—- செல்லையா வாமதேவன் —
எண்சீர் விருத்தம்
(அரையடிக்கு- காய் காய் காய் மா)
சிந்தைநிறை செந்தமிழிற் சீரேழு கொண்டே
சீரான குறட்பாவில் ஏழுலகங் கண்டே
எந்தத்த லைமுறைக்கும் ஏற்றவழி காட்டும்
எல்லையெலாங் கடந்தறமே போற்றுமெழிற் தேட்டம்
சொந்தமென நீதிநெறி கொள்ளுபவ ரெல்லாம்
சொர்க்கமெனக் கொண்டாடுந் தெள்ளுதமிழ்த் தோட்டம்
விந்தைமனி தர்சொல்லும் மரபுகளை மாற்றி
வெற்றிபெற மானிடரை வரவேற்குங் கோட்டம்!
நிறைகாக்குங் காப்பென்று பெண்ணடிமை சாடி
நீதியொடு சமத்துவத்தை நெடுவாழ்வைப் பாடிப்
பொறையுடைமை நடுவுநிலை பகுத்தறிவைப் பாடிப்
பொருளல்ல அறமில்லாப் பொருளென்று சாடிக்
கறையாகுங் களவென்று கள்ளாமை போற்றிக்
கற்பொழுக்கம் உயிரென்றே உயரறமா யேற்றி
மறைபாடி இறைபாடி மனநலமும் பாடும்
மாசில்லா வள்ளுவத்திற் கிணையேது முண்டோ?
நன்றியுடன் வாய்மைபோற்றி நாவினிமை கூட்டி
நஞ்சுண்பார் கள்ளுண்பார் என்றறிவை யூட்டி
அன்புநெறி ஆன்மீகம் அரசறிவுங் காட்டி
அறமல்ல புலாலுண்ணல் என்றறத்தை மீட்டி
இன்பநெறி ஈகையுடன் இல்லறத்தை ஏற்றி
இன்னாத சொல்லாத இன்னமுதை ஏத்திப்
பன்னாட்டு நல்லறிஞர் பரவசமாய்ப் பாடும்
பண்பாட்டின் கருவூலம் வள்ளுவரின் வார்ப்பே!