பிள்ளையான் வழக்கின் உண்மையான விபரம் என்ன?

பிள்ளையான் வழக்கின் உண்மையான விபரம் என்ன?

— மங்களேஸ்வரி சங்கர் (சட்டத்தரணி) —

பிள்ளையான் என்று அறியப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தொடர்பான மட்டக்களப்பு மேல் நீதிமன்ற வழக்கு 3057 /2017 பற்றி பலருக்கும் பல்வேறு விதமான ஐயப்பாடுகள் உள்ளன.   

இந்த வழக்கில் கடந்த 24.11.2020 அன்று வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 5 சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டபோது அவர்களை மேல்நீதிமன்று பிணை வழங்கியது என்றே பலரை ஊடகங்கள் நம்ப வைத்தன.  

சிலர் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது போன்றும், வேறுசிலர் புதிய அரசின் செல்வாக்கு எனவும், சிலர் நீதித்துறையின் செல்வாக்கு காரணமாக இருக்கலாம் எனும் தோரணையில் சமூக வலைத்தளங்களில் எழுத ஆரம்பித்தனர்.  

இதனால் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் சார்பான வழக்குகளை கையாளும் சட்டத்தரணிகள் சிலர் கூட என்னிடம் தொடர்பு கொண்டு இத்தீர்ப்பின் பிரதியைக் கோரியிருந்தனர். ஆகவே ஒரு சட்டத்தரணியாக இந்த வழக்கில் இடம்பெற்ற நீதிமன்ற நடைமுறைகள் பற்றிய சிறிய விளக்கத்தை வழங்கலாம் என விளைகிறேன். 

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், 3057/2017 எனும் வழக்கு தொடர்பான மேன்முறையீட்டு மீளாய்வு விண்ணப்பங்கள் இரண்டு. 13/2019, 14/2019 என்கின்ற இரு வழக்குகள் கொழும்பு மேன்முறையீட்டு நீதி மன்றத்தில், மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கின்ற குறித்த வழக்கு தொடர்பான ஒரு மீளாய்வுக்கான (Revision)  மனுத்தாக்கலாக செய்யப்பட்டிருந்தன. 

குறித்த வழக்கானது இலங்கை அரசியலமைப்பின், 138 வது உறுப்புரை மற்றும் 15 ஆம் இலக்க 1979 ஆண்டு குற்றவியல் நடவடிக்கை கோவை 364 பிரிவுகளின்படி தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்த மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவின் பிரகாரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் கொலை வழக்கு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரம், தொடர்பான உண்மை விளம்பல் (Voir dare inquiry) கட்டளையை புறத்தொதுக்குமாறு மீளாய்வு மனுவில் கோரப்பட்டிருந்தது. 

குறித்த வழக்கானது, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர், அச்சல வெங்கப்புலி மற்றும் நீதியரசர் தேவிகா அபேரத்தின ஆகியோர் முன்னிலையில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.  

குறித்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா மற்றும் ஏனைய சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தார்கள். 

அரச தரப்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி மாதவ தென்னக்கோன் ஆஜராகி இருந்தார். 

குறித்த வழக்கானது இருதரப்பு வாதப்பிரதிவாதங்களுக்காக 13/02/2020 ,19/02/2020, 27/02/2020, 02/03/2020, 26/08/2020, 27/08/2020, ஆகிய தினங்களில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

குறித்த வழக்கு தொடர்பான எழுத்து மூல சமர்ப்பணம், 19/10/2020 இல் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினாலான தீர்ப்பு 16/11/2020 இல் வழங்கப்பட்டது.  

மட்டக்களப்பு மேன்நீதிமன்றத்தில் பெறப்பட்ட பிரதிவாதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. (இது குறித்து ஊடகங்களில் பெரிதாக செய்திகள் எதுவும் வெளிவரவில்லை.) 

இனி குறித்த மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கில் விவாதிக்கப்பட்ட விடயங்களைப் பார்ப்போம். 

குறித்த கட்டளையின் பிரகாரம், 04/11/2015 இல் B13575 /2015 வழக்கில், இந்த வழக்கின் இரண்டு மனுதாரர்களும் மட்டக்களப்பு கௌரவ  நீதவான் முன்னிலையில் குற்றவியல் நடவடிக்கை கோவையில் பிரிவு 27 இன் பிரகாரம், வாக்குமூலம் ஒன்றினை வழங்கியிருந்தார்கள்.  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட விடயம் என்னவென்றால், குறித்த இந்த நீதவான் முன்னிலையில் வழங்கப்பட்ட இந்த வாக்குமூலம், சுயேச்சையாக தன்னிச்சையாக வழங்கப்பட்டதா என்பதே கேள்விக்குள்ளானது. 

இங்கு கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருந்தவர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைத்திருப்பவர் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்று வழங்கும்போது அது அவருக்கு எதிரான ஒரு சாட்சியமாக வேறு எந்தவித சாட்சியமும் இல்லாமலும் பயன்படுத்தப்படக்கூடும். ஆகவே அந்த வழங்கப்பட்ட சாட்சியம் ஆனது எந்தவிதமான பயமுறுத்தல், அச்சுறுத்தல் அல்லது ஏதாவது ஒரு வாக்குறுதியின் அடிப்படையில்  வழங்கப்பட்டு இருக்கக்கூடாது. அது தன்னிச்சையாக (Voluntary) வழங்கப்படல் வேண்டும்.  

ஆனால், ஐந்து வருடகாலமாக குறித்த சந்தேக நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருக்கின்ற இந்த வழக்கில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சாட்சியமாக நீதவான் முன்னிலையில் வழங்கப்பட்ட வாக்குமூலம் என்கின்ற விடயமானது சுயேச்சையாக  வழங்கப்பட்டதா  என்பதற்கான விவாதத்திற்கு மேன்முறையீட்டு மனுதாரர்களால் கீழ்வரும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. 

ஆகவே, குறித்த இரண்டு தனித்தனியான மேன்முறையீட்டு மனுக்களின் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில், குறித்த இருவர்களாலும் நீதவான் முன்னிலையில் வழங்கப்பட்ட வாக்குமூலமானது பின்வரும் காரணங்களால் புறத்தொதுக்கப்பட வேண்டும் அல்லது நிராகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மனுதாரர் முன் வைத்து இருந்தார்கள்.  

சுயாதீன அடிப்படையில் உண்மை விளம்பல் நடந்ததா? 

முதலாவது குறித்த உண்மை விளம்பல் விசாரணை கட்டளையானது சட்டத்துக்கு புறம்பானது அல்லது போதிய சாட்சியங்கள் இல்லாதது என்றும்,  குறித்த மனுதாரர்கள் நீதவான் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலையை இம்மேல் நீதிமன்று கருத்தில் கொள்வதற்கு தவறியுள்ளது என்றும்,  அதாவது மனுதாரர்கள் வழங்கிய வாக்கு மூலமானது சுயமாக வழங்கப்பட்ட குற்ற வாக்கு மூலமா என்பதை பார்ப்பதற்கு மன்று தவறியுள்ளது. 

மனுதாரர்கள் நீதவான் நீதிமன்ற நீதவானது சமாதான அறையின் வாயில் அருகில் அமர்த்தப்பட்டு இருந்தபோதும் அவர்கள் தொடர்ந்தும் வாக்குமூலம் வழங்குவதற்கு முன் சிஐடி யினருடைய கண்காணிப்பில் இருந்து அகலவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவில்லை. 

கௌரவ நீதவான் அவர்கள் மனுதாரர்களிடம் விளக்கம் கொடுக்கும் போது அவர்கள் கொடுக்கும் வாக்கு மூலமானது அவர்களுக்கு சாதகமாகவோ அல்லது எதிராகவோ பயன்படுத்தப்படலாம் என்று அறிவுறுத்தி இருந்தமையும், ஆனால், உண்மையில் வாக்குமூலம் ஒன்று வழங்கப்படும் போது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராகவே  பயன்படுத்தப்படும் என்பதையும் மன்று கவனத்திற்கொள்ளத் தவறியுள்ளது. 

சுயமான ஒப்புதல் வாக்குமூலங்களை வழங்குகிறார்களா என்பதற்குப் போதிய வினாக்களை கேட்பதற்கு கௌரவ நீதவான்மன்று தவறியுள்ளது.  ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னர் குறித்த மனுதாரர்கள் ஏதாவது தூண்டுதல் அல்லது வாக்குறுதியை அச்சுறுத்தல் ஊடாக இந்த வாக்குமூலங்களை வழங்குவதற்கு தூண்டப்பட்டு உள்ளார்களா என்பது பார்க்க இந்த மன்று தவறியுள்ளது.   

உண்மை விளம்பல் விசாரணையில் ஏற்கனவே உள்ள முத்தீர்ப்புக்களை பார்க்க விசாரணை மன்றம் தவறியுள்ளது. அரசியல் அமைப்பு மூலம் உத்தரவாதப்படுத்தபட்டுள்ள நியாயமான விசாரணை (Fair trial) என்பதை கருத்தில் கொண்டு இந்த விண்ணப்பம் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.   

இதில் நாம் பார்க்க வேண்டிய விடயம் என்னவென்றால்,  சட்ட ரீதியாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ்   தடுப்புக்காவலில் உள்ள ஒருவர், அவர் வழங்கும் நீதி விசாரணை முடியும் வரை பிணை வழங்கப்பட முடியாத சட்டச் சிக்கலை கொண்டிருந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கின்ற ஒருவர், அவரால் வழங்கப்படுகின்ற வாக்குமூலங்கள் என்பது எந்தவிதமான அச்சுறுத்தல் பயமுறுத்தல் அல்லது வாக்குறுதிகளாக வழங்கப்பட்டு இருக்க கூடாது. இதுவே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்ட நாள் சிறையில் இருக்கும் பலரும் நீதி விசாரணையின்போது கூடுதலாக அவர்களது வழக்குகள் தள்ளுபடி செய்வதற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கின்ற ஒரு விடயம் ஆகும்.  

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா அவர்களால் முன்வைக்கப்பட்ட வாதத்திலும்,  மற்றும் எழுத்து மூல சமர்ப்பணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நீதியரசர் முன்னிலையில் முன்வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மனுதாரர்கள் 04/10/2015 இல் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதும் கூட அவர்கள் சட்ட ஆலோசனையை பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.  

மேலும் முதலாவது மனுதாரர் தடுப்புக் காவலில் இருந்த காலத்தில் நெஞ்சுவலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் 31.10.2015 சிஐடிக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். அதுமட்டுமின்றி அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் தொடர்ச்சியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுடைய கொலை தொடர்பான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார்கள். 

மேலும் முதலாம் மனுதாரர் தடுப்பு காவலில் இருந்த காலப்பகுதியில், தொடர்ந்தும் நாலாம் மாடியில் இருக்கவேண்டும் என்றும் ஆனால் நீதவான் முன்னிலையில் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை வழங்குகின்ற பட்சத்தில் அவர்களை விரைவில் விடுதலை பெறுவார்கள் என்கின்ற ஒரு நம்பிக்கையும் மனுதார்களுக்கு சீஐடியினரால் ஊட்டப்பட்டிருக்கிறது.  

மட்டக்களப்பு நீதவான் முன் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக மனுதாரர்கள்,  04/11/2015 அன்று இரவு 01:30 மணிபோல் கொழும்பிலிருந்து புறப்பட்டு, மட்டக்களப்பை  சென்றடைந்து அதே நாளில் அவர்களால் இந்த வாக்குமூலம் வழங்கப்பட்டிருக்கிறது. குறித்த நீதவான் கூட அவர்களை சுயமாக சிந்தித்து வாக்குமூலம் வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கவில்லை. அதுமட்டுமல்ல நீதவானால் அறிவுறுத்தப்பட்ட உங்களது வாக்குமூலமானது சாதகமாகவோ, பாதகமாகவோ எதிராகவோ பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்ட விடயம் கூட கருத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமொன்றாகும். மேலே குறிப்பிடப்பட்ட விபரங்களின் அடிப்படையில் மனுதாரர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அதற்கமைவாகவே மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதனைத் தொடர்ந்தே மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டது.  

(இதன் தொடச்சியில் மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக கொண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட கட்டளை பற்றி பார்ப்போம்)