேன்.
மறுநாட்காலை ஊரே அங்கு கூடியது. எம்ஜீஆர் மன்ற உறுப்பினர்கள் சோகமாகவும், கோபமாகவும் இருந்தார்கள். வந்தவர்கள், பெரும்பாலும் எல்லோருமே எங்களுக்கு ஆறுதல் கூறினார்கள். எவ்வளவு நல்ல சேவை. ஊரிலே ஒரு நூல்நிலையத்தை முதல் முதல் தங்கள் முயற்சியால் இந்தப் பிள்ளைகள் அமைத்து நடத்தினார்கள். அதற்கு இப்படி ஆகிவிட்டதே என்ற கவலை ஊர்மக்களுக்கு இருந்தது. இந்த நூல்நிலையத்தை அமைப்பதில் அவர்களுக்கும் பங்கு உள்ளது அல்லவா? அவர்கள்தானே நிதி வழங்கியவர்கள்! அவர்கள்தானே கிடுகுகள், மரங்கள் என்பவற்றையெல்லாம் உபயம் செய்தவர்கள்!
அடுத்தநாள், தலைவர், திரு.சி.மூ.இராசமாணிக்கம் அவர்களிடம் இருந்து எங்களை வரும்படி அழைப்பு வந்தது. எம்.ஜீ.ஆர். மன்ற நூல் நிலையத்திற்கும் திரு இராசமாணிக்கம் அவர்களது வீட்டுக்கும் இடைத்தூரம் 300 மீற்றருக்கும் குறைவானது. அவரைக்காண அவரது வீட்டுக்குச் சென்றபோதுதான் புதிய விடயங்கள் சில எங்களுக்குப்புரிய ஆரம்பித்தன. நூல் நிலையம் எரிக்கப்பட்டது சம்பந்தமாக காவல்துறைத் தலைமையகத்துக்கும், மற்றும் அரசாங்க அதிபர் முதலியோருக்கும் ஏற்கனவே, பல தந்திகள் அனுப்பப்பட்டிருந்த செய்தி அங்கே எங்களுக்குக் கிடைத்தது. எங்களிடம் கேட்காமலே தான்தோன்றித்தனமாகத் திட்டமிட்டு அந்த வேலைகளைச் செய்திருந்தார்கள்.
அவர்களில் சிலர் அங்கே இருந்தார்கள். எதுவும் பேசமுடியாத சூழ்நிலையில் நாங்கள் இருந்தோம். மறுநாட்காலை, களுவாஞ்சிகுடி காவல் நிலையத்தில் இருந்து என்னைத் தேடி ஜீப்வண்டி ஒன்று வந்தது. அந்த வண்டியினுள் நண்பன் கி.மகாதேவன் இருந்தார். என்னை ஏற்றிக்கொண்ட ஜீப் வண்டி சா.சிறியைத் தேடிப் பறந்தது.
மூவரின் பெயர்களும் காவலர்களிடம் இருந்தன.
எங்களைக் களுவாஞ்சிகுடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கே எங்களை விசாரித்தார்கள். எங்கள் வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டன. பின்னர் எங்களைப் போகச்சொல்லி விட்டுவிட்டார்கள். ” எங்களை வீட்டுக்குக் கொண்டு விடமாட்டீங்களா?” என்று நான் கேட்டேன். “போடா…நடந்து போங்கடா” என்று அச்சுறுத்தித் துரத்திவிட்டார்கள்.
காவல் நிலையம் ஊரின் தெற்குப்பக்க எல்லையில் அமைந்திருந்தது. அங்கிருந்து ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்தில் ஊரின் மத்தியில் இருந்த எங்களது வீடுகளுக்கு மூவரும் நடந்தே வந்தோம்.
அதற்குப்பின்னர் அடிக்கடி காவலர்கள் எங்களைத் தேடிவந்தார்கள். ஊரில் இருக்கிறோமா, ஓடிவிட்டோமா என்பதை உறுதி செய்வதற்காக வந்தார்களா அல்லது எங்களைப் பயமுறுத்துவதற்காக வந்தார்களா என்பதைச் சீர்தூக்கிப்பார்க்கும் நிலையில் நாங்கள் அப்போது இல்லை.
துப்பாக்கி ஏந்தாத காவலர்கள், காக்கிநிற அரைக் காற்சட்டையுடன் துவிச்சக்கர வண்டியில் ஊர்சுற்றும் காலம் அது. உதவிப் பரிசோதகர் தரத்தில் உள்ளவர்தான் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருப்பார். அவர் மட்டுந்தான் முழுக்காற்சட்டை அணிந்திருப்பார்.
அந்த நாட்களில் நீண்ட குழல் கொண்ட ஆறு துப்பாக்கிகள் காவல் நிலையத்தின் வரவேற்பு அறையில் சங்கிலியில் பிணைக்கப்பட்டவாறு இருக்கும். குற்றம் செய்தவர்கள் மட்டுமே பொலீசுக்குப் பயப்படுவார்கள். இருந்தாலும் மாணவர்களாகிய எங்களை அடிக்கடி காவலர்கள் தேடி வருவது எங்களுக்கு அவமானமாகவும், தொந்தரவாகவும் இருந்தது.
இரண்டு வாரங்களில் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் தெரிபடுமாறு அழைப்பாணை வந்தது. முதல் நாள் இரண்டு காவலர்கள் வந்து எங்களை மறுநாள் காலை தயாராக இருக்குமாறும், தாங்கள் வந்து கூட்டிச் செல்வதாகவும் சொன்னார்கள். திரு.சி.மூ.இராசமாணிக்கம் அவர்கள் சட்டத்தரணி திரு. சின்னையா அவர்களை ( இப்பொழுது சட்டத்தரணியாக இருக்கும் திரு. சந்திரன் சின்னையா அவர்களின் தந்தையார்) எங்களுக்காக ஒழுங்கு செய்தார். மட்டக்களப்பில் இருக்கும் அவர் ஒவ்வொரு புதன் கிழமையும் கல்முனை நீதிமன்றத்திற்குச் செல்பவர். மறு நாட்காலை ஜீப் வண்டியில் கல்முனை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டோம்.
எங்களை இந்த இக்கட்டில் தள்ளிவிட்டவர்கள் யாரும் எங்களுக்காக நீதிமன்றத்திற்கு வரவில்லை. எம்ஜீஆர் மன்றத்தில் உறுப்பினராக்கக்கூட இல்லாத திரு.வே.ஆறுமுகவடிவேல் அண்ணன் மட்டும் நீதிமன்றத்தில் எங்களுக்கு முன்னரே வந்து காத்திருந்தார். இந்த வழக்கில் நாங்கள் வெற்றிபெறலாம். ஆனால் நிச்சயமாகப் மேன்முறையீடு செய்யப்படும். வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் நாங்கள் நீதிமன்றத்திற்கு அலையவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதனால் எங்களது படிப்பைத் தொடர முடியாமல் போய்விடும்.
முதன்முதலில் நீதிமன்றத்திற்கு எங்களைப் பொலீசார் ஜீப்பில் ஏற்றிக் கொண்டுசென்ற அந்தப் பரபரப்பான நாளில்கூட ஆதரவுதருவதற்கு யாரும் வந்திராத நிலைமை எங்களை விழிப்படைய வைத்தது. சட்டத்தரணி சின்னையா அவர்கள் எங்களுடன் பேசிவிட்டு, “அப்ப..சும்மாதானா..” என்று இழுத்தார். விடயத்தை விளங்கிக்கொண்ட நாங்கள் 15 ரூபாயை அவரிடம் கொடுத்தோம். அடுத்து என்ன செய்வது என்று ஆறுமுகவடிவேல் அண்ணனுடன் கலந்தாலோசித்தோம். அவர் நல்லதொரு அறிவுரையைக் கூறினார்.
“ஊரிலுள்ள சிலர் தங்களது பிரச்சினைக்கு உங்களைப் பலிக்கடாவாக்கப் பார்க்கிறார்கள். அவங்களில் ஒருத்தனும் இங்கு வரவில்லை. உங்களை ஊசேத்திவிட்டுத் தங்களின் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது உங்களது எதிர்காலத்தைப் பாதிக்கலாம். யோசியுங்க” என்று சொன்னார். “யோசிக்க என்ன இருக்கிறது அண்ண. நமக்கு இதெல்லாம் சரிவராது. நாங்க படிக்கோணும்” என்று நான் சொன்னேன். நண்பர்களும் ஏற்றுக்கொண்டார்கள். இதனைச் சட்டத்தரணி சின்னையா அவர்களிடம் சொன்னோம்.
நீதிமன்றத்தில் எங்கள் பெயர்கள் கூப்பிடப்பட்டன.
“நீங்கள் வழக்குப் போட விரும்புகின்றீர்களா?” நீதவான் கேட்டார். இல்லை என்று மூவரும் கூறினோம்.
“அப்படியானால் ஏன் முறைப்பாடு செய்தீர்கள்?”
அடுத்த கேள்வியை நீதவான் கேட்டார்.
நாங்கள் முறைப்பாடு எதுவும் செய்யவில்லை என்று நான் சொன்னேன்.
பின்னர் சட்டத்தரணி ஆங்கிலத்தில் பேசினார். முறைப்பாடு எதையும் நாங்கள் செய்யவில்லை என்றும், நாங்கள் மாணவர்களாக இருப்பதால் வழக்கு விசாரணைகளில் ஈடுபட விரும்பவில்லை என்றும் நாங்கள் சொல்வதாக அவர் ஆங்கிலத்தில் கூறியதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
உடனே நீதவான், சரி நீங்கள் போகலாம் என்று எங்களை விட்டுவிட்டார்.
நூல் நிலையம் எரிக்கப்பட்ட வழக்கை பொலிசாருக்கு எதிராக நடாத்துவதற்குச் சிலர் முனைப்போடு செயற்பட்டிருந்தார்கள். அவர்களில் எவரும் எம்.ஜீ.ஆர். மன்றத்தின் உறுப்பினரல்லர். அவர்களில் எவருக்கும் நூலகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லை. வாசகர்களாகக்கூட அந்தப்பக்கம் அவர்கள் தலை காட்டியதில்லை.
ஆனால் அவர்களில் சிலருக்கு தேர்தல் வன்முறைகள் சம்பந்தமாக காவல் நிலையத்தில் முறைப்பாடுகள் இருந்திருக்கவேண்டும். நிலுவையில் வழக்குக்கள் இருந்திருக்கவேண்டும். அவர்களால் நாங்கள் எடுத்த முடிவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எங்களுக்கு ஏசினார்கள். பதிலுக்கு நாங்கள் கேட்ட கேள்விகளை அவர்களால் எதிர்நோக்க முடியாமல் வாயடைத்துப் போனார்கள். ஆனாலும் அவர்களுக்கு மிகவும் பழக்கமான தூசண வார்த்தைகளால் எங்களைத் திட்டிக்கொண்டே சென்றார்கள்.
தங்கள் விசுவாசத்தைத் தலைவர்களிடம் காட்டுதற்காக
எங்களைப் பலிக்கடாவாக்கிச் சிலர் இலாபம்பெற எண்ணியபோது, சட்டத்தின் பிடிக்குள் நாங்கள் சறுக்கி வீழ்ந்துவிடாமல் தந்திரமாகத் தப்புவதற்கு ஆறுமுக வடிவேல் அண்ணன் எங்களோடு கூட இருந்து ஆதரவு தந்தமை காலத்தினால் செய்த பேருதவியாக எங்களைக் காப்பாற்றியது.
இந்த இடத்தில் இடைச் செருகலாக, என் இன்ப நினைவு ஒன்று!
பதினைந்து வருடங்களுக்குப் பின்னர், அதே நீதிமன்றத்தில் நான் ஒரு சட்டத்தரணியாக நிற்பேன் என்றோ, எங்களுக்காக முன்னிலையான, சட்டத்தரணி சின்னையா அவர்களின் மகனான, மதிப்பிற்குரிய சட்டத்தரணி, சந்திரன் சின்னையா அவர்களுடன் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் எதிரெதிரே நின்று வழக்குரைப்பேன் என்றோ அந்த நேரத்தில் நான் அறவே நினைத்ததில்லை. கனவுகூடக் கண்டதில்லை.
ஆனால், கல்முனையில் மதிப்பிற்குரிய, சட்டத்தரணி மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களிடம் ஆறுமாதங்கள் பயிற்சியில் இருந்தபோது, அவரோடு கல்முனை நீதிமன்றத்தில் நான் கால்பதித்த முதல் நாளில், அந்தப் பழைய நினைவு என் மனதில் படமாக ஓடியது. இன்னும் பசுமையாய் என் நெஞ்சில் அகலாமல் கிடக்கிறது!
(நினைவுகள் தொடரும் )