ஞானபீட விருதும் அகவிழி திறப்பும்

ஞானபீட விருதும் அகவிழி திறப்பும்

— கருணாகரன் —

பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு ‘ஞானபீட விருது’ அறிவிக்கப்பட்டதற்குத் தமிழ்ச்சமூக வெளியில் தெரிவிக்கப்பட்ட பாராட்டுகளை விடவும் கண்டனங்களே அதிகம். அதற்கு நியாயமான  காரணங்களும் உண்டு. 

1.   வைரமுத்துவின் இலக்கியத் தகுதி பற்றிய கேள்வி.

2.   வைரமுத்துவின் மீதுள்ள Meeto குற்றச்சாட்டும் முறையான விசாரணையின்மையும்.

3.   வைரமுத்துவினுடைய அரசியல் உறவுகள் மற்றும் பிரபலங்களின் வழியாக விருதுக்கு சிபாரிசைப்பெறும் முயற்சிகள்.

4.   தன்னை எப்போதும் முதன்மைப்படுத்திக் கொள்ளும் இயல்பும் தந்திரோபாயமும்.

5.   அரசியலிலும் இலக்கியத்திலும் தன்வாழ்விலும் போலித்தனமான வெளிப்பாடுகள். (அவருடைய நடை, உடை, பாவனை, பேச்சு எனச் சகலவற்றிலும் ஒரு நாடகத்தன்மையை அவதானிக்கலாம்).

6.   ‘ஞானபீட விருது’ இலக்கியத் தகுதியின் அடிப்படையில் இந்தியாவில் வழங்கப்படும் உயர் விருது என்பதால், அந்த விருதுக்குத் தமிழில் வைரமுத்துவையும்விட உயர்சாதனையாளர்களும்தகுதியாளர்களும் பலர் உள்ளனர். அவர்களைப் பின்தள்ளி வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டது ஏன்? 

7.   முன்னத்தி ஏர் போன்று செயற்பட்ட ஆளுமைகளைத் தான் எப்போதும் மதிப்பவன் என்று சொல்லும் வைரமுத்து, எப்படி அவர்களை மிதித்துச் சென்று இந்த விருதை வாங்க முயற்சிக்கத் துணிந்தார்?

இப்படிப் பல உண்டு. 

ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர், த.வா.க தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் எந்த யோசனையும் இல்லாமல் உடனடியாகவே வைரமுத்துவுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். 

தங்களுடைய சினிமா உறவின் காரணமாக கமலஹாசனும் தமது அரசியல் உறவின் நிமித்தமாக ஸ்டாலினும் வாழ்த்துகளைக் கூறிப் பெருமைப்பட்டுக்கொண்டனர். இதற்கு அப்பால், ‘ஞானபீட விருது’ என்றால் என்ன என்பதைக் குறித்தோ, அந்த விருதைப் பெறுவதற்கு வைரமுத்துவுக்குத் தகுதி இருக்கிறதா என்பதைக் குறித்தோ இவர்களுக்கு எந்தக்கவலைகளும் இல்லை. வைரமுத்துவையும் விட இந்த விருதைப் பெறுவதற்குத் தகுதியான பலர் தமிழ் இலக்கியப்பரப்பில் செழிப்பாக (வலுவாக) இருக்கும்போது, அவர்களைப் புறக்கணித்து, ஞானபீட விருது வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதால், தகுதியானவர்கள் அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற புரிதல் இவர்களுக்குக் கிடையாது என்பது நிரூபணமாகியுள்ளது. 

அவசரப்பட்டு வைரமுத்துவைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்ததன் மூலமாக கமலஹாசன் இதுவரையிலும் காட்டி வந்த தன்னுடைய இலக்கிய அறிவைத் தாழ்த்திக்கொண்டுள்ளார். குறைந்த பட்சம் அவருடைய மரியாதைக்குரிய இலக்கிய ஆசான்களான ஞானக்கூத்தன், கி.ராஜநாராயணன், சுந்தரராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், சா. கந்தசாமி தொடக்கம் இன்றைய இலக்கிய நண்பர்களான ஜெயமோகன், ஜி. குப்புசாமி  வரையிலானோரை ஒரு கணம் அவர் நினைத்துப் பார்த்திருக்கலாம். அல்லது இவர்களில் சிலரிடமாவது தொடர்பு கொண்டு இது பற்றி விசாரித்துப் பார்த்திருக்கலாம். வைரமுத்துவைப் பாராட்டியதன் மூலமாக இதுவரையிலும் தான்பங்கேற்ற நிகழ்வுகளிலும் அவர் முதன்மையாளாக இருந்து நடத்திய Big Boss நிகழ்விலும் அறிமுகப்படுத்தி, விதந்துரைத்த எழுத்தாளர்களையும் நூல்களையும் மறுதலித்திருக்கிறார் கமலஹாசன். 

ஸ்டாலினோ தமிழ்நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் இலக்கிய அந்தஸ்தையும் அடையாளத்தையும் உருவாக்கியோரை அவமதித்திருக்கிறார்; அவர்களைக் கவலைகொள்ள வைத்திருக்கிறார். கமலஹாசனைத்தான் விட்டுவிடுவோம். அவருக்கும் வைரமுத்துவுக்கும் சினிமா வழியான உறவு நெடியது. அதில் பரஸ்பரம் கொண்டதும் கொடுத்ததும் என ஏராளம் சங்கதிகள் இருவருக்குமிடையில் இருக்கலாம். தவிர, இருவரும் சினிமாத்துறையில் 45 ஆண்டுகள் உறவாடியிருந்தவர்கள். ஸ்டாலின் அப்படியல்லவே! ‘‘ஞானபீட விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் நம் கவிப்பேரரசின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. தலைவர் கலைஞர் இருந்திருந்தால் கவிப்பேரரசை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று கவிப்பேரரசு வைரமுத்துவை வாழ்த்துகிறேன்’’ என்று ஸ்டாலின் கூறியுள்ளதைப் படிக்கும்போது சிரிப்புச் சிரிப்பாக வருகிறது.

ஸ்டாலினை வழி நடத்துவதற்கு தி.மு.க வோடு நெருக்கமாக இருக்கும் மொழி, பண்பாட்டு, கலை, இலக்கியத்துறையினர் ஏன் தவறினர்? குறிப்பாக மனுஷ்யபுத்திரன், சல்மா, இமையம், தமிழச்சி தங்கபாண்டியன், கலாப்பிரியா எனப் பெரிய அணியே தி.மு.க வுடன் வெளிப்படையான ஆதரவோடு உள்ளது. இருந்தும் இவர்களைக் கடந்து எப்படி வைரமுத்துவைப் பாராட்டி ஸ்டாலின் வாழ்த்துக் கூற முடிந்தது? வைரமுத்துவை அவருடைய ரசிகர்கள் வாழ்த்திக் கொண்டாடுகிறார்கள். அதில் ஓரளவு நியாயமுண்டு. ஸ்டாலின் போன்றவர்கள் அப்படிச் செய்யலாமா? ஸ்டாலின் போன்றவர்கள் வாழ்த்துத் தெரிவுக்கும்போது அது தகுதியின்மைக்கும் தவறுகளுக்கும் அங்கீகாரமாகிவிடுகிறது. 

சினிமாப் பாடல்களின் வழியாகவே தமிழ் இலக்கியச்சூழலிலும்  அரசியற் புலத்திலும் எனத் தமிழ்ச் சமூகத்தில் பிரபலமாக அறியப்பட்டவர் வைரமுத்து. அந்தப் பிரபலத்தின் மூலமாகவே தமிழ் நாட்டின் அரசியல் தலைவர்களிடத்திலும் மக்களிடத்திலும் செல்வாக்கைப்பெற்றவர். குறிப்பாக தி.மு.க விடமும் அதனுடைய முன்னாள் தலைவரான மு.கருணாநிதியிடமும். இப்பொழுது ஸ்டாலினிடத்திலும். நிச்சயமாகத் தன்னுடைய இலக்கியத்தின் வழியாக அல்ல. ஆனால், ஞானபீட விருது அறிவித்திருப்பது, வைரமுத்துவினுடைய சினிமாப் பாடல்களுக்காக அல்ல என்பது கவனிக்கப்பட வேண்டியது. 

இப்படித் தமிழ்ச் சமூகத்தின் அத்தனை அடுக்குகளிலும் தன்னுடைய அடையாளத்தையும் செல்வாக்கையும் உயர்த்தி, தன்னை வலுவாக ஸ்தாபித்துக்கொண்டவர் வைரமுத்து. வைரமுத்துவின் இலக்கிய முயற்சிகளும் எழுத்துகளும் அவருடைய சினிமா அறிமுகம் – சினிமா செல்வாக்கின் வழியாகப் பரவலாக்கம் பெற்றவையே தவிர, இலக்கியத்தின் வழியான சாதனைகளால் அல்ல. இலக்கிய எழுத்தின் வழியாகத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவருமல்ல. அவருக்குக் ‘கவிஞர்’ என்ற அடைமொழி  கிடைத்ததே அவருடைய சினிமாப் பாடல்களின் வழியாகத்தான். ‘கவிஞர் வைரமுத்து’ என்றவுடன் நினைவுக்கு வருவது அவருடைய திரையிசைப் பாடல்களே தவிர, அவருடைய ஏனைய கவிதை, புனைவு எழுத்துகளல்ல. வைரமுத்து எழுதிய ‘கருவாச்சி காவியம்’, ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ போன்றவை மிகையுணர்ச்சி கூடிய விபரிப்பைக் கொண்டவை. நாவலின் சாயலைக் கூட நெருங்க முடியாதவை என்ற விமர்சனம் உண்டு. இதனால்தான் அவருக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டபோது, தமிழ் மொழியையும் அதனுடைய இலக்கியப் பெறுமானங்களையும் அதற்கான பங்களிப்புகளையும் பற்றி நன்றாக அறிந்தோரும் அவற்றின் மீது பற்றுள்ளோரும் கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கான கண்டனத்தைத் தெரிவித்திருப்போரில் அதிகமானோர் கலை, இலக்கியப்படைப்பாளிகள் மற்றும் விமர்சகர்கள் அறிவுத்துறையில் ஒரு பகுதியினர். குறிப்பாக தமிழ் எழுத்தாளர்களில் 80 வீதத்திற்கும் அதிகமானோர். அறிவுத்துறையினரில் – கல்லூரிப்பேராசிரியர்கள், பல்கலைக்கழகசமூகத்தினரில்பெரும்பான்மையானோர் எந்த அபிப்பிராயத்தையும் தெரிவித்துக் கொள்ளாமல் தந்திரமாகக் கள்ள மௌனம் காக்கின்றனர். இது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல. மாறாக கவலைக்கும் கண்டனத்துக்கும் உரியது. கூடவே இது தமிழ்ச்சமூகத்தின் தடுமாற்றத்தையும் வீழ்ச்சிக்கான குறிகளையும் காட்டுகிறது. இன்று தமிழ்ச்சமூகத்தின் அறிவாளிகள் யார் என்று பொதுமக்களைக் கேட்டால், அவர்கள் தயக்கமின்றிச் சொல்லக்கூடியவர்கள் மணி ரத்னம், திண்டுக்கல் லியோனி, நடிகர் விஜய், த்ரிஷா, சாலமன் பாப்பையா, பா.ஜ.க அண்ணாமலை, நீயா நானா கோபிநாத், ரெடின் கிங்ஸ்லி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், வாணி ராணி சீரியல் புகழ் ஆல்யா மானஸா, சிவ கார்த்திகேயன், ரோபோ ஷங்கர், சாலமன் பாப்பையா போன்றவர்களையே சொல்வார்கள். சாருநிவேதிதா சொல்வதைப்போல தமிழ்நாட்டில் ஒருவருக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்றால் இவர்களிடம் பரிந்துரை கேட்டுத்தான் விருது வழங்கப்படும் நிலை. 

அறிவுத்துறையைச் சேர்ந்த பலருக்கும் இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் புலன்கள் செயற்படாத நிலைக்குள்ளாகிவிடுவது வழமை. தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இலங்கையிலும் இதுதான் நிலைமை – இதுதான்உண்மை. இதற்குச் சில காரணங்கள் உண்டு. வைரமுத்து போன்ற பிரபலங்களுடன் தொடர்பான விவகாரங்களில் கருத்துச் சொன்னால் அல்லது விமர்சித்தால் தங்களுடைய பதவிகளுக்கும் உயர்வுகளுக்கும் இடைஞ்சல் ஏற்பட்டு விடக் கூடும் என்ற அச்சம் பலருக்கு உள்ளது. வைரமுத்துவுக்கும் அவரைப்போன்றோருக்கும் இருக்கின்ற அரசியல் ரீதியான உறவும் அதிகாரத் தரப்புகளில் இருக்கும் செல்வாக்கும் இவர்களை மிரளவைக்கிறது. இன்னொரு நிலையில், இவ்வாறானவர்கள் இத்தகைய பிரமுகர்களோடு நெருக்கத்தைப் பேணிக்கொள்ளவே விரும்புவதுண்டு. இப்போது கூட வைரமுத்துவோ அல்லது அவரைப்போன்ற பிரபலமாக – பிரமுகராக இருப்பவர்கள் கல்லூரிகளுக்கோ பல்கலைக்கழகங்களுக்கோ  சென்றால், அங்கிருக்கும் கல்வியாளர்கள் எழுந்து கூழைக்கும்பிடு போடத்தயாராகவே உள்ளனர். பதிலாக அங்கெல்லாம் வைரமுத்துவுக்கும் மேலான – சிறந்த எழுத்தாளரோ கவிஞரோ சென்றால், அதைப்பெரிதாகப் பொருட்படுத்திக்கொள்ளவும் மாட்டார்கள். மட்டுமல்ல, அவர்களைப் பற்றி அவர்களுக்குப் பெரிதாகத் தெரிந்திருக்கவும் மாட்டாது. இவ்வாறானோருக்கு இலக்கியம் என்றால் என்ன? கலைவெளிப்பாடுகள் எவை? அவற்றின்தரம் என்ன? இலக்கியத்திலும் கலையிலும் தமிழ்ப்பரப்பில் நிகழ்ந்து கொண்டிருப்பதென்ன? அவற்றின் சாதனைகள் எப்படியாக உள்ளன? சாதனையாளர் யார்? என்றெல்லாம் தெரியாது. மொழி, இலக்கியம் ஆகிய தளங்களில் கல்வித்துறையில் பணியாற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்குக் கூட இவை பற்றிய புரிதலும் கணிப்பீடுகளும் குறைவாகவே உள்ளன. இதற்கு ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்லிவிடலாம். இவர்கள் பங்கேற்று, இலக்கிய நிகழ்வுகளில் ஆற்றும் உரைகளும் இவர்களால் தேர்வு செய்து பாடத்திட்டங்களில் சேர்த்துக் கொள்ளப்படும் இலக்கியப் படைப்புகளும் படைப்பாளிகளும் இவர்களுடைய இலக்கியப்புரிதலும் இலக்கிய அறிவும் தாழ்நிலையில் உள்ளதைத் தெளிவுபடுத்துகின்றன. இதனால் இவ்வாறான சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் சரியான கருத்தை துணிவாக முன்வைக்கக் கூடிய நிலையில் இவர்களில் பலரும்  இல்லை. இருக்கின்ற மேலோட்டமான புரிதலில் வைரமுத்து போன்றவர்களே சிகரங்களாகத் தெரிகின்றனர். ஆகவே அவ்வாறானவர்கள் விருதுக்குத் தேர்வு செய்யப்படும்போது அது தகுதியானது, பெருமைக்குரியது என்றே எண்ணிக்கொள்கிறார்கள். தமிழன்னைக்கு சிறப்பு கிடைத்து விடுகிறது என்று மகிழ்கின்றனர். 

போதாக்குறைக்குச் சமூகவெளியில் உள்ள இன்னொரு சாரார் (இலக்கிய ஈடுபாடில்லாவர்கள், ஊடகத்துறையினர், அரசியல்வாதிகள் போன்றோரில் பெரும்பாலானோர்) எந்தப் பகுப்பாய்வும் இல்லாமல் எழுந்தமானமாகவே வைரமுத்து போன்றோரை ஆராதித்துத் தமது ஆதரவை அல்லது வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுகிறார்கள். வைரமுத்து கொண்டாடப்படுவது இவ்வாறானோரில்தான். இதற்குக்காரணம், இவ்வாறானவர்களுடைய வாசிப்பு, ரசனை, அறிவுமட்டம் போன்றவை தாழ்ந்திருப்பதேயாகும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் நடிகர்கள் விஜயகாந், சீமான், கமலஹாசன், விஜய், சரத்குமார் மற்றும் நடிகைகள் குஸ்பு, ராதிகா என்று நடிகர்களே அரசியல் பிரமுகர்களாகவும் – அரசியற்தலைவர்களாகவும் மாறிவிடமுடியுமா? இப்பொழுது சீமானுக்கும் விஜய்க்கும் ஒரு ஆதரவுத் தளம் உருவாகி இருக்கிறது என்றால், அதற்கு அறிவுத்துறையினரின் கள்ள மௌனமே பெருங்காரணமாகும். விஜய், சீமான் போன்றோருக்கு எப்படி ஊடக வெளியிலும் அரசியல் களத்திலும் பிரபலத்தன்மையும் முதன்மை அடையாளமும் உருவாகி உள்ளதோ, அவ்வாறே இன்னொரு வகையில் வைரமுத்துவுக்கும் உள்ளது. 

எல்லாமே சினிமாவின் – வெகுஜன ஊடகத்தின் மூலமான தகுதிப்படுத்தலாகும். ஆனால், அது நல்ல சினிமாவின் வழியானதா என்றால் அதுவும் இல்லை. வணிகச் சினிமாவின் வழியாக உருவாகிய செல்வாக்கு மண்டலம்.  இந்தச் சீரழிவுச்சினிமாவுக்கு அப்பால், அரசியற்களத்தில் செயற்பட்டு, அதன் வழியாகத் தமக்கான அடையாளத்தையும் அரசியற்தகுதியையும் விஜயகாந், சீமான், விஜய், கமல்ஹசான், சரத்குமார் போன்றவர்கள் பெறவில்லை. அப்படித்தான் வைரமுத்துவும் இலக்கிய ரீதியாகச் செயற்பட்டு, இலக்கியத்தகுதியைப் பெற்றுக்கொண்டவரல்ல. வைரமுத்துபெற்ற இலக்கிய அங்கீகாரமும் அடையாளமும் விஜய் போன்றவர்கள் பெற்ற அரசியல் அடையாளமும், சினிமாவின் வழியாகப் பெற்றுக் கொண்டதே. சினிமாவைக் கழித்து விட்டால், இவர்களிடம் மிஞ்சுவது எதுவுமில்லை. கமலஹாசனாவது சினிமாவில் குறிப்பிட்டுப் பேசக்கூடிய அளவுக்கு சில சாதனைகளைச் செய்திருக்கிறார். விஜய், சீமான், சரத்குமார்.. போன்றோர்? 

வைரமுத்து சினிமாப்பாடலாசிரியர் என்பதற்கு அப்பால், இலக்கிய அடையாளம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு எந்தச் சாதனையையும் செய்யவில்லை. இதை வைரமுத்துவே நன்றாக அறிவார். தன்னை விடத் தமிழில் புனைவெழுத்திலும் கவிதையிலும் உச்சமான சாதனைகளையும் கலை வெற்றிகளையும் செய்த பலரை வைரமுத்து நன்றாக அறிவார். அவர்களையெல்லாம் அவர் படித்தாரோ இல்லையோ, அவர்களுடைய சாதனைகளையும் வெற்றிகளையும் எப்படியோ அறிந்திருக்கிறார். இதை அவரே வெவ்வேறு அரங்குகளிலும் உரையாடல்களிலும் சொல்லிவந்திருக்கிறார். அப்படியிருக்கும்போது அவர்களையெல்லாம் புறந்தள்ளி விட்டுத் தன்னை முதன்மைப்படுத்தி, ஞானபீட விருதைப் பெற முன்வந்திருப்பது தாழ்வான செயலே. இது இதுவரையிலும் ‘தமிழ் என்னை வளர்த்தது. அந்தத் தமிழை நான் வளர்க்க வேண்டும்’ என்று வைரமுத்து பெருமையோடும் கடமை உணர்ச்சி போலவும் சொல்லி வந்ததற்கு நேர்மாறானது.  

அறிஞர்களும் கலைஞர்களும் இலக்கியவாதிகளும் சமூகத்தின் மனச்சாட்சியாகவும் முன்மாதிரிகளாகவும் இருக்கவேண்டியவர்கள். நேர்மையாளர்களாக வாழ்ந்து காட்ட வேண்டியவர்கள். ஒரு போதும் விருதுக்காகவும் புகழுக்காகவும் விலை போகக்கூடாது. இலக்கியவாதி இலக்கியத்தின், சமூகத்தின் எல்லைகளை விரிவுபடுத்திச் செல்பவர். அவற்றில் பரிசோதனைகளைச் செய்கின்றவர். மொழிக்கும் பண்பாட்டுக்கும் புதிய விதைகளைக் கொடுப்பவர். அதற்கான உற்பத்திகளைச் செய்கின்றவர். அதன் வழியே வாழ்க்கைக்கு புதிய பரிமாணத்தையும் ஒளியையும் ஊட்டுகின்றவர். எழுத்தினாலும் சிந்தனையினாலும் செயற்பாட்டினாலும் இலக்கியத்தை மேம்படுத்தி, சமூகத்தின் ஊட்டச்சத்தாக, அதனுடைய ஆரோக்கியத்துக்கான ஊட்டமாக இருப்பவை இலக்கியவாதியின் படைப்புகள். வைரமுத்துவின் எழுத்துகளும் அவருடைய வாழ்க்கையும் செயற்பாடுகளும் இந்த அடிப்படையிலா உள்ளது? என்பதால்தான் ‘தமிழ் சமூகம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையான அற இலக்கியங்களையும், பண்பாட்டுச் செழுமையையும் கொண்டது. ஒரு மெய்யான தமிழ் இலக்கியவாதி, இந்தப் பரந்துபட்ட பண்பாட்டுத் தன்மையையும், மண்ணின் மக்களின் ஆன்மாவையும் தனது படைப்புகளில் ஏந்தியிருக்க வேண்டும். ஆனால், வைரமுத்து அவர்களின் எழுத்துக்களில் தமிழ்ச் சமூகத்தின் ஆழமான விழுமியங்களோ, கலாச்சாரப் பெருமிதங்களோ மெய்ஞானத் தேடலோடு பதிவாகவில்லை. மாறாக, வெறும் மேலோட்டமான அடுக்குமொழிச் சொற்களால் அலங்கரிக்கப்பட்ட வணிகமயமான எழுத்துக்களே அவரது அடையாளமாக உள்ளன. இலக்கியம் என்பது வாழ்வைச் செதுக்குவது; ஆனால் வைரமுத்து அவர்களின் படைப்புகள் பெரும்பாலும் திரைத்துறை சார்ந்த லாப நோக்கிற்காகவும், தற்காலிகப் புகழுக்காகவும் உருவாக்கப்பட்டவை. மக்களின் உண்மையான உணர்வுகளைப் பிரதிபலிக்காத, வெறும் வார்த்தை ஜாலங்களைக் கொண்ட ஒரு வணிக எழுத்தாளருக்கு இத்தகைய உயரிய விருதை வழங்குவது, உண்மையான இலக்கியப் பேராளுமைகளை அவமதிப்பதாகும்’ என எழுத்தாளர்களும் கலைஞர்களும் வெளியிட்ட கண்டன அறிக்கையில் துணிவுடன் குறிப்பிட முடிந்தது.

வைரமுத்து தன்னுடைய வெவ்வேறு அரசியல் தொடர்புகளாலும் சினிமாவின் மூலமாகக் கிடைத்த பிரபலத்தினாலும் விருதுகளைக் குறிவைத்து வேட்டையாடும் ஒரு தாகமுடைய விலங்கு. அதற்குரிய நுணுக்கங்களையும் கீழ்மையான தந்திரோபாயங்களையும் செய்யும் மனிதர். தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய கீழ்மைச் செயல்களின் மூலமாக அவர் நேசிப்பதாகச் சொல்லும் தமிழையும் அதனுடைய வளமான இலக்கியச் செழிப்பையும் அவமதிப்புச் செய்துள்ளார். மட்டுமல்ல, தன்னையும் தன்னுடைய எழுத்துகளையும் ஞானபீடம் வரையில் முன்னிறுத்தியதன் மூலமாக தமிழின் செழிப்பான இலக்கிய வளத்தை வெளிச்சமூத்தின் முன் மறைக்க முற்பட்டிருக்கிறார். வைரமுத்துவை ஆதரிப்போருக்கும் வைரமுத்துவை விருதுக்காகத் தெரிவு செய்தோரையும் இந்தப் பழி சேரும்.  

‘ஒரு உயரிய விருது என்பது ஒரு தனிமனிதனின் புகழை உயர்த்துவதற்காக மட்டும் அல்ல; அது நாட்டின் இலக்கிய உன்னதத்தைத் தக்கவைப்பதற்காக வழங்கப்படுவது. தகுதியற்ற ஒருவருக்கு இந்த விருது செல்வது, எதிர்காலத்தில் இந்த விருதின் மீதான நம்பகத்தன்மையையும் பெருமையையும் முற்றிலுமாக அழித்துவிடும். உண்மையான இலக்கியப் பேராளுமைகளை அவமதிப்பதாகும்’ என எழுத்தாளர்களின் கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதும் இங்கே குறிப்பிடப்படத்தக்கது. 

விருதுகள் படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவதுண்டு. அவர்களையும் அவர்களுடைய எழுத்துகளையும்  சமூகம்  கவனிக்க வைக்க உதவும். இளைய தலைமுறையினர் அந்தத் திசையை நோக்கிச் செல்வதற்கான ஊக்கத்தை உருவாக்கும். சரியான தேர்வுத்தகுதியை அடையாளப்படுத்தும். உரிய மதிப்பைக் கொடுக்கும். ஆனால், இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழில் வழங்கப்படும் பல விருதுகளும் கீழ்மை செய்யப்படுவனவாகவே உள்ளன. இலங்கையில் அரசினால் வழங்கப்படும் கலாகீர்த்தி, சாகித்திய ரத்னா தொடக்கம் சாகித்திய மண்டலப்பரிசு, மாகாண விருது, ஆளுநர்விருது, முதலமைச்சர் விருதுபோன்றவையெல்லாம் பல சந்தர்ப்பங்களிலும் தகுதியற்றவர்களுக்கும் தகுதியற்ற படைப்புகளுக்கும் வழங்கப்படுகிறது. இதைக்குறித்த கண்டனங்கள் தொடர்ச்சியாகச் செய்யப்படுகிறது. ஆனாலும் நிலைமையில் மாற்றமில்லை. விருதுகளைப் பெறுவதற்காகவே கீழ்வேலைகளைச் செய்வதற்கென்றொரு கூட்டம் எப்போதும் ஓயாது இயங்கிக்கொண்டிருக்கிறது. இதைக்கடந்து, சில சந்தர்ப்பங்களில் நியாயமான முறையில் தகுதியானவர்களுக்கு விருது கிடைப்பதும் உண்டு. தகுதியற்றவர்களும் தகுதிக்குரியவர்களும் இதன் மூலம் சமப்படுத்தப்படும் அநீதி நிகழ்கிறது. இதனால் தகுதியானவர்கள் விருதுகளைப் பெறுவதற்குக் கூச்சமடைகிறார்கள். இதில் இன்னும் ஒரு வேடிக்கையும் உண்டு. சாகித்தியமண்டலப் பரிசு, மாகாணசபைவிருது போன்றவை வழங்கப்படுவது அந்தந்த ஆண்டுகளில் வெளியாகும் சிறந்தபடைப்புகளுக்கானது; அவற்றை எழுதிய எழுத்தாளர்களுக்கானது. ஆனால், அந்த விருதுகளைக் கொண்டாடுவதும் உரிமைகோருவதாகப் பிரகடனம் செய்வதும் பல சந்தர்ப்பங்களிலும் பதிப்பகங்களாகவே உள்ளன. இதைப் பார்க்கும்போது பதிப்பகங்களுக்குத்தான் விருதுவழங்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. பதிப்பகங்கள் தமது வெளியீடுகளுக்கே கிடைத்த விருதுகள் என்று அடையாளப்படுத்தும்போது, வழங்கப்படும் விருதுகள் எழுத்துக்கோ, எழுத்தாளருக்கோ என்பதற்கு அப்பால், பதிப்பகங்களுக்குத்தான் வழங்கப்படுகிறது என்ற தோற்றம் உருவாகிறது; திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் தமது பதிப்பகத்தின் வழியாகப் புத்தகங்களை வெளியிட்டால் நிச்சயமாக உங்களுக்கு விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உணர்வு படைப்பாளிகளிடத்திலே உருவாக்கப்படுகிறது. அப்படியென்றால், பதிப்பகங்கள் விருதுக்குழுக்களை லொபி பண்ணுகின்றனவா? 

இதனால் தவறான முறையில் வழக்கப்படும் பரிசுகள், விருதுகளைக் குறித்து கடுமையான விமர்சனங்களும் கண்டனங்களும் எழுகின்றன. நகுலன், சு.ரா, அசோகமித்திரன், சாரு நிவேதிதா, உமா வரதராஜன், அ. யேசுராசா உட்படப் பல எழுத்தாளர்கள் முறையற்ற விருதுகளைப் பகடி செய்திருக்கிறார்கள். சாருநிவேதிதாவுடன் நடத்திய உரையாடல் ஒன்றின்போது, ‘இலக்கிய வளர்ச்சிக்கு அல்ல. இலக்கிய வீழ்ச்சிக்குத்தான் விருது அளிக்கப்படுகிறது. பல விருதுகளும் அரசியலோடு, அமைப்புகளோடுதான் சம்மந்தப்பட்டிருக்கிறது’ என்று கூறியிருந்தார் கலை விமர்சகர் இந்திரன். தகுதியான பலருக்கு வாழ்நாளிலேயே சிறந்த விருதுகள் எதுவும் வழங்கப்பட்டதில்லை. ஒரு தடவை கனடா இலக்கியத்தோட்டம் நாடகவியலாளர் குழந்தை ம. சண்முகலிங்கத்துக்கு விருது வழங்குவதற்கான முயற்சியை எடுத்தது. அதைப்பற்றி சண்முகலிங்கத்தோடுபேசியபோது, ‘எனக்கு எதற்கு இனி விருது? என்னை விட்டுவிடுங்கள். அதை வேறு பொருத்தமானவர்களுக்கு உரியகாலத்தில் கொடுத்தால் நல்லது’ என்று சொன்னார் சண்முகலிங்கம். அப்பொழுது சண்முகலிங்கத்துக்கு வயது 90 ஐ நெருங்கியிருந்தது. ‘அவ்வாறானவிருது ஏற்கனவே கிடைத்திருக்குமாக இருந்தால், அந்த விருதை தன்னுடைய நாடகச் செயற்பாட்டுக்குப் பயன்படுத்தியிருக்க முடியும்’ என்றார் சண்முகலிங்கம். காலங்கடந்த விருது என்பது பலருக்கும் மனச்சோர்வையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. ஒரு வகையில் அது வாய்க்கரிசி போடுவதைப் போன்றதுதான். எந்த வகையிலும் பயனற்றது. சரியாகச் சொன்னால், ஒரு வகையில் அது இழிவு செய்வதுதான்.  

இதேவேளை தவறான முறையில் விருதைக் கொடுத்தால், விருது பெறுகின்றவர் மட்டுமல்ல, அந்த விருதை அளிக்கும் அமைப்பும் தவறாகவே உள்ளது என்றே பொருள் கொள்ளப்பட வேண்டும். நிச்சயமாக அது  தவறாகவே செயற்படுகிறது. அதை எந்தக்கேள்வியும் இல்லாமல் ஒரு சமூகம் பாராட்டுகிறது என்றால், அந்தச் சமூகமும் பாழடைந்துள்ளது என்றே அர்த்தமாகும். ஞானபீட விருதை வைரமுத்துவுக்கு அளிக்க முன்வந்திருப்பதன் மூலம், ஞானபீட அமைப்பும் தன்னைத்தாழ்த்திக் கொண்டுள்ளது. அதைப் பாராட்டி ஏற்பதன் மூலம் வைரமுத்துவும் தமிழ்ச்சமூகமும் தாழ்வு கொள்ளும். அப்படியொரு கீழான தேவை மிக உயர்ந்த – மதிப்பு வாய்ந்த விருதுக்கும் ஞானபீடத்துக்கும் ஏன் வந்தது?  ஏற்கனவே தமிழுக்கு ஞானபீடபரிசு 1975 இல் அகிலனுக்கு வழங்கப்பட்டபோதே தவறு நிகழ்ந்தது. அதையிட்ட கண்டனங்களும் எதிர்ப்புகளும் அப்பொழுது கிளம்பியிருந்தன. அந்த்த் தவறைக் குறித்த எதிர்வினைகள் இன்றும் அப்படியே உள்ளன. இதை ஞானபீட விருதுக்கான அமைப்புக் கவனத்திற்கொண்டிருக்க வேண்டும்.

தவறான முறையில் வழங்கப்படும் விருதுகள் – இவைதான் சிறந்த எழுத்துகள், சிறந்த சினிமா, சிறந்த கலை வெளிப்பாடுகள் என்றொரு தவறான மதிப்பீட்டை உருவாக்கி – சமூகத்திலும் பிற மொழிச் சூழலிலும் அடையாளப்படுத்தி விடுகின்றன. இது தவறானது, அநீதியானது. குறித்த கலை வெளிப்பாட்டில் தம்முடைய ஆற்றலையும் வாழ்வையும் செலவிட்டு உச்சமான சாதனைகளையும் பங்களிப்புகளையும் செய்திருப்போரின் விளைவுகளை மறைத்து, போலிகளையும் தரமற்றவைகளையும் முன்னிறுத்துவது அநீதியன்றி வேறென்ன? 

தவறான முறையில் விருதளிப்புகள், விருதுத்தேர்வுகள் நடப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. நம்முடைய சூழலில் உள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளையும் பேரிலக்கியவாதிகளையும் நாம் மதித்து முன்நிறுத்துவதில்லை. அவர்களுக்கு அரசியல், ஊடகத்தரப்பில் உரிய கவனம் கொடுக்கப்படுவதுமில்லை. பதிலாக தமிழ் வளர்ச்சி, தமிழ்ப்பெருமை பற்றியெல்லாம் பெருமிதங்கள் பேசப்படுகின்றன. குறைந்த பட்சம் உலகமெல்லாம் இருக்கின்ற தமிழ்ச் சங்கங்களும் தமிழ்ப் பண்பாட்டு இயக்கங்களும் தமிழ்ப்பல்கலைக்கழகங்களும் தமிழ் வளர்ச்சித்துறைகளும் கூட தரமான கலை வெளிப்பாடுகளையும் பேரிலக்கிய ஆளுமைகளையும் கவனத்திற்கொண்டு முன்னிறுத்துவதில்லை. இந்தத் தவறு போலிகளையும் பிரபலங்களையும் தேர்வுப்பரப்பில் கொண்டு வந்துநிறுத்துகிறது. ஆகவே இதொருதமிழ்ப் பெருந்திரள் சமூகத்தின்  கூட்டுத் தவறு. தமிழ்ப்பெருந்திரள் சமூகம் பெரும்பாலான சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான கூட்டுத் தவறுகளைச் செய்தே வருகிறது. 

ஒரு சமூகத்தின் பெருந்திரளின் உளநிலையை வடிவமைப்பதும் ஆள்வதும் அந்தச் சமூகத்தின் பண்பாடும் அரசியலும் அதற்கான நெறிகளுமாகும். இரண்டையும் நிர்ணயம் செய்வதில் இலக்கியத்துக்கு முதன்மையான இடமுண்டு. அந்த முதன்மையான இடத்தைப் புரிந்துகொண்டு அதை வழங்கும்போதுதான் அந்தச் சமூகம் (பெருந்திரள்) வளமாகிச் செழுமையுறும். அந்தச் செழுமையே சரியானவையையும் தரமானவையையும் தேர்வு செய்யும் தகுதியையும் அறிவையும்பெறும். தமிழ்ச் சமூகம் தன்னை மேன்மைப்படுத்திக் கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் பல நிலைகளிலும் ஆழமாகக் கவனிக்க வேண்டும். குறிப்பாக இலக்கியத்தில் தன்னை ஆழமாக ஈடுபடுத்திக்கொள்வது அவசியம். அப்படிச் செய்யும்போது தொடர்ந்து தவறுகள் நடப்பது தவிர்க்கப்படும். அடிக்கடி கொந்தளிப்பதற்கான சூழலும் இல்லாதொழியும். உலக அரங்கில் தமிழும் தமிழின் வளங்களும் சிறப்படையும் இந்த ஞானபீடத் தேர்வுப் பிரச்சினை ஒரு அகத்திறப்பை தமிழ்ச் சமூகத்திற்கு நல்கினால் அது மிகச் சிறப்பாகும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *