மகாகவி பாரதியும் கோவில் யானையும்

மகாகவி பாரதியும் கோவில் யானையும்

 — ஏ.பீர்முகம்மது —

மகாகவி பாரதியார் கோவில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மரணமானார் என்று ஒரு கற்பிதம் இன்று வரை பயிலப்பட்டு வருகின்றது.

கவிஞர் வாலிகூட 2011ல் இடம்பெற்ற ஒரு கவியரங்கத்தில்;

‘மோனைத் தமிழை முன்னிறுத்திப் பின்
ஆனைக்காலில்
அடிபட்டுச் செத்தவன்’
என்றுதான் பாரதியின் மரண சம்பவத்தை விவரித்தார்.

எல்லோரும் இன்றுவரை அப்படித்தான் விசுவாசம் கொண்டுள்ளோம். ஆனால், உண்மை அதுவல்ல. வயிற்றுக் கடுப்பு காரணமாகவே அவர் மரணமானார் என்ற தகவல் மெல்லத் தமிழுலகில் படரத் தொடங்கியுள்ளது.

பாரதியார் அடிக்கடி திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலுக்குச் சென்று, 40 வயதுடைய அர்ஜுனன் என்னும் யானைக்கு தீன்பண்டங்கள் வழங்கும் பயிற்சியுடையவர்.

சில நாட்கள் போகாதிருந்த பாரதி குறிப்பிட்ட தினத்தில் தேங்காய், வாழைப்பழம் என்பவற்றை எடுத்துக் கொண்டு கோவிலுக்குப் போகின்றார். யானைக்கு மதம் பிடித்துள்ள சந்தர்ப்பம் அது. கூடியிருந்தவர்களால் விடயம் கூறப்பட்டபோதும் அதனை மீறி யானையின் அருகில் போனபோது தாக்குதலுக்கு ஆளானார்.

பாரதியாருக்கு எப்போதும் துணையாயிருக்கும் குவளைக் கண்ணன் ஓடிச் சென்று பாரதியாரைத் தூக்கி வந்து அருகிலிருந்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கின்றார். சிகிச்சையின் பின்னர் அன்றைய தினமே வீடு வந்த பாரதியார்  சில நாட்கள் கழித்து தமது அன்றாடக் கடமைகளை ஆற்றத் தொடங்கினார்.

யானையின் தாக்குதல் பற்றிப் பாரதியார் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்..

“நான் யானையின் அருகில் செல்லும்போது யானை தலையைக் குனிந்து கொண்டிருந்தது. வந்தது நானென்று யானை அறியவில்லை. அதனால் தான் தாக்கத் துணிந்தது”, என்று குறிப்பிட்டுள்ளார்.

பாரதியாரின் இந்தப் பதிவுகூட அவர் உடல் நலம் தேறி இருந்ததாலே எழுத முடிந்தது என்பதை நிறுவுகின்றது.

பாரதியின் மரணத்துக்கான காரணத்தைத் தெளிவுபடுத்தும் இன்னுமொரு ஆவணம் சுதேசமித்திரனில் அவர் எழுதிய ‘கோவில் யானை’ என்ற நாடகமாகும். 08.01.1921 இல் அது பிரசுரமானது. கலைமகள் சஞ்சிகையில் 1951இல்   மறுபிரசுரமானது.

அந்த நாடகத்தில் அமரபுர நாட்டு அரசனின் மகன் வஜ்ரி என்பவன் கோயிலுக்கு சென்று யானை தரிசனம் பண்ணியபோது யானையின் தாக்குததுக்கு ஆளாகிறான். அவன் கூடவே சென்றிருந்த அங்கதேசத்து இளரசனும் நண்பனுமான சந்திரவர்மனால் வஜ்ரி காப்பாற்றப்படுகிறான்.

இந்தத் தகவல்களை மணிகண்டன் எழுதிய பாரதியாரின் இறுதிக் காலம் கோவில் யானை சொல்லும் கதை என்ற நூலில் காணப்படுகின்றது.

மேற்படி நாடகம் பாரதி மீதான கோவில் யானையின் தாக்குதலை கற்பனை கலந்த கோலத்தோடு வெளிக்கொண்டு வந்த படைப்பாகும் என்பதை எவரும் விளங்கிக் கொள்ளலாம்.

பாரதியார் மரணமடைந்த திகதிக்கு ஒன்பது மாதங்களின் முன்னர் இந்நாடகம் பிரசுரமாகியுள்ளது.

ஒரு வருட கால இடைவெளி என்பது மரணத்துக்கான காரணம் யானைத் தாக்குதல் அல்ல என்பதை எண்பிக்கின்றது.

பிறிதொரு காரணமும் உண்டு. மரணத்துக்குச் சில நாட்கள் முன்னர்வரை கடலூர், திருவண்ணாமலை போன்ற ஊர்களுக்குச் சென்று பாரதியார் உரையாற்றி வந்துள்ளார்.

ஈரோட்டில் கருங்கல் பாளையத்தில் மனிதனுக்கு மரணமில்லை என்பது தொடர்பில் உரையாற்றியுள்ளார். இதுவே அவர் உரையாற்றிய கடைசிக் கூட்டமாகும்.

மரணம் ஏற்படுத்துமளவு பாரதூரமாக யானையின் தாக்குதல் இருந்திருக்குமாயின் அடிக்கடி வெளியூர் சென்று உரையாற்றும் நிலைமை ஏற்பட்டிருக்காது.

எல்லாவற்றையும் விட முக்கிய ஆவணமாகக் கருதப்படுவது, அவரின் மகள் சகுந்தலா பாரதி எழுதிய என் தந்தை பாரதி என்ற நூலாகும். இந்நூலில் அவர் பின்வருமாறு கூறுகிறார்.

“திடீரென்று என் தந்தையார் வயிற்றுக் கடுப்பு நோயால் பீடிக்கப்பட்டார். ஏற்கனவே, மிகுந்த பலஹீனமடைந்த உடலானபடியால் வியாதியின் கடுமையைத் தாங்கமுடியவில்லை”

“ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தொன்றாம் ஆண்டு செப்டம்பர் மாதம், பதினொன்றாம் தேதி – சாயங்காலம், விளக்கேற்றும் நேரம், “அப்பாவுக்கு மருந்து நீ கொடுத்தால், ஒருவேளை கோபிக்காமல் சாப்பிடுவார்” என்று என் தாயார் என்னை மருந்து எடுத்துக் கொடுக்கும்படி சொன்னார். மங்கலான விளக்கு வெளிச்சம். நான் மருந்தென்று நினைத்து, பக்கத்தில் கிளாசில் வைத்திருந்த ‘பார்லி’ தண்ணீரை அவரிடம் கொடுத்தேன். மருந்து வேண்டாமென்றார். உடனே அவர் மனத்தில் என்ன தோன்றியதோ? என் கையிலுள்ள கிளாஸை வாங்கி ஒரு வாய் குடித்தார். “பாப்பா! நீ கொடுத்தது மருந்து இல்லையம்மா! கஞ்சி!” என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடிவிட்டார். எனக்கு மறுபடியும் அவரை ஹிம்சை பண்ணி மருந்து கொடுக்க மனமில்லை. அப்படியே வெளியில் கூடத்தில் வந்து படுத்திருந்தேன். தூங்கிவிட்டேன் போலும்!”.

மேலுள்ள சகுந்தலா பாரதியின் வாக்குமூலம் பாரதியின் இறுதி நாள் இரவை நினைவூட்டுகின்றது.

யானையின் தாக்குதலின் பின்னர் அவர் பலஹீனமானவராகக் காணப்பட்டாரே தவிர வயிற்றுக் கடுப்பு காரணமாக மருந்து பயன்படுத்தினார் என்றுதான் பாரதியாரின் இறுதி நாளை அவரின் மகள் விளக்கியுள்ளார்.

மேலுள்ள விடயங்களை கோவைப்படுத்தினால், பாரதியார் யானை மிதித்து  மரணிக்கவில்லை என்ற கூற்று வலிமை பெற்று விடுவதை நாம் விளங்கிக் கொள்ளலாம்

(பாரதியின்  138 வது சிரார்த்த தினம் என்பதை  முன்னிட்டு)