— சீவகன் பூபாலரட்ணம் —
நவீன தாதியியலின் ஸ்தாபகராக கருதப்படுபவர் இங்கிலாந்தின் புளோரன்ஸ் நைட்டிங்கேல். இவர் வாழ்ந்த காலம் 1820 முதல் 1910 வரை. உண்மையில் நவீன உலகின் தாதியர் பணியை அறிமுகம் செய்தவராக இவர் பார்க்கப்படுகின்றார். ஆனால், உலகமட்டத்தில் பல இடங்களில் அதற்கு முன்பாகவும் தாதிமார் சேவை செய்திருக்கிறார்கள். உண்மையில் ஆரம்ப காலங்களில் தாதியாக பணியாற்றுவது ஒரு கௌரவம் மிக்க தொழிலாக கணிக்கப்படவில்லை. ஆனால், நவீன உலகில் இந்த நிலையை மாற்றியவர் புளோரன்ஸ் நைட்டிங்கேல் என்றுதான் சொல்ல வேண்டும். விளக்கு ஏந்திய சீமாட்டி என்று இவர் அழைக்கப்பட்டார்.
மேற்கத்தைய நாடுகளில் மட்டுமல்லாது ஆசிய தெற்காசிய நாடுகளிலும் புராதன காலம் முதலே தாதியர் பாரம்பரியம் இருந்துவந்துள்ளது. அதைப்பற்றி, டாக்டர் லோபமுத்ரா மைத்ரா பாஜ்பாய் என்பவர் குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். தெற்காசியாவைப் பொறுத்தவரை அங்கு மிகவும் புராதன காலம் முதலே தாதிமார் தொழில் காணப்பட்டதற்கு வரலாற்று பதிவுகள் இருப்பதாக தனது குறிப்பில் அவர் கூறியுள்ளார். அவரது குறிப்புகளில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
கோபுலி என்ற ஒருவரால் மகாசங்கத்துக்கு இரு குகைகள் வழங்கப்பட்டதாகவும், அவர் ஒரு மருத்துவராகவும், தேவநம்பிய தீஸன்(கிமு 250) மன்னனுக்கு ஆசிரியராகவும் இருந்ததாகவும் குகை ஒன்றில் பிராமி எழுத்துக்களில் குறிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒரு மருத்துவ முறைமை பரவலாக இருந்ததாக 8 முதல் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சில பதிவுகள் கூறுகின்றன. இவை மிஹிந்தலை, மெதிரிகிரிய மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. கிமு 4 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் மருத்துவர்கள் மற்றும் தாதியருடன் மருத்துவமனைகள் இருந்ததாகவும், அவர்கள் இந்தியாவின் நாலந்த பல்கலைக்கழகம், பாகிஸ்தானின் டக்ஸிலா மற்றும் இலங்கையின் மகாவிகாரை ஆகியவற்றிலும் இருந்ததாக கிபி 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மஹாவம்சம் கூறுகின்றது.
அதேபோல ஒவ்வொரு சிகிச்சையிலும், அறுவைச் சிகிச்சைகளிலும் முக்கிய பங்களிப்பை தாதிமார் செய்ததாக இந்தியாவின் மனுஸ்ம்ரித்தியும், சாரக சமித்தவும் கோடிகாட்டுகின்றன. அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் தாதிமாரும் மருத்துவர்களும் செயற்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
காலனித்துவ காலத்தில் தெற்காசியாவுக்கு நவீன மருத்துவம் வந்தபோது தாதிமாருக்கான முறையான பயிற்சி போன்றவையும் ஆரம்பித்திருக்கின்றன.
இலங்கை
இலங்கையின் முதலாவது மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது 1800இல். டி சொய்சா லைங் இன் ஹோமிலும்(1879), லேடி ஹௌலொக்(1886) மருத்துவமனையிலும் அரசாங்க அனுசரணையில் முறையான தாதியர் பயிற்சிகள் திட்டம் ஆரம்பமானது. முறையாக பயிற்றப்பட்ட தாதியர் மற்றும் மருத்துவிச்சிகள் வருகையால், மகப்பேற்று கால மற்றும் குழந்தைகள் மரணம் பெருமளவில் வீழ்ச்சியடைந்தது. 1878இல் நவீன மற்றும் விஞ்ஞான ரீதியான பயிற்சிகளை வழங்கவென இரண்டு பிரிட்டிஷ் மருத்துவ தாதிகள் இலங்கை வந்தனர். இந்த ஆரம்பப் பணிகளில் பெரிய விடயங்கள் நடக்கவில்லையாயினும், அமெரிக்காவில் இருந்து வந்த இரு தாதிமார் முறையான தாதிமார் முறைமையை இலங்கையில் ஆரம்பித்து வைத்தனர். டொரொண்டோ பல்கலைக்கழகம் மற்றும் யேல் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த முறையே மார்த்தா கிரஃபோர்ட் மற்றும் டொரொத்தி சதர்லாண்ட் ஆகியோரே அவர்களாவர். 1939 ஆம் ஆண்டில் ஆரம்பமான கொழும்பு தாதிமார் கல்வி நிலையம் ஒரு புதிய ஆரம்பத்தின் அடையாளமாகும். கொழும்பில் சுகாதார திணைக்களத்துடன் அது இணைக்கப்பட்டது.
இந்தியா
இந்தியாவில் நவீன தாதி தொழில் நுட்பம் ஆரம்பித்தது இராணுவ தாதியருடந்தான். அதற்கான முதலாவது பயிற்சி நிலையம் சென்னையின் புனித ஜோர்ஜ் கோட்டையில்தான் ஆரம்பமானது. இதற்காக லண்டன் செண்ட் தோமஸ் மருத்துவமனையில் இருந்து தாதிய சகோதரிகள் அனுப்பப்பட்டனர். 1797இல் சென்னையில் ஒரு லைங் இன் ஹொஸ்பிட்டல் அல்லது மகப்பேற்று மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது. தாதியருக்கான முறையான பயிற்சிக் கல்விக்கூடம் 1854 இல் அங்கீகரிக்கப்பட்டது.
1865இல் புளோரன்ஸ் நைட்டிங் கேல் இந்தியாவில் நவீன தாதியருக்கான சில பரிந்துரைகளை வடிவமைத்தார். இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கான தாதிமார் முறைமைக்கான இந்த பரிந்துரைகள் பிரபல்யமானவை. ஆனால், அவை நிராகரிக்கப்பட்டன.
டில்லியில் உள்ள செண்ட் ஸ்டீபன் மருத்துவமனை 1867 இல் பெண் தாதியருக்கான பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பித்தது. சென்னையில் 1871 இல் அரசாங்க மருத்துவமனையில் டிப்ளோமா தகைமையுடன் கூடிய தாதியர் கல்விக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. 1890 முதல் 1900 வரையிலான காலப்பகுதியில் இந்தியாவில் பல இடங்களில் பல தாதியர் கல்விக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1908 இல் தாதியரின் நலன்களைப் பாதுகாக்கவென “இந்திய பயிற்றுவிக்கப்பட்ட தாதியர் சங்கம்” ஆரம்பிக்கப்பட்டது.
தாதியருக்கான அடிப்டை பயிற்சி மற்றும் கல்வித் தராதரத்தைப் நிர்ணயிக்க அவர்களைப் பதிவு செய்யும் கவுன்ஸில் முதன் முதலில் அப்போதைய மதராஸ் ஸ்டேட்டில்(தற்போதைய தமிழகம்) 1926இல் ஆரம்பிக்கப்பட்டது.
தாதியருக்கான 4 வருட இளமானி கற்கை நெறி டில்லி தாதியர் கல்லூரியிலும், தமிழ்கத்தின் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியிலும் 1946 இல் ஆரம்பிக்கப்பட்டன. இறுதியாக 1947 இல் இந்திய தாதியர் கவுன்ஸில் சட்டம் நிறைவேற்றப்பட்டது (1949 இல் அமலுக்கு வந்தது).
பூட்டான்
பூட்டானின் முதலாவது ஐந்து ஆண்டு அபிவிருத்தித்திட்டம்(1961 – 66) அந்த இமாலய பிரதேச நாட்டில் நவீன மருத்துவ பராமரிப்பின் ஆரம்பமாக கருதப்படுகிறது. அதன்படி இரு மருத்துவர்கள் மற்றும் இரு தாதியருடன் 1961 இல் இரு மருத்துவமனைகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டன. அன்று முதல் அந்த நாடு சுகாதாரத்திலும் மக்கள் நல வாழ்விலும் துரிதமான முன்னேற்றத்தைக் கண்டுவருகின்றது.
1974 இல் அங்கு Jigme Dorji Wangchuk National Referral Hospital ஆரம்பிக்கப்பட்டது. அதன் இணைப்பாக சுகாதார பராமரிப்பு பணியாளர் மற்றும் தாதிமார், மருத்துவிச்சுகளுக்கும் பயிற்சி வழங்க Royal Institute of Health Sciences அங்கு ஆரம்பிக்கப்பட்டது. இங்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களே அந்த நாட்டின் பொதுச் சுகாதார திட்டத்தை உருவாக்கியுள்ளனர். 1982 இல் பொது தாதி மருத்துவிச்சிகளின் ஒரு தொகுதி பயிற்சி முடித்து வெளியேறியது.
நேபாளம்
1896 இல் முதலாவது பிர் மருத்துவமனை அங்கு ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அங்கு தாதியரின் தேவை 1936 வரை பூர்த்தி செய்யப்படவில்லை. அதன் பின்னர் சில பெண்கள் இந்தியாவில் தாதியர் பயிற்சிக்காக 18 மாதங்கள் அனுப்பப்பட்டனர். 1952 இல் உலக சுகாதார அமைப்பின் புலமைப்பரிசில் உதவியுடன், உமாதேவி தாஸ் மற்றும் ருக்மணி சரண் ஸ்ரிஸ்த் ஆகியோர் பதிவு செய்யப்பட்ட தாதியராக பயிற்சி பெற இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். 1956 இல் லலித்பூரில் நேபாளத்தில் முதலாவது தாதியர் பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. 1961 இல் நேபாளத்தின் பயிற்சி பெற்ற தாதியர் சங்கம் ஆரம்பமானது. மனிங்ஸ் மற்றும் லாமு அமத்யா ஆகியோரின் முயற்சியில் இது உருவானது. அண்மையில் 2017இல் காலஞ்சென்ற லாமு அமத்யா நாட்டின் முதலாவது பயிற்றப்பட்ட தாதியாக அறிவிக்கப்பட்டார்.
வங்கதேசம்
1947க்கு முன்னர் வங்காள தாதியர் கல்வி நிலையத்தின் கீழான மூன்று கனிஸ்ட தாதியர் கல்விக்கூடங்களால் அந்தப் பிராந்தியத்தில் தாதியர் உருவாக்கப்பட்டனர். இந்தியா பிரிந்த பின்னர் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1947இல் தொழில்சார் மூத்த தாதியர் கல்விக்கூடம் உருவானது. தாதியர் சேவை சுப்பிரிண்டட் பதவியும் உருவாக்கப்பட்டது. 1949 இல் மேலதிக பயிற்சிக்காக ஒரு தாதியர் குழு இங்கிலாந்துக்கும் அனுப்பப்பட்டது. 1952 இல் கிழக்கு பாகிஸ்தான் தாதியர் மற்றும் மருத்துவிச்சியர் கவுன்ஸில் ஒரு ஒழுங்குபடுத்தல் அமைப்பாக உருவானது. அது பின்னர் வங்கதேச தாதியர் மற்றும் மருத்துவிச்சியர் கவுன்ஸில் என பெயர் மாற்றப்பட்டது.
சுதந்திரத்தின் பின்னர் தாதியர் சேவைக்கான இயக்குனரகம் 1977இல் உருவானது. வங்கதேச தாதியர் கல்லூரி டாக்காவின் மொஹக்கலியில் 1970 இல் ஏற்படுத்தப்பட்டு, 1978 இல் இது டாக்கா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.
பாகிஸ்தான்
1947 அளவில் பாகிஸ்தான் இரு மருத்துவக் கல்லூரிகள், 14000 படுக்கைகளைக் கொண்ட 292 மருத்துவமனைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. 1948 இல் பாகிஸ்தான் தாதியர் கவுன்ஸில் ஆரம்பிக்கப்பட்டது. சுகாதாரத்துறையின் தேவைகளை பூர்த்தி செய்ய இதனுடன் கராச்சியில் 1956 இல் தாதியர் கல்லூரியும் ஆரம்பிக்கப்பட்டது. அனைவருக்கும் சுகாதார உதவிகளை வலியுறுத்தும் அல்மா-அட்டா பிரகடனம் 1978 இல் கஸகஸ்தானில் செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தானிலும் மேலதிக மாற்றங்கள் உருவாகின.
மாலத்தீவுகள்
மாலத்தீவுகளில் நவீன தாதியர் முறைமை குறித்த பதிவுகள் 1963-1965 இலேயே ஆரம்பிக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் தாதியர் குழு ஒன்று முதல் தடவையாக உலக சுகாதார நிறுவனத்தின் உதவித்திட்டத்துடன் வெளிநாடுகளுக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டனர். அந்தக் குழுவில் மூமினா கலீம், நஸீமா முஹமட் மற்றும் அசாத் இப்ராஹிம் டிடி ஆகியோர் அடங்குகின்றனர். அதனையடுத்து உலக சுகாதார நிறுவனத்தினால், முறையான பயிற்சிக்காக ஐரிஸ் தாதியான கனொன் அனுப்பப்பட்டார். 1970 முதல் 1990 வரையிலான காலப்பகுதியில் அங்கு அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்ததுடன் தாதிகளுக்கான தேவையும் அதிகரித்தது. 1973 இல் துணை சுகாதார சேவைகள் பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அது 1990 இல் சுகாதார விஞ்ஞான கற்கை நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.