— சீவகன் பூபாலரட்ணம் —
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களின் மற்றுமொரு உரை பல ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
சுற்றுலாப் பயணத்துறை அமைச்சு, கப்பல் மற்றும் துறைமுகங்கள் அமைச்சு மற்றும் விமானப்போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலயங்கள் ஆகியவற்றுக்கான இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் அவர் ஆற்றிய உரையே இங்கு வரவேற்கப்பட்டுள்ளது.
இந்த உரை சுமார் 29 நிமிடங்கள் வரை நீட்சியானது.
தம்மை பெரும் தமிழ் தேசியவாதிகளாக காட்டிக்கொள்ளும் சில ஊடகங்களும், முகநூல் போராளிகளும் இந்த உரையின் சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் வரையிலான சுருக்கமான, குறைக்கப்பட்ட அளவு வீடியோவை காண்பித்து தமது பாராட்டுக்களை கூறியிருந்தனர். அதாவது அவரது உரையில் மக்களை உணர்ச்சியூட்டக்கூடிய பகுதிகளை வெட்டி எடுத்து அவற்றை மாத்திரம் முகநூலில் பதிந்து, தமது பணியை அவர்கள் நிறைவேற்றிக்கொண்டார்கள். சரி அந்தப் பகுதி பற்றி பின்னர் முடிந்தால் பார்ப்போம். ஆனால், சாணக்கியனின் உரையில் எமது கவனத்தை ஈர்த்தது இவர்கள் பெரிதாகக் கண்டுகொள்ளாத, ஆனால் அவரது உரையில் பெரும்பகுதியை ஆக்கிரமித்த ஏனைய பாகம்தான்.
அபிவிருத்தி பற்றிய உரை
உண்மையில், சாணக்கியன் தனது உரையில் சுமார் 60 வீதத்துக்கும் அதிகமான பகுதியை நாட்டின் அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தித்தான் பேசியுள்ளார். இதனை நாம் வரவேற்கிறோம். தன்னால் முடிந்தவரை இருக்கும் யதார்த்தத்தை மனதில் வைத்து பரிந்துரைகளை செய்ய முனைந்துள்ளார்.
எந்த அரசாங்கமாக இருந்தாலும் கடந்த அரசாங்கம் ஆரம்பித்த விடயங்களை கைவிட்டுச் செல்லும் போக்கை விட்டு, மக்கள் நலனை முன்னிட்டு கடந்த அரசாங்கம் ஆரம்பித்த திட்டங்களையும் ஆக்கபூர்வமான வகையில் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
கப்பல் போக்குவரத்து தொடர்பாக குறிப்பிட்டு பேசிய அவர் தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை பேசினார். நல்ல கோரிக்கை இது. மறுபுறம் இது சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் உதவும். இன்று இலங்கையை பொறுத்தவரை அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியப் பயணிகளே. அதற்கு இந்தக் கப்பல் போக்குவரத்து உதவும் என்பது அவரது கருத்து. கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய கருத்துத்தான். ஏனெனில் கடந்த காலத்தில் பல தடவைகள் இந்தக் கப்பல் போக்குவரத்துக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் அவை நடக்கவில்லை.
அடுத்து சுற்றுலாப் பயணத்துறை குறித்து பேசிய அவர், இன்றைய யதார்த்தத்தில் உலகெங்கும் சுற்றுலாத்துறை இருக்கும் நிலைமையை கருத்தில்கொண்டு, இலங்கை எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சிலவற்றை பரிந்துரைத்தார்.
அதுமாத்திரமல்லாமல், இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் பிரசன்னா ரணதுங்க அவர்களுக்கு இருக்கும் சவாலை தான் புரிந்துகொள்வதாகவும், அதனை நிறைவேற்றும் தகமை அவருக்கு இருக்கிறது என்றும் ஊக்கப்படுத்திப் பேசினார். உணர்ச்சியூட்டும் பேச்சுக்களை காத்துக்கிடக்கும் பல உணர்ச்சிப் பிழம்புகளுக்கு இது ஏமாற்றமான விடயமாக இருந்த போதிலும், இப்படி தான் உணர்ந்த யதார்த்தத்தை வெளிப்படையாக பேசிய சாணக்கியனை பாராட்டத்தான் வேண்டும். அதுமாத்திரமல்லாமல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தேவையான வள ஏற்பாட்டுக்கு உதவ தான் தயாராக இருப்பதாகவும் பேசினார். இது ஒருவகையில் தேவையான பேச்சுத்தான். சாதகமான அணுகுமுறை.
வடக்கு, கிழக்கு சுற்றுலா வளர்ச்சி:
அடுத்த விடயம் வடக்கு, கிழக்கில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு செய்யப்பட வேண்டிய சில விடயங்கள் குறித்த பரிந்துரைகள். வடக்கு, கிழக்கை பொறுத்தவரை அங்கு இன்றுவரை இருக்கக்கூடிய பெரும் பிரச்சினை, அந்தப் பகுதிக்கான போக்குவரத்து வசதி. வடக்கு கிழக்குக்கான பயணத்தூரம் சுருக்கப்பட வேண்டியது அவசியம். அதனை, தனது அனுபவத்தை கொண்டு அவர் வலியுறுத்தினார். அவர் சொன்னதுபோல வடக்கு, கிழக்கு மாவட்டங்களுக்கான போக்குவரத்து நேரம் சுருக்கப்படாவிட்டால், பாதைகள் மேம்படுத்தப்படாவிட்டால் அங்கு சுற்றுலா வளராது.
அதுமாத்திரமன்றி, வெளிநாடுகளில் இருந்து வரும் ஒரு சுற்றுலா பயணி ஏன் வடக்கு, கிழக்கு மாவட்டங்களுக்கு போக வேண்டும் என்பதை நாம் அந்தப் பயணியின் பார்வையில் இருந்து ஆராய்ந்தாக வேண்டும். அங்கு போய் பார்க்க என்ன இருக்கிறது என்பதை நாம் ஆராய்ந்தாக வேண்டும்.
உண்மையில் அங்கு குறிப்பாக மட்டக்களப்பு போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான பல அம்சங்கள் இருக்கின்றன, ஆனால், அங்கு வரும் ஒரு பயணி அவை அனைத்தையும் ஒரு திட்டத்துடன் சென்று பார்த்து வருவதற்கான ஏற்பாடுகள் ஏதும் அங்கு கிடையாது, இதன் காரணத்தினாலேயே பலர் தென்பகுதிக்கு மாத்திரம் சென்றுவிட்டு வடக்கு, கிழக்கை தவிர்த்துவிடுகின்றனர். வடக்கு, கிழக்கை தமது பூர்வீகமாகக் கொண்ட புலம்பெயர் தமிழர் மாத்திரமே அங்கு பெரும்பாலும் சென்று வருகின்றனர்.
ஆகவே வடக்கு, கிழக்கில் சுற்றுலா தலங்களை அணுகுவதற்கான மற்றும் அவற்றை இலகுவில் பார்த்து வருவதற்கான, அனுபவிப்பதற்கான உட்கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இந்த விடயத்தையும் அண்மையில் மிகவும் உரக்ககூறியவர் சாணக்கியந்தான். அவர் சொன்ன மட்டக்களப்பு ஏரிக்கான படகு வீட்டுத்திட்ட உதாரணம் நியாயமானது. அதற்கான உட்கட்டுமானத்தை அரசாங்கம் ஏற்படுத்தினால்தான், படகு வீடுகளில் முதலீடு செய்ய முனைபவர்கள் கூட அங்கு வருவார்கள்.
அதேவேளை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் சுற்றுலா விடுதிகளில் கூட பிற பிரதேசத்தவர் வேலை செய்வது குறித்தும், உள்ளூரவருக்கு ஒழுங்கான பயிற்சிகள் வழங்கப்படாதது குறித்தும் அவர் பேசினார். மட்டக்களப்பில் இருக்கக்கூடிய சுற்றுலாத்துறை அம்சங்கள் சிலவற்றையும் அவர் குறிப்பிட்டார். அவற்றில் வாதப்பிரதிவாதங்கள் இருந்தாலும் அவை ஆய்வுக்கு ஏற்கப்படக்கூடிய கருத்துகள்தான்.
உண்மையில் சாணக்கியனின் உரையில் பெரும் இடத்தை இந்த விடயங்கள்தான் நிரப்பியிருந்தன. இவைதான் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் அந்தப் பகுதி மக்களுக்கான எதிர்கால வாழ்வுக்கு ஏதாவது ஒரு வகையிலாவது உதவும். அந்த வகையில் தனது உரையின் பெரும்பகுதியை அவர் இதற்கு பயன்படுத்தியது வரவேற்கத்தக்கதுதான்.
சாணக்கியன் மூன்று மொழியில் பேசுபவர் என்பதனால், இந்த உரையிலும் சில இடங்களில் அவர் மூன்று மொழியையும் பயன்படுத்தினார். அவர் இதனை பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறார் என்ற விமர்சனமும் உண்டு. ஆனால், இன்றைய உரையில் அப்படியாக அவர் செய்ததாக நான் உணரவில்லை(ஒரு இடத்தைத் தவிர).
அவரது உரையில் சிங்களம் மற்றும் தமிழும் இடம்பெற்றிருந்தாலும் அது அடிப்படையில் ஆங்கிலத்திலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது. அவருக்கு ஆங்கிலம் சிறப்பாக முடியும் என்பதால் அது சரிதான். ஆனால், இடையில் அவர் சிங்களத்தில் பேசியது ஆளும்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கத்தான். கேள்விகள் சிங்களத்தில் இருந்ததால், அவற்றுக்கு அவர் அந்த மொழியில் பதிலளிக்க தூண்டப்பட்டார், அதிலும் தவறில்லை.
மட்டக்களப்பில் கோயில்கள் இருக்கின்றன என்று யாரோ ஒரு உறுப்பினர் சொல்ல முனைந்தபோது (கேலியாக என்று நினைக்கிறேன்) அதற்கு பதிலளித்த அவர், நீங்கள்தான் அகழ்வாராய்ச்சி திணைக்களத்தைக் கொண்டு கோயில்களை கையகப்படுத்துகிறீர்களே என்று பதில் கருத்துச் சொன்னார்.
ஆனால், முஸ்லிம்கள் பாதிக்கப்படுவது குறித்தும், அவர்களது அடக்கம் செய்வதற்கான உரிமை மறுக்கப்படுவது குறித்தும் பேசும்போது அவர் தமிழை ஒரு இடத்தில் தெரிவு செய்து பேசினார். இது கொஞ்சம் அவர் செய்த அரசியல்தான். உண்மையில் இந்த இடந்தான் முகநூல் போராளிகளுக்கு தீனி போட்டதும் கூட. ஆக, இந்த இடத்தை தவிர அவர் தனது உரையில் தனக்கு பிரச்சாரம் தேட மூன்று மொழியையும் பயன்படுத்தியதாக என்னால் கொள்ள முடியவில்லை.
(இந்த இடத்தில் இன்னுமொன்றையும் நான் சொல்லியாக வேண்டும். சாணக்கியன் முஸ்லிம்கள் தொடர்பாக பேசிய பகுதியை கத்தரித்துப்போட்ட பல போலி தமிழ் உணர்வாளர்களை நானும் அவதானித்தேன். முஸ்லிம்களுக்காக தாம் போர்க்களம் இறங்கியவர்கள் போல அவர்கள் தம்மை காண்பித்துக்கொண்டார்கள். ஆனால், இவர்களில் பலர்தான் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறுகளை கொட்டியவர்கள் என்பதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இது இந்தக் கட்டுரைக்கு பொருத்தமில்லாத பகுதி என்பதால், இதனை இத்தோடு விட்டுவிடுகிறேன்.)
அரசாங்கக்கட்சி உறுப்பினர்கள்
அரசாங்கக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இடையுறு செய்தது அவரை ஆத்திரமடையச் செய்ததால், அவர் தனது உரையில் சில இடங்களில் உணர்ச்சி வசப்பட்டார் என்பது உண்மை. அதனை அவர் தவிர்த்திருக்கலாம். ஆனால், அங்கிருந்த நிலைமையில் முழுமையான பழியை அவர் மீது போட முடியாது. அரசாங்க அணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சகிப்பீனம், வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நாடாளுமன்ற மரியாதைக்கு உகந்தவை அல்ல. இது மிகவும் வருந்தத்தக்க விடயம். குறிப்பாக தமது ஆட்சியில் ஒரு அமைச்சின் ஒதுக்கீட்டுக்கான விவாதத்தில், தமது அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க ஆதரவாக இருக்கும் ஒரு எதிரணி உறுப்பினர் தனது சார்பில், தனது இனம் சார்பில் முன்வைக்கும் ஒரு சில விமர்சனங்களையாவது உள்வாங்க முடியாமல், சபை நடவடிக்கையை குழப்பும் வகையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் நடந்துகொள்வது சபையை அவமதிக்கும் நடவடிக்கையாகும்.
உண்மையில் ஒரு தமிழ் தேசியக் கட்சியின் உறுப்பினரின் நாடாளுமன்ற உரை இந்த வகையில் இருப்பது வரவேற்கத்தக்கதே. தமது இன உரிமைகளுக்கான கோரிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும், தனது நாடு மற்றும் பிரதேசத்துக்கான அபிவிருத்தி குறித்து உரியவகையில் கோரிக்கைகளை முன்வைத்து ஆக்கபூர்வமாக உரையாடுவதுதான் எமது தேவையும் ஆகும். அதற்காக சாணக்கியனை பாராட்டுவோம். அவர் உணர்ச்சி வசப்பட்டு உரையாடுவதை எதிர்காலத்தில் தவிர்க்கவும் கேட்கிறோம்.
இருந்தபோதிலும் சாணக்கியன் தனது உரையை அனைத்து இனங்களையும் மக்களையும் உள்வாங்கும் பாணியிலேயே பேசியிருந்தார். இறுதிப் பகுதியில் உங்கள் நடவடிக்கைகள் எங்களையும் சேர்த்து அழிக்கும், அனைவரையும் அழிக்கும் என்று பேசி முடித்தது, ஒரு நல்ல அணுகுமுறை. நாங்கள் உங்களை அழிப்போம் என்றோ அல்லது நீங்கள் அழிந்துபோவீர்கள் என்றோ பேசிய பாணிகளுக்கு பதிலாக உங்களால் நாம் எல்லாரும் அழிந்துபோவோம் என்று பேசுவது ஏனைய இன மக்களையும் நம்மை நோக்கி ஈர்க்கும் ஒரு பாங்கு. அது நல்லதுதான்.
பழம் இருக்க காய் தின்றோர்
ஆனால், அவர் தனது உரையில் முக்கியமாகச் சொன்ன விடயங்களை விட்டுவிட்டு, அதுவும் ஒரு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் அவர் பேசிய பெரும்பாக அம்சங்களை தவிர்த்துவிட்டு, அவர் சொன்ன சில விடயங்களை மாத்திரம் சுருக்கி பிரச்சாரப்படுத்துவது, போரினால் பாதிக்கப்பட்டு ஏதாவது அபிவிருத்தி தமக்கு நடக்காதா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் வடக்கு கிழக்கின் மக்களுக்கு செய்யும் பெரும் பாதகம் என்பதை இந்த உணர்ச்சிப் பிழம்புகள் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பும் பகுதியை பிரச்சாரப் படுத்துங்கள் ஆனால், ஏனைய ஆக்கபூர்வமான பகுதிகளை ஏன் வெட்டுகிறீர்கள்? எஞ்சியிருக்கும் மக்களைப் பற்றி கொஞ்சமாவது சிந்தியுங்கள்.
அவரது உரையின் பெரும்பகுதி அபிவிருத்தியை பற்றிப் பேச, அதனை தவிர்த்து தமக்கு தேவையான சிறிய பகுதியை மாத்திரம் எடுத்து பிரச்சாரம் செய்யும் இந்தச் செயற்பாட்டை “கனி இருக்க காயைத் தின்ற” கதையாக கூறுவதா அல்லது இவர்களை, “நீரைத்தவிர்த்து பாலை அருகும் அன்னத்துக்கு மாற்றாக, பாலைத் தவிர்த்து நீரை அருகும் ஆசாமிகளாகச்” சொல்வதா?
சரி, வாழ்த்துக்கள் சாணக்கியன். ஆனால், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஒரு பகுதி கடமைதான் அவை உரையாடல். அவர்களின் இன்னுமொரு பகுதி, உண்மையில் பெரும் பகுதி, ஏனைய மக்களுக்கான நடவடிக்கைகள். அவைதான் உங்கள் மக்களை வாழ வைக்கும் அவற்றையும் உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.