— செங்கதிரோன் —
ஊரின் நடுவே அமைந்திருந்த அந்தச் சிறு குளத்தில் ஆமையும் முதலையும், தவளையும், குறட்டை மற்றும் விரால் மீன்களும் அந்நியோன்னியமாக நட்புடன் வாழ்ந்து வந்தன.
கோடைக்காலம் வந்து குளத்தில் வரட்சியால் நீர்மட்டம் குறையத் தொடங்கியது.
குளம் முற்றாக வற்றிவிட்டால் என்ன செய்வது என்று விரால் குழப்பத்தில் இருந்தது. தீடீரென்று ஒருநாள் குளத்தின் நீரேந்து பரப்பில் பெய்த பெருமழையினால் குளத்திற்கான நீர்வரத்துக் கூடி குளத்தின் நீர் மட்டம் ஏறத் தொடங்கியது.
சில நாட்களில் குளம் நிரம்பி வான் வழியத் தொடங்கியது. வானிற்கு மேலால் வழிந்தோடிய வெள்ளம் ஓடையின் வழியே பாய்ந்து சென்று ஊரின் புறத்தே பல மைல்கள் தூரத்தில் அமைந்திருந்த பெரிய ஏரியை சென்றடைந்து ஏரியை நிரப்பியது.
இத்தருணத்தில் குளத்தில் ஆமை, தவளை, முதலை ஆகிய நண்பர்களுடன் குதித்து விளையாடிக் குதூகலித்துக் கொண்டிருந்த குறட்டைமீனைக் கூப்பிட்டது விரால்மீன்.
‘தம்பி! கோடைகாலம் மீண்டும் வந்தால் குளம் வற்றிவிடும். இப்போது குளம் நிரம்பி வழிந்து ஓடைவழியே வெள்ளம் பாய்ந்து ஏரியை நிரப்பிக் கொண்டிருக்கிறது. கோடைகாலத்திலும் ஏரி வற்றுவதில்லை. குளம் நிரம்பி வழியும் இந்தச் சந்தர்ப்பத்திலேயே நாமும் அவ்வழியே பாய்ந்து ஓடை வழிசென்று ஏரியை அடைந்து விடுவோம். வா!’ என்று அழைத்தது.
குறட்டை மீனோ விரால் மீனின் அழைப்பைப் பொருட்படுத்தாமல் ‘நீங்கள் வேண்டுமானால் போங்கள். நான் வரவில்லை இங்குள்ள மற்றவர்களுடன் தங்கிவிடப்போகிறேன்’ என்றது.
குறட்டைமீது அக்கறை கொண்ட விரால்,
‘தம்பி! இங்குள்ள ஆமை, தவளை, முதலை நீரிலும், நிலத்திலும் வாழும் இனம் சார்ந்தவை. நம் மீன் இனத்தினால் நீரில் மட்டுமே வாழ முடியும். குளம் வற்றிவிட்டால் அவை நிலத்தில் பயணம் செய்து வேறு எங்காவது நீர் நிலைகளைத் தேடிப்போய்விட முடியும். நம்மினத்தினால் அவ்வாறு முடியாது. ஆகையால் இப்போதே என்னுடன் வந்துவிடு’ என்றது.
‘இல்லை. அவர்கள் என்னுடன் நல்ல உறவுடன் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு உதவுவார்கள். நான் உங்களுடன் வரவில்லை’ என்று குறட்டை தன் நிலைப்பாட்டில் அடம் பிடித்தது.
‘தம்பி! மற்ற இனங்களுடன் நல்லுறவைப் பேணுவதில் தவறில்லை. ஆனால் இனத்தோடு இனம் கூடிவாழ்வதுதான் பாதுகாப்பானது; பலமானது. ஆகவே என்னுடன் வந்துவிடு’ என்று கூறி விரால்மீன் வருந்தி அழைத்தும் குறட்டைமீன் குளத்திலேயே தங்கிவிட்டது. –
நாட்கள் ஓடின. கோடைகாலம் வந்து குளம் வற்றியது. ஆமையும், தவளையும் முதலையும் குளத்தை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டன. குறட்டை நீர் வற்றிய குளத்தில் செத்துக் கிடந்தது.