முஸ்லிம்களுக்கு ஆதரவாக சாணக்கியன் பேசியதை “அரங்கம்”  ஏன் பாராட்டவில்லை?

முஸ்லிம்களுக்கு ஆதரவாக சாணக்கியன் பேசியதை “அரங்கம்” ஏன் பாராட்டவில்லை?

— சீவகன் பூபாலரட்ணம் —

கடந்த வாரம் நாம் அரங்கம் பத்திரிகையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் நாடாளுமன்ற உரை ஒன்று குறித்து குறிப்பு ஒன்றை எழுதியதை அடுத்து, வாசகர் ஒருவர், நாம் ஏன் சாணக்கியன் முஸ்லிம்களின் அடக்கம் செய்யும் உரிமைக்காக பேசியதை பாராட்டவில்லை என்று கேட்டிருந்தார். 

அவர் கேட்டது உண்மைதான். ஏனென்றால் நாம் எமது அந்தக் கட்டுரையில் சாணக்கியன் சுற்றுலா மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சு குறித்த விவாதத்தில் சுற்றுலா அபிவிருத்தி தொடர்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி பேசியிருந்த விடயத்தையே குறிப்பிட்டிருந்தோம். ஆனால், முஸ்லிம்களுக்கு ஆதரவாக அவர் பேசியிருந்ததைப் பற்றி பெரிதாக எதுவும் குறிப்பிடவில்லை. 

அவர் முஸ்லிம்களின் அடிப்படை உரிமை ஒன்று குறித்து பேசிய விடயத்தை ஏனைய பல ஊடகங்களும், சமூக ஊடகங்களும் ஆஹா ஓஹோ என்று பாடிப் பரவசப்பட்டிருக்க, நாம் அதனைப் பெரிதாக பேசவில்லைதான்.  

ஏன் நாம் பேசவில்லை என்ற இந்த மாதிரியான கேள்வி எனக்கு ஒருபுறம் சிரிப்பாக இருந்தாலும், மறுபுறம் நாமெல்லாம் எங்கே இருக்கின்றோம் என்ற ஒரு வேதனையான கேள்வியையும் என்னுள் எழ வைக்கின்றது. 

மட்டக்களப்பு மக்கள் 

மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகவும், முஸ்லிம் மற்றும் ஏனைய இன மக்களையும் கொண்டும் அமைந்திருக்கின்ற ஒரு மாவட்டம். அந்த மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை கணிசமானது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமை ஒன்று மீறப்பட்டிருக்கும் போது, அது குறித்துப் பேசாமல் அந்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு வேறு என்ன வேலை இருந்திருக்க முடியும்? அல்லது இந்த அடிப்படையான பிரச்சினையை அவர் பேசாமல் யார் பேசியிருக்க வேண்டும்? அல்லது இதனைப் பேசாமல் வேறு எதனை அவர் முதலில் பேசியிருக்க வேண்டும்? 

முஸ்லிம்களும் தமிழர்களும் தமிழை, கலைகளை, கலாச்சாரத்தை, பண்பாட்டை ஏனைய பல விடயங்களை ஒன்றாக பகிர்ந்து வாழும் நிலையில்தான் இங்கு இருக்கின்றோம். மதத்தால், இனத்தால் வேறுபட்டாலும் “நாம் ஒன்றாக வாழ்ந்திங்கு இருப்பவர் அன்றோ?”. கடந்த காலங்களில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்திருந்தாலும் எவரும் இங்கு ஒருவரை ஒருவர் புறக்கணித்து வாழ முடியாது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றியது போல, முஸ்லிம்களை இங்கிருந்து துரத்திவிட்டும் வாழ முடியாது. 

அடக்கம் செய்வதற்கான உரிமை யாருடையது? 

இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு தனி மனிதனின் அடிப்படையான அடக்கம் செய்வதற்கான உரிமை மீறப்பட்டிருக்கும் போது அதுதானே இங்கு முதல் வேலை. அதனைச் செய்வது அந்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் அடிப்படைக்கடமை. அதனைச் செய்வதை ஏன் நாம் தூக்கிப் பிடித்து முகநூலிலும் ஏனைய சமூக ஊடகங்களிலும் ஊத வேண்டும். அதனை அவர் எப்போதோ செய்திருக்க வேண்டுமே. இவ்வளவு காலம் அவர் அந்த விடயத்தில் காலந்தாழ்த்தியதே பெரும் தவறே.  

மட்டக்களப்பிலும் புதைப்பதுதான் வழமை 

இத்தனைக்கும் இந்த விடயத்தில் ஒன்றை உலகத் தமிழர்கள் மறந்துவிட்டார்கள். மட்டக்களப்பின் பல தமிழ் கிராமங்களைப் பொறுத்தவரை இன்றுவரை அவர்கள் தமது மரணித்த உறவுகளை மண்ணில் புதைக்கவே செய்கிறார்கள். இங்கு எரிக்கும் கலாச்சாரம் பின்னர்தான் வந்து சேர்ந்தது. ஆனாலும் இன்றும் குறிப்பாக சாணக்கியனின் களுவாஞ்சிகுடியிலும் பல மக்கள் தமது உறவுகளை புதைக்கவே செய்கிறார்கள். இதனை ஏனையவர்கள் அறியாதிருக்கலாம் ஆனால், மட்டக்களப்பார் மறுக்கவோ நிராகரிக்கவோ முடியாது.  அவரது சொந்த ஊரில், இன்னும் கொஞ்சம் நெருக்கமாகச் சொல்லப்போனால் அவரது தந்தை வழிச் சாதிக்குள்ளேயே அடக்கம் செய்யும் வழக்கமே பாரம்பரியமானது. அது இன்றும் தொடர்கிறது. (சாணக்கியனின் பாட்டனார், தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இராசமாணிக்கத்தை எரித்தார்களே என்று வாதாடிக்கொண்டு எவரும் வரவேண்டாம். அதற்கும் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. அதுவும் இந்தக் கட்டுரைக்கு வலு சேர்க்கும். ஆனாலும், அதனை நான் இங்கு சேர்க்கவில்லை. அதனை உரியவர்கள் விரைவில் அரங்கத்திலேயே எழுதுவார்கள்.)  

அப்படியானால், அந்த அடக்கம் செய்வதற்கான உரிமை ஒட்டுமொத்த மட்டக்களப்பு மக்களுக்கான உரிமை. அதனைப் பேசுவதைத்தவிர சாணக்கியனுக்கு வேறு என்ன வேலை இருந்திருக்க முடியும். இது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் அடிப்படைக் கடமைதானே. அதனால்தான் நாம் அதனை பெரிதாகப் பேசவில்லை. 

மட்டக்களப்பாரின் சரித்திரம் தெரியாத, உலகத் தமிழருக்கு வேண்டுமானால் இது புதினமாக இருக்கலாம். ஆனால், எங்களுக்கு அல்ல.  

இத்துடனேயே பிரச்சினை அடிபட்டுப் போய்விடும்தான். ஆனாலும் சரி, “இது முஸ்லிம்களின் பிரச்சினைதான்” என்று வைத்துக்கொண்டு எனது வாதங்களை இனி தொடருகின்றேன். சரி, இதுவரை தமிழருக்காக பேசாத முஸ்லிம்களுக்காக சாணக்கியன் பேசியிருகிறாரே என்று சிலர் வாதிடலாம். தமிழர்கள் பாதிக்கப்பட்ட போது, சில சந்தர்ப்பங்களிலாவது சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள். பலர் நாம் பாதிக்கப்பட்ட போது எமக்கு எதிராக பேசினார்கள் என்று வாதத்துக்கு எடுத்துக்கொண்டாலும், அது தவறு என்று சொல்ல முடியுமே ஒழிய, அதே தவறை நாம் எப்படிச் செய்ய முடியும்? 

சாணக்கியனுக்கு முஸ்லிம்கள் வாக்களித்தார்களா? 

அடுத்தது சாணக்கியனுக்கு எந்த முஸ்லிமும் வாக்களித்திருக்க முடியாது என்றும் சிலர் வாதிடலாம். வேறு சிலர் அவரது பட்டிருப்பு தொகுதியில் முஸ்லிம்கள் இல்லை என்றும் வாதிடலாம். ஒருவர் தனக்கு வாக்களிக்கிறாரோ இல்லையோ, எதிர்க்கட்சியை சேர்ந்தவரோ இல்லையோ, எது எப்படியிருந்தாலும் தனது மாவட்ட மக்கள் அனைவருக்காகவும் பேசவேண்டியது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் அடிப்படைக்கடமை. அவ்வளவு ஏன், நமது நாட்டின் எந்தவொரு மூலையில் இருக்கும் ஒரு தனி மகனுக்காகவும் வாதாட வேண்டியது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் அடிப்படைக்கடமை. அதனைச் செய்ததற்காகவெல்லாம் நாம் பாராட்டு விழா நடத்த வேண்டுமா? 

அரங்கம் முஸ்லிம்களுக்கு எதிரானதோ? 

சிலவேளை சிலருக்கு அரங்கம் முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்காத அல்லது அவர்களுக்கு எதிரான பத்திரிகையோ என்ற கருத்தும் தோன்றலாம். அப்படியல்ல. அதனை நாம் ஆரம்பம் முதல் விபரிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் ஒரு விடயம் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நடந்து, காத்தான்குடி துருவப்படுத்தப்பட்டு, பாதுகாப்புக் கெடுபிடிகளால் முடக்கப்பட்ட போது, “காத்தான்குடி உங்களை வரவேற்கிறது” என்ற தலைப்பில் அந்த ஊர் மக்களின் மகத்துவத்தைப் பேசி அவர்களுக்காக முதன்முதலில் குரல்கொடுத்தது அரங்கம் பத்திரிகைதான்.  

இத்தனைக்கும் அப்போது நாம் அப்படி எழுதியதற்காக இந்த “போலித் தமிழ் தேசியக் குஞ்சுகள்” எல்லாம் எம்மை முகநூலிலும் ஏனைய வழிகளிலும் திட்டித்தீர்த்தன. அப்போது இவர்களோ அல்லது இவர்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரோ காத்தான்குடியை எட்டிப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. ஓடி ஒழித்திருந்தார்கள். இரு வருடங்கள் முன்பாக நடந்ததையே மறந்துபோன இவர்களுக்கு சாணக்கியன் பேசியது புதுமையாகத்தான் தெரியும். ஆக, இந்த நடப்புகள் எதுவும் தெரியாத போலித் தமிழ் தேசியவாதிகளுக்குத்தான் இது புதுமை. எங்களுக்கு இது பழைய விடயம். முஸ்லிம்களையும், அவ்வளவு ஏன், சாதியால் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களையும் கூட புறந்தள்ளிப் பழக்கப்பட்ட போலித்தமிழ் தேசியவாதிகளுக்கு இது புது விடயந்தான். உங்கள் சிந்தையில் அடிப்படையிலேயே இல்லாத விடயம். 

அடக்கம் செய்யும் உரிமையை மறுத்த தமிழ் தேசியக் குஞ்சுகள்   

சரி அடக்கம் செய்யும் உரிமைக்கு வருவோம். இப்போது முஸ்லிம்களின் அடக்கம் செய்யும் உரிமையைப் பற்றி பேசும் இந்தப் போலித் தமிழ் தேசியவாதிகள் இதற்கு முன்னர் ஒரு முஸ்லிம் நபரின் அடக்கம் செய்வதற்கான உரிமையை மறுத்திருந்தார்கள். எல்லாரும் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். மட்டக்களப்பில் அதற்காக பெரும் ஆர்ப்பாட்டம் எல்லாம் நடந்தன. அப்போது அந்த நடவடிக்கைகளை “அரங்கம் பத்திரிகை” வன்மையாக கண்டித்தது. தனி மனிதனின் அடக்கம் செய்வதற்கான, இறுதி நிகழ்வுக்கான உரிமையை அது வலியுறுத்திப் பேசியது. அப்படி பேசியதற்காகவும் நாம் கடுமையாக திட்டப்பட்டோம். அந்த நபர் வேறு யாருமல்ல, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சந்தேக நபரான சஹ்ரான் தான் அது.  

சஹ்ரானின் உடலை மட்டக்களப்பு மயானத்தில் அடக்கம் செய்வதை, இவர்கள் போட்டி போட்டுத் தடுத்தனர். நாம் அவருக்கு அந்த உரிமை இருக்கிறது என்று சொன்னோம். சஹ்ரான் பயங்கரவாதி, தமிழ் மக்களைக் கொன்றவர் என்று அவர்கள் வாதாடினார்கள். 

கொழும்பு மத்திய வங்கியில் குண்டு வைத்ததும், கண்டி தலதா மாளிகையில் குண்டு வைத்ததும் விடுதலைப்புலிகள் தானே. அதைச் சொல்லித்தானே சிங்களை பேரினவாதிகளும் போரில் கொல்லப்பட்ட முன்னாள் போராளிகளுக்கான அடக்க இடங்களை நிராகரிக்கிறார்கள். அவர்களை ஒன்றாக கூடி நினைவுகூர அனுமதிக்க மறுக்கிறார்கள். ஆக, மொத்தத்தில் நீங்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். உள்ளுக்குள் இருக்கும் இனவாத அளவில் உங்களுக்குள் எந்த வேறுபாடும் கிடையாது. இந்த போலித் தமிழ் தேசியாதிகளுக்கும், சிங்கள பேரினவாதிகளுக்கும் இதையெல்லாம் பேச எந்த அருகதையும் கிடையாது. ஆனால், நாம் ஆரம்பம் முதலே இவை அனைத்தையும் எதிர்த்தே வருகின்றோம்.  

அந்த எதிர்ப்பினை பூரணமான ஒரு சகவாழ்வுக்கான இலக்காகக்கொண்டு செயற்பட்டு வருகின்றோம். 

(அவ்வளவு ஏன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இராஜன் சத்தியமூர்த்தி என்ற படுகொலை செய்யப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின்  அடக்கம் செய்யப்பட்ட இடம் அவரது நினைவிடமாக மாறிவிடும் என்பதால், அவரது புதைகுழியை தோண்டி எறிந்தவர்கள் நீங்கள்தானே. சுடலையில் பிணம் தோண்டும் பேய் அரசியலைச் செய்துகொண்டு, அதனை மௌனமாகக் கடந்துபோய்விட்டு, இருக்கும் உங்களுக்கு இவை புதிதாகத்தான் தெரியும்.) 

இப்போது புரிகிறதா நாம் எங்கிருக்கின்றோம் என்று. எந்த இடத்தில் நமது சிந்தனைகள் இருக்கின்றன என்று. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்து அனுப்பும்போது அவருக்கு சில கடமைகள் இருக்கின்றன. அந்த அடிப்படைக் கடமைகளை செய்ததற்காகவெல்லாம் நாம் முகநூலில் காவடி எடுக்க வேண்டியதில்லை. ஆனால், இன்று எமது ஊரின் முக்கிய தேவை உரிமையுடன் கூடிய அபிவிருத்தி. அதனை அவர் பேசும்போது அவர் கூறும் கருத்தை வரவேற்பதன் மூலம் அவர் செய்ய வேண்டிய வேலையை வரவேற்போம். அதன் மூலம் அவர் செயற்படுவதற்கான திசையை மக்கள் சார்பில் நிர்ணயிக்க உதவுவோம். அதற்காகத்தான் நாம் சாணக்கியனின் அபிவிருத்தி குறித்த பேச்சைப் பாராட்டினோம்.  

ஆனால், இந்தப் பேச்சுக்களுடன் மாத்திரம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் கடமைகள் முடிந்துவிடுவதில்லை. உணர்ச்சியூட்டிப் பேசுவது அடுத்த தேர்தலில் அவருக்கு வாக்குப் பெட்டியை நிரப்ப உதவலாம். ஆனால், அவருக்கு வாக்களித்த மக்கள் ஏமாற்றமடைவார்கள். ஆகவே பேச்சைக் கடந்து நல்ல திட்டமிட்ட அபிவிருத்தி நோக்கிய செயற்பாடுகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்துவோம்.  

வடக்கு முஸ்லிம்கள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும்  

இன்னுமொரு விடயத்தையும் இங்கு சொல்லாமல் எம்மால் கடந்துபோக முடியவில்லை. அதாவது இன்று முஸ்லிம்களின் மீட்பர்களாக காண்பிப்பதில் எல்லா தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் போட்டி போடுகிறார்கள். முஸ்லிம்களின் அடக்கம் செய்வதற்கான உரிமை நிச்சயமாக மீள உறுதிப்படுத்தப்படும். இப்படியாக இடையில் வந்த பிரச்சினைகள் எல்லாம் நீடிக்காது. ஆனால், இந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதேபோல முஸ்லிம்கள் குறித்த இன்னுமொரு முக்கிய கடமையும் இருக்கின்றது. 

அதாவது விடுதலைப்புலிகளால் வடக்கில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இன்னமும் வெளியிடங்களில்தான் தங்கி வாழ்கிறார்கள். உங்கள் உணர்ச்சிப் பேச்சுக்களை அதனை நோக்கிக் குவியுங்கள். அவர்கள் விரட்டப்பட்டதை விடுதலைப்புலிகள் பலமிழந்த 10 வருடங்கள் கழித்து இப்போதாவது பலமாக கண்டியுங்கள். அந்த முஸ்லிம்களை மீண்டும் வடக்கே அவர்களது இருப்பிடங்களில் குடியேற்றுவதற்கு அரசாங்கத்தோடும் ஏனையவர்களோடும் சேர்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுங்கள். அதுதானே தமிழ் மக்கள் அதாவது உங்களுக்கு வாக்களித்த மக்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட விடயம். அதில் உரிய நடவடிக்கைகளை நேர்மையாக எடுங்கள். அவைகுறித்து வெளிப்படைத்தன்மையுடன் பேசுங்களேன். அதுவும் இவற்றைப் போல மிகவும் முக்கியமான பிரச்சினைதானே. நாம் ஒரு பாதிக்கப்பட்ட, உரிமை இழந்த சிறுபான்மை இனம். நம்மால், இன்னுமொரு சிறுபான்மை இனம் பாதிக்கப்படலாமா? அதற்காக குரல் கொடுக்க வேண்டியதுதானே இன்றைய உங்கள் முதல் கடமை. அதை விட்டுவிட்டு, ஊர்த்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதீர்கள். 

தமிழ் – முஸ்லிம் உறவுகள் குறித்து உண்மையாகவே கவலைப்படும் சாதாரண மக்களுக்கு ஒரு வேண்டுகோள். தமிழ் – முஸ்லிம் உறவு என்பது அரசியல்வாதிகளால் சாத்தியப்படக் கூடியது அல்ல. அவர்கள் அதனைக் கெடுக்கவே செய்வார்கள். அழுதழுதும் பிள்ளை அவளே பெற வேண்டும். அந்த உறவு சாதாரண மக்களின் கைகளில்தான் இருக்கிறது.