— மல்லியப்புசந்தி திலகர் —
இந்தத் தொடரில் ‘எ’ வில் கோரப்படும் ‘மொழி’ பற்றிய பார்வையாக இந்த நான்காம் அத்தியாயத்தில் எனது வாதங்களை முன்வைக்கலாம் என நினைக்கிறேன்.
இனம் என்ற அடிப்படையில் மூன்றாக பிரிந்து நிற்கும் இலங்கை சிறுபான்மைத் தேசிய சமூகங்கள், மொழி என்ற அடிப்படையில் ஒரு கூட்டு முன்மொழிவினைச் செய்ய முன்வரும் சாத்தியங்கள் உண்டா? எனும் கேள்வியை இந்த விவாதங்களுக்கான கேள்வியாக முன்வைத்துக் கொள்ளலாம்.
இனப்பிரச்சினையின் அடிப்படை என்ன?
இப்போது இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதே இலங்கையின் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வுத்தளமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினை, உண்மையில் இன அடிப்படையில் தோற்றம் பெறுகிறதா? அல்லது மொழி அடிப்படையில் தோற்றம் பெறுகிறதா? என கூர்ந்து அவதானித்தால் அங்கே மொழி ஒரு பிரதான கூறாக இருந்திருக்கிறது என்பதனை நாம் வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ள முடியும்.
அந்த வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தால், 1956 இன் ‘தனிச்சிங்களச் சட்டம்’ என்பதில் இருந்து பார்ப்போரும் உள்ளனர். ஆனால், அதற்கு முன்பதாக, இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே இலங்கையில் மொழி தொடர்பான கருத்து நிலைப்பாடுகள் எழத் தொடங்கி இருக்கின்றன. அதைப்பற்றி அலசி ஆராய்வது இங்கே நோக்கமல்ல ஆயினும் இன்றைய நிலையில் அந்த “மொழி உரிமை” சார்ந்த விடயங்களை ஓரளவுக்கு மீட்டுப் பார்த்துக்கொள்வது தேவையானது.
ஏனெனில் அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகளின்போது அதனை வரைவோர் (Drafting) ஆங்கில மொழியில் செய்து அதனை சிங்களத்துக்கும் தமிழுக்கும் மொழிபெயர்த்து, சட்டம் தொடர்பில் ஏதேனும் சிக்கல் வருமிடத்து சிங்கள மூலமே ஏற்றுக் கொள்ளப்படும் என்ற ஒரு ஏற்பாடு (provision ) இலங்கையில் உள்ளது.
“இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நிற்றல் வேண்டும்” எனும் குறிப்பு சட்ட ஏற்பாடுகளின் இறுதியில் குறிப்பிடப்படுவது இலங்கையில் ஒரு ஏற்பாடாக உள்ளது.
இந்த சட்ட வாசகத்துக்கு, “ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நிற்றல்”என்ற அடிக்குறிப்பும் உண்டு. இந்த ஏற்பாடு தாய்ச்சட்டமான அரசியலமைப்புச் சட்டத்துக்கும் பொருந்தும்.
அத்தகையச் சட்டம் குறைந்தபட்சம் சிங்கள மொழியில் எழுதப்படுவது அல்லது வரையப்படுவது கூட இல்லை என்பதே யதார்த்தம்.
அந்நியர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலமே பிரதான மொழியாக இருந்தது என்றவகையிலும், இலங்கையில் சிங்கள, தமிழ் மொழிவழிக் கல்விக்கு சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் ஆங்கில கல்வி கலாச்சாரத்தின் தாக்கம் காரணமாகவும் இன்றளவிலும் கூட பாடவிதானங்களை வடிவமைப்பதில் மேற்கத்தைய கலாச்சாரம் செல்வாக்கு செலுத்துவதன் காரணமாக, அரசியலமைப்பு ‘உருவாக்கத்திலும்’ அதாவது அது எழுதப்படும் மொழியானது ‘ஆங்கிலமாக’ இருப்பது அவதானத்துக்கு உரியது.
எனவே ‘மொழி’ மாத்திரமல்ல ‘மொழிமாற்றம்’ ( translation) கூட இலங்கையில் ஒரு பிரச்சினையான விடயமாகவே உள்ளது. அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான ஆலோசனைகளைக் கோரும் இந்த அறிவித்தல் விளம்பரத்திலும் கூட நாம் இதனை அவதானிக்கலாம்.
2017 ஆம் ஆண்டு செப்தெம்பர் 21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அப்போதைய அரசியலமைப்பு பேரவையின்(Constitutional Assembly ) ’வழிப்படுத்தல் குழு’ வெளியிட்ட அறிக்கையில் Issue எனும் உபதலைப்பில் தெற்கில் வாழும் மக்கள் ‘Federal’ என்ற சொல்லுக்கு பயப்படுவதாகவும், வடக்கில் வாழும் மக்கள் ‘Unitary’ என்ற சொல்லுக்கும் பயப்படுவதாகவும் கூறிய ஜனாதிபதி, ‘அரசியலமைப்பு’, மக்கள் பயங்கொள்ளும் ஓர் ஆவணமாக இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
ஆனால் இப்போது ‘அரசியலமைப்புத் திருத்தம் அல்லது உருவாக்கம்’ போன்ற விடயங்கள் இலங்கையில் மக்களைப் பயங்கொள்ளச் செய்யும் ஒன்றாகவே மாறியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
Unitary State எனச் சொல்லப்படும் பிரிக்கப்பட முடியாத நாடு என்பது சிங்களத்தில் ‘ஏக்கீய ராஜ்ய’ என்றும் தமிழில் அது ‘ஒருமித்த நாடு’ என பொருள்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது. எனினும் தமிழில் ‘ஒருமித்த நாடு’ என குறிப்பிடப்பட்ட மொழியாக்கமானது, கடந்த ஆட்சியில் அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையையே இடைநடுவில் கைவிட காரணமானது எனலாம்.
எனவே அரசியலமைப்பு உருவாக்க ஆலோசனைக் கோரிக்கையில் ‘எ’ பிரிவாக கோரப்பட்டுள்ள ‘மொழி’ என்றவுடன் இலங்கைப் பிரஜைகள் பேசும் இரு பிரதான மொழிகளான சிங்களம், தமிழ் ஆகிய இரண்டும் சம அந்தஸ்த்து கொண்ட மொழிகளாக பரிந்துரைக்கும் சூழல் உள்ளதா? எனும் கேள்வி எழுகின்றது.
தனிச்சிங்களச் சட்டம்
1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்த நேரம், கருத்துரைத்த கொல்வின் ஆர்.டி.சில்வா கூறிய வசனம் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது. “மொழி ஒன்று எனில் நாடுகள் இரண்டு. மொழிகள் இரண்டு என்றால் நாடு ஒன்று’ என்பதே அந்த வசனம்.
ஒரு சாதாரண சட்டமாக அமைந்த தனிச்சிங்கள சட்ட விவாதத்தில் இத்தகைய ஆழமான கருத்துரைத்த கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா, 1972 ஆம் முதலாம் குடியரசு அரசியல் யாப்பை உருவாக்குவதில் பிரதான பங்கு வகித்தபோது அதனை ஏனோ மறந்து போனார். மாறாக அரசியலமைப்புச் சட்டத்திலேயே சிங்களம் தனிச்சிங்களச் சட்டமானது.
இலங்கையை ஒரு பௌத்த நாடு எனப் பிரகடனம் செய்வதிலும், தனிச்சிங்கள மொழி நாடாக பிரகடனம் செய்வதிலும் 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது வழியேற்படுத்தப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.
அதன் பின்னர் 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பிலும் அது தொடர்ந்து, 1988 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 16 ஆவது அரசியலமைப்பு திருத்தம் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் அரசகரும, சட்டவாக்கத்திற்கான மொழிகளாக்கும் ஏற்பாட்டினை வழங்கியது.
தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டு முப்பத்திரண்டு வருடங்களின் பின்னரே தமிழ் மொழி அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. அதுவும் 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்டு வடகிழக்கு மாகாண சபை தமிழில் இயங்கும் தேவை எழுந்தபோதே, இந்த 16வது திருத்தம் மூலமே இலங்கையில் தமிழ் மொழிக்கு நிர்வாக அந்தஸ்த்து கிடைக்கப்பெற்றது. 13வது திருத்தத்தின் ஊடாக தமிழ்மொழிச் சமூகங்கள் அடைந்த ஒரே நன்மை இதுவெனக்கூட கூறலாம்.
அதே நேரம் வடக்கு கிழக்குக்கு வெளியே தமிழ்மொழிச் சமூகங்கள் பரவலாக வாழ்ந்தபோதும் தமிழ்மொழியை அரச நிர்வாக மொழியாக கொள்வதில் பல்வேறுகள் சிக்கல்கள் வந்த நிலையில், 1999 ஆம் ஆண்டில் ‘இரு மொழி பிரதேச செயலகங்களை’ ( Bilingual DS Division ) வர்த்தமானி மூலம் அறிவிக்கும் தேவை எழுந்தது. பிரதேச செயலகப்பிரிவு ஒன்றின் கீழ் 12% க்கு மேற்பட்ட தமிழ்மொழி பேசும் மக்கள் வாழ்ந்தால் அவை இருமொழி பிரதேச செயலகங்களக அறிவிக்கப்பட்டன. விதிவிலக்காக அதனைவிட குறைந்த பிரதேச செயலகங்கள் சிலவும் மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகத்தின் அல்லது மாவட்ட செயலகம் ஒன்றாக அமைந்த சந்தர்ப்பங்களில் அவை இருமொழி பிரதேச செயலகங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டன.
இது ஒரு வகையில் ஒரு ஏற்பாடாக கருதப்படக்கூடியது ஆயினும் 16 வது அரசியலமைப்புத் திருத்ததின் ஊடாக கொண்டுவரப்பட்ட மாற்றம் முழு நாட்டுக்குமானதாக ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு நிலையை வெளிப்படுத்துவதனை அவதானிக்கலாம்.
எனவே “மொழி”, இலங்கையின் அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் அழுத்தமாக முன்வைக்கப்படவேண்டிய ஒன்று என்பது இங்கு கவனத்துக்கு உரியது. தேசிய மொழியாக சிங்களமும்,, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் அரச கரும மொழியாகவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் என உள்ள ஏற்பாடுகள் அதனை வலியுறுத்தி நிற்கின்றன. பொலிஸ், பாதுகாப்புத் துறை நிர்வாகத்திலும் நீதிமன்ற மொழியாகவும் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதில் இன்னுமே பல சிக்கல்கள் நிலவுகின்றன.
‘தமிழ் மொழியை அமுல்படுத்து’ எனும் கோரிக்கை தொடர்ச்சியாக தமிழ் மொழி சமூகத்தில் எழுந்து வரும் நிலையில், இந்த சட்ட ஏற்பாடுகளை எல்லாம் கடந்து ‘சீன’ மொழியை ஊர்ப் பெயர்பலகைகளிலும், அறிவித்தல் பலகைகளிலும், ஊடக சந்திப்பு பதாதைகளிலும் அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது.
தமிழ் இடத்தைப் பிடித்த சீனம்
அண்மையில் பௌத்த பிக்கு ஒருவர் நடாத்திய ஊடக சந்திப்பின்போது அவர் சார்ந்த அமைப்பின் பெயரை குறிக்கும் பெயர் பதாகையில் சிங்களம், சீனம் (மென்டரின்), ஆங்கிலம், தமிழ் என வரிசை ஒழுங்கு அமைந்து இருந்தமையை அவதானிக்க முடிந்தது. சட்ட ஏற்பாடுகளோ வர்த்தமானி ஏற்பாடுகளோ இல்லாத நிலையில், தமிழ் மொழி இருந்த இடத்தை ‘சீன மொழி’ பிடித்துவருவதனை அவதானிக்க முடிகிறது.
இத்தகைய பின்னணியில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 16 வது திருத்தமாகக் கொண்டுவரப்பட்ட ‘தமிழ்மொழி’ குறித்த ஏற்பாடுகளை இன்னும் விரிவாக்கி தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழை அரசியலமைப்பில் முன்வைக்கும் யோசனையை அழுத்தமாக முன்வைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த சிறுபான்மை தேசிய இனங்கள் முன்வரவேண்டும்.
எண்ணிக்கை அடிப்படைச் சிறுபான்மைச் சமூகமாக இலங்கைத் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் சமூகங்கள் அதிகார பகிர்வு விடயத்தில் வேறுபட்ட பார்வைக் கோணங்களைக் கொண்டிருக்கின்ற போதும், அவர்கள் ‘மொழி’ என்ற அடிப்படையில் ஒருமித்த கருத்தினை அரசியல் அமைப்பு விடயத்தில் முன்வைக்க முடியும். அப்படியான ஒருமித்த கருத்து ஒன்றுக்கு இந்த மூன்று சமூகங்களாலும் ஒருமித்து வரமுடியுமெனில் இந்த மொழி அடிப்படையில் ஆரம்பமான இனப்பிரச்சினைக்கும், அதுவே இப்போது மதப்பிரச்சினையாகவும் மாறிவிட்டிருக்கும் நிலையில் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கான ஆரம்பத்தை தமிழ் மொழி வழிச் சமூகமாக வழங்கலாம்.
(தொடரும்)