சொல்லத் துணிந்தேன்—47

சொல்லத் துணிந்தேன்—47

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

இலங்கை இந்திய ஒப்பந்தமானது தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வாக இல்லாவிட்டாலும்ஒரு ஆரம்பப் புள்ளியாக வடக்குக் கிழக்கு இணைந்த மாகாண அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டது. 

இதன்படி எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பல்வேறுபட்ட நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் நோக்குடனேயே அதனை தோழர் பத்மநாபாவும் ஏற்றுக்கொண்டார். 

இலங்கை–இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப் பெற்று 33 வருடங்கள் கடந்திருக்கின்ற நிலையிலேயே தற்போது ஆட்சியிலுள்ளஇருக்கக்கூடிய கோட்டபாய ராஜபக்ஷ அரசு இரண்டு நாடுகளுக்குமிடையே நடைபெற்ற சர்வதேச ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக மீறுகின்ற வகையிலேயே நடந்து கொண்டிருக்கிறது. 

குறிப்பாக இலங்கை–இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள், சொத்தழிப்புகள் போன்றவற்றிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட்டிருந்திருப்பார்கள்”.  –இது வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வவுனியாவில் கடந்த 19. 11. 2020 அன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போது கூறியுள்ள கூற்றாகும். 

தோழர் சிவசக்தி ஆனந்தனின் கூற்றுடன் நானும் முழுமையாக உடன்படுகிறேன். இங்கேதான் தமிழர்தரப்பு அரசியல் தன்னைச் சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டிய தேவை எழுகிறது. 

1987இல் இந்திய–இலங்கைச் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் தானாக முன்வந்து அல்லது தானாக உருவாக்கி அரசியல் விருப்புடன் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை என்பது இன்று முழு உலகமும் அறிந்த விடயம். அது பற்றி விபரிக்கத் தேவையில்லை. 

ஆனால் இன்றுவரை இவ்வொப்பந்தம் முழுமையாக அமுல் செய்யப்படாமைக்கு இலங்கை அரசாங்கத் தரப்பை மட்டும் நாம் குறை கூற முடியாது. ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளில் தமிழர் தரப்பில் அப்போது முன்னணியில் நின்ற தமிழீழ விடுதலைப் புலிகள், இவ்ஒப்பந்தம் அமுல் செய்யபடுவதைக் குழப்பினார்கள்.  

அத்துடன் இவ் ஒப்பந்தத்தை ஆரம்பத்திலேயிருந்து எதிர்த்த முன்னாள் பிரதமரும் பின்னாளில் ஜனாதிபதியுமான காலஞ்சென்ற ஆர். பிரேமதாசாவுடன் கூட்டு வைத்துக்கொண்டு இவ்வொப்பந்தம் வாயிலாக நிறுவப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாகவேனும் இணைக்கப்பட்டிருந்த மாகாண அரச நிர்வாகத்திற்கு அச்சுறுத்தலைக் கொடுத்தது மட்டுமல்லாமல் இறுதியில் பிரேமதாச–பிரபாகரன் கூட்டு மாகாண அரசைக் கலைத்ததிலேயே போய் முடிந்தது. 

தமிழர்தம் அரசியல் தலைமைகளைப் பொறுத்தவரை அப்போதிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து தற்போதுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) வரை இவ்வொப்பந்தத்தின் முழுமையான அமுலாக்கலுக்கு எந்தவிதமான காத்திரமான அரசியல் பங்களிப்புகளையும் வழங்கவில்லை. 1989 இல் நடந்த அமிர்தலிங்கத்தின் கொலை மரணத்துக்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களும் பின்னர் வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களும் வெளியே ‘அஹிம்சை’ பேசிக்கொண்டு புலிகளிடம் இருந்து தமது உயிரைப் பாதுகாப்பதற்காகப் புலிகளின் வாலைப் பிடித்துத் தொங்கியதால்தான் இந்த ‘இரண்டும் கெட்டான் நிலைமை’ தமிழர்களுக்கு ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் சூத்திரதாரியான இந்தியாவைத் தமிழர் தரப்பு பகைத்துக் கொண்டு அல்லது விமர்சித்துக் கொண்டு இவ்வொப்பந்தத்தின் முழுமையான அமுலாக்கல் நடைபெறவில்லையே என ஆதங்கப்படுவதில் எந்தவித அர்த்தமுமில்லை. 

முதலில் தமிழர் தரப்பு மேற்கூறப்பட்ட உண்மைகளை இப்போது காலம் தாழ்த்தியாவது பகிரங்கமாகவும் நேர்மையாகவும் அரசியல் பொது வெளியில் ஒப்புக்கொண்டு கடந்த காலத்தில் தான் விட்ட அரசியல் தவறுகளை உணர்ந்து தனது அணுகுமுறைகளை மாற்றிப் புதிய ‘வியூகம்’ களை வகுத்துச் செல்ல வேண்டும்.  

அதனை விடுத்து ‘பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்’ என்ற நிலையிலிருந்து கொண்டு ஓடிப் பிடித்து ‘ஒளித்து விளையாடும்’ அரசியல் சித்து விளையாட்டுகளால் மென்மேலும் தமிழர்களுக்கு இழப்புகள்தான் ஏற்படும். 

இத்தகைய அரசியல் சித்து விளையாட்டுகள் தேர்தல்களில் சில தனிநபர்களின் அல்லது கட்சிகளின் வெற்றிகளுக்கு உதவலாமே தவிர மக்களுக்கு உதவமாட்டாது. 

மக்களுக்கான அரசியலென்பது உண்மையானது; நேர்மையானது; வெளிப்படையானது. 

எனவே, தோழர் சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ள இந்திய–இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் முழுமையான அமுலாக்கலை இனியாவது ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு இனப் பிரச்சினை நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கிச் செல்லும் வகையில் தமிழர் தரப்பு தன்னுடைய எதிர்கால அரசியலைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். விஞ்ஞானபூர்வமாகக் கூறப்போனால் தமிழர் அரசியல் 180 பாகையால் திசைதிரும்ப வேண்டும்.