— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
அண்மைக் காலங்களில் இலங்கைத் தமிழ்ச் சூழலில் கட்சி அரசியலுக்கப்பால் ஒரு பரந்துபட்ட ‘அரசியல் ஐக்கிய முன்னணி’யைத் தமிழர் தரப்பில் உருவாக்க வேண்டுமென்று அரசியல்பத்தி எழுத்தாளர்களும் தமிழ்த் தேசிய அரசியலில் ஈர்ப்பும் ஈடுபாடும் கொண்ட கல்விமான்கள்–துறைசார் நிபுணர்கள்–ஆன்மீகத் தலைவர்கள் உட்பட அனைத்து ஆர்வலர்களும் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். ஆனால், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களைப் பொறுத்தவரை அவை செவிடன் காதில் ஊதிய சங்குகளாகத்தான் இன்றும் உள்ளன.
கடந்த பாராளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் 07.08.2020 அன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வருமாறு கோரிக்கை விடுத்திருந்தார். விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தானும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் தயாராகவிருப்பதாக அதே தினத்தில் அறிக்கையொன்றினையும் வெளியிட்டிருந்தார். மாவை சேனாதிராசாவும் ஒரு கூட்டு முயற்சியில் இறங்கியிருந்தார். ஆனால் இவை எதுவுமே நம்பிக்கையூட்டுவதாகவிருக்கவில்லை.
இந்தப் பின்புலத்திலும் கடந்த காலங்களில் தமிழ் அரசியல் கட்சிகளிடையே ஏற்படுத்தப்பெற்ற கூட்டுகள் எதுவுமே மக்கள் நலன் சார்ந்த இலக்கு எதனையும் எட்டவில்லையென்ற பட்டறிவின் அடிப்படையிலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இவ்வாறான பரந்துபட்ட ‘அரசியல் ஐக்கிய முன்னணி’ நடைமுறையில் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியதோர் எண்ணக்கருவை முன்வைப்பதே இப்பத்தியின் நோக்கமாகும்.
இத்தகையதோர் ‘அரசியல் ஐக்கிய முன்னணியை’ உருவாக்குவதற்கு முதலில் முயற்சியெடுக்க வேண்டியது யார்? அதாவது பூனைக்கு மணி கட்டுவது யார்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது எவ்வளவு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும்–கடந்த காலங்களில் அது பல அரசியல் தவறுகளை இழைத்திருந்தாலும்–கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்குத் தமிழர்களிடையே அதற்குப் பாரிய வாக்கு வங்கிச் சரிவு ஏற்பட்டிருந்தாலும் கூட, ஜனநாயக ரீதியாகத் தேர்தல்களில் பெரும்பான்மைத் தமிழர்களால் ஆதரிக்க பெற்று, ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையில் (10) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் கட்சியென்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அதன் பங்காளிக் கட்சிகளுள் தலைமைக் கட்சியான தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் மூத்த அரசியல்வாதியுமான இரா. சம்பந்தன் அவர்களுக்கே அத்தகைய பரந்துபட்ட அரசியல் ஐக்கிய முன்னணி ஒன்றினை உருவாக்க வேண்டிய தார்மீகக் கடமையும், பொறுப்பும், பொருத்தப்பாடும் உண்டு என்பதை இப்பத்தி வலியுறுத்த விரும்புகிறது.
நடந்தவையெல்லாம் ஒருபுறம் இருக்க நடக்க வேண்டியதைப் பற்றிப் பார்ப்போம். முதற்கட்டமாக இரா. சம்பந்தன் அவர்கள் செய்யவேண்டியது என்னவெனில் வடக்கு-கிழக்கில் செயல்படுகின்ற தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பெற்ற மற்றும் பதிவு செய்யப்பெறாத அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளினதும் தலைவர்களைத் தனிப்பட அவரே கடிதம் மூலமும் தொலைபேசி மூலமும் அழைத்து ஓரிடத்தில் சினேகபூர்வமாக ஒன்று கூட்டவேண்டும். இதனைக் கட்சி அரசியலுக்கப்பால் எந்த நிபந்தனைகளுமின்றித் திறந்த மனதோடும் அர்ப்பணிப்போடும் அவர் படியிறங்கி வந்து செய்ய வேண்டும்.
முதற்கட்டமாக இது நடைபெறுமானால் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களின் இக்கூட்டுச் சந்திப்பில் துறைசார் நிபுணர்களை உள்வாங்குவது போன்ற அடுத்த கட்ட நகர்வுகள் சம்பந்தமாகத் தீர்மானித்துச் செயற்பாடுகளை முன்னோக்கி நகர்த்தி முடிவில் வினைத்திறன்மிக்க ‘தமிழர் தரப்பு’ ஒன்றினையும் தோற்றுவிக்க முடியும்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள இரா. சம்பந்தன் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் இந்த விடயத்தை அவருக்கு எடுத்துச் சொல்லி இச்சந்திப்பை ஏற்படுத்த உதவ வேண்டும். கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கும், கொள்கை ரீதியான கருத்து முரண்பாடுகளுக்கும் அப்பால் இச்சந்திப்பு நடைபெற வேண்டும்.
தமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டதொரு கூட்டு நடவடிக்கையே. ஏனெனில், அரசியல் மக்களுக்கானது என்றால் கொள்கைகள்–கோட்பாடுகள்–சித்தாந்தங்கள்–கருத்துகள்–எண்ணங்கள்–கொடிகள்–சின்னங்கள்–கட்சிகள் என எல்லாமே மக்களுக்கானவைதான். மக்களுக்காக அவற்றில் மாற்றம் ஏற்படுவது தவறல்ல. இந்த மாற்றங்களைத்தான் மக்கள் இன்று வேண்டிநிற்கிறார்கள். எனவே மாற வேண்டியவர்கள் தமிழர்தம் அரசியல் தலைமைகளே.