சொல்லத் துணிந்தேன்—45

சொல்லத் துணிந்தேன்—45

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

‘அரசியல் ஒரு விஞ்ஞானம். அதில் பரிசோதனை முயற்சிகள்–களநிலையறிந்த அணுகுமுறைகள்– உபாயங்களை வகுத்து அதன் அடிப்படையில் அமைந்த வியூகங்கள் தேவை. இதனைத் தமிழர் தரப்பு அரசியலுடன் பொருத்திப் பார்ப்பதே இப்பத்தியின் நோக்கம்’ என்ற முத்தாய்ப்புடன் நான் எழுதிய சொல்லத் துணிந்தேன் 38, 39 மற்றும் 40 ஆவது அரசியல் பத்திகளைப் படித்துவிட்டு, தமிழர்களுடைய விடுதலைப் போராட்டம் எழுச்சி பெறுவதற்கு ஒரு காலகட்டத்தில் மிக முக்கிய  வகிபாகமேற்றிருந்த ஒரு முக்கியமான தமிழ்ப் பிரமுகர் வெளிநாட்டிலிருந்து எனக்குப் பின்வரும் செய்தியொன்றைப் பதிவிட்டிருந்தார்.  

“அரசின் தமிழர்களுக்கெதிரான திட்டங்களை எதிர்க்கக் கூடாது என்பதுபோல் கட்டுரைகள் அமையாது கவனித்துக் கொள்ளுங்கள். எழுதுங்கள் தொடர்ந்து……,..” என்பதுதான் அப்பதிவு. 

அவருடைய ஆலோசனைக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். அது சரியானதும்கூட. பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களைக் களநிலையறிந்து அரசியல் தந்திரோபாயங்களுடன் தமிழர் தரப்பு கையாள வேண்டுமென்று நான் கூறுவது அரசின் தமிழர்களுக்கெதிரான திட்டங்களை எதிர்க்கக் கூடாது என்ற அர்த்தத்தில் அல்ல. 

இலங்கைத் தீவானது ஒரே மத(பௌத்த), ஒரே இன (சிங்கள) நாடாகவே விளங்கவேண்டுமென்ற கருத்துருவாக்கத்தின் அடிப்படையில் ‘பௌத்த சிங்கள பேரினவாதம்’ என்பது மகாவம்சக் காலத்திலிருந்தே கட்டமைக்கப்பெற்றதொன்றாகும். இதுவரை அது தொடர்கிறது. இனிமேலும் இலங்கையில் எந்த அணி ஆட்சியதிகாரத்திற்கு வந்தாலும் இது தொடரத்தான் போகிறது. இந்த யதார்த்தத்தின் ஊடாகவே ஈழத்தமிழர்களின் இருப்பும் அடையாளமும் தக்க வைக்கப்பட்டுப் பேணிப்பாதுகாத்து வளர்த்தெடுக்கப்பட வேண்டியுள்ளது. எந்தக் கற்பனாவாத இலக்கும் எமது இருப்பைக் காப்பாற்றாது. ஏனெனில் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பண்ண முடியாது. 

தமிழ் மக்களைப் பொறுத்தவரை இலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தும், பின் சுதந்திர இலங்கையிலும் தமிழர் தரப்பு அரசியல் கோரிக்கைகளும்–கோஷங்களும்–ஆர்ப்பாட்டங்களும்–பேரணிகளும்–கதவடைப்புகளும்–மாநாடுகளும்–தீர்மானங்களும் இடம்பெற்ற அளவுக்கு அவற்றிற்குச் சமாந்தரமாகத் தமிழ்ச் சமூகத்தை சமூக பொருளாதார ரீதியாக  வலுவூட்டுகின்ற செயற்பாட்டு அரசியல் நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. 

தமிழ்த் தேசியம் இரு தளங்களில் தடம் பதித்து இயங்கியிருக்க வேண்டும். ஒன்று, தமிழ் மக்களின் நிலம், மொழி, கல்வி, கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு, பொருளாதாரக் கட்டமைப்பு, இயற்கைச் சூழல் இவற்றைப் பேணிப் பாதுகாத்து வளர்த்தெடுக்கக்கூடிய வகையிலான தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூக அடித்தளம். மற்றையது மேற்கூறப்பட்ட விடயங்கள் சம்பந்தமான செயற்பாடுகளுக்கு அனுசரணை வழங்கக் கூடிய அரசியலதிகாரம் அல்லது செல்வாக்கைப் பெற்றுக் கொள்வதற்கான ஓர் அரசியல் தளம். அரசியல் தளத்தை அறிவுபூர்வமாக ஆற்றுப்படுத்தக்கூடிய வலிமையுடன் மேற்கூறப்பட்ட சமூகத் தளம் அமைந்திருக்க வேண்டும். 

ஆனால், தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை மேற்கூறப்பெற்ற சமூக அடித்தளம் ஒரு மக்கள் இயக்கமாக மறைமுகமாகவேனும் எக்காலத்திலும் இருந்ததில்லை. அறிவு பூர்வமாகவும் விஞ்ஞான பூர்வமாகவும் சமூக அக்கறையுடனும் சிந்தித்துச் செயற்பட்ட சில தனிநபர்களினாலும் சில சமூக அமைப்புகளினாலும் அதிகாரம் படைத்திருந்த ஓரிரு அரசியல் தலைவர்களாலும் அவ்வப்போது ஆங்காங்கே சில்லறையாகச் சில செயற்பாடுகள் அமைந்தனவே தவிர, நன்கு திட்டமிடப்பட்டு நிறுவனமயப்படுத்தப்பெற்றதும் மக்கள் மயப்படுத்தப்பெற்றதுமான சமூகப் பொறிமுறை தமிழ்ச்சூழலில் இதுவரை இல்லாமல் போய்விட்டது.  

மாறாக வெறுமனே உணர்ச்சியூட்டப்பெற்ற அல்லது உசுப்பேற்றப்பெற்ற பொருளாதார வலிமை குன்றிய சமூக அடித்தளமும் அப்பலவீனமான சமூக அடித்தளத்தின்மீது கட்டியெழுப்பப்பட்ட பதவி நாற்காலிகளை மட்டுமே இலக்காகக் கொண்டதொரு அரசியல் தத்துவார்த்த ரீதியாகப் பலவீனமான மேல்தட்டு வர்க்கத் தேர்தல் அரசியல் இயக்கமே தமிழ்ச் சமூகத்தை இதுவரை அரசியல் பொதுவெளியில் வழிநடத்தி வந்துள்ளது. இதைத்தான் ‘தமிழ்த் தேசிய அரசியல்’ என்று இன்றுவரை தமிழ் மக்கள் மயங்கி ஏமாந்து வந்துள்ளனர். 

அன்று சேர் பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் சேர் பொன் அருணாசலம் போன்றவர்களின் காலத்திலிருந்து இன்று இரா சம்பந்தன் மற்றும் சி. வி. விக்னேஸ்வரன் போன்றவர்களின் காலம் வரை இத்தகைய பலவீனமான அரசியல் போக்கே தமிழ்ச் சமூகத்தில் வேரூன்றியுள்ளது. தமிழ்ச் சமூகத்தின் இதுகால வரையிலான இழப்புக்களுக்கு இதுவே அடிப்படைக் காரணம். 

போரியலில் தற்காப்பும் ஓர் அம்சமாகும். அதுவும் ஒரு கலையாகும். தமிழ்த் தேசிய அரசியலில் ‘தற்காப்பு அரசியல்’  ஒருபோதும் இருந்ததில்லை. 

ஒர் உதாரணத்தை எடுத்துக் காட்டலாம் எனத் துணிகிறேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் காலஞ்சென்ற எம்.எச்.எம். அஷ்ரப்பின் அரசியலை எடுத்து நோக்குவோம். 

1989 ஆம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் ஊடாகத்தான் அவர் முதன்முறையாகப் பாராளுமன்ற உறுப்பினரானார். அக்காலப்பகுதியில் அவர் எதிர்க்கட்சியிலேயே இருந்தார். ஜனாதிபதியாகக் காலஞ்சென்ற ஆர். பிரேமதாச பதவி வகித்த ஆரம்ப காலம். 1978இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தேர்தல் மாவட்டமொன்றில் போட்டியிடும் அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவொன்று ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் தகுதியை அடைவதற்கான வெட்டுப்புள்ளி 12 %மாக இருந்தது. அப்படியாயின் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயுள்ள தேர்தல் மாவட்டங்கள் எதிலுமிருந்து  முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தக் கட்சியும் ஆசனமொன்றைப் பெற்றுக் கொள்வது அரிது. பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்கள் கையாண்ட மறைமுகமான நடவடிக்கையே இது.  அஸ்ரப் அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்த போதிலும் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா அவர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட நல்லுறவின் அடிப்படையில் அரசியல் காய்களை நகர்த்தி வெட்டுப்புள்ளியை 5 %மாக்கினார். அதற்கேற்ப பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது முஸ்லிம் சமூகத்திற்கு அவர் பெற்றுக் கொடுத்த மிகவும் பெறுமானமிக்க அரசியல் வரப்பிரசாதமாகும். முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை அதிகரிக்கச் செய்வதில் இந்நடவடிக்கை ஒரு மைல்கல்லாகும். இதனைச் சாதிப்பதற்கு அவர் எந்தக் கோஷமும் போடவில்லை. கொடியும் பிடிக்கவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்தவும் இல்லை. போர்க் கோலம் பூணவும் இல்லை. நீருக்கடியாலே நெருப்பைக் கொண்டு போவது போல் உகந்த அணுகுமுறையைக் கையாண்டிருந்தார். அதில் தவறேதும் இல்லை. ‘சிலு சிலு’ப்பு இல்லாமலேயே தானும் தனது கட்சியும் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லீம் சமூகத்துக்குப் ‘பலகாரம்’ ஒன்றைப் பெற்றுக் கொடுத்திருந்தார். 

தமிழரசுக்கட்சிக் காலத்திலிருந்து இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காலம் வரை வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து அதிக எண்ணிக்கையான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தெரிவு செய்து அனுப்புவதுதான் உரிமைப் போராட்ட அரசியலின் அடைவு ஆகச் சித்தரிக்கப்பட்டதே தவிர தமிழ்ச் சமூகத்தைச் சமூக பொருளாதார ரீதியில் வலுவூட்டல் புறக்கணிக்கப்பட்டது அல்லது முன்னுரிமை பெறவில்லை.  

உண்மையில் நன்கு திட்டமிட்ட வகையில் உரிமைப் போராட்ட அரசியலும் அபிவிருத்தி அரசியலும் கைகோர்த்துக்கொண்டு சமாந்தரமாகப் பயணித்திருக்க வேண்டும். தமிழர் அரசியலில் அது இன்றுவரை நிகழவேயில்லை. அப்படிப் பயணித்திருந்தால் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்புகள் பலவற்றைத் தவிர்த்திருக்கலாம். 

சமூக பொருளாதார ரீதியாக வலுவூட்டப்பெற்ற வலிமையான ஒரு சமூக அடித்தளத்திலும் மக்கள் நலன்சார்ந்த புரட்சிகரமான சிந்தனைத் தளத்திலும் கட்டமைக்கப்படும் தொடர்த்தேர்ச்சியான வெகுஜன எழுச்சி மூலமே சாத்தியப்படக் கூடிய அரசியல் இலக்கொன்றை (சமஸ்டி/தனி நாடு) வெறுமனே பாராளுமன்ற அரசியல் மூலம் அடைந்துவிட முடியும் எனத் தமிழ் மக்களை எண்ணவும் நம்பவும் வைத்துத் தமிழரசுக் கட்சியும், பின் தமிழர் விடுதலைக் கூட்டணியும், தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இப்போது புதிதாகப் புறப்பட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் (அகில இலங்கைத் தமிழர் காங்கிரஸ்), சி. வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் (மறு வடிவம் எடுத்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ்) தமிழர்களைத் தவறாக வழிநடத்தியதாலும்/ வழிநடத்தி வருவதாலும் தேர்தல் அரசியலுக்கு அப்பால் முற்போக்கான சிந்தனைத்தளமொன்று தமிழ்ச் சூழலில் சமூக அடிமட்டத்தில் உருவாகி வளர வழியேற்படவில்லை. 

எனவே, ‘சொல்லத் துணிந்தேன்’ என்ற மகுடத்தின் கீழ் நான் ‘அரங்கம்’ பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவரும் பத்தி எழுத்துக்களில் இதுவரையிலான தமிழ்த் தேசிய அரசியலைக் கூடுதலாக விமர்சிப்பதும் அதிலுள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டுவதும் தமிழ்த்தேசிய அரசியல் உகந்த தந்திரோபாயங்களுடன் முற்போக்குச் சிந்தனைத் தளத்தில் சரியான தடம் நோக்கித் திசை திரும்ப வேண்டுமென்ற நோக்கத்திலும் ஆதங்கத்தினாலுமே தவிர பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களை ஆதரிக்க வேண்டுமென்ற அர்த்தத்திலல்ல என்பதை வாசகர்கள் புரிந்துகொள்வார்களாக.