— வி. சிவலிங்கம் —
சமீப காலமாக இலங்கைப் பாராளுமன்றம் விவாதம் நிறைந்த மேடையாக மாறி வருகிறது. தமிழ்ப் பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மும் மொழிகளிலும் காத்திரமான ஆளுமை மிக்க இளைஞர்கள் விவாதங்களைச் சூடேற்றி வருகிறார்கள். சிங்கள பௌத்த பேரினவாத உறுப்பினர்களின் பதில்கள் பாராளுமன்றப் பதிவேட்டில் பதிய முடியாத அளவிற்கு மிக மோசமான சொற் பிரயோகங்களால் தமது கோபங்களைத் தீர்த்துக் கொள்கிறார்கள். அங்குள்ள அனுபவமிக்க உறுப்பினர்கள் தலைகளைக் கவிழ்த்து வெட்கத்தினால் மௌனித்து உட்கார்ந்துள்ளனர். அவர்களின் ஆங்கில உரைகள் உலக அரங்கில் தினமும் வலம் வருகின்றன. மிகவும் கேவலமான, தேசத்தைக் கூறுபடுத்திச் செல்லும் அப்பட்டமான சிங்கள பௌத்த பேரினவாதம் தனது தேச எல்லைக்கு அப்பால் வாழும் நாகரிக சமூகத்திற்குப் பதில் சொல்லும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்பதை இவை உணர்த்துகின்றன. வரலாறு மீண்டும் புதிய வீரியத்தோடு ஆரம்பித்துள்ளதாக எண்ணத் தோன்றுகிறது. இருப்பினும் இந்த உரைகள் எதுவும் புதிதானது அல்ல.’புதிய மொந்தையில் பழைய கள்’ என எம்மவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் பழமொழி நினைவில் வந்து போகிறது.
பிரித்தாழும் சூழ்ச்சி
இப் பின்னணியில் தமிழ் அரசியலின் எதிர்காலம் குறித்த காத்திரமான கோட்பாட்டு அடிப்படையிலான அணுகுமுறைகளை நோக்கி வியூகங்கள் வகுக்கப்படுவது அவசியமாகியுள்ளது. குறிப்பாக சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் என்பது தனது மக்களையே கூறுகளாக்கி பிரித்தாளும் தந்திரங்களுடன் திட்டமிட்டுச் செயற்பட ஆரம்பித்துள்ளது. இப் பிரித்தாளும் தந்திரமானது அதன் குறுகிய பொருளாதார நலன்களிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. குறிப்பாக உலக அளவில் நவ தாரளவாத பொருளாதாரக் கொள்கைகள் தோல்வியடைந்து செல்கையில் வலதுசாரி ஜனரஞ்சக அரசியல் (Populism) மிகவும் பலமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளுக்கு எதிராக அல்லது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானதாக அல்லது கிறிஸ்தவ மதக் கலாச்சாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அல்லது உள்நாட்டு வெள்ளை இன மக்களின் வேலைவாய்ப்பு,வருமானம் என்பவற்றை அந்நியர்கள் அல்லது நிறத்தவர்கள் பறிப்பதாக அல்லது குறைந்த கூலிக்குத் தமது உழைப்பை வழங்குவதால் பாரம்பரியமாக உழைத்து வாழும் தமது மக்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் பிரச்சாரங்கள் ஆழமாகப் பரவி வருகின்றன.
நவதாராளவாத பொருளாதாரம் ஏற்படுத்தியுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைத் திசை திருப்பும் வகையில் எழுந்துள்ள இவ் வகைப் பிரச்சாரங்கள் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மிகவும் வெளிப்படையாகப் பிரதிபலித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ‘டொனால்ட் டிரம்ப்’ அமெரிக்க அரசியலை மிகவும் பிளவுபடுத்தி வருகிறார். ஜனநாயகக் கட்சியை கம்யூனிஸ்ட் கட்சியாக அடையாளம் காட்டும் அளவிற்கு அமெரிக்க அரசியல் பிளவுபட்டுள்ளது.
வலதுசாரி சந்தர்ப்பவாத ஜனரஞ்சக அரசியல்
‘முதலில் அமெரிக்கா’ என ஆரம்பித்துள்ள நவ தாராளவாத எதிர்ப்பு அரசியல் இவ்வாறான வலதுசாரி சந்தர்ப்பவாத, ஜனரஞ்சக அரசியலிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. இவ்வாறான இனவாத, மதவாத, நிறபேத அரசியல் என்பது ஐரோப்பிய நாடுகளிலும் ஆக்கிரமித்துள்ளது. இவ்வாறான பின்னணியிலிருந்தே இலங்கை அரசியலின் இன்றைய போக்கையும் அவதானிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக நவதாராளவாத பொருளாதார நடவடிக்கைகள் சமூகங்களில் பாரிய பொருளாதார இடைவெளியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதனால் பயனடைந்த தேசங்களின் மூலவளங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் சிறு ஆதிக்கப் பிரிவினர் அதனைப் பாதுகாப்பதற்காக அல்லது அத் தேசங்களின் பாதிக்கப்பட்ட பொருளாதாரப் பிரிவினர் தமக்கு எதிராகத் திரும்பி விடாமல் தடுப்பதற்காக வலதுசாரி சந்தர்ப்பவாத ஜனரஞ்சக (Rightwing opportunist populist) அரசியலை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 40 ஆண்டுகளாக நடைமுறையிலுள்ள தாராளவாத அல்லது திறந்த பொருளாதாரக் கொள்கைகளால் பயனடைந்த சிறு பிரிவினர் தமது நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அல்லது தமது கொள்ளையிடுதலை மறைக்கும் விதத்தில் சிங்கள பௌத்த பேராதிக்க அரசியலை முன்னெடுத்துள்ளனர். தமது பொருளாதார முன்னேற்றத்திற்கு அல்லது சிங்கள பௌத்த பேராதிக்க அரசு ஒன்றினை உருவாக்குவதற்கு அந்நியர்களான வேற்று இனத்தவர் தடையாக உள்ளதாக தமக்கான எதிரியை கோட்பாட்டு அடிப்படையிலும்,அரசியல் அடிப்படையிலும் அடையாளப்படுத்தும் வகையில் விவாதங்களை நகர்த்துகின்றனர். அரசியல் அடிப்படையில் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக கையிலெடுத்துள்ள பொருளாதார ஆதிக்கமிக்க இச் சிறு குழுவினர் தமது பொருளாதாரக் கொள்ளையிடுதலை மறைக்கும் பொருட்டு தேசபக்தியைக் கையிலெடுத்துள்ளனர்.
எதிரிகள் உருவாக்கம்
இலங்கைத் தேசம் இந்திய ஆக்கிரமிப்பிற்குள் அகப்பட்டுள்ளதாகவும், தமிழர்கள் இந்திய ஐந்தாம் படையாக செயற்படுவதாகவும்,முஸ்லீம்கள் ஒரு புறத்தில் தமது வர்த்தக நலன்களுக்கு எதிராகவும். மறுபுறத்தில் பௌத்த மதத்திற்கு எதிரான பயங்கரவாதத்தை முன்னெடுப்பதாகவும் கூறும் கட்டுக் கதைகள் ஆரம்பமாகியுள்ளன. சமீபத்தில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் மீதான விவாதங்களின்போது இனவாதம் மிக அப்பட்டமாகவே வெளிப்பட்டது. ஒரு வகையில் சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் முஸ்லீம் மக்களின் மரணித்தவர்களின் ஜனாசாக்களை புதைப்பதா? அல்லது எரிப்பதா? ஏன்ற தெரிவுக்குள் தள்ளியது போலவே தமிழ் மக்கள் தம் உடன் பிறப்புகளின் இறப்புத் தொடர்பான நினைவு தினங்களைக் கொண்டாடுவதையும் பயங்கரவாதம் என்ற தெரிவுக்குள் தள்ளி உள்ளது. இவ்வாறு நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்களை எதிரிகளாக முன்னிறுத்தி பௌத்த மதத்திற்கும், அதன் வளங்களுக்கும் ஆபத்துக் காணப்படுவதால் ஓர் இறுக்கமான ராணுவ கட்டுப்பாடுள்ள அரசியல் கட்டுமானம் அவசியம் என்ற வகையில் அரசியல் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
இவை யாவுமே சாமான்ய சிங்கள தொழிலாள, விவசாய மக்களை உணர்ச்சியூட்டி ஏமாற்றும் தந்திரங்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள காலங்கள் எடுக்கலாம். இன்று தமிழ் மக்கள் எவ்வாறு தமிழ் – குறும் தேசியவாதத்தால் ஏமாற்றப்பட்டு அதன் விளைவாக தமது உயிர்களையும்,உடமைகளையும் இழந்தார்களோ, அதே போன்றே அச் சிங்கள மக்களும் தமது சுதந்திரத்தையும், வாழ்வையும் இழக்கும் நாள் தூரத்தில் இல்லை.
போலித் தேசியவாதம்
தற்போதைய சூழலில் நாட்டின் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மை மக்கள் ஒரே எதிரியான இனவாத, மதவாத சிறு குழுவினரின் தேசியவாத அரசியலிற்குள் சிக்குண்டுள்ளார்கள். எனவே முதலில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் போலித் தோற்றத்தை அம்பலப்படுத்துவதே முதல் போராட்டமாக அமையும். ஏனெனில் போலித்தனம் நிறைந்த சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் என்பது தேசத்தின் வளங்களைக் கொள்ளையடிக்க எண்ணும் சிறு குழுவினரின் திட்டமிட்ட சதி என்பதை பெரும்பான்மை மக்கள் உணரும்போதுதான் போலி ஜனரஞ்சக தேசபக்தி அரசியலின் உண்மைத் தோற்றம் வெளியாகும். அவ்வாறான வகையில் உண்மைகள் புலப்படும் போதுதான் தேசிய நல்லிணக்கம் உருவாக வாய்ப்புகள் ஏற்படும்.
ஐக்கியத்திற்கான பொதுக் கூறுகள்
நாம் இவ்வாறாக ஒட்டுமொத்த இலங்கையின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் இணைவதன் அவசியத்தை வலியுறுத்தும் வேளையில் இரு புறத்திலும் செயற்படும் குறும்தேசியவாதிகள் அவ்வாறான முயற்சியைக் கேலி செய்வதையும் நாம் காண முடிகிறது. ஒரு புறத்தில் தமிழ் மக்கள் பிரிவினைக்கெதிராக எவ்வளவு குரல் எழுப்பினாலும் தாம் அதனை நம்பவில்லை என சிங்கள பௌத்த பெருந்தேசியவாதிகள் கூறுவதையும்,அதே போலவே சிங்கள மக்கள் மத்தியில் செயற்படும் ஜனநாயக, முற்போக்கு சக்திகளுடன் இணைந்து ஒட்டுமொத்த இலங்கையின் சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்கும் வகையில் ராணுவ கூட்டுக் கலவையுடன் பயணிக்கும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத சக்திகளுக்கு எதிராக செயற்படுவதை ‘தமிழ் தேசிய நீக்க அரசியல்’ என அல்லது ‘சரணாகதி அரசியல்’ என அல்லது ‘அபிவிருத்தி அரசியல்’ என எள்ளிநகையாடும் தமிழ் – குறும் தேசியவாத அரசியல் வர்ணித்துச் செல்வதும் ஒரே வழியில் பயணிப்பதைக் காண முடிகிறது.
தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் என்பது சில தெரிவுகளுக்குள் மட்டுமே உள்ளது. தமிழ் மக்களின் பொருளாதாரம், மக்கள் செறிவு,சனத்தொகைப் பெருக்கம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை போன்ற விவகாரங்கள் மிகவும் பலவீன நிலையிலுள்ளன. இவற்றை மீள்கட்டுமானம் செய்யும் வரை ராஜதந்திர அடிப்படையில் அரசியலை வகுத்துச் செயற்படுவது அவசியமானது. பிரிவினை, தமிழ் – குறும் தேசியவாதம் என்பன எமது மக்களை பல்வேறு விதங்களில் கூறுகளாக்கியுள்ளது. தற்போது எமக்குத் தேவைப்படுவது ஐக்கியம் மட்டுமே.
அவ்வாறாயின் எவ்வாறு எமது ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவது?ஐக்கியத்தை ஏற்படுத்தும் அல்லது இணைக்கும் சக்திகளும்,கோட்பாடுகளும் எவை? இங்கிருந்தே எமது புதிய அரசியல் பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்டது போல தேசத்தின் சுயநிர்ணய உரிமை என்பது சிங்கள பௌத்த கூறுகளால் பறிக்கப்பட்டுள்ளது. தேசத்தின் சகல சமூகப் பிரிவினரதும் சுயநிர்ணய உரிமை சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்தின் பெயரால் ராணுவ சர்வாதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவே சகல மக்களுக்குமான பொது எதிரியாகும். மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். எனவே இனவாத, மதவாத சக்திகளிடமிருந்து எமது தேசத்தை மீட்டெடுப்பது சகலரது கடமையாகிறது. தேர்தல் எனவும்,வாக்கெடுப்பு எனவும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை எனவும் பல வாதங்கள் முன்வைக்கப்படலாம். இவை யாவும் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலிக்க முடியாது. சிங்கள மக்கள் எவ்வாறு இலங்கை என்ற தேசத்தின் மக்களோ அதேபோன்றே ஏனைய இனங்களும் அத் தேசத்தின் பிரஜைகள். இங்கு எண்ணிக்கை என்பது அரசியல் அமைப்பு வழங்கிய ஆட்சியை நடத்துவதற்கான பொறிமுறையே தவிர மக்களை வகைப்படுத்தும் வழிமுறை அல்ல.
எண்ணிக்கை அரசியல்
இலங்கை என்பது பல் தேசிய இனங்கள் வாழும் நாடு என்பதை இன்றைய சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் ஏற்கத் தயாராக இல்லை. அவ்வாறான ஆட்சிப் பொறிமுறையை ஜனநாயகம் என எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகள் என்பது முதலில் இலங்கையின் ஆட்சித் தத்துவம் தொடர்பான இவ்வாறான கேள்விகளுக்கான பதில்களைத் தேட வேண்டும். தர வேண்டும். பல் தேசிய இனங்களும், பல மதங்களும் வாழும் நாடு என்பதை ஏற்றுக் கொள்ளாத ஒரு அரசுடன் எந்த அடிப்படையில் பேச்சுவார்த்தைகளுக்குச் செல்ல முடியும்?
தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் முடிவு என்பது தமிழ்ப் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அல்ல. அம் முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாட்டு அடிப்படையிலானதாக இருத்தல் அவசியம். இங்கு பிரதிநிதித்துவம் என்பது எண்ணிக்கை என்பதை விட கோட்பாட்டு இணக்கத்தின் அடிப்படையிலானது என வியாக்கியானப்படுத்தப்படுதல் வேண்டும். இல்லையேல் இன்றைய சிங்கள பௌத்த ஆட்சியாளரும் அவ்வாறான விவாதங்களை முன்வைப்பதும் நியாயமாகிவிடும். இங்கு சுயநிர்ணய உரிமை என்பது மனித உரிமைக் கோட்பாடு ஆகும். தனி மனிதர்களுக்கும்,கூட்டுச் சமூகங்களுக்கும் உள்ள சுயநிர்ணய உரிமையை, இறைமை அதிகாரத்தை வாக்குப் பலத்தால் மாற்ற முடியாது.
உள்ளக சுயநிர்ணய உரிமை
சுயநிர்ணய உரிமை பல்தேசிய இனங்கள் வாழும் நாட்டில் அத் தேசிய இனங்களின் பொருளாதாரம், அடையாளங்கள், கலாச்சாரம், மொழி, மதம் போன்றவற்றைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் உள்ள உரிமை ஆகும். இதற்கான கட்டுமானப் பொறிமுறைகளை வழங்குவதே சமஷ்டி அரசியல் பொறிமுறையாகும். இங்கு எண்ணிக்கை அதனைத் தீர்மானிப்பதில்லை. தீர்மானிக்கவும் முடியாது.
பிரித்தானிய குடியேற்ற ஆதிக்கத்திலிருந்து வெளியேறிய இலங்கை மக்கள் தமக்கென சுயநிர்ணய உரிமையை வகுத்துக் கொள்ளவே சுதந்திரத்தைப் பெற்றார்கள். தேசிய அரசியல் வாழ்வில் அல்லது தேசிய அரசுக் கட்டுமானத்தில் சம உரிமையுடன் பங்கு கொள்ளும் உயரிய நோக்கத்தின் அடிப்டையிலேயே சுதந்திரம் என்னும் ஜனநாயக சுய நிர்ணய உரிமையைப் பெற்றார்கள். இங்கு பெரும்பான்மை,சிறுபான்மை என்ற வாதங்கள் தடைகளாக இருந்ததில்லை.
இன்று எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து ஜனநாயகத்தை வியாக்கியானம் செய்யும் போக்கு இனவாதிகள் மத்தியிலே காணப்படுகிறது. இதுவே இன்றைய சர்வதேசப் பிரச்சனைகளுக்கான பிரதான காரணியாகவும் உள்ளது.
உள்ளக சுயநிர்ணய உரிமையின் சர்வதேச வியாக்கியானம்
தமிழ்க் குறும் தேசியவாதிகளும், சிங்கள பௌத்த பெருந் தேசியவாதிகளும் உள்ளக சுயநிர்ணய உரிமையின் இன்றைய போக்குகளை அவதானிக்கத் தவறி வருகின்றனர். ஒரு சாரார் அது உள்நாட்டுப் பிரச்சனை எனவும், அதில் வெளிநாட்டவர் தலையிட முடியாது எனவும் வாதிக்கின்றனர். அதேவேளை நாட்டின் இதர தேசிய இனங்கள் தமக்கான கூட்டு அடையாளத்தைப் பாதுகாக்கும் சுயநிர்ணய உரிமை தமக்கு உள்ளது என்பதால் பிரிந்து சென்று கூட்டு அடையாளங்களைப் பாதுகாப்பது மனித உரிமையின் அடிப்படையிலானது என மறு சாரார் வாதிக்கின்றனர்.
உள்ளக சுயநிர்ணய உரிமை என்பது ஒரு தேசத்திற்குள் வாழும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள அடிப்படை மனித உரிமை ஆகும். இந்த அடிப்படை மனித உரிமையையே இறைமை அதிகாரம் என்கிறோம். அதாவது தனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை அவனுக்கு மட்டுமே உரியது. இதில் எவரும் தலையிட முடியாது. இது இயற்கை நீதி சம்பந்தமானது. மனிதர்கள் என்போர் கூட்டுப் பிராணிகள் என்பதால் அவர்கள் கூட்டாகச் செயற்படும் உரிமை கொண்டவர்கள். அதே போலவே தமது கூட்டு எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமை உடையவர்கள். இதன் அடிப்படையில் தத்தமது இறைமை அதிகாரத்தை கூட்டு அடிப்படையில் பாதுகாக்கும் வகையில் ஓர் பொறிமுறையை அமைத்து தமது கூட்டு இறைமை அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றனர். எனவே அரசியல் யாப்பு பொறிமுறை என்பது கூட்டு அதிகாரத்தைச் செயற்படுத்தும் ஒர் பொறிமுறையே தவிர மூன்றில் இரண்டு பெரும்பான்மை எனக் கூறி அந்தப் பொறிமுறை அடிப்படை இயற்கை நீதியை அல்லது கூட்டுச் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துமானால் அவ்வாறான பொறிமுறை ஜனநாயக விரோத ஏற்பாடாகும். இதனை சர்வதேச அமைப்புகள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
இன்றைய அரசியல் சூழலில் மக்கள் கூட்டு அடிப்படையில் தேர்தல் மூலம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட இறைமை அதிகாரத்தைப் பயன்படுத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற பெயரில் மக்கள் வழங்கிய இறைமை அதிகாரத்தை அவர்களே இல்லாமலாக்கும் ஜனநாயக விரோத செயல்முறை இலங்கையில் நடந்தேறியுள்ளது. இங்கு மக்கள் வழங்கிய இறைமை அதிகாரம் மீறப்பட்டுள்ளது. சில சிங்கள பௌத்த ராணுவ வாத சக்திகள் பெரும்பான்மை மக்களின் இறைமை அதிகாரம் எனத் தமது இன்றைய பாராளுமன்ற வெற்றிகளை வியாக்கியானப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
இறைமையும், இனவாதமும்
இனவாதிகள் மக்களின் இறைமை அதிகாரத்தைப் பெரும்பான்மை, சிறுபான்மை என பிரித்துச் செல்வார்களாயின் அது முன்னாள் அமைச்சர் கொல்வின் ஆர் டி சில்வா அவர்கள் கூறியது போல ‘ இரண்டு மொழி ஒரு நாடு அல்லது ஒரு மொழி இரண்டு நாடு‘ என்ற நிலைப்பாட்டை நோக்கியதாக மாற்றமடையும்.
சமீபத்தில் பாராளுமன்ற வரவு – செலவுத் திட்ட விவாதங்களின் போது சில சிங்கள பௌத்த பேரனவாத ராணுவ ஆதிக்க தரப்புகள் பெரும்பான்மையினரின் இறைமை அதிகாரம் சிறுபான்மையினரால் தடுக்கப்பட முடியாதது எனவும் பெரும்பான்மை இறைமை அதிகாரத்தை மறுதலிக்கும் தமிழ் கட்சி உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட வேண்டுமெனவும் ராணுவவாத சக்திகளின் விவாதங்கள் அமைந்திருந்தன. பெரும்பான்மை அல்லது மூன்றில் இரண்டு ஆதரவு என்ற ஜனநாயக விரோத வியாக்கியானத்திற்குள் அவர்கள் சென்றிருந்தனர். எண்ணிக்கை அடிப்படையிலான பெரும்பான்மையை அடிப்படையாக வைத்து தாம் எண்ணியவாறு இறைமை அதிகாரத்தை ஏனைய மக்களை ஒடுக்கும் வகையில் வியாக்கியானப்படுத்திச் செல்வார்களாயின் ஏனைய ஒடுக்கு முறைக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்படும் மக்கள் தமது ஜனநாயக இறைமை அதிகாரத்தின் அடிப்படையில் வேறு முடிவுகளுக்குச் செல்வது தவிர்க்க முடியாததாகும். ஆனால் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத சக்திகள் என்போர் சிறுபான்மையினர் என்பதால் அவர்களின் போலி விளக்கங்களுக்குள் நாம் செல்லாது தேசத்தின் ஜனநாயக நிர்மாணத்தை நேசிக்கும் பெரும்பான்மை மக்களுடன் இணைந்து பயணப்படுவதே பொருத்தமானது.
இன்று இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை உரிமை மூன்றில் இரண்டு பெரும்பான்மை என தாமே வகுத்துக்கொண்ட முறையின் பிரகாரம் பறிக்கப்படுகிறது. இரண்டாம் தரப் பிரஜை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. உதாரணமாக,கொரொனா நோய் தீவிரமாகியுள்ள நிலையில் முஸ்லீம் மதத்தவர் இறந்தால் வழமையாகப் புதைப்பது மதக் கடமை என்ற செயற்பாட்டிற்குப் பதிலாக அம் முறையை கொரொனா நோயைக் காரணம் காட்டி எரிக்கும்படி கோரும் அரச உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இது சுயநிர்ணய உரிமையை மீறும் செயலாகும்.
ஜனாசா நல்லடக்கம்
முஸ்லீம் மதத்தவர் ஒருவரின் ஜனாசாவை எரிப்பதற்காக உத்தரவிடுவதானால் அதற்கான விஞ்ஞானபூர்வமான காரணங்களை முன்வைப்பதே நீதியானது. ஜனநாயகமானது. எவ்விதமான சட்டபூர்வமான விளக்கங்கள் எதுவும் இல்லாமல் எரிக்கவேண்டும் என்பது பெரும்பான்மையின் தன்னிச்சையான அதிகாரத்துவத்தை ஏனைய சமூகங்கள் மத்தியில் திணிப்பதாகவும், அம் மக்களின் சுயநிர்ணய உரிமையை மீறிச் செயற்படுவதாகவும் உள்ளது. இங்கு முஸ்லீம் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை நோக்கி விரல்களை நீட்டுவதை விட அடிப்படை மனித உரிமை மீறலே எமது விவாதமாக இருத்தல் வேண்டும். இங்கு அரச உத்தரவுக்கான நியாயமான விளக்கங்கள் எதுவும் இல்லை. விஞ்ஞானபூர்வமான விளக்கங்கள் இல்லை. சர்வதேச வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. அம் மக்களின் கலாச்சார வழிமுறைகள் மீறப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்புலத்தில் இதற்கான தீர்வுகளை ஒரு ஜனநாயக சமூகம் எங்கு தேடுவது? அத்துடன் பல்தேசிய இனங்கள் வாழும் நாட்டில் ஓர் குறிப்பிட்ட இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து யார்? எவரிடம் முறையிடுவது?
R2P ( Right To Protect – பாதுகாக்கும் உரிமை)
இவை படிப்படியாக உள்நாட்டு அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதோடு எவ்வாறு தமிழ் மக்களின் போராட்டம் முதலில் உள்நாட்டுப் பிரச்சனையாக உருவாகி, இறுதியில் சர்வதேச பிரச்சனையாக மாறியது போல இவை மாறாது என்பதற்கான எவ்வித உத்தரவாமும் இல்லை. இதன் காரணமாகவே உள்நாட்டு விவகாரம் சர்வதேச பிரச்சனையாக மாறாமல் தடுக்கும் விதத்தில் புதிய அணுகுமுறைகள் அதாவது R2P என்ற தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே கொசொவோ பிரச்சனை கையாளப்பட்டது.
இன்று இலங்கை அரசு தமது உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதாகவும், இவ்வாறான தலையீடுகளைத் தம்மால் ஏற்க முடியாது எனவும் கூறி ஐ நா மனித உரிமை ஆணையகத்திலிருந்து வெளியேறியுள்ளது. தமிழர்கள் பிரச்சனையில் இலங்கை அரசு ராணுவத்தை உபயோகித்து பயங்கரவாதத்தை ஒழித்தல் என்ற பெயரில் மக்களைக் கொன்று குவித்த போது பலர் தமது பாதுகாப்பிற்காக இந்தியாவிற்கும் மற்றும் பல நாடுகளுக்கும் சென்றனர். இப் பிரச்சனைகள் உள்நாட்டுப் பிரச்சனை எனில் அவை இந்தியாவின் பிரச்சனையாக மாற்றப்படுவதற்கான பதிலை இலங்கை அரசு வழங்க வேண்டும்.
இதன் காரணமாகவே எதிர்காலத்தில் சர்வதேசப் பிரச்சனையாக மாற்றம் பெறும் பின்னணிகளைக் கொண்ட உள்நாட்டுப் பிரச்சனைகளில் அதன் ஆரம்பத்திலேயே தலையிட்டுத் தீர்ப்பதற்கான முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொள்கிறது. அதன் அடிப்படையிலேயே அரசியல் யாப்பு வரைபுகளில் பல்தேசிய இனங்களின் ஜனநாயக, சுயநிர்ணய உரிமைகளை உறுதி செய்யும்படி கோருகிறது.
இதுவே இன்றைய உள்ளக சுயநிர்ணய உரிமைக்கான புதிய விளக்கமாகும். ஒரு தேசத்து மக்களுக்கான சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டு அப் பிரச்சனை ஏனைய நாட்டின் அல்லது சர்வதேச பிரச்சனையாக மாறுவதற்கு முன்னதாகவே அதனைத் தலையிட்டு நிறுத்துவது சர்வதேச சமூகத்தின் கடமையாகிறது. எனவேதான் அரசியல் யாப்பு என்பது தன்னிச்சையான, தமது நலன்களைப் பேணுவதற்கான வெறுமனே மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற விளக்கங்களால் உருவாகும் ஆவணமாக மட்டும் அவை இருக்க முடியாது என்கிறோம்.
வாசகர்களே!
இலங்கை என்ற சிறிய தீவிற்குள் வாழும் தேசிய இனங்கள் அமைதியாக வாழ்வதற்கு இடையூறாக சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் செயற்படுகிறது. குறிப்பாக சிங்கள பௌத்த நாடு என்ற குறுகிய கற்பனை வாதத்திற்குள் நாட்டின் சில குழுக்கள் இழுத்துச் செல்கின்றன. இக் குழுக்கள் கடந்த 40 ஆண்டுகளாக தேசிய அளவில் செயற்பட்ட திறந்த பொருளாதாரத்தின் காரணமாக தேசிய செல்வத்தையும்,அதிகாரத்தையும் குவித்துள்ள இந்த அதிகார வர்க்கம் தற்போது தனது இருப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக உணர்கிறது.
இதன் காரணமாகவே உலக அளவில் தற்போது ஏற்பட்டு வரும் வலதுசாரி சந்தர்ப்பவாத ஜனரஞ்சக அரசியலைப் பயன்படுத்துகிறது. ஐரோப்பாவில் வெளிநாட்டவர், அகதிகள், முஸ்லீம்கள் போன்ற சமூகக் கூறுகளை எதிரிகளாக முன் நிறுத்தியது போல, இந்தியாவில் ‘இந்து மத ஆதிக்க’ சக்திகள் தமது பொருளாதார இருப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தலித்துகள், அகதிகள், முஸ்லீம்கள் மற்றும் பிற்பட்ட பிரிவினரை எதிரிகளாக அடையாளப்படுத்தி வருகின்றன. அதேவேளை இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு ஜனநாயக சக்திகள், கல்வியாளர்கள் என்போர் நகர்ப்புற ‘நக்ஸலைட்டுகள்’ என விபரிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் இன்றைய பாரதிய ஜனதா கட்சி ‘இந்துத்துவா’ என்ற பெயரில் விதைத்துவரும் இனவாத, மதவாத கோட்பாடுகள் போலவே இலங்கையிலும்’ஜாதிக சிந்தனை’, ‘மகிந்த சிந்தனை’என்ற பெயர்களில் தேசிய அரசியல் கோட்பாட்டு அடிப்படையிலமைந்த இன விரோத அரசியலாக மாற்றம் பெற்று வருகிறது.
இனவாத, மதவாத அடிப்படையிலான கோட்பாடுகள், சிந்தனைகள் என்பன தேசத்தின் பன்முகத் தன்மையைக் குலைக்கும் கோட்பாடுகளாகும். இவை முன்னேற்றத்திற்கும், அமைதிக்கும் பெரும் ஆபத்தானவை என்பதால் இவற்றை இணைந்தே தடுத்தல் அவசியம். அவை குறித்த ஆழமான பார்வையை அடுத்த விவாதக் களத்தில் காணலாம்.
(தொடரும்)