‘கோப்பி’ என்றால் அது ‘சிலோன்’தான் என்றிருந்த காலத்தில்…

‘கோப்பி’ என்றால் அது ‘சிலோன்’தான் என்றிருந்த காலத்தில்…

— சீவகன் பூபாலரட்ணம் —

இன்று இலங்கை என்றால் தேயிலைதான் பிரபலம். கோப்பி அல்ல. இன்று கோப்பி உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலை எடுத்துப் பார்த்தால், மிகவும் கீழே, அதாவது 43வது இடத்தில்தான் இலங்கை வரும்.  

ஆனால், சிலோன் (இலங்கையின் அன்றைய பெயர் என்றால் கோப்பி என்று இருந்த அழகிய நாட்கள் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன. அது 1870களில்… உலகில் கோப்பியை பயிர் செய்யும் நாடுகளில் பிரேசில் மற்றும் அப்போதைய டச்சு ஈஸ்ட் இண்டீஸ் (இன்றைய இந்தோனேசியா) ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இலங்கைதான்(சிலோன்) முன்னணியில், மூன்றாவது இடத்தில் திகழ்ந்தது.  

19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலாண்டில் இலங்கையில் 111,000 ஹெக்டேயர்களில் கோப்பி பயிரிடப்பட்டு, வருடத்துக்கு ஐம்பதினாயிரம் தொன்கள் கோப்பி ஏற்றுமதி செய்யப்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் முடிக்குரிய காலனியான இலங்கையின் முக்கிய ஏற்றுமதி வருமானம் அப்போது கோப்பி மூலம்தான் கிடைத்தது. 

“சிலோன் என்றால் கோப்பிதான்” என்ற அடைமொழியை உருவாக்கியவர் பிரிட்டிஷ் ஆளுனரான சேர் வில்லியம் கிரகரி. 1872 முதல் 1877 வரையிலான 5 வருட காலத்தில், அவர் பொருளாதார வளர்ச்சி, பெருந்தோட்ட அபிவிருத்தி, வீதிகள், ரயில்வே பாதைகள் மற்றும் கொழும்புத்துறைமுக நிர்மாணம் ஆகியவற்றில் மிகவும் ஈடுபாட்டுடன் அக்கறைகாட்டினார். பெருந்தோட்டத்துறையில் அவர் அதிக அக்கறை காட்டினாலும், உள்ளூர் விவசாயிகளை அவர் புறக்கணிக்கவில்லை. உள்ளூர் விவசாயிகள் அடுத்தடுத்து கோப்பி, கொக்கோ மற்றும் சின்சோனா(கொய்னாச் செடி) ஆகியவற்றை நெற் பயிர்ச்செய்கையோடு சேர்த்து பயிரிட அவர் ஊக்குவித்தார். அதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு துரிதமான வருவாயை ஊக்குவிக்கவும் அவர் முயற்சித்தார். 

The Administration of Sir William Gregory என்ற தனது நூலில் பி. பஸ்தியாம்பிள்ளை அவர்கள், அபிவிருத்தித்திட்டங்களில் கிரகரி அவர்கள் ஏனைய ஆளுனர்களை விட மிகவும் அக்கறையுடன் செயற்பட்டதாகக் கூறியுள்ளார். கிரகரி சிலோனை ஒரு ”போற்றத்தக்க தீவு” என்று வர்ணித்துள்ளார். அவருடைய விருப்பத்துக்குரிய விடயமும் இலங்கைதான். 

கிரகரி அவர்கள் பதவிக்கு வருவதற்கு பல காலம் முன்னதாகவே கோப்பி இலங்கையில் முக்கிய ஏற்றுமதிப்பொருளாகவும், பணம் தரும் பயிராகவும் மாறிவிட்டது. வெளிநாடுகளில் இருந்து பல முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்துவிட்டதுடன் ஒரு லட்சம் ஹெக்டேயர்களில் கோப்பி பயிரிடுவதற்காக காடும் அழிக்கப்பட்டுவிட்டது. 1840 களின் முற்பகுதியில் இலங்கையின் நிலைமையை விபரிக்க ‘கோப்பியில் அதிதீவிர ஆர்வம்’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எப்படியிருந்தபோதிலும் கிரகரி அவர்களின் காலத்தில் கோப்பி பயிர் செய்யப்பட்ட நிலப்பரப்பின் அளவும் மிகவும் அதிகரித்தது. 

“ஹெமெலியா வஸ்ட்டாறிக்ஸ்” என்ற பழக்கமில்லாத பங்கசு ஒன்று கோப்பிப் பயிரை தாக்க ஆரம்பித்த பின்னரும் கூட அந்தப் பயிரீட்டு விரிவாக்கம் தொடர்ந்தது. ஆனால், 1890 களில் அந்தப் பங்கசு இலங்கையில் கோப்பி உற்பத்திக்கு திரை போடத்தொடங்கிவிட்டது. எப்படியிருந்தபோதிலும் கிரகரி அவர்கள் கோப்பியினால் வந்த வருமான அதிகரிப்பை பயன்படுத்தி, வீதிகளையும் ரயில்வே பாதைகளையும் அமைத்தார். காலியில் இருந்த துறைமுகத்தை பயன்படுத்துவதில் இருந்த சிரமங்களைத் தவிர்க்க அவர் கொழும்பு துறைமுகத்தை நிர்மாணித்தார். 

புதிய வாய்ப்புக்கள் உருவாகவே முதலீட்டாளர்கள் இலங்கையை நோக்கிப் படையெடுத்தனர். உதாரணமாக 1872இல் கிரகரி அவர்கள் பதவிக்கு வந்த சமயத்தில் நுவரெலியா வெறுமனே கிடந்தது. ஆனால், 1874 இல் அங்கு கோப்பி பயிர்செய்கைக்கு 84,000 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட்டது. கிரகரியின் காலப்பகுதி இலங்கையில் கோப்பிப் பயிர்ச்செய்கையின் பொற்காலம் என்கிறார் பஸ்தியாம்பிள்ளை. மேற்கத்தைய நாடுகளில் விற்பனை அதிகரித்ததும், 50 வீதத்தினால் விலை அதிகரித்ததும் இலங்கைக்கு 1870களில் இலங்கைக்கு பெரு வருவாயைப் பெற்றுக்கொடுத்தன.  

இலாபத்துக்காக காடழிப்பு 

எது எப்படியிருந்த போதிலும் ஆரம்ப காலகட்டத்தில் கோப்பி பயிர்ச்செய்கைகாக கிரகரி பெருமளவு இலங்கைக் காடுகளை அழித்தார் என்பதும் உண்மையே. பிரிட்டிஷ் ஆட்சிக்காரர்கள் இலங்கைக்காடுகளை வன்கொடுமை செய்தனர் என்ற அளவுக்கு அப்போது கவிதைகள் கூட வந்தனவாம்.  

இந்தக் காடழிப்பின் தீவிரத்தை உணர்ந்த அப்போதைய பேராதனை உயிரியல் பூங்காவின் இயக்குனர் டாக்டர் டி எச் கே த்துவையிட்ஸ் கொழும்பிலும் லண்டனிலும் உள்ள உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார். காடழிப்பு ஒழுங்குபடுத்தப்படாவிட்டால், மண்ணரிப்பு அதிகரிப்பதுடன், மழை வீழ்ச்சியும் குறையும் என்று அவர் எச்சரித்துள்ளார். பிரிட்டனில் கியூ கார்டன் என்ற பூங்காவின் அப்போதைய இயக்குனரான டாக்டர் ஜோசப் கூக்கரை இந்த முறைப்பாடு ஈர்த்துள்ளது. காலனித்துவ அலுவலகத்தின் துணையுடன் பிரிட்டிஷ் காலணிகளின் ஆளுனர்களுக்கு கடிதம் எழுதிய டாக்டர் கூக்கர், காடழிப்பை நிறுத்துமாறு உத்தரவிட்டார். காணிக்காக அலையும் பெருந்தோட்ட முதலாளிகளுடன் தாராளமாக உறவு வைத்திருந்த கிரகரி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டார். முடிக்குரிய ஆட்சியின் விசுவாசம் மிக்க வீரரான கிரகரி காடுகளை வளர்க்க ஆர்வம் காட்டினார். 9000 ஏக்கரை காடு வளர்ப்புக்கான ஒதுக்கிடமாக அவர் அறிவித்தார் என்கிறார் பஸ்தியாம்பிள்ளை.  

எதிர்பார்த்தபடி தோட்ட முதலாளிமார் ஆத்திரமடைந்தனர். ஆளுனரை கண்டிக்கும் கட்டுரைகளை அவர்கள் ஊடகங்களில் வெளிவரச் செய்தனர். டாக்டர் த்துவையிட்ஸ் தோட்ட முதலாளிகளின் எதிரியாக வர்ணிக்கப்பட்டார். “ஒற்றைப் பயிர்ச்செய்கை கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டு, ஏனைய பயிர்களையும் பயிரிட முன்வரவேண்டும்” என்ற உயிரியல் நிபுணர்களின் கருத்தை அவர்கள் நிராகரித்து எழுதினார்கள். மிகுந்த வருமானத்தை தரும் பயிர் என்பதால் கோப்பியில் இருந்த விலத்த ஆரம்பத்தில் தயங்கிய கிரகரி அவர்கள், பின்னர் ஒற்றைப் பயிர்ச்செய்கை ஆபத்தைத் தரும் என்பதை உணர ஆரம்பித்தார். லண்டனிலும் வேறு இடங்களிலும் இருந்து பெற்ற விஞ்ஞானிகளின் அறிவூட்டல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் பலவிதமான பயிர்களை கலந்து பயிரிட அவர் நடவடிக்கை எடுத்தார். அதற்கமைய பலவிதமான விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. த்துவையிட்ஸ் அவர்களின் முயற்சியால் பிரிட்டிஷ் காலணி நாடுகளுக்கு விதைகளையும் ஆலோசனையையும் வழங்கும் ஒரு மையமாக பேராதனை உயிரியல் பூங்கா மாறியது. 

பேராதனையிலும் ஹக்கலயிலும் உயர் மலைச்சாரல்களில் பயிரிட முடியாத வெப்ப மண்டல தாவரங்களுக்கான உயிரியல் பூங்காவை கிரகரி 1876இல் ஹனரத்கொடையில் ஆரம்பித்தார். பன்மைத்துவம் நிறைந்த மற்றும் நோய்களுக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய விதைகளை விவசாயிகளுக்கு கொடுப்பது என்பதுடன், சிறுவிவசாயிகள் தமது பயிர்ச்செய்கையை அதிகரித்து நல்ல வருமானத்தை பெறச்செய்வதும் அவரது திட்டமாக இருந்தது. 

கிரகரிதான் உண்மையில் முதல் தடவையாக உள்ளூர் சிறு விவசாயிகளை வர்த்தகப் பயிர்ச்செய்கையில் ஈடுபட ஊக்குவித்தவர், நடவடிக்கை எடுத்தவர் என்கிறார் பஸ்தியாம்பிள்ளை.  

அதே ஆண்டில், ஆப்பிரிக்காவின் லைபீரியாவில் வளர்க்கப்பட்ட கோப்பி பயிர் பலமானது என்றும் நோயை எதிர்த்து வாழக்கூடியது என்றும் கிரகரி அறிந்துகொண்டார். தாழ் நாட்டில் வளர்க்கப்படக் கூடிய அந்த லைபீரிய வகைக் கோப்பிக்கு அமெரிக்காவில் நல்ல விலையும் கிடைத்தது. உள்ளூர் விவசாயிகளின் நலனுக்காக லைபீரியன் கோப்பி விதைகளை வரவழைத்த கிரகரி அவற்றை பசுதுன் கொரளையில் பரீட்சார்த்தமாக பயிரிட்டுக் காண்பித்தார். ஆனால், இறுதியில் அந்த லைபீரிய கோப்பியும், அதே பங்கசு நோயினால் பாதிக்கப்பட்டது. 

சின்சோனா(கொய்னா) பயிரீடு 

கோப்பியை தாக்கிய பங்கசு நோயை குணப்படுத்துவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால், அந்தப் பிரச்சினையை தவிர்த்துப்போவதற்கான முயற்சிகள் தோல்வியடையவில்லை. 1860 களில் சேர் கிளமண்ட்ஸ் மார்க்கம் அவர்கள் தென்னமெரிக்க நாடுகளான பெரு மற்றும் ஈக்குவடோர் ஆகிய நாடுகளில் இருந்து சின்சோனா விதைகளை பெற்று ஹக்கலயில் பரீட்சார்த்தமாக பயிரிடச் செய்தார். சிலோன் உட்பட வெப்ப மண்ட நாடுகளை அப்போது கடுமையாக தாக்கிய மலேரியாவுக்கான மருந்தான குயினைனை உருவாக்க பயன்படும் சின்சோனாவுக்கு அப்போது பெரும் தேவை இருந்தது. 1873இல் இந்தோனேசியாவை(டச்சு ஈஸ்ட்  இண்டீஸ்) தொடர்ந்து கிரகரியின் கண்காணிப்பில் இலங்கை “சின்சோனா” பயிர்ச்செய்கையில் இறங்கியது. ஆரம்பத்தில் இலவசமாக சின்சோனா விதைகள் கொடுக்கப்பட்டன. உற்பத்தி அதிகரித்தது, பின்னர் விதைகளும் விற்கப்பட்டன. விற்பனையும் அதிகரித்தது. அதிகரித்த தேவைகளை ஈடு செய்ய மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிறு விவசாயிகளும் தனியார் விதை உற்பத்தி நிலையங்களை ஆரம்பித்தனர்.  

1876 இல் ஜாவா மற்றும் இந்தோனேசியாவில் இருந்து கலிசாயா மற்றும் லெட்ஜரினா விதைகளை கொண்டுவர முயற்சித்தார். ஆனால், அவை வழியில் பழுதாகிப் போயின. ஆனால், சின்சோனா பயிரீடு 1876 இல் 6000 ஏக்கராக அதிகரித்தது.  

தேயிலையின் வருகை 

1845 இலேயே அஸாம் மற்றும் சீனாவில் இருந்து தேயிலை கொண்டுவரப்பட்டு இலங்கையில் உயிரியல் பூங்காவில் பரீட்சார்த்தமாக வளர்க்கப்பட்டாலும், 1885இல்தான் இலங்கையில் தேயிலை முக்கிய பயிராக மாறியது. இங்கிலாந்தில் இலங்கை தேயிலைதான் மிகச் சிறந்தது என்று மதிக்கப்பட்டதை உணர்ந்ததை அடுத்து 1872 மற்றும் 1873இல்தான் கிரகரி தேயிலையை பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையாக மேற்கொள்ள ஊக்குவித்தார். கோப்பி பயிரிட முடியாத உயர் மலைகளிலும் தேயிலை பயிரிடப்பட்டது. 

ஆனால், கோப்பியைப் போல் அல்லாது, அங்கேயே தங்கி வேலை செய்யும் வேலை ஆட்கள் தேயிலைப் பயிர்ச்செய்கைக்கு தேவைப்பட்டனர். அதிர்ஸ்டவசமாக தென்னிந்தியாவில் இருந்து அவர்களுக்கு மலிவான தோட்டத்தொழிலாளர்கள் கிடைத்தனர். 1874இல் நுவரெலியா முதல் கேகாலை மற்றும் இரத்தினபுரிவரை தேயிலைப் பயிர்ச்செய்கை விரிவடைந்தது. இலங்கையின் புதிய தனலக்ஸ்மியாக தேயிலை உருவானது.