— அழகு குணசீலன் —
சர்வதேசத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்ற கொரோனா இலங்கையிலும் எண்ணற்ற சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. நாளாந்த வாழ்வை, இயல்பு வாழ்க்கையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் ஒரு பிரச்சினையாக இது மாறியிருக்கின்றது.
கொரோனா தொற்று ஏற்பட்ட காலம் முதல் இந்த விடயங்கள் பேசுபொருளாக உள்ளன. இதில் ஒரு முக்கிய விடயம் கொரோனா தொற்றால் உயிரிழந்த முஸ்லீம்களின் ஜனஸாக்கள் இஸ்லாம் மதநெறிமுறைகளுக்கு மாறாக எரிக்கப்படுவதாகவும்.
இறந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்வதற்கு வழிசெய்கின்ற வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இலங்கை உயிர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இருபது சமூக ஆர்வல அமைப்புக்கள் நீதித்துறையில் நம்பிக்கை இழந்து நிற்கின்றன. தமது கண்டனத்தை அவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மூன்று நீதிபதிகள், காரணம் எதுவும் குறிப்பிடாது இத்தீர்ப்பை வழங்கியுள்ளனர். சட்டம், நீதித்துறை என்று பார்க்கின்றபோது அது ஒரு நீதிமன்றத் தீர்ப்பாக மதிப்பளிக்கப்பட வேண்டிய ஒன்று. இருப்பினும் மதசுதந்திரம், அடிப்படை மனித உரிமை, மதம் சார்ந்த சடங்குகளையும், கடமைகளையும் நிறைவேற்றுவதற்கான அரசியல் அமைப்பில் அத்தியாயம் இரண்டிலும், மூன்றிலும் கூறப்பட்டுள்ள விடயங்கள் உதாசினம் செய்யப்பட்டுள்ளதாகவே கொள்ள வேண்டி உள்ளது. சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த நீதியரசர்கள் இவ் வழக்கை விசாரணை செய்திருந்தால் மனிதாபிமான, மனித உரிமைவிடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்க வாய்ப்புண்டு என்று கூறுவோரும் உண்டு. தீர்ப்புக்கான காரணங்கள் கூறப்படாதால் இது குறித்த சந்தேகங்களும், கேள்விகளும் அதிகரித்துள்ளன.?
இது விடயமாக கருத்து வெளியிட்டுள்ள ஜனாப் அலிஸாகிர் மௌலானா, இது ஒரு கறுப்பு அரசியல் என்று விமர்சிக்கின்றார். ஜனாஸாக்களை அடக்கம் செய்வது பொதுச்சுகாதாரத்திற்கு கேடாக அமையும் என்பது நிரூபிக்கப்பட்டால், அல்லது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டால் முஸ்லீம் சமூகம் அதை ஏற்க தயாராக உள்ளது. ஆனால் இந்தக் கேள்விக்குப் பின்னால் உள்ள விஞ்ஞானம் கறுப்பு அரசியல் நிகழ்ச்சி நிரல் என்று கூறுகின்றார் மௌலானா.
உண்மையில் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதை இஸ்லாமிய மதம் மட்டும் நிராகரித்து நிற்கவில்லை. கிறிஸ்தவம், யூதமதம், ஓர்தடொக்ஸ் மதப்பிரிவு மற்றும் சைவம் சார்ந்த வழக்கிலும் நெறிமுறையிலும் அடக்கம் செய்யப்படும் முறை உள்ளது.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்து பார்ப்பண ஆகம மரபில் பூதவுடல்களை எரித்து கங்கையில் அஸ்தியை கரைத்து விடுகின்ற நெறிமுறை உள்ளபோதும் கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு தேசத்தில் நல்லடக்கம் செய்யப்படும் உடலங்களுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைந்த அளவே எரிக்கப்படுகின்றன. ஆகவே இந்த கட்டாய எரிப்பு முஸ்லீம்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு விவகாரம் அல்ல.
மார்கழி மாத ஆரம்பப் புள்ளி விவரங்களின்படி இலங்கையில் 25,760 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 19,000 பேருக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். 125 க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளார். இவர்களில் அரைவாசிப்பேர் தனியாக முஸ்லீம்கள் என்பது கவனிக்கத்தக்கது.
அவர்களின் சன அடர்த்தி கூடிய சமூக வாழ்வியலும், சுற்றாடலும் இதற்கு காரணமாக அமையலாம்.
அதேநேரம் அரசாங்கத்திற்கும் மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவேண்டிய கடைப்பாடும் இருக்கின்றது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக மதநெறி முறைகளுக்கு முற்றிலும் முரணாக இறுதிக்கிரியைகள் இடம்பெறுவதே எரியும் நெருப்பாக உள்ளது.
இஸ்லாமிய ஜனாஸா நல்லடக்கம்
இஸ்லாமிய வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து புனித குரான் 114 அத்தியாயங்களில் தெளிவாகவும், விளக்கமாகவும் கூறுகின்றது.
அத்தியாயம் 32.11 இன்படி மரணத்தின் பின் ஜனாஸா முழுமையாக வெள்ளை துணியினால் சுற்றப்பட்டு மெக்காதிசை நோக்கி அடக்கம் செய்யப்படவேண்டும்.
இதற்கு முன்னர் ஜனாஸா கழுவித் துப்பரவு செய்யவேண்டும். முழுவயதை அடைந்த ஒரு பெண் அல்லது ஆண் இதனைச் செய்வர். இதையார் செய்வது என்பதும் முன்னுரிமையின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது மரணத்திற்கு முன்னர், மரணமடைந்தவரால் விரும்பி தெரிவு செய்யப்பட்டவர், பெற்றோர், பாட்டன்/பாட்டி, தம்பதியர் இப்படி அப்பட்டியல் ஒழுங்கு அமையும். ஆணுக்கு ஆணும், பெண்ணுக்குப் பெண்ணும் செய்வது வழக்கம்.
ஜனாஸா வெள்ளைத் துணியினால் சுற்றப்படுவதற்கு பருத்தித் துணியே பயன்படுத்தப்படும். ஆண் ஜனாஸா மூன்று துணியினாலும், பெண் ஜனாஸா ஐந்து துணிகளாலும், பிள்ளைகளின் ஜனாஸா ஒரு துணியினாலும் முழுமையாக சுற்றப்பட வேண்டும்.
ஜனாஸா அடக்கம் இறந்து ஒரு நாளில் – 24 மணித்தியாலங்களில் செய்யப்பட வேண்டும். மரணம் பிற்பகலில் அல்லது இரவில் ஏற்பட்டால் மறு நாள் அடக்கம் செய்யப்பட முடியும்.
இஸ்லாமிய நெறிமுறையின் சில தேர்ந்தெடுத்த விடயங்களை இங்கு குறிப்பிடுவதற்கான காரணம் வாசகர்கள் ஜனாஸா அடக்கத்தின் முக்கிய நெறிமுறைகளை அறிந்து கொள்வதன் மூலம்தான் இது விடயமாக மூஸ்லீம்கள் மீதான இன, மதவாத புறக்கணிப்பையும், மத உரிமை மறுப்பையும், இதனால் ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள உளரீதியான புண்படுத்தலையும் ஒரளவிற்கேனும் புரிந்து கொள்ள முடியும்.
எல்லா மதங்களிலும் இவ்வாறான நெறிமுறைகள் உள்ளன. ஒரு தனிமனிதன் அல்லது அவன் சார்ந்த சமூகம் நாளாந்த மத வாழ்வில் அவற்றை எந்தளவிற்குப் பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அதனால் ஏற்படும் தாக்கத்தை மதிப்பீடு செய்ய முடியும்.
கொரோனா மரணத்தின் பின் ஒரு ஜனாஸா இந்த நெறிமுறைகளின் படி கௌரவத்துடன் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே முஸ்லீம் சமூகத்தின் தார்மீக கோரிக்கையாகும். அடக்கம் அல்லது எரிப்பதற்கு முன்னர் செய்யப்பட வேண்டிய பல வரிசைப்படியான நெறிமுறைகள் உள்ளன. இவை எந்தளவிற்கு கடைப்பிடிக்கப்படுகின்றன என்ற கேள்வி இங்கு எழுந்து தவிர்க்க முடியாததாக உள்ளது.
எரித்தலுக்கான அரசின் கற்பிதங்கள்
1. கொரோனா தொற்றினால் இறந்த ஒருவரின் ஜனாஸாவில் இருந்து வைரசு மேலும் பரவுவதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
2. ஜனாஸா அடக்கம் செய்யப்படும்போது நிலக்கீழ் நீர் மாசடையும் என்பது இன்னொரு வாதமாகும்.
3. கொரொனா மரணச் சடங்கில் கைக்கொள்ளப்படும் நெறிமுறைகள் எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தக்கூடுமாம். கூடும் மக்கள் தொகை மற்றும் சமூக இடைவெளியைக் பேணுவதில் ஏற்படக்கூடிய கஷ்டங்கள்.
இந்த அரசாங்கக் கற்பிதங்கள் தொடர்பாக துறைசார் சர்வதேச அமைப்புக்களின் நிலைப்பாடு என்ன?
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்
உலக சுகாதார நிறுவன்ம்
தொற்றுநோய் முகவர் நிலையம்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அகமட் அல் தாவூடி, எராகன் பினேகான் இருவரும் மேற்கொண்டுள்ள ஆய்வில் கீழ்வரும் விடயங்களைப் பதிவு செய்கின்றனர்.
மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரையும், இறப்பின் பின்னரும் ஒவ்வொரு மதங்களிலும் நம்பிக்கையுடன் கூடிய பல வேறுபட்ட நெறிமுறைகள் உண்டு. இங்கு மிகவும் முக்கியமானது இறந்தவர் தனது வாழ்நாள் முழுவதும் பயணித்து மத நெறிமுறைகளுக்கு மதிப்பளித்து அவரையும், உறவினர்களையும் கௌரவப்படுத்துவதாகும்
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கடந்த 150 ஆண்டுகளாக, 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் யுத்தங்களில் போதும், இயற்கை மற்றும் சமூகரீதியான பாதிப்புக்களின்போதும் மனிதாபிமான செயற்பாடுகளை மேற்கொண்ட. அனுபவத்தினைக் கொண்டது.
உலக சுகாதார நிறுவனத்தின் இடைக்கால அறிக்கை கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை எரிக்கவோ அல்லது அடக்கம் செய்யவோ முடியும் என்றும், இதனால் நிலக்கீழ் நீருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூறுகின்றது.
தொற்றுநோய் முகவர் நிலைய ஆய்வுகளின்படி, இறந்த ஒருவரின் ஜனாஸாவில் இருந்து கொரோனா தொற்றுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தெரிய வருகின்றது.
மற்றும் நிலக்கீழ் நீர் மாசடைவதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை இல்லை என்றும், கொரோனா நீர், உணவில் இருந்து தொற்றுவதில்லை எனவும், அடிப்படையில் மூக்கு சுவாசத்தின் மூலம் தொற்றும் நோய் என்றும் வாதிடுகின்றது.
தொற்று நோய் முகவர் நிலையம் குறிப்பிடும் இன்னொரு விடயம் இலங்கையை விடவும் கொரோனா இறப்புக்கள் கூடிய நாடுகள் தொடர்ந்தும் அடக்கம் செய்யும் நடைமுறையை பின்பற்றுவதாகக் கூறுகின்றது.
மாலத்தீவு இலங்கையை விடவும் சிறிய நாடு. நிலக்கீழ் நீர்ப்பிரச்சினையை எதிர்கொள்ளுகின்றது, அதன் கடல் மட்டம் தாழ்வானது, அப்படியிருந்தும் அங்கு கொரோனா இறப்புக்கள் அடக்கம் செய்யப்படுகின்றன.
மதங்களும் அரசியல் அமைப்பும்..
இலங்கையின் அரசியல் அமைப்பு பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிப்பதுடன், பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பது அரசின் கடமை என்றும் அத்தியாயம் இரண்டில் கூறுகின்றது.
அத்தியாயம் மூன்று பிரிவு 12.1 : சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டம் அனைவருக்கும் சமத்துவமான பாதுகாப்பை வழங்கும் என்று குறிப்பிடுகிறது.
12.2: எந்த ஒரு பிரஜையும் இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல் கருத்து, பிறந்த இடம் மற்றும் ஏனைய காரணங்களுக்காக பாகுபாடுகாட்டப்படமாட்டாது என்று அரசியல் அமைப்பு சொல்கிறது.
14:1. f: தனியாகவும், கூட்டாகவும் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கும், சொந்த கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும், சொந்த மொழியைப் பயன்படுத்துவதற்கும் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமை உண்டு.
இங்கு நீதிமன்றத்தீர்ப்பு உட்பட அரசாங்கத் தரப்பினால் மேற்கொள்ளப்படுகின்ற அணுகுமுறைக்கும், அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மதம் சார்ந்த அடிப்படை உரிமைகளுக்கும் இடையே ஒரு பெரும் இடைவெளி காணப்படுகின்றது. இந்த இடைவெளியை குறைப்பதே இன்றுள்ள தேவையாகும்.
அரசாங்க நிறுவனக்கட்டமைப்புக்கும், சம்பந்தப்பட்ட முஸ்லீம் சமூகத்திற்கும் இடையிலான ஒரு சமநிலை அணுகுமுறை தேவைப்படுகிறது.
சர்வதேச மட்டத்தில் பல்வேறு இணக்க செயற்பாடுகள் மூலம் இது சாத்தியமாகி உள்ளது. அடக்கம் செய்யப்படுவதை அங்கிகரித்து, அதேவேளை வைரசு தொற்று மேலும் விரிவடையாமல் இருப்பதற்கு நிபந்தனைகளின் அடிப்படையில் இணக்கப்பாடுகள் அடையப்பட்டுள்ளன.
இது எட்டப்படாத நிலையில் அரசியல் அமைப்பில் ஒருகரத்தால் வழங்கி மறுகரத்தால் நீதிமன்றத்தால் உரிமைகளைப் பறிக்கின்ற ஒரு நீதித்துறை முரண்பாட்டை இது வெளிக்காட்டுகின்றதா?
அல்லது
கறுப்பு அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்று இதற்குப் பின்னணியில் இயங்குகின்றதா?
காலமே பதில் சொல்லவேண்டும்.
முஸ்லீம் அரசியல்வாதிகள் கைகள் கட்டப்பட்டும் வாய்கள் மூடப்பட்டும் இந்த பிரச்சினையை அணுகுவது உயிர்த்த ஞாயிறு தந்த பாடமா? எந்தப் பாடமாக இருப்பினும் இவர்கள் மக்கள் பக்கம் இல்லை என்பது நிச்சயம்.