சொல்லத் துணிந்தேன்—46

சொல்லத் துணிந்தேன்—46

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

‘ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர்களான ஜஸ்மின்சூக்கா, நவநீதம்பிள்ளை உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கி தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஒன்றுபட்டு உழைப்பதற்காகவும், துறைசார் ஆலோசனைகள், நிபுணத்துவ உதவிகளை வினைத்திறன் மிக்கதாகப் பெற்றுக் கொள்வதற்காகவும் தேசிய சபையொன்றை அமைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

இந்தத் தகவலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உறுதிப்படுத்தினார்’ என இணைய வழித் தமிழ் ஊடகமொன்று 14. 11. 2020 அன்றைய  தனது மாலைப் பதிப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. 

இச்செய்தியைப் படித்த உடனேயே இந்த அறிவிப்பு எதிர்வரும் மாகாண சபை மற்றும் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கான மாவையாரின் ‘துருப்புச்சீட்டு’த்தான் என்று எடுத்த எடுப்பிலேயே என் மனதில் தோன்றிற்று. 

இப்படியானதொரு பரந்துபட்ட தமிழர் ஐக்கிய சபையொன்றினை (தமிழ்த் தேசிய சபை) அமைக்க வேண்டும் என்பது பல்வேறு காலகட்டங்களில் பல்வேறுபட்ட தரப்புகளினாலும் அவ்வப்போது கூறப்பட்டு வந்த விடயம்தான். இது இப்போது மாவையார் கூறுவது போன்று புதிய விடயமல்ல. இச்செய்தியை வெளியிட்ட மேற்படி இணயவழித் தமிழ் ஊடகம் மறுநாள் தனது காலைப் பதிப்பில் இந்த ஆலோசனையின் ரிஷிமூலத்தையும் தேடியிருக்கிறது. உண்மையில் இந்த ஆலோசனையை முதலில் வைத்தது யார் என்ற ஆராய்ச்சி தேவையற்றது, காரணம் இந்த விடயம் பல வருடங்களாக அரசியல் பத்தி எழுத்தாளர்களாலும் தமிழ்த்தேசிய அரசியல் ஆர்வலர்களாலும் சிலவேளைகளில் ஆன்மீகத் தலைவர்களாலும்கூட அவ்வப்போது தமிழ்த்தேசியப் பரப்பில் கூறப்பட்டு வந்ததுதான்.  

இது ஒருபுறமிருக்க, இத்தகையதோர் அறிவிப்பு அரசியல் ரீதியாக அறிவுபூர்வமானதா? அதிலும் எடுத்த எடுப்பிலேயே ஐநா மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையாளர்களான ஜஸ்மின் சூக்கா, நவநீதம்பிள்ளை உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளை உள்ளடக்கியது பொருத்தமானதா?  

காலதேசவர்த்தமானங்களைக் கணக்கிலெடுத்ததாக இவ்வறிவிப்புத் தெரியவில்லை. இவ் அறிவிப்பு பல்வேறுபட்ட தரப்புகளுக்குப் பல்வேறுபட்ட தவறான சமிக்ஞைகளை வழங்கும் தன்மைத்தானது. முறையான கலந்துரையாடல்கள்–தயார்ப்படுத்தல்கள் இல்லாமல் தன் பாட்டிலேயே இவ் அறிவிப்பை மாவை சேனாதிராசா அவசரப்பட்டு விடுத்துள்ளார் போலத் தெரிகிறது. ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’யின் செயற்பாடுகள்போல மாவை சேனாதிராசாவின் இந்த அறிவிப்பு அரசியல் ரீதியாக படு’கோமாளித்தனம்’ ஆனது. 

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னரான மாவை சேனாதிராசாவின் நடவடிக்கைகளைப் பார்த்தால் தேர்தலில் தெரிவு செய்யப்படாத அவர், தன்னைச் சுற்றிப் போலியாக ஒரு பிம்பத்தைக் கட்டியெழுப்ப முயல்கிறார். தனது தனிப்பட்ட அரசியல் எதிர்காலம் குறித்த மனப்பயமே அது.  

முன்பொருமுறை இப்பத்தியில் நான் குறிப்பிட்டதுபோல மாவை சேனாதிராசா அதிக காலம் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபட்டிருந்தாலும்கூட ஒரு தலைவருக்குரிய தலைமைத்துவப் பண்புகளோ–ஆளுமைகளோ–ஆற்றல்களோ அவரிடம் இல்லை. வயது மூப்பு வேறு; அறிவு முதிர்ச்சி வேறு. ஆனால் ‘ஆசை பெரிது; கோவணம் சிறிது’ என்பதுபோல தனக்குத் தகுதி இல்லாத ஒன்றுக்கு அவர் ஆசைப்படுவதாகவே தோன்றுகிறது. 

கடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் (தமிழரசுக் கட்சிக்குக்) கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனம் தமிழரசுக் கட்சியின் முன்னாள் செயலாளர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணி கி.துரைராசசிங்கம் எடுத்த தற்றுணிவான நடவடிக்கையால் தனது கையை விட்டு நழுவிப் போய்விட்டதால் எதிர்வரும் காலத்தில் தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவியில் தான் இருக்கவே மாவை ஆசைப்படுகிறார். தற்போதைய பதில் செயலாளர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கத்திற்கோ அல்லது  முன்னைய உபசெயலாளர்களில் ஒருவரான சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரனுக்கோ அப்பதவி போய்விடக் கூடாது என்பதே அவரது எண்ணம். அதேவேளை தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவியில் தான் இருக்கும் போது தற்போது தன்வசம் வைத்திருக்கும் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி தன்னை மேவி வடக்கு மாகாணத்தார் ஒருவருக்குப்  (அது சிவஞானமாகவோ அல்லது சிறிதரனாகவோ அல்லது சுமந்திரனாகவோ இருந்தாலும் கூட) போய்விடக்கூடாது என்பதற்காகத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியை எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கொடுக்கப்பட வேண்டும் (கிழக்கைக் கைவிடவில்லை என்றும் காட்டுவதற்காக) என்ற நிலைப்பாட்டைக் கட்சியின் தலைவராக நின்று எடுத்து அதனை மட்டக்களப்பைச் சேர்ந்த பொன். செல்வராசாவுக்கு வழங்கக்கூடும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்தும் கைங்கரியத்தை எதிர்காலத்தில் நிகழ்த்தும் நோக்கம்தான் மாவையாரினுடையது. பொன். செல்வராசா தன்னால் சமாளிக்கப்படக் கூடியவர்தான் என்பதே மாவையாரின் கணிப்பு. அதில் உண்மையும் உண்டு. 

மூப்படைந்துவிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்குப் பின்னர் ஈழத் தமிழினத்தின் தலைவனாகத் தான் முடி சூடிக்கொள்ளும் ஆசையில்தான் இப்படியான அரசியல் நாடகங்களை அண்மைக்காலமாக மாவையார் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராகத் தன்னை ஆக்கிக் கொண்டதற்கும் இதுதான் அடிப்படைக் காரணம். தன்னை இப்படிப் பதவிகளால் அலங்கரித்தும், தமிழர்களிடையே ஓர் ‘ஐக்கிய அணி’யைத் தான் ஏற்படுத்தப் போவதான தோற்றப்பாட்டை எழுப்பியும் சர்வதேச சமூகத்திற்குத் தன்னைத் தலைவனாகக் காட்டியும் தன்னைச் சுற்றி ஒரு ‘போலி’ப் பிம்பத்தை எழுப்பினாலும் மாவை சேனாதிராசா தமிழ் மக்களுக்கு எதனையும் சாதிக்கப் போவதில்லை. வேண்டுமானால் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் அவர் வெல்லக்கூடும். அல்லது அதற்கு முந்தி வடமாகாணசபைத் தேர்தல் நடைபெற்றால் வட மாகாண முதலமைச்சராக அவர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் எது எப்படி நடைபெற்றாலும் தமிழ் மக்களின் கைகளில் எப்போதும் ‘வெற்றுத் தட்டம்’ தான்.