இலங்கையில் நவ தாராளவாதம் தோல்வியடைந்தது: யாழ்ப்பாணத்தில் இருந்து ‘பொருளாதார ஜனநாயகம்’ கோரும் ஒரு பரிந்துரை (இறுதிப் பகுதி)

இலங்கையில் நவ தாராளவாதம் தோல்வியடைந்தது: யாழ்ப்பாணத்தில் இருந்து ‘பொருளாதார ஜனநாயகம்’ கோரும் ஒரு பரிந்துரை (இறுதிப் பகுதி)

— தொகுப்பு வி. சிவலிங்கம் —

(கடந்தவாரத் தொடர்ச்சி…) 

எதிர்நோக்கும் நெருக்கடிகள் 

இலங்கையின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. ஏற்கனவே காணப்படும் நவதாராளவாத பொருளாதாரக் கட்டுமானங்கள் இரண்டு முக்கிய காரணிகளால் தாக்கப்பட்டுள்ளன. அதாவது நாடு பெருமளவில் இறக்குமதியில் தங்கியிருந்தது. கொரொனா நோயின் தாக்குதல்கள் காரணமாக இறக்குமதி தடைப்பட்டுள்ளது. அடுத்தது இவ்வாறான இறக்குமதியில் நாட்டின் பெரும்பாலான ஏற்றுமதி வர்த்தகம் தங்கியிருந்தது. ஏற்றுமதி பாதித்துள்ள காரணத்தால்  உள்நாட்டு உற்பத்தி பாதித்துள்ளதால் வேலையில்லாத் திண்டாட்டம் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.  

அதிகரித்துள்ள கடன் சுமை 

நாடு பாரிய கடன் சுமைக்குள் தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே பதவியிலிருந்த அரசுகள் நாட்டின் வருமானத்திற்கு அப்பால் கடன்களைப் பெற்றுள்ளன. உதாரணமாக இலங்கையின் கடன் சுமை என்பது தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 87 சதவீதமெனக் கூறப்படுகிறது. அதாவது ஒருவரின் வருமானம் 100 ரூபா எனில் அவர் அவ் வருமானத்தில் 87 ரூபாய்களைக் கடன் செலுத்துவதற்கு உபயோகிக்க வேண்டும். அவ்வாறாயின் 13 ரூபாய்களே நாட்டின் இதர செலவினங்களுக்குப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதில் ஓய்வு ஊதியத்திற்கெனவும், அரச ஊழியர் சம்பளம் எனவும் செலவு செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில் நாட்டின் அபிவிருத்திக்கு எங்கிருந்து பணம் பெறுவது? 

இலங்கையின் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் பொருளாதாரம் மேலும் சுருங்கி எதிர்மறை நிலைக்குச் செல்லலாமெனத் தெரிவிக்கிறது. இதே அளவீட்டினையே ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக நாணய நிதியம் போன்றனவும் தெரிவிக்கின்றன. நாட்டின் பொருளாதாரம் சுருங்கிச் செல்வதாக கடன் வழங்கும் நாடுகள் உணருமானால் யார் கடன் வழங்குவார்கள்? சீனா கடன் வழங்கலாம் எனச் சிலர் வாதிக்கின்றனர். இக் கடன்கள் குறுகிய காலக் கடன்கள் என்பதுடன் அதிக வட்டியும்  செலுத்த வேண்டியுள்ளது.  

நாட்டின் பொருளாதாரம் சுருங்கிச் செல்லும் நிலையில் சீனா ஏன் கடன் கொடுக்கிறது? என்ற கேள்வி எழுகிறது. சீனா இலங்கைக்கு மட்டுமல்ல பல நாடுகளுக்குக் குறிப்பாக ஆபிரிக்காவின் பல நாடுகளுக்குக் கடன் வழங்கியுள்ளது. இந்த நாடுகள் இலங்கை போன்று பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளன. அந்த நாடுகளின் அனுபவங்களை வைத்துப் பார்க்கையில் சீனா கடன் செலுத்த முடியாத நாடுகளிடம் உள்ள சொத்துகளை நீண்டகாலக் குத்தகையில் கடன்களுக்காகப் பெறகிறது. அவ்வாறாதன நிலையே ஹம்பாந்தோட்டை துறைமுகப் பிரச்சினையில் ஏற்பட்டது. அந்தத் துறைமுகம் தற்போது 99 ஆண்டகால குத்தகைக்கு சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சீனாவின் கடனுக்காக நாட்டின் முக்கிய துறைகள் விலைபேசப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் இன்றைய ஆட்சியாளர்கள் 99 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கப் போவதில்லை. எனவே நாட்டைக் கடனில் தள்ளுவது குறித்து அவர்கள் கவலைப்படப் போவதுமில்லை. மக்கள் விழிப்புடன் செயற்படாதவரை இவை சாத்தியமே.  

ஏற்கனவே குறிப்பிட்டது போல தேசத்தின் பொருளாதார உற்பத்தி சுருங்கிச் செல்லும்போது பல பிரச்சினைகள் ஏற்படும். உதாரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாலும், கொரொனா நோயின் தாக்குதல்களாலும் பல ஆயிரம் மக்கள் வேலைகளை இழந்துள்ளனர். இவை இலங்கையில் மட்டுமல்ல உலக அளவில் உள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை. தொழில்களை இழக்கும்போது வறுமையும் அதிகரிக்கிறது.  

சமீப காலமாக இலங்கை அரசு வறுமைக்குள் சிக்கியுள்ள மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் குடும்பத்திற்கு 5000 ரூபாய் என்ற அடிப்படையில் கொடுப்பனவுகள் மேற்கொண்டது. ஆனாலும் இக் கொடுப்பனவுகள் பல குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தன. அரசியல் அடிப்படையில் பாரபட்சம் நிகழ்ந்ததாகவும், அப் பணம் ஒரு மாத காலத்திற்குப் போதவில்லை எனப் பிரச்சனைகள் எழுந்தன. இப் பிரச்சினையில் அமைச்சர் ஒருவர் 5000 ரூபாய் என்பது ஒரு மாதக் கொடுப்பனவு எனவும், அது ஒரு சில நாட்களுக்கான கொடுப்பனவு அல்ல எனவும் தெரிவித்திருந்தார். அவரின் இந்த உரை பல விவாதங்களைத் தோற்றுவித்திருந்தது. அதாவது 5000 ரூபாயில் ஒரு மாதம் ஒரு குடும்பம் வாழ முடியுமா? அமைச்சர் மக்களின் பிரச்சனைகளிலிருந்து தூர விலகி நிற்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.  

கறுப்புச் சந்தையை நோக்கி நாடு… 

உள்நாட்டு உற்பத்தி பாதித்துள்ள நிலையில், வெளிநாட்டு வருமானமும் குறைந்துள்ள நிலையில் அரசு எங்கிருந்து இப் பணங்களைப் பெறுகிறது? என்ற கேள்வி எழுகிறது. அரசு வெளிநாட்டு வருமானத்தை இறக்குமதிக்குப் பயன்படுத்துகிறது. உள்நாட்டுத் தேவைக்கு புதிய நாணய நோட்டுகளை அச்சிட்டு விநியோகிக்கிறது. உள்நாட்டு பொருளாதாரம் வளர்ச்சியடையாமல் பணத்தை அச்சிட்டால் அவை பணவீக்கத்தையே ஏற்படுத்தும். ஏனெனில் ஒரே பொருளை பல பணம் துரத்தும் நிலையே பணவீக்கம் ஆகும்.  

தற்போது பணவீக்கம் மிகவும் கட்டுப்பாட்டிற்குள் இருந்த போதிலும் நீண்ட காலம் தாக்குப்பிடிக்குமா? என்பது சந்தேகமே. ஏனெனில் உள்நாட்டுப் பொருளாதாரம் சுருங்கிச் செல்லும் என்பதைக் கவனத்தில் எடுத்தால் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் ஆபத்து உண்டு. அரசு கட்டுப்பாட்டு விலைகளை அறிவித்த போதிலும் அந்த விலைக்குச் சந்தையில் பொருட்கள் இல்லை. வியாபாரிகள் பொருட்களைக் கறுப்புச் சந்தையில் விற்க ஆரம்பித்துள்ளனர். அவ்வாறானால் அரசு கறுப்புச் சந்தையைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுத்துள்ளதா? எனக் கேட்டால் அவ்வாறில்லை என்பதே பதிலாகும்.  

அரசு ஏன் கறுப்புச் சந்தைகளைக் கண்காணிக்கவில்லை? என்பதை ஆராயும்போது இவ் வர்த்தகர்களே அரசின் ஆதரவாளர்களாக உள்ளதைக் காண முடிகிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போல தேசத்தின் முக்கிய சந்தைகள் சிறிய பிரிவினரின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளன. இவர்களே அரசின் அங்கமாகவும் உள்ளனர். எனவே உணவுப் பதுக்கல் காரணமாக எழுந்துள்ள விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசு உள்ளது.  

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு சாமான்ய அன்றாட வருமானத்தில் தங்கி வாழும் மக்களையே அதிகம் தாக்கியுள்ளது. ஏனெனில் அம் மக்களின் வருமானத்தின் பெரும்பகுதி உணவுக்காகவே செலவிடப்படுகிறது.  

வங்கிகளும்கடன் வழங்குதலும் 

ஒரு புறத்தில் உழைக்கும் மக்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மறு பறத்தில் தமது வங்கிச் சேமிப்புகளில் கிடைக்கும் வருமானங்களில் தங்கி வாழும் முதியோர் நிலை மேலும் பரிதாபத்திற்குரியது. பொதுவாகவே வங்கிகளின் வட்டி விகிதம் குறைவாக உள்ளதால் முதலீட்டுக்கான கடன்களைப் பெறுவது வாய்ப்பானது என்பது எதிர்பார்ப்பு ஆகும். ஆனால் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை தற்போது காணப்படுகையில் வங்கிகள் கடன் வழங்கத் தயாராக இல்லை. ஆனால் அரசு பொரளாதார முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு வங்கிகளின் மேல் அதிக அழுத்தங்களைப் பிரயோகிக்கிறது. வங்கிகள் மிகவும் தயங்கிச் செயற்படுவதால் அரசிற்கும், மத்திய வங்கிக்குமிடையே முறுகல் நிலை காணப்படுகிறது.  

இவ்வாறான பின்புலத்தில் தாம் வழங்கும் கடன்களுக்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும் என வங்கிகள் அழுத்தும்போது அரசிற்கும் வங்கிகளுக்குமிடையே பிரச்சினைகள் எழுந்துள்ளன. மறு பறத்தில் வங்கிகள் தம்மிடமுள்ள சேமிப்பிலிருந்தே கடன் வழங்குகின்றன. தற்போது கடன் வழங்குவது குறைந்துள்ளதால் வைப்பிலுள்ள சேமிப்பிற்கு வட்டி வழங்குவதும் பிரச்சனையாகியுள்ளது. சேமிப்பிற்கான வட்டி வழங்க முடியாத நிலையில் சேமிப்பிற்கான வட்டி விகிதம் குறையும் நிலை எற்பட்டுள்ளது. இதனால் தமது வருமானங்களை இழந்து வரும் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் தொழில் அடிப்படையிலான சேமலாப நிதியினை வைப்பில் இட்டோர் விலைவாசி அதிகரிப்பால் அதன் ஒரு பகுதியை மீளப் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொருளாதாரம் சுருங்கிச் செல்லும் நிலையிலும், தனியார் வங்கிகள் வழங்கிய கடன்களைப் பெற முடியாத நிலையிலும் முதலீடு என்பது மிகவும் சிக்கலாகியுள்ளது. 

வரவு – செலவுத் திட்டம்  

இப் பின்னணியிலிருந்தே தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தின் பெறுபேறுகளை ஆராய வேண்டியுள்ளது. சமீபத்தில் வெளியான பொருளாதார ஆய்வுகளின் அடிப்படையில் நோக்கும்போது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட கடன் தொகை 100 சதவீதத்திற்கு அப்பால் அதாவது வருமானம் 100 ருபாய் எனில் செலவு  100 ருபாய்க்கு அப்பால் செல்லலாம் என எச்சரிக்கப்படுகிறது. பொதுவாக சினிமா பாட்டில் வருவது போல வரவு எட்டணாசெலவு பத்தணாஅதிகம் இரண்டணா இறுதியில் துந்தனா என்பதற்கு ஒப்ப நாடு கடனுக்குள் தள்ளப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.  

வெளிவந்துள்ள புள்ளி விபர அடிப்படையில் ஏற்கனவே குறிப்பிட்டது போல வரவை விட செலவினம் அதிகரித்துள்ள நிலையில் நாட்டின் கடன் சுமை பல பிரச்சனைகளைத் தோற்றுவிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டு வருமானம் குறைந்துள்ள நிலையில் பெற்ற வெளிநாட்டுக் கடன்களுக்காக சுமார் 6 – 7 சதவீதம் வரையான உள்நாட்டு உற்பத்தி வருமானம் வட்டியாகச் செலுத்தும் நிலை உள்ளது.  

வரி அறவீட்டில் அநீதி? 

அத்துடன் உற்பத்தி வருமானத்தை வரியாகப் அறவிடும் முறை சரியான விதத்தில் செயற்படுவதில்லை. இலங்கை தனது உள்நாட்டு வருமானத்தின் 80 சதவீதத்தினை மறைமுக வரிகள் மூலமே பெறுகிறது. குறிப்பாக மக்கள் பொருட்களை நுகரும்போது அதற்கான வரியையும் இணைத்தே செலுத்துகின்றனர். தற்போது வருமானப் பற்றாக்குறை காரணமாக மக்கள் தமது நுகர்வுகளைக் கட்டுப்படுத்தும்போது வரியும் குறைவடைகிறது. தற்போது அரச இறக்குமதியில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதால் இறக்குமதியால் கிடைக்கும் வரி வருமானமும் குறைவடைகிறது.  

நாட்டின் உள்நாட்டு வருமானம் மறைமுக வரியால் பெறப்படும் நிலையில் நேரடி வரியில் ஏற்படும் நிலமைகள் நாம் அரசின் உட்கட்டுமானம் தொடர்பாக தெரிவித்த உண்மைகள் புலப்படுகின்றன.  

உதாரணமாக, நாட்டின் பிரதான இறக்குதி, ஏற்றுமதித் துறைகள் அரச ஆதரவுக் குழுக்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவர்கள் அரச சலுகைகளைப் பயன்படுத்தி அல்லது மறைமுக ஆதரவைப் பயன்படுத்தி வரி விலக்குப் பெறுகின்றனர். அல்லது குறைந்த வரி அறவிடப்படுகின்றது. விதிக்கப்பட்ட வரிகளை அறவிடுவதில் அரசு அதிக ஊக்கம் செலுத்துவதில்லை. ஏனெனில் அவர்கள் ஏதோ ஒரு வகையில் அதிகார குழுக்களின் விசுவாசிகளாகவே உள்ளனர். இதனால் பலர் மிகப் பெருந்தொகையான வரிகளைச் செலுத்தாமலேயே காலத்தைக் கடத்துகின்றனர். உள்நாட்டு வரித் திணைக்களம் என்பது அரசியல் மயப்படுத்தபட்டுள்ளமையால் வரி பெற்றுக் கொள்வதில் பெரும் தயக்கம் காட்டப்படுகிறது.  

இவற்றை அவதானிக்கும்போது அரசின் கட்டுப்பாடற்ற செலவினங்களுக்குச் சாமான்ய மக்களே அதிக வரி செலுத்துகின்றனர் என்பது புலனாகும். இதுவே ஏழை – பணக்காரர் இடைவெளி அதிகரிப்பதற்கான பிரதான காரணியாகும். தற்போதைய நிலமைகளை அவதானிப்பின் குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் சுருங்கிச் செல்லும் பின்னணியில் நாட்டில் முதலில் பாதிக்கப்படுவது சாமான்ய ஏழை மக்கள் என்பதையும், இந்த மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதற்கான பின்புலங்கள் வெளிப்படுவதையும் காணலாம். இங்கு இன்னொரு முக்கிய அம்சம் அரசின் பொருளாதார நடவடிக்கைகள் எப் பிரிவினரை நோக்கியதாக உள்ளன? என்பதை விளக்கப் போதுமானது. அதாவது கடந்த 2019ம் ஆண்டு இறுதிப் பகுதியில் சில பிரிவினருக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. மக்கள் வருமானப் பற்றாக்குறையால் அவதிப்படும் வேளையில் அரசு ஏன் வரிச் சலுகைகளை அறிவித்தது? என்ற பெரும் கேள்வி உள்ளது.  

நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறை தொடர்ந்து செல்கையில். அத்துடன் உள்நாட்டு உற்பத்தி பாதிப்புற்றுள்ள வேளையில், வங்கிகளில் கடன் பெற்ற நிறுவனங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், பல ஸ்தாபனங்கள் நிதிப் பற்றாக்குறையால்  திவாலாக அறிக்கும் நிலமைகளும் தொடர்கின்றன. அத்துடன் கடந்த பல ஆண்டுகளாக நாட்டின் நிதி நிலமைகள் தொடர்பாக பதவியிலிருந்த ஆட்சியாளர்கள் பொறுப்பான விதத்தில் கணக்கு அறிக்கைகளை முன்வைக்கவில்லை. வருமானத்திற்கு மீறிய வகையில் பாரிய கடன்கள் பெறப்பட்டு பாரிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. உதாரணமாக, சீனாவிடம் மிகப் பெருந்தொகையான கடன்கள் பெறப்பட்டு ஹம்பாந்தோடைத் துறைமுகம், மத்தள விமான நிலையம்  மற்றும் பெரும் வீதிகள் அமைக்கப்பட்டன. மக்களின் அத்தியாவசிய சேவைகளைக் கருத்தில் கொள்ளாது இவ்வாறான பாரிய திட்டங்களில் கவனம் செலுத்தியமைக்குக் காரணம் இம் முதலீடுகளால் கிடைக்கும் ஊழல் வருமானமே என்பது பலரும் அறிந்ததே. ஆனால் இவர்கள் ஏற்படுத்திய முதலீட்டிற்கு ஏற்றவாறான வருமானம் இத் திட்டங்களால் கிடைக்கவில்லை. ஆனால் கடன்களுக்கான வட்டியையும், முதலையும் செலுத்த வேண்டிய நிலை சந்ததியாக தொடரப் போகிறது.  

செல்மதி நிலுவை 

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்ட அறிக்கையின்படி அரசின் கையிருப்பிலுள்ள வெளிநாட்டுச் செலாவணி மிகவும் குறைந்துள்ளது. இவை மேலும் குறைந்து செல்லுமாயின் கடன்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு, வங்குறோத்து நிலை அறிவிக்கப்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே இலங்கை கடன்பெறும் சர்வதேச தரத்தில் மிகவும் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கொரொனா நோயின் தாக்கம் இதனை மேலும் அதிகரித்துள்ளது. வெளியிடப்பட்ட அறிக்கையில் எதிர்வரும் 2021- 2024 ம் ஆண்டு காலப் பகுதிக்குள் இலங்கை சுமார் 23.2 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகச் செலுத்த வேண்டும். ஆனால் அரசின் இருப்பில் 5.9 பில்லியன் டொலர்களே உள்ளன. அவ்வாறாயின் மிகுதிப் பணத்தை எங்கிருந்து பெறுவது? 

அரசாங்கத்தின் திட்டங்களை ஆராயும்போது அவை பாரிய சவால்களை எதிர்கொள்ளும் என்றே கருதலாம். உதாரணமாக நாட்டின் கடன் தொகை மொத்த உள்நாட்டு வருமானத்தை விட 2024ம் ஆண்டில் 116 சதவீதமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு 4 சதவீதமாக அமையும் எனக் கூறப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தி சுருங்கும் ஆபத்து உள்ள நிலையில் எப்படி உற்பத்தி அதிகரிப்பு ஏற்படும்? என்பது நிச்சயமற்றதாக உள்ளது.  

இந்திய அரசு வெளியிட்ட தனது வரவு – செலவுத் திட்ட அறிக்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கான உக்குவிப்புகளை அறிவித்திருந்தது. ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு முதலீடுகள் கிடைக்கவில்லை. இந்திய பொருளாதாரம் இவ்வாறான நெருக்கடியில் இருக்கும் வேளையில் இலங்கையில் அந்நிய நேரடி முதலீடுகளை வரவேற்பதாயின் பல வரிச் சலுகைகளை அரசு வழங்க வேண்டும். தற்போதைய நிலையில் அது சாத்தியமா?  

சமீபத்தில் வெளியான வரவு – செலவுத் திட்டத்தில் அதாவது 2020ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வருமானத்திற்கும், வெளிநாட்டுக் கடன்களுக்குமான விகிதம் 95.1 எனவும், அடுத்த 2025ம் ஆண்டில் அது 75.5 சதவீதமாகக் குறைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதே வேளையில் உள்நாட்டு வரி வருமானம் 2020இல் 9.5 எனவும், 2025 இல் 14.2 சதவீதமாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் நாட்டின் வரவு – செலவுப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக தற்போது விவசாயத் துறைக்கு அதிக ஊக்குவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் விவசாய முதலீடுகளுக்கும் ஊக்குவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை பொருட்கள், சேவைகளுக்கான விஷேச வரி மதுபான வகைகள், சூதாட்ட விடுதிகள், வாகனங்கள், தொலைத்தொடர்பு சேவைகள் போன்றனவற்றின் மேல் வரி விதிக்கப்பட்டுள்ளது.  

ஒரு புறத்தில் வரிச் சலுகைகளை அறிவித்துள்ள அரசு மறு பக்கத்தில் வரிகளையும் அறிவித்துள்ளது. ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டது போல அரச வருமான வரித் திணைக்களம் காத்திரமான விதத்தில் வரிகளை அறவிட்டதாக வரலாறு இல்லை. வரி அறவிடுதல் தொடர்பாக தெளிவான விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. அத்துடன் வரி அறவிடுதல், செலவினங்களை மேற்கொள்ளுதல் என்பது பற்றிய திட்டங்களோ, அத் திட்டங்களால் பாதிக்கப்படும் சமூகப் பிரிவினர் குறித்தோ அல்லது அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் குறித்தோ எந்த அறிவித்தல்களும் வெளியிடப்படவில்லை. அது மட்டுமல்ல வரி ஏய்ப்புச் செய்பவர்களுக்கான தண்டனை விபரங்களும் இல்லை.   

இவற்றை ஆழமாக அவதானிக்கும்போது அரசு கடன்களைக் குறைப்பதாக தெரிவிக்கும் அறிவித்தல்கள் சாத்தியமாகுமா? என்ற சந்தேகம் நியாயமாக எழுகிறது. ஏனெனில் மக்களின் பேரால் கடன்களைப் பெற்று மக்கள் மேல் வரிச் சுமைகளைப் போடும் அரசு தமது அரசுக் காலத்தில் கடன்சுமைகளைக் குறைப்பதற்கான சரியான, உண்மையான வழிமுறைகளை அறிவிக்க வேண்டும். ஆனால் தற்போதைய வரவு – செலவுத் திட்டம் அவ்வாறான நம்பிக்கைகளை வழங்கவில்லை. குறிப்பாக நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வருமானத்தில் உல்லாசப் பயணத்துறை 4 சதவீத வருமானத்தை வழங்கியது. தற்போது அவ் வருமானம் மிகவும் வீழ்ந்துள்ளது. இவை கொரொனா நோயிலிருந்து நாட்டைத் துரிதமாக விடுவிப்பதில்தான் தங்கியுள்ளது.  

பொருளாதார ஜனநாயகம்  

வட பகுதியில் செயற்படும் பொருளாதார அறிஞர்கள் குழுவினர் ‘பொருளாதார ஜனநாயகம்’ என்ற தலைப்பில் விடுத்துள்ள யோசனைகள் கவனத்திற்குரியன. குறிப்பாக அரசு வெளிநாட்டு முதலீடுகளை எதிர்பார்த்திருக்கிறது. ஆனால் தம் முதலீடுகளுக்கான வாய்ப்பான புறச் சூழல் காணப்படாத வரை அவ்வாறான முதலீடுகளுக்கு வாய்ப்பில்லை என்பதை இந்திய அனுபவங்கள் உணர்த்துகின்றன. எனவே அரசு உள்நாட்டு அபிவிருத்தியில் முதலீடுகளை மேற்கொண்டு தற்போதுள்ள நிலை மேலும் ஆழமாகிச் செல்வதைத் தடுத்தல் அவசியம். அவ்வாறு தடுக்காவிடில் எதிர்கால வளர்ச்சியும் மேலும் பாதிக்கப்படலாம். தற்போது வருமானப் பற்றாக்குறை காரணமாக நுகர்வு குறைந்துள்ளமையாலும், மேலும் வேலைகளிலிருந்து உற்பத்திப் பாதிப்புக் காரணமாக வெளியேற்றம் அதிகரித்திருப்பதாலும், உள்நாட்டுப் பொருளாதாரம் தொடர்ந்தும் பாதிப்பிற்குள் சிக்கிச் சுழல்வதை எதிர்பார்க்கலாம்.  

இந் நிலையில் வெளிநாட்டு முதலீடுகளுக்காகக் காத்திருக்காமல் தனியார் முதலீடுகளுக்கான ஊக்குவிப்புகளை அரசு வழங்க வேண்டும். ஆனாலும் தனியார்துறையும் தற்போதுள்ள பொருளாதார சிக்கலில் முதலீடு செய்வதற்குத் தயங்குவர் என்பதையும் நாம் புரிந்து கொள்ளுதல் அவசியம். எனவே அரசு முதலீடுகளை மேற்கொள்ளுதல் அவசியம்.  

அவ்வாறாயின் அரசு நாட்டின் மிக அவசிய பொருளாதாரத்  துறைகளை அடையாளப்படுத்தி அவற்றில் திட்டமிட்ட அடிப்படையில் முதலீடுகளை இட வேண்டும். குறிப்பாக விவசாயமே பல விதங்களில் கைவிடப்பட்ட துறையாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் 7 சதவீத பங்கினையே வகிக்கிறது. விவசாயம் அதிகரிக்குமாயின் உணவுப் பற்றாக்குறையை பாரிய அளவில் தவிர்க்க முடியும்.  

‘ஜனநாயக பொருளாதாரம்’ என்ற அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் விவசாயத்திற்கு அடுத்ததாக தேசிய செல்வ வளர்ச்சியை அதிகரிப்பதும், சொத்துகள் மீதான வரி விதிப்புமாகும். தற்போது அரசு மக்கள் மிகவும் கஷ்டப்பட்டுச் சிறுகச், சிறுக சேகரித்து சொத்துகளை வாங்கிய நிலையில் அவற்றின் மேல் வரிச் சுமைகளை ஏற்றுவது எந்த விதத்திலும் நியாயமாக இல்லை. சொத்துச் சேகரிப்பு தொடர்பாக தெளிவான, வெளிப்படையான கொள்கைகள் இதுவரை இல்லை. உதாரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது சொத்துகளை வெளியிடுவது அவசியமாகும். ஆனால் இதுவரை மிகச் சிலரே தமது சொத்து விபரங்களை வழங்கியுள்ளனர். இதன் பின்னணியை மக்கள் நன்கு அறிவார்கள்.  

அது மட்டுமல்ல, ஊழியர் சேமலாப நிதி என்பது அரச மற்றும் தனியார்துறை ஊழியர்கள் தமது சேவைக் காலத்தில் சிறுகச் சிறுக சேமித்த தொகையாகும். இதனை அரச மற்றும் தனியார் துறைகளில் முதலீடு செய்து அதன் வருமானத்தின் மூலம் சேமலாப நிதி வைப்பினை அதிகரிப்பதாகும். ஆனால் சமீப காலமாக அந்த நிதியை மிகக் குறைந்த வட்டியில் அரசு தனது தேவைக்குப் பயன்படுத்துவது நியாயமாகாது.  

கொரானா நோயின் பின்னணியில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிப்பிற்குள் செல்வதால் விவசாய உற்பத்தியும், வேறு பல உற்பத்தியும் பாதிக்கப்பட்டு பட்டினி நாட்டின் சில பிரிவு மக்களைப் பாதிக்கும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக நகர்ப்புற தொழிலாளிகள், கிராமப்புற விவசாய தொழிலாளர்கள் போன்றோர் பெரும் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளனர். இந்த ஆபத்து எந்நேரத்திலும் கட்டுப்பாட்டை இழக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதாவது பொருட்களைக் கட்டுப்பாட்டு விலைக்கு எடுத்துச் செல்வதே இவ்வாறான பட்டினிச் சாவைத் தடுப்பதற்கான வழியாகும். ஆனால் அரசு தனது ஆதரவு சக்திகளான வர்த்தகர்கள் பற்றியும் கவலைப்படுகிறது.  

உற்பத்தியும், விநியோகமும் பாரிய நெருக்கடிக்குள் உள்ளதால் அரசு நாட்டின் சகல பிரிவினரதும் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமானது. இதுவே மக்களுக்கான பாதுகாப்பு என்பதன் உண்மையான அர்த்தமாகும். இது ராணுவ சிந்தனை வழிப்பட்டது அல்ல. பதிலாக நாட்டு மக்களின் சகல பிரிவினரதும் தேவைகளை நியாயமான விதத்தில் பங்கீடு செய்வதாகும். எனவே அரசு ஒரு புறத்தில் முதலீடு செய்வதற்கான முயற்சிகளை எடுக்கும் அதேவேளை பொருட்களின் விலை அதிகரிக்காமல் தடுக்கும் பொருட்டு மானிய விலைகளில் பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுதல் அவசியமானது.  

இக் கட்டுரையின் ஆரம்ப பகுதிகளில் தெரிவித்தது போல அரசு சகல மக்களினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் பற்றாக்குறை நிலவும் காலத்தில் பாதிக்கப்படும் மக்களைப் பாதுகாக்க முயற்சிகளை எடுக்குமா? அல்லது அதிகாரத்திலிருக்கும் சிறு குழுவினர் இப் பொருளாதார நெருக்கடியில் தமது லாபத்தை நோக்கிச் செயற்படுவார்களா? என்பதே கேள்வியாகும்.  

அரசிற்குரிய ஜனநாயகத் தெரிவுகள் 

தற்போது காணப்படும் நெருக்கடிகளைச் சமாளிப்பதாயின், வறுமையில் தள்ளப்பட்டுள்ள மக்களைப் பாதுகாப்பதாயின் நாட்டின் செல்வத்தைக் குவித்து வைத்துள்ளவர்கள் மேல் வரிகளைப் போடுவார்களா? அந்த வரிகளை உள்நாட்டு முதலீட்டில் ஈடுபடுத்தி வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறையைக் குறைக்க உதவுவார்களா? கடந்த காலங்களில் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்று தேவையற்ற விதத்தில் பாரிய திட்டங்களில் முதலீடு செய்யாமல், உண்மையாகவே மக்களின் வாழக்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளில் முதலிட்டு பொருளாதாரத்தை வளர்க்க உதவுவார்களா?  

அல்லது 

மக்களின் உண்மையான அத்தியாவசிய தேவைகளைக் கவனத்தில் கொள்ளாது குளிருட்டிய அறைகளிலிருந்து சாமான்ய மக்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளாத அல்லது அம் மக்களின் வாழ்வின் இடர்பாடுகளைப் புரிந்து கொள்ளாத கல்விச் சமூகத்தினர் என்போரின் கற்பனைத் திட்டங்கள் அதாவது ஏற்றுமதி நோக்கிய பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் தேவைகளைப் புரிந்து கொள்ள முடியாத திட்டங்களை பெரும் அழகிய வார்த்தை அலங்கரங்களால் மக்களை ஏமாற்றும் வகையில் முன்வைக்கப் போகிறார்களா?