யாழ். ஆரியச் சக்கரவர்த்தி காலத்தில் இலங்கைக்கு வந்த முஸ்லிம் பயணி

யாழ். ஆரியச் சக்கரவர்த்தி காலத்தில் இலங்கைக்கு வந்த முஸ்லிம் பயணி

— சீவகன் பூபாலரட்ணம் — 

இப்னு பதூதா என்பவர் ஒரு பிரபல நாடுகாண் பயணி. மொரோக்கா நாட்டைச் சேர்ந்த இவர் மக்காவுக்கான தனது பயணம் ஒன்றை அடுத்து ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பல நாடுகளுக்கும் சென்று அங்குள்ள புதினங்களை பதிவு செய்தவர்.  

இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள், சீனா போன்றவை இவர் பயணித்த நாடுகளில் முக்கியமானவை. இலங்கையைப் பொறுத்தவரை அவரது பயணம் அங்கு எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்றுதான். இந்தியாவில் இருந்து மாலத்தீவுகளுக்கு பயணித்த அவர், பின்னர் சீனாவுக்கு பயணித்த போது படகு வழி தவறியதாலேயே இலங்கையில் கரைசேர நேர்ந்தது. 

இப்னு பதூதா பயணித்த பாதைகள்

ஆனால், அவர் இலங்கை பற்றி எழுதிய குறிப்புகள் மிகவும் சுவாரசியமானவை, வரலாற்று ஆய்வுகளுக்கு உதவுபவை. 1344 ஆம் ஆண்டில் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கிடையில் இலங்கையில் பயணித்த அவர், “இலங்கை ஒரு செல்வம் மிக்க நாடு” என்று கூறியுள்ளார்.  

அந்தக் காலத்திலேயே இலங்கை இந்து சமுத்திரத்தில் சர்வதேச வர்த்தகத்துக்கான ஒரு மையமாக திகழ்ந்துள்ளதாகவும், வெளிநாட்டு வணிகர்கள் மற்றும் பயணிகள் இலங்கை மக்களால் இரு கரம் நீட்டி வரவேற்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பல இனங்களும், பல மதங்களைச் சேர்ந்தவர்களும் மிகவும் நல்லுறவுடன் இலங்கையில் அந்தக் காலத்தில் வாழ்ந்ததாகவும் இப்னு பதூதா குறிப்பிட்டுள்ளார். 

Chasing Tall Tales and Mystiques: Ibn Battuta in Sri Lanka (Sail Fish 2020) என்ற நூலில் சமூகவியலாளரான அமீனா குசைன், இப்னு பதூதாவின் இலங்கைக்கான விஜயம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். ஊடகவியலாளர் பி.கே. பாலச்சந்திரன் அவை குறித்து ஒரு சுருக்கமான அறிக்கையை எழுதியுள்ளார். அவற்றை இங்கே காணலாம். 

அமீனா குசைனின் பார்வையில் இப்னு பதூதா ஒரு இஸ்லாமிய தூய்மைவாதியாக இருந்திருக்கின்றபோதிலும், புனிதர்களையும், கல்லறைகளையும் வணங்கும் சூஃபி இஸ்லாத்தின் அம்சங்களையும் ஏற்றுக்கொள்பவராகவே இருந்திருக்கிறார். அந்தக் காலத்தில் இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் இந்த வகையிலான இஸ்லாமே மேலோங்கி இருந்திருக்கிறது. இன்றும் அந்த நிலைமை தொடருகின்றது. தேவாந்துறையில் இருந்த இந்து வழிபாட்டிடத்துக்கும் அவர் சென்றிருக்கிறார். 

தென்னிந்தியாவின் மலபார், பின்னர் வங்காளம், மாலத்தீவுகள் ஆகியவற்றுக்கு சென்ற அவர், சீனாவுக்கு பயணித்த வேளையில் கடும் காற்று காரணமாக இலங்கையின் கரையொதுங்க நேரிட்டுள்ளது. 

புத்தளத்திலேயே அவர் கரை சேர்ந்துள்ளார். அப்போது அது யாழ்ப்பாண இராஜ்ஜியத்தின் கீழ் இருந்துள்ளது. யாழ்ப்பாண ஆரியச்சக்கரவர்த்தியின் ஆட்சியில் அது இருந்துள்ளது. அவரை இப்னு பதூதா “சுல்தான் அய்ரி சக்ரவர்த்தி” என்று குறிப்பிடுகிறார். “மார்த்தாண்ட சிங்கை ஆரியன்” என்ற “பரராசசேகரனே” இப்னு பதூதா சந்தித்த ஆரியச் சக்கரவர்த்தி ஆவார். மலபார் மன்னரின் பெயரைச் சொன்னதால் கவரப்பட்ட ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதிநிதிகள் பதூதாவை வரவேற்றுள்ளனர். யாழ்ப்பாண மன்னரின் நண்பராம் மலபார் அரசர். ஆகவே அவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மன்னர் கோழிக்கோட்டின் மன்னரான சமூத்திரியாக இருந்திருக்க வேண்டும்.  

தமது ஆட்சிக்கு வெளியே உள்ள ஊர்களின் என்ன நடக்கிறது என்பதை அறியும் ஆர்வமும், குறிப்பாக தமது போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறியும் ஆர்வமும் இலங்கை மன்னர்களை வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்கச் செய்துள்ளது என்று அமீனா  குசைன் கருதுகிறார். 

அந்த நாட்களில் யாராவது வெளிநாட்டில் இருந்து விருந்தாளிகள் வந்தால், அப்போதைய மன்னர்கள் பரிசுகளை கொடுத்து வாங்கி பரிமாறிக்கொள்வார்களாம். பெரும்விலை கொண்ட முத்துகள், நீலக்கற்கள், அவ்வளவு ஏன் அடிமைப் பெண்களும் இந்த மாதிரி கைமாறப்படுமாம். வெளிநாட்டவர் என்ற காரணத்தினாலும், துணிச்சலாலும், நல்ல செல்வந்தர் என்பதாலும் பதூதா பரிசுகளை கேட்கத் தயங்குவதில்லையாம். டில்லியில் இருக்கும் போது தான் கடனில் அடிபட்டுப் போயிருந்ததால், தனது கணக்கை தீர்க்குமாறு அந்த ஊரின் சுல்தானிடம் 6 மாதமாக பதூதா போராடியுள்ளார்.  

இப்னு பதூதா போன்ற பிரபலமான பயணிகள் ஓர் இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்துக்கு பயணிக்கும் போது வண்டில்களின் தொடரணியுடன் செல்வார்களாம். உணவுப்பொருட்கள், முகாம் அமைப்போர், பல மனைவிமார், அடிமைப் பெண்கள் என பெரும் கூட்டமே அவர்களுடன் பயணிக்கும். 11 தடவைகள் திருமணம் செய்த பதூதாவுக்கு பராமரிக்க பல காமக்கிழத்திகளும் இருந்திருக்கிறார்கள். 

நல்ல உணவுப்பிரியர் என்பதால், இப்னு பதூதா தனக்கு பரிமாறப்படும் உணவைக் கொண்டே தனக்கு வழங்கப்படும் வரவேற்பை மட்டிடுவாராம். உணவு சரியில்லை என்றால் அவர் குறை சொல்லத் தயங்கமாட்டாராம். பூச்சி, புளுக்கள் ஈசல் உட்பட அனைத்து வகையான உணவையும் அவர் சுவைத்துப் பார்ப்பாராம். ஆனால், ஹலால் உணவு தேவைப்படுவதால், அவர் இறைச்சியை தவிர்ப்பாராம். அதனால், பயணங்களின் போது அவர் பெரும்பாலும் காய்கறியையே உண்டிருக்கிறார். உள்ளூர் மக்களின் உணவுப் பழக்கங்கள் குறித்தும் அவர் குறிப்புகளை எழுதியுள்ளார். சிவனொளிபாத மலைக்கான பயணத்தின் போது இவருக்கு வழிகாட்டியாக ஆரியச் சக்கரவர்த்தியால் அனுப்பப்பட்ட பிராமணர்களும், யோகிகளும் புலால் உண்ண மாட்டார்கள் என்கிறார் அவர்.  

உள்ளூர் சிங்களவர்கள் முஸ்லிமான இவரை தம்மோடு தமது இருப்பிடத்திலேயே தங்க அனுமதித்தாலும், இந்துக்கள் இவர்களுக்கு பிரத்தியேகமான இருப்பிடத்தையும் சமையலறையையுமே ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனால், இப்னு பதூதா பெரும்பாலும் முஸ்லிம்களுடன் தங்கவே விரும்பியுள்ளார். முஸ்லிம்களுடன் தங்கும் போது தமது வீட்டில் இருப்பது போன்ற உணர்வு அவருக்கு. குறிப்பாக முஸ்லிம் வீட்டுப் பெண்கள் பர்தா அணிவது அவருக்கு பிடித்திருந்திருக்கிறது. அதிர்ஸ்டவசமாக இலங்கையில் அவர் சென்ற இடங்களில் எல்லாம் முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள். முஸ்லிம் தூய்மைவாதியான அவர், மாலத்தீவுகளில் பெண்கள் தமது உடலின் மேல் பாகத்தை மூடச் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார்.  

புத்தளம் மற்றும் மன்னார் 

புத்தளத்திலும் மன்னாரிலும் பல இடங்களில் படகுகள் மற்றும் கப்பல் கட்டும் இடங்கள் இருந்திருக்கின்றன. அந்தக் காலத்தில் இலங்கை இந்தத் தொழிலுக்கு பேர்போனதாக இருந்திருக்கிறது. இலங்கையர்கள் கடற்பயணிகள் அல்லது மாலுமிகளாக பண்டைய காலத்தில் இருந்ததில்லை, வெளிநாட்டவரே மாலுமிகளாக இருந்திருக்கிறார்கள் என்ற நவீன கருதுகோளை இது நிராகரிப்பதாக அமீன குசைன் கூறுகிறார்.  

இலங்கையில் கப்பல்களை பிரியாமல் தைக்கும் தொழில் நுட்பம் ஒன்று காணப்பட்டதாக பதூதா கூறுகிறார். இதனால், அவர்களுக்கு பல வெளிநாட்டு வேலைகளும் கிடைத்தன. மன்னாரில் “முத்துக்குளித்தல்” நடந்ததாக அவர் கூறுகிறார். முத்துக்குளிப்பதற்காக நீண்ட நேரம் நீரில் மூழ்கியிருக்க உதவும் முகமூடி ஒன்றை அங்குள்ள முத்துக்குளிப்போர் பயன்படுத்தியுள்ளனர். சுமார் 2 மணித்தியாலங்கள் இதன் மூலம் இவர்கள் நீரில் மூச்சடக்கி சுழியோட முடிந்ததாக அவர் கூறுகிறார். இது ஆச்சரியமான விடயம். 

இலங்கையில் முத்துக்குளிப்பின் முக்கியத்துவம் குறித்து என். சரவணனும் இப்னு பதூதா பற்றிய தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 

‘நீர் சென்று வந்த நாடுகளில்எங்கேனும் முத்துக்குளிப்பைப் பார்த்திருக்கிறீராஎன்று மன்னன் கேட்டான். ஆம். இபின் அஸ்லாமலிக்குச் சொந்தமான கொயிட்தீவில். முத்துக்குளிப்பு நடைபெறுவதைக் கண்டிருக்கிறேன் என்றேன் நான். மன்னன் தன் கையிலிருந்த முத்துக்களைக் காண்பித்து. 

அத்தீவில் இத்தகைய முத்துக்களுக்கு ஈடிணையாக யாதாயினும் முத்துக்கள் கண்டிருக்கிறீராஎன்று கேட்டான். இப்படியான சிறந்த முத்துக்கள் ஒன்றைத் தானும் நான் பார்க்கவில்லை என்றேன். எனது பதிலால் மகிழ்ச்சியடைந்த மன்னன். இவை உம்முடையதே என்றான். அத்துடன் நீ விரும்பும் எதனையும் என்னிடம் கேட்கலாம். நாணமுற வேண்டாம் என்றும் மன்னன் கூறினான்.’ என்று இப்னு பதூதா தனது குறிப்புகளில் தெரிவித்துள்ளதாக சரவணன் தனது கட்டுரையில் எழுதியுள்ளார். 

சிவனொளிபாதம் 

இலங்கைக்கு சென்ற போது சிவனொளிபாத மலைக்கு வியஜம் செய்ய வேண்டு என்பது இப்னு பதூதாவின் விருப்பம். அங்கிருந்த காலடி அடையாளத்தை முதல் மனிதனின்(ஆதாம்) காலடி என்று பயணிகள் நம்பினர். இந்துக்கள் மற்றும் பௌத்தர்களுக்கும் இது புனித இடம். ஆதாம் இஸ்லாமியர்களின் முதலாவது இறைதூதர் என்பதால் அங்கு செல்ல இப்னுவும் விரும்பினார்.  

சிவனொளிபாதம் செல்ல விரும்புகிறீர்களா என்று ஆரியச் சக்கரவர்த்தி கேட்டபோது எவ்வித தயக்கமும் இன்றி, “ஆம்” என்று பதிலளித்தார் இப்னு பதூதா. உடனடியாகவே  ஒரு வழிகாட்டிகள் குழுவை மன்னர் ஏற்பாடு செய்தார். அவர்களில் அங்கு பாதுகாப்பான வழியில் அழைத்துச் செல்லக்கூடிய பிராமணர்கள், துறவிகள் என பலரும் இருந்தனர்.  

இன்று ஏதோ பௌத்தர்களின் புனித வழிப்பாட்டிடமாக சிவனொளிபாத மலை கருத்தப்பட்டாலும், அந்த நாட்களில் அது அனைத்து மக்களுக்கும், மதத்தினருக்குமான வழிபாட்டிடமாக திகழ்ந்தது. இன்று இலங்கையில் வகாபிஸத்தின் பிடி அதிகரித்து வருவதால் இலங்கை முஸ்லிம்கள் சிவனொளிபாதத்தை தமது புனித பயணத்துக்கான இடமாக கருதுவது குறைந்து வருவதாக அமீனா குசைன் கூறுகிறார். முன்னர் முஸ்லிம்களால் இந்த இடம் “பாபா ஆதம் மலை” என்று அழைக்கப்பட்டது. 

இந்த நூலில், பல மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒருமித்து வழிபடும் இடங்கள் பல இலங்கையில்  இருந்ததாகவும் அந்த நுலின் ஆசிரியர் அமீனா குசைன் கூறுகிறார். குருநாகலில் “குரைசன் சாயிட் இஸ்மாயில் காலே பண்டார ஒலியுல்லா” அவர்களின் சமாதி அனைத்து மதங்களை சேர்ந்த மக்களும் ஒன்றாக வழிபடுமிடமாக இருந்துள்ளது. இன்றும் அது தொடருகின்றது. அந்த முஸ்லிம் புனிதரின் வழிபாட்டிடத்தில் சிங்கள பௌத்த  பெண்கள் தேங்காயை உடைத்து வழிபட்டதை தான் பார்த்ததாக அமீனா குசைன் குறிப்பிட்டுள்ளார். மன்னர் புவனேகபாகுவின்(1272-1284) மகனான இந்த புனிதர் இளவரசர் வதிமி(ஃபதிமியாக இருக்கலாம்) என்பவராவார். புவனேகபாகுவின் முஸ்லிம் மனைவிக்கு பிறந்த மகன் இவர். அந்த இளவரசர் மன்னராக முடிசூட்டப்பட்டபோது பௌத்த பிக்குமார் அதனை எதிர்த்துள்ளனர். அவரை மலை மீது இருந்து அவர்கள் தள்ளிவிட்டுக் கொன்றதாகக் கூறப்படுகின்றது. அவர் வீழ்ந்த இடத்தில் அவருக்கு வழிபாட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் புனிதராக அவர் முஸ்லிம்களாலும் பௌத்த சிறு தெய்வமாக சிங்களவர்களாலும் அவர் வணங்கப்படுகிறார். 

பல மதத்தினரும் வழிபடும் இன்னுமொரு வழிபாட்டிடம் அப்துல் காதிர் ஜய்லானி உடையதாகும். சிவனொளிபாத மலைக்கான பயணம் ஒன்றின் போது இவர் இறந்ததாகக் கூறப்படுகின்றது. கலம்பு என்று இப்னு பதூதா கூறும் கொழும்பின் அப்போதைய ஆட்சியாளர் ஒரு முஸ்லிமாகும். அவரது பெயர் ஜலஸ்தி. அந்த ஜலஸ்தி என்பவர் கோயா ஜான் அல்லது கோஜா ஜகான் ஆக இருந்திருக்க வேண்டும் என்று அமீன குசைன் நம்புகிறார். அவர் ஒரு மலே நாட்டின் முன்னாள் கடற்கொள்ளைக்காரர். அவரது வசம் இருந்த அபிசீனிய நாட்டுப் படை மிகவும் பலம் வாய்ந்ததாகும். (அபிசீனியா என்பது தற்போதைய எத்தியோப்பியாவாக இருந்திருக்க வேண்டும்.)  

ஒரு கடற்துறைமுகமாகவும், வணிக நகராகவும் இருந்ததால் கொழும்பில் அந்த நாட்களில் சிங்களவர்களுக்குப் பதிலாக ஏனைய இனத்தவர்களும் வெளிநாட்டவர்களும் அதிகமாக காணப்பட்டனர். 1505 இல் முதலில் போர்த்துக்கேயர் வந்தபோது அங்கு மசூதி ஒன்றையே முதலில் கண்டுள்ளனர். ஆகவே இலங்கை ஒரு முஸ்லிம் நாடு என்றுதான் அவர்கள் நினைத்திருக்கிறார்கள். கொழும்பில் இருந்த தேவத்தககா மசூதியும் பல மதத்தினரும் வழிபடும் இடமாகவே இருந்திருக்கிறது. அடுத்ததாக அங்குள்ள டீன் நூர் நாச்சியா வழிபாட்டிடத்திலும் அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்துள்ளனர். காமம் நிறைந்த போர்த்துக்கேய நபர் ஒருவரால் தாக்குதலுக்குள்ளாவதில் இருந்து தப்பித்த ஒரு இஸ்லாமிய புனிதவதியின் சமாதியாக அது கருதப்படுகிறது. அதனால், தமிழரும், சிங்களவரும் கூட அங்கு வந்து வணங்குகிறார்களாம். குழந்தையில்லாத தாய்மார் அங்கு வந்து வழிபடுகிறார்களாம். 

முகமது பின் துக்ளக் 

இப்னு பதுதாவின் இந்த பயணத்தின்போது இந்தியாவில் அவர் சந்தித்த முக்கியமான மன்னர் முகமது பின் துக்ளக். அவரை ஒரு விசித்திரமான மனிதராக இப்னு வர்ணித்துள்ளார். உண்மையில் துக்ளக்குடன் பயந்து பயந்துதான் இப்னு பழகியிருக்கிறார். அவருக்கு சில காலம் நீதிபதியாகவும் இவர் கடமையாற்றியிருக்கிறார். ஆனால், அந்த உறவு நீடிக்கவில்லை. இறுதில் அங்கிருந்து கிட்டத்தட்ட தப்பி வந்தது போலவே அவர் சீனாவுக்கு புறப்பட்டுள்ளார். 

உண்மையில் இப்னு பதூதா அவர்கள் குறிப்பிடுகின்ற விடயங்களை வைத்துப் பார்க்கின்ற போது யாழ்ப்பாணத்தை சிங்கை ஆரியன் ஆண்ட காலத்தில், அவரது ஆட்சியில் இருந்த புத்தளம் மற்றும் மன்னார் போன்ற இடங்கள் மாத்திரமல்லாமல் இலங்கை முழுவதும் மிகவும் செல்வம் மிக்க நாடாக இருந்ததுடன் மக்கள் ஒருவரோடு ஒருவர் மிகவும் அன்யோன்னிய உறவுகளை கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.