— அழகு குணசீலன் —
2019 ஏப்ரல் 19 ஞாயிற்றுக்கிழமை.
உலகம் உயிர்த்த ஞாயிறு தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது அந்த அனர்த்தம் நடந்தது. இன்னும் சில தினங்களில் ஏழு ஆண்டுகளாகிறது. ஏழாவது ஈஸ்டர் ஞாயிறு மீண்டும் ஏப்ரல் 5 இல். ஈஸ்டர் பயங்கரவாத தற்கொலை தாக்குதல் சூத்திரதாரியை நீதியின் முன் நிறுத்துவோம் என்று ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சரும், முப்படைகளின் தளபதியுமான அநுரகுமார திசாநாயக்க பேராயர் மல்கம் ரஞ்சித்துக்கு கடந்த ஆண்டு ஈஸ்டர் காலத்தில் 21, ஏப்ரல் 2025 திகதியிட்டிருந்த காலக்கெடுவுக்கும் வயது ஒன்றாகிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாக சில கைதுகள் இடம்பெற்ற போதும் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை.
இந்த சூழலில் முன்னாள் புலனாய்வுத்துறை தலைவர் சுரேஷ் சாலி திடீரென கைதுசெய்யப்பட்டார். அந்த கைது நடவடிக்கையில் இருந்தும் இதுவரை புதிதாக எதுவும் வெளிச்சத்திற்கு வரவில்லை. இந்த புள்ளியியல் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர், முன்னாள் அமைச்சர், சட்டத்தரணி உதய கம்மன்பில ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை வெளிக்கொணரப்போகிறேன் என்று எழுதிய “பாஸ்கு பிரஹரயே மஹாமோல கரு சோயா யேம” என்ற சிங்கள மொழி மூலமான நூலை 31.மார்ச் 2026 இல் வெளிடப்போவதாத திகதி குறித்து அதே நாளில் வெளியீடு நடந்து முடிந்துள்ளது.
ஜே.வி.பி / என்.பி.பி. அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் “வெள்ளிக்கிழமை அச்சுறுத்தல் பாணியில்” பயங்காட்டிய போதும் நூல் வெளியீடு திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளது. வெள்ளிக்கிழமை அச்சுறுத்தல் என்பது அரசாங்கத்தின் புலனாய்வுத்துறை வெள்ளிக்கிழமைகளில் சந்தேகநபர்களை கைது செய்து/ விசாரணைக்கு அழைத்து, நீதிமன்ற விடுமுறை வார இறுதி/ விடுமுறை காலத்தில் தடுத்து வைத்தல். இந்த ஆட்சியில் பல வெளிளிக்கிழமைகளை இலங்கை கண்டிருக்கிறது.
இந்த நூல் குறித்த த ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் சில முக்கிய விடயங்களை கோடிட்டுக்காட்டியுள்ளது.
(*). ஒவ்வொருவரும் தங்களுக்கு சார்பாக விசாரணைகளை வழி நடத்தினர்.
(*). இது விடயத்தில் புலனாய்வுத்துறை அரசியல் அழுத்தங்கள் அற்று செயற்படவேண்டும்.
(*). சகல தரப்பு கண்ணோட்டங்களும் கண்டறியப்படவேண்டும்.
(*). கம்பன்பில தனது நூலில் குறிப்பிட்டுள்ள வாதப்பிரதிவாதங்கள் முக்கியமானவை – நோக்கப்பட
வேண்டியவை.
(*) இந்தப் புத்தகம் “சதி, புதிய விசாரணையை கேள்விக்கு உட்படுத்தல், அதன் நேர்மைத்தன்மை” என்பன மீதான ஒரு விசாரணையை ஊக்குவிக்கிறது.
உதய கம்மன்பில இலங்கையில் நன்கு அறியப்பட்ட சிங்கள, பௌத்த பேரினவாத அரசியல்வாதிகளுள் ஒருவர். பொதுவாக சிறுபான்மை தேசிய இனங்களுக்கு வெளிப்படையாக எதிரானவர். அதுவல்ல இங்கு முக்கியம். மாறாக ஒரு சட்டவியலாளராக கடந்த கால புலனாய்வுத்துறை, பாராளுமன்ற தெரிவுக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழு, அமெரிக்க எப்.பி.ஏ.அறிக்கை மற்றும் இன்றைய விசாரணைகளின் போக்கில் கம்பன்பில எழுப்பும் வாதப்பிரதிவாதங்கள், அவரின் அரசியல் நிலைப்பாட்டிற்கு அப்பாலும், அவர் மீதான விமர்சனங்களுக்கு அப்பாலும் முக்கியமானவை. இதனால் பத்தோடு பதினொன்றாக முற்றாக தட்டிக் கழிக்காது நோக்கப்படவேண்டிய தேவையுள்ளது.
சதியின் பிறப்பிடம்.
அன்றைய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவிடம் இருந்து தனக்கு பணி நீடிப்பு கிடைக்காததால், ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பின்னால் ஒரு சதி இருப்பதாக கூறி முன்னாள் சட்டமா அதிபர் டப்புல டீ விவேரா ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் என்று கம்மன்பில பதிவிடுகிறார்.
அது மட்டுமன்றி, சதி எனக்கூறிய சட்டமா அதிபர் அது பற்றிய விசாரணைக்கு புலனாய்வாளர்களுடன் ஒத்துழைக்கவில்லை என்றும், இதன் மூலம் அந்தச் ‘சதி’ யை ஆதாரத்துடன் நிரூபிக்க தவறினார் என்றும் நூலாசிரியர் அவரை நோக்கி சுட்டுவிரலை நீட்டுகிறார்.
அல்விஸ்குழு அறிக்கை.
ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்காவினால் நியமிக்கப்பட்ட அல்விஸ் குழுவின் அறிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கிடப்பில் போட்டதாக கம்மன்பில கூறுகிறார்.
தாக்குதல் நடந்த போது பொறுப்பில் இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி புலனாய்வாளர் ரவி செனவிரத்தினவை, அந்த தாக்குதல்களுக்கு வழிவகுத்த புலனாய்வு குறைபாடுகளுக்காக அல்விஸ் குழு அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது. அவ்வாறான ஓய்வில் இருந்த ஒருவரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீண்டும் பணிக்கு அழைத்து, செனவிரத்ன பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக்கப்பட்டார் என்பது கம்மன்பிலவின் மற்றோரு குறைப்பிடிப்பு.
ஷானி அமரசேகர அடிப்படை உரிமைகள் வழக்கு ஒன்றில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ஒரு உண்மையை மறைத்ததாக கம்மன் பில கூறுகிறார். மறைக்கப்பட்ட அந்த உண்மை என்ன…?
2018 நவம்பரில் மட்டக்களப்பு மேற்கு வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்தில் சஹ்ரான் ஹாஷிமின் பயங்கரவாதக்குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் (NTJ) தொடர்பு குறித்து இராணுவ புலனாய்வுத்துறை ஒரு விரிவான அறிக்கையை ஈஸ்டர் தாக்குதலுக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு சி.ஐ.டி.க்கு அனுப்பியிருந்தது என்றும், சஹ்ரானின் சகோதரர் ரிஸ்வான் மற்றும், ஆர்மி முகமது ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்வதன்மூலம் கூடுதல் தகவல்களை பெற முடியும் என அந்த அறிக்கை கூறுகிறது என்கிறார் கம்மன்பில.
சஹ்ரானின் பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து நம்பகமான தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அந்த படுகொலையை தடுக்கத்தவறிய தனது தோல்வியை மூடி மறைப்பதற்காகவே ஷானி அமரசேகர இந்த உண்மையை பிரமாணப் பத்திரத்தில் மறைத்தார் என்று கம்மன்பில வாதிடுகிறார்.
இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள், மற்றும் சஹ்ரானின் பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து உளவு அமைப்புகள் 337 அறிக்கைகளை காவல்துறைக்கு வழங்கியுள்ளன என்று ஒரு விசாரணை ஆணைக்குழு அறிக்கையை மேற்கோள் காட்டுகிறார் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியைத்தேடுதல் நூலின் ஆசிரியர்.
செத்தும் சாகாத சாரா.
சாரா காணாமல் போனதாக கூறப்படுவது, அவள் இந்தியாவின் றோ அமைப்புடன் தொடர்பு கொண்டு இருந்ததால், இந்தியாவுக்கு தப்பிச் சென்றாள் என்ற சதிக்கோட்பாட்டை வலுப்படுத்த ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்று கம்மன்பில வாதிடுகிறார்.
இந்தக் கதையை எதிர்க்கட்சியில் இருந்த போது இன்றைய ஜே.வி.பி.அமைச்சர் நளிந்ந ஜெயதிஸ்ஸவே பரப்பினார் என்பது கம்மன்பிலவின் கருத்து.
அப்போதைய உயர் புலனாய்வு அதிகாரி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, சாய்ந்தமருதுவில் கொல்லப்பட்ட NTJ ஆர்வலர்களில் சாராவும் ஒருவர் என்று உலகை நம்பவைக்க, சாலேயின் வேண்டுகோளில் ஒரு புதிய டி.என்.ஏ பரிசோதனையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடாத்தினார் என சில அரசியல்வாதிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
முதல் இரண்டு சோதனைகளில் சாராவின் தாயிடம் இருந்து பெறப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் கொல்லப்பட்டவர்களின் டிஎன்ஏ மாதிரியுடன் பொருந்தவில்லை.
சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை தடயவியல் ரீதியாக மறுசீரமைப்பதானது மிகவும் கடினமாக இருந்ததால், சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட உடல் பாகங்கள் ஒரு சாக்கில் கட்டி புதைக்கப்பட்டன என்றும் அந்த உடல்களில் மூன்றாவது டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டதே வேறுபட்ட சோதனை முடிவுகளுக்கு காரணம் என்றும் கம்மன்பில விவகாரத்தை தனது நூலில் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்.
அஸாத்மௌலானா /சனல் 4.
ஈஸ்டர் படுகொலைகளுக்கு புலனாய்வு பிரிவை பொறுப்பாக்கும் அஸாத் மௌலானா, ஒரு வளர்சியடைந்த நாட்டின் அரசியல் தஞ்சம் கோரும் சட்டத்தை மீறுபவர் என்று குறிப்பிடுகிறார். மௌலானாவுக்கு NTJ அமைப்புடன் தொடர்புகள் இருந்ததாகவும், கிழக்கில் நடந்த ஒரு பரீட்சார்த்த குண்டு வெடிப்பில் காயமடைந்த சஹ்ரானின் சகோதரர் ரிஸ்வானுக்கு சிகிச்சை பெற அவர் உதவியாகவும் உதயன் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
பெப்ரவரி 2018 இல் சாலே சஹ்ரானைச் சந்தித்ததாக மௌலானா கூறும் வீடு ஆகஸ்ட்/ செப்டம்பர் 2018 தான் கட்டப்பட்டது என்பதும் கம்மன்பிலவின் வாதங்களில் ஒன்று.
சுரேஸ் சாலே டிசம்பர் 2016 முதல் டிசம்பர் 2019 வரை வெளிநாட்டில் இருந்தார்.தாஜ் ஹோட்டலில் தன்னைத்தானே வெடிக்கச்செய்ய தவறிய NTJ குண்டுதாரி தாக்குதல்களுக்கு முன்பு சஹ்ரான் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி தானாகவே தெஹிவளைக்கு சென்றார். எனவே தாஜ் ஹோட்டலில் இருந்த ஒருவருக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுக்க இராணுவப் புலனாய்வு பிரிவு தனது உதவியை நாடியதாக அஸாத்மௌலானா கூறும் கூற்றை கம்மன்பில நிராகரிக்கிறார்.
தாஜ் ஹோட்டலில் வெடிக்காத குண்டு சம்பந்தமாக, குண்டு வெடிப்பு நடப்பதற்கு சில கணங்களுக்கு முன்பு தான் ஹோட்டல் விருந்தினர்களின் பெயர்ப் பட்டியல் உளவுத்துறைக்கு அனுப்பப்பட்டது. மேலும் குண்டுதாரியான ஜமீல் முகமது ஹோட்டலில் பதிவு செய்வதற்கு தன் தந்தையின் பெயரேயே பயன்படுத்தி இருந்தார். எனவே அந்த பட்டியல் முன்னதாக அனுப்பப்பட்டு இருந்தாலும் கூட, யாராலும் அவரைக் கண்டு பிடித்திருக்க முடியாது என்று அந்த நூலில் அவர் குறிப்பிடுகிறார்.
குண்டுதாரிக்கு வந்த தோலைபேசி அழைப்புக்கள்.
உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றிய ஒய்வு பெற்ற எஸ்.எஸ்.பி.ஒருவர் எச்சரித்த பின்னரே இராணுவ உளவுத்துறை அதிகாரிகள் ஜமீல் முகமதுவைத் தொடர்புகொள்ள முயன்றனர்.
தன் கணவரிடம் இருந்து ஒரு குரல் செய்தியை பெற்ற பிறகும், அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் பீதியடைந்த ஜமீலின் மனைவி, ஜமீல் தாஜ் ஹோட்டலில் இருந்த போதே அவரது எண்ணுக்கு தொடர்ந்தும் அழைத்துக்கொண்டிருந்தார்.ஹோட்டல் சிசிடிவி காட்சிகளில் காணப்பட்டபடி பதிலளிக்கப்படாத அந்த அழைப்புக்கள் அனைத்தும் ஜமீலின் மனைவியிடமிருந்து வந்தவையே தவிர இராணுவ உளவுத்துறையிடம் இருந்து அல்ல.
பின்னர் ஜமீலின் மனைவி ஜமீலின் சகோதரரைத்தொடர்பு கொண்டார். சகோதரர் மேற்குறிப்பிட்ட எஸ்.எஸ்.பி.யின் உதவியை நாடினார். அதற்குள் குண்டுகள் வெடித்திருந்தன. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த முன்னாள் எஸ்.எஸ்.பி. உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
தாஜ் ஹோட்டலில் இருந்து தெஹிவளையில் உள்ள ஒரு மசூதிக்கு சென்ற ஜமீல் அங்கிருந்த ஒரு பாதுகாப்பு ஊழியரின் தொலைபேசியை பயன்படுத்தி தனது மனைவியுடன் தொடர்பு கொண்டார். அதற்கிடையில் உளவுத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்கு விரைந்து சென்று அவரது மனைவியின் தொலைபேசியை பயன்படுத்தி, அந்த ஆள் அடையாளம் தெரியாத எண்ணுக்கு அழைத்து, பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் பேசி ஜமீலை அங்கிருந்து செல்ல விடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். அதற்குள் அங்கிருந்து கிளம்பி விட்ட ஜமீல், அப்பகுதியில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தன்னைத்தானே வெடிக்கச்செய்து கொண்டார்…. என்று உதய கம்மன்பிலவின் நூல் ஒரு பயங்கர மர்மநாவலாக தொடர்கிறது.
சஹ்ரான் இலங்கையின் ஐ.எஸ்.தலைவராக இருந்தார். அவரே ஈஸ்டர் தாக்குதல்களை திட்டமிட்டு நடாத்தினார்.
தற்கொலை தாக்குதல்களை நடாத்திய வங்கதேச ஐ.எஸ்.தலைவரிடம் இருந்து உத்வேகம் பெற்ற சஹ்ரான் உயிருடன் பிடிபட விரும்பாததால் தன்னைத்தானே வெடிக்கச்செய்து கொண்டார், என்று ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியாக சஹ்ரானை கம்மன்பில அடையாளம் காட்டுகிறார்.
“சதிக்கோட்பாடுகளை கட்டமைப்பதற்கும், உளவு அமைப்புக்களுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட சில முக்கிய பிரச்சினைகள் குறித்து இப்புத்தகம் புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது. இது நிச்சயம் விவாதத்தை தூண்டும். நாலாசிரியருக்கு எதிராக பழிவாங்கும் வேட்டை நடக்காது என்று மட்டுமே நம்பமுடியும் ..” என்ற “த ஐலண்ட்” இன் நம்பிக்கையும், கருத்துருவாக்கமும் புதிய தேடல்களை நோக்கி அநுர அரசாங்கத்தை நகர்த்துமா? என்பதற்கான பதில் அவர்களுக்கே வெளிச்சம்.
நன்றி: த ஐலண்ட் . (இப்பதிவு த ஐலண்ட் எடிட்டோரியலின் தழுவல்.)
