— டேவிட் ஆசீர்வாதம், கனடா —
(ஒரு நீண்டதும் அருமையானதுமான இசைப்பயணத்தினை எமது இலங்கை மண்ணில் ஆரம்பித்து, இன்று புலம்பெயர்ந்து, கனேடிய நாட்டில் இசைத் துறைக்கு அளப்பரிய பங்களிப்பினை தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கும் எமது மதிப்புககுரிய மூத்த இசைக்கலைஞர் M P கோணேஸ் அவர்களின் ஒரு புதிய முயற்சி பற்றி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.)
பரமேஷ் கோணேஸ் சகோதரர்களாக ஈழத்தில் 1968 ல் தமது இசைப்பயணத்தினை ஆரம்பித்து, மெல்லிசைப் பாடல்களின் உருவாக்கத்திற்கு இந்த சகோதரர்கள் ஆற்றிய பங்கு காலத்தால் மறக்கப்பட முடியாதது.
அன்றைய காலத்தில் 1952 தொடங்கி 1970 கள் வரை இலங்கை வானொலி வர்த்தக சேவையில் இந்திய திரை இசைப் பாடல்களே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நிலைமையில் இந்த பரமேஸ்-கோணேஸ் சகோதரர்கள் மெல்லிசைப் பாடல்களை உருவாக்கி, ஈழத்து இசைத்துறையில் ஒரு பொன்னான காலத்திற்கு வித்திட்டார்களென, எமது மதிப்புக்குரிய வானொலி அறிவிப்பாளரும் இலங்கையின் தமிழ் ஒளிபரப்புக்கலையினை தற்போது உலகெங்கும் எடுத்துச் சென்று, எமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் மதிப்பிற்குரிய B.H. அப்துல் ஹமீத் அவர்கள் குறிப்பிட்டது ஞாபகம் வருகின்றது.
பரமேஸ் அவர்கள் பாட்டுக்களை எழுதி, குரல் கொடுக்க அனைத்து பாடல்களுக்கும் கோணேஸ் அவர்கள் இசையமைத்தார். இந்திய திரை இசைப் பாடல்கள் கோலோட்சி இருந்த காலத்தில் இலங்கையில் தமக்கே உரித்தான பாணியில் தமது பரந்துபட்ட திறமைகளின் மூலம் இசைத்துறையில் தடம் பதித்து, ஓர் அழியாத இடத்தினை தமக்கு உரித்தாக்கிக் கொண்ட இந்த பரமேஸ் கோணேஸ் சகோதரர்களின் முயற்சியை அனைவரும் பாராட்டியே ஆகவேண்டும். இலங்கையில் முதன்முதலாக தமிழ் 45-rpm இசைத் தட்டினை 1971 ல் வெளியிட்ட பெருமையும் இந்த பரமேஸ்- கோணேஸ் சகோதரர்களையே சாரும். கோணேஸ் அவர்கள் 1970 களில், அப்போது “ரேடியோ சிலோன்(Radio Ceylon)” என்று அழைக்கப்பட்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் சேவையிலும் பல ஈழத்து பாடல்களுக்கு இசை அமைத்து பங்காற்றி இருப்பதனை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டும்.
உனக்குத் தெரியுமா…
அக்காலப்பகுதியில் “உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது…” என்ற பாடல் இசைப் பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து, உலக சாதனை படைத்தமையினை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். அந்தப் பெருமைக்கு உரியவர்கள் இந்த இரட்டைச் சகோதரர்கள் பரமேஸ்-கோணேஸ். இவர்களது பாடல்கள் மக்கள் மத்தியில் அமோக ஆதரவைப் பெற்றமை அக்காலத்தில் ஏனைய கலைஞர்கள் உருவாவதற்கு வழிசமைத்தது. அவர்களது வெற்றிப் பயணத்தில் இலங்கையில் ஏற்பட்ட போர் சூழல் சில தடங்கல்களை ஏற்படுத்தியமையால், இந்த சகோதரர்கள் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தனர்.
அங்கு ஜேர்மனியில் தான் 36 நிகழ்ச்சிகளை நடத்தியதாக கோணேஸ் குறிப்பிடுகின்றார். இலங்கையில் மக்களின் அபிமானத்தை பெருமளவில் பெற்றிருந்த கோணேஸ் அவர்கள், இங்கு ஜேர்மனியிலும் தமது இசைப் பயணத்தினை வெற்றிகரமாக தொடர்ந்து, பின்னர் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து, தற்போது M P கோணேஸ் என்ற பெயரில் கனேடிய மண்ணில் இசைத் துறைக்கும் கலைத்துறைக்கும் ஆற்றி வருகின்ற பங்களிப்பு அளப்பரியது.
கனடாவில் முதல் 24 மணிநேர வானொலி
கனடாவில் முதலாவது 24- மணிநேர தமிழ் மொழி வானொலி சேவையை 1992 ல் ஆரம்பித்த பெருமையும், அதனைத் தொடர்ந்து முதலாவது 24 -மணிநேர தமிழ் தொலைக்காட்சி சேவையினையும் ஆரம்பித்த பெருமையும் கோணேஸ் அவர்களையே சாரும். அத்துடன் கனடாவில் முதலாவது தமிழ் இசைக் குழுவினை ஆரம்பித்து, வழிநடத்தி வந்த பெருமையும் அவரையே சாரும். இங்கு கனடாவில் திருமதி பத்மினி கோணேஸ் அவர்கள் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளில் முதன்மை அறிவிப்பாளராக செயற்பட்டமை கோணேஸ் அவர்களுக்கு மிகுந்த பலத்தினைக் கொடுத்தது.
“எனது 100 பாடல்கள்”
தமது எழுபதாவது அகவையை பூர்த்தி செய்து, தனது இசைத்துறை பயணத்தில் ஐம்பது வருடங்களைப் பூர்த்தி செய்த நிலையில், “எனது 100 பாடல்கள்”(My Music 100) என்ற தலைப்பில் இளைய தலைமுறையினரை ஊக்குவிக்குமுகமாக ஒரு அருமையான திட்டத்தை ஆரம்பித்து, அதனை பலரது ஏகோபித்த ஆதரவுடன் கொண்டு செல்வதனை இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன். இத்திட்டத்தின் பெரும்பாலான பாடல்களை சுப்பர் சிங்கர்கள் பாடியுள்ளனர். இந்த இளம் பாடகர்கள் அனைவருமே நன்கு கற்ற, அர்ப்பணிப்புடன் கூடிய பாடகர்களாக இருப்பதை அறிந்து நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். இது நிச்சயமாக இன்றைய இளம் சமுதாயத்திற்கு நல்ல ஊக்கத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் எம் இளம் சமுதாயத்தினரின் திறமைகளை இனங்கண்டு, அவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கி, ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் தலையாய நோக்கமாகுமென கோணேஸ் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
இதுவரை 45 பாடல்களை யூடியூபில் (YouTube: My Music 100) பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் திருச்சி லோகநாதன் அவர்களின் புதல்வர்கள் T.L.தியாகராஜன், T.L.மகாராஜன் மற்றும் தியாகராஜன் அவர்களின் புதல்வி தீப்பிகா ஆகியோரும் சில பாடல்களைப் பாடியுள்ளனர். அந்த வகையில் இந்திய பாடகர்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்கி, இசை அமைத்த இலங்கையர்களில் கோணேஸ் அவர்களும்ஒருவர் என்பதனை நாம் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டி, அவரைப் பாராட்டுகின்றோம். அந்த வகையில் தற்போது இலங்கையிலுள்ள எமது உறவுகளின் இளம் சமுதாயத்தினருக்கு சந்தர்ப்பங்களை வழங்கும் பொருட்டு, மூன்று பாடல்கள் ஏற்கனவே இலங்கைக்கு அனுப்பப்பட்டு, அவைகளும் கூட எதிர்வரும் ஜனவரி 2021ல் வெளியிடப்பட இருக்கின்றன என்ற தகவலும் வந்திருக்கின்றது. இலங்கையிலிருந்து M. தினூசிகா, S.நீரஜா மற்றும் மிருதுஷா பையஸ் ஆகியோர் பாடல்களை வழங்க உள்ளனர். அது மாத்திரமல்ல, ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் எமது உறவுகளின் இளம் சமுதாயத்தினருக்கும் கூட சந்தர்ப்பங்கள் வழங்கப்பட இருக்கின்றன என கோணேஸ் குறிப்பிடுகின்றார்.
பாடல்களை எழுதியவர்கள்
பாடல்கள் யாவும் கனடாவில் பல இடங்களிலும் வசிக்கின்ற கலைஞர்களினால் அவர்களுக்கே உரித்தான பாணியில் கலாச்சாரத்தையும் வாழ்வியல் முறைகளையும் பிரதிபலித்து, இசைப் பிரியர்களை நேரடியாக கவர்ந்திழுக்கும் வகையில் எழுதப்படுகின்றன. பாடல்களை எழுதியவர்களில் முக்கியமாக M.P. பரமேஸ், கோவிலூர் செல்வராஜன், R.N.லோகேந்திரலிங்கம், பத்மினி கோணேஸ், கோதை அமுதன், R.R. பிரபா, ஆதித்ததாசன், ரஞ்சினி ரஞ்சன், கலைஞன், இரட்டைப்பாதை சேகர், சுப. சௌந்தரராஜன், கார்மேகம் நந்தா ஆகியோர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். அனைத்துப் பாடல்களும் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டு, பதிப்புரிமை பெறப்பட்டிருக்கின்றன. பாடல்கள் பாபு ஜெயகாந்தன் அவர்களின் ஸ்டூடியோவில் பதிவு செய்யப்பட்டு, அனைத்துப் பாடல்களும் மதி சீனிவாசகம் மூலம் படமாக்கப்பட்டுள்ளன. இங்கு பாபு ஜெயகாந்தன் அவர்களும் மதி சீனிவாசகம் அவர்களும் கோணேஸுசக்கு மிகவும் பக்கபலமாக இருந்து, அவரது முயற்சியின் வெற்றிக்கு முக்கிய தூண்களாக செயற்படுகின்றனர். இவர்கள் அனைவரினதும் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் இந்த திட்டத்தின் வெற்றி நடைக்கு பங்களிப்பு செய்துகொண்டிருக்கின்றன.
மூன்று தலைமுறைகளுக்கு இசை வழங்கும் கோணேஸ்
கோணேஸ் அவர்களின் இந்த இசைப் பயணத்தினை பின்னோக்கிப் பார்ப்போமானால், அவர் 1970 களில் இலங்கையில் முதலாவது தலைமுறைக்கும், ஜேர்மனியில் இரண்டாவது தலைமுறைக்கும், தற்போது கனடாவில் மூன்றாவது தலைமுறைக்கும் இசை அமைப்பது இச்சந்தர்ப்பத்தில் மிகவும் குறிப்பிடப்படக்கூடியதும் பாராட்டத்தக்கதுமாகும். அவரது “எனது 100 பாடல்கள்” திட்டம் 2021 இறுதிப்பகுதியில் அனைவரினது ஒத்துழைப்புடன் நிறைவேறும் எனவும், இறைவனுக்கு சித்தமானால் மேலும் அதிக பாடல்கள் இதனுடன் சேர்க்கப்படும் எனவும் கோணேஸ் தெரிவிக்கின்றார்.
இந்த இளம் சமுதாயத்தினரை ஊக்குவிக்கும் அவருடைய திட்டமும் முயற்சிகளும் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என்பதே எமது அவாவும் கூட. இந்த “எனது 100 பாடல்கள்” திட்டத்தில் இதுவரை சேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் அனைத்துமே மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன. இந்த அனைத்து முயற்சிகளுக்கும் பக்கபலமாக இருந்து தொழில்நுட்ப உதவிகளை வழங்கிவருபவர் கோணேஸின் புதல்வர் பிரதீப். தமிழ் இசைத்துறையில் இவ்விதமான ஒரு “100” பாடல்களைக் கொண்ட ஒரு பாரிய முயற்சியினை நாம் ஈழத்தமிழர்கள் மத்தியில் உலகில் எங்குமே காணக்கூடியதாக இல்லை. அந்த வகையில் நாம் கோணேஸ் அவர்களையும் அவரது குழுவினரையும் பாராட்டி, ஒத்துழைப்பினை வழங்குவது இச்சந்தர்ப்பத்தில் எமது கடமையாகவும் இருக்கின்றது.
தமிழ் மக்களாகிய நாங்கள் உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும் தமிழ் இசைத் துறைக்கு அளப்பரிய சேவையாற்றிக்கொண்டிருக்கும் எமது மதிப்புக்குரிய கோணேஸ் அவர்களின் இந்த “இளம் சந்ததியினருக்குள் ஒளிந்திருக்கும் அபார திறமைகளை வெளிக்கொண்டுவரும் இத்திட்டத்திற்கு ”நாம் எமது ஆசியையும் ஒத்துழைப்பையும் வழங்கி, அவரது இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துவோம். உலகெங்கும் பரந்து வாழும் எம்மக்கள் திரு கோணேஸ் அவர்களின் இந்த பாடல்களை “mp Konezsh” என்ற யூடியுப்பில் கேட்கலாம். அது மாத்திரமல்ல, இம்முயற்சிக்கு ஆதரவு வழங்கும் முகமாக, இந்த Channel ஐ subscribe பண்ணி, முடியுமானவரை ஏனையவர்களுக்கும் அறிமுகப்படுத்தினால் அதுவே நாம் இம்முயற்சிக்கு செய்கின்ற ஒரு பெரிய பங்களிப்பாக இருக்கும். அத்துடன் கோணேஸ் அவர்களின் இசைப்பயணம் மேலும் சிறக்க, எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு தொடர்ந்து நல்ல சுகத்தினையும் நீண்ட வாழ்வையும் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தித்து, அவரது தமிழ் இசை மற்றும் கலை உலகுக்கு வழங்கிய பங்களிப்புக்கு நாம் தமிழர்கள் என்ற வகையில் பெருமை அடைகின்றோம் எனக்கூறி, எதிர்வரும் புதிய வருடம் 2021 எமது அனைவருக்கும் பிரகாசமானதாகவும், பாதுகாப்பும் சமாதானமும் நிறைந்த ஆண்டாகவும் அமைய உங்கள் அனைவரையும் வாழ்த்துகின்றேன்! நன்றி!!!