இலங்கையில் நவ தாராளவாதம் தோல்வியடைந்தது: யாழ்ப்பாணத்தில் இருந்து ‘பொருளாதார ஜனநாயகம்’ கோரும் பரிந்துரை

இலங்கையில் நவ தாராளவாதம் தோல்வியடைந்தது: யாழ்ப்பாணத்தில் இருந்து ‘பொருளாதார ஜனநாயகம்’ கோரும் பரிந்துரை

— தொகுப்பு : வி.சிவலிங்கம் —

தற்போது பாராளுமன்றத்தில் 2020-2021 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்துள்ளன. நாட்டின் பொருளாதாரம் பல்வேறு பிரச்சனைகளால் மிகவும் மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந் நிலை நீடிக்குமாயின் அவை இன்றைய தலைமுறையை மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினரையும் மிகவும் பாதிக்கும்.  

நாட்டின் பொருளாதாரத்தின் இன்றைய நிலை குறித்து ஊடகங்கள் மௌனமாக உள்ளன. பொருளாதார நிபுணர்கள் எவ்வித அபிப்பிராயங்களையும் வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றனர். அரச உயர் மட்டங்களில் அல்லது உயர் பதவிகளில் இருப்போர் தமது பதவிகளைக் காப்பாற்றுவதில் குறியாக உள்ளனர். தேசத்தின் பிரதான பொருளாதார மையங்கள் படிப்படியாக ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளன.  

சமீபத்தில் ஜனாதிபதி வெளியிட்ட தனது உரையில் நாட்டின் பொருளாதாரம் குறித்தோ அல்லது ‘கொரொனா’ நோயின் தாக்கம் தொடர்பாக ஏற்பட்டுள்ள நிலமைகள் குறித்தோ அல்லது பல ஆயிரக் கணக்கானோர் தமது தொழில்களை  இழந்து கடனாளியாக மாறிவரும் ஆபத்துகளைத் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தோ பேசவில்லை. பதிலாக நாட்டில் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக பல உயிர்கள் பறிக்கப்பட்டதாகவும், இதனால் நாடு முழுவதும் கொலைகளின் அலை ஆரம்பமாகியிருந்ததாகவும், போதைப் பொருள் கடத்தல்காரர்களின் மையமாக நாடு மாறியிருந்ததாகவும் குறிப்பிட்டு, அவை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

ஆனால் அவரது உரை முடிவடைந்த சில வாரங்களுக்குள்ளாகவே சிறைச்சாலைகளில் குழப்பங்கள் ஏற்பட்டு பலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது சந்தேகத்தின் பேரில் தடுப்புக் காவலில் வைப்பதாக அல்லது  பிணை செலுத்தாதவர்கள் என்ற பெயரில் சிறைக்குள் தள்ளப்படுபவர்கள் சில காலங்களில் சிறைச்சாலைக் குழப்பங்கள் என்ற பெயரில் அதிரடிப் படைகள் அழைக்கப்படுவதும், முக்கிய சந்தேக நபர்கள் மிகவும் திட்டமிடப்பட்ட அடிப்படையில் சுட்டுக் கொல்லப்படுவதும் சாமான்ய நிகழ்வுகளாக மாற்றமடைந்து வருகின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள போதை வஸ்து வியாபாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளைக் காப்பாற்ற இந்த முயற்சி என செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன.  

அச்ச உணர்வை ஏற்படுத்தும் உள்ளூர் சூழல் 

இச் செய்திகள் மக்கள் மனதில் ஒருவகைப் பீதியையே உருவாக்கியுள்ளன. தமது எதிர்காலம் தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இவை சமூகத்தின் ஒரு பிரிவினரையே இவ்வாறான நிலைக்குத் தள்ளி வருவதாக சமூக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இவ்வாறான அச்ச சூழல் பூகோள அடிப்படையிலும். கல்வித் தராதர அடிப்படையிலும், அரசியல் அறம் குறித்த அடிப்படையிலும் காணப்படுகின்றன. உதாரணமாக பூகோள நிலமைகளை அவதானிக்கும்போது குறிப்பாக கிராமப்புறங்கள், உள்ளுர் சிறிய நகர்ப்புறங்கள் என்பவற்றில் வாழும் மக்களின் வருமானத்திற்கும், பாரிய நகர்ப்புற மக்களின் வருமானத்திற்குமிடையே மிக அதிக ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன. இவை நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவு பிரதிபலிப்பதில்லை.  

சமூக ஏற்றத்தாழ்வின் அடிப்படைகள்   

இதற்கான பிரதான காரணம் கல்வியில் காணப்படும் ஏற்றத்தாழ்வு ஆகும். கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் நகர்ப்புறங்களை நாடுகின்றனர். சாமான்ய மக்களுக்காக திட்டங்கள் வகுப்பதாக அவர்களே கூறுகின்றனர். ஆனால் அத் திட்டங்கள் தமது நலன்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தீர்மானிக்கப்படுகின்றன. இதனால் சாமான்ய விவசாயியை விட பல மடங்கு வருமானத்தை அந்த அதிகாரி பெற வாய்ப்பு ஏற்படுகிறது. நாட்டின் பொதுவான போக்கை அவதானித்தால் கல்வி அறிவில் சிறந்தவர்களே சிறப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கைத் தரத்தினைப் பெறுகின்றனர். ஏனெனில் இன்றைய விஞ்ஞான யுகத்தில் கல்வி என்பது தொழிற்துறைக்கான சிறப்புத் தேர்ச்சியை வழங்குகிறது. இவர்களே புதிய அதிகார வர்க்கமாக மாற்றமடைந்துள்ளனர்.  

கல்வியாலும், தொழில் வாய்ப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் இப் பொருளாதாரப் போட்டியில் தாக்குப்பிடிக்க முடியாதவர்களாக மாற்றமடைந்துள்ளனர். இதனால் கல்வியில் பின்தங்கியுள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் தமது வருமானப் பற்றாக்குறையால் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். குறிப்பாக, கல்வி வாய்ப்பினால் தமது வருமானத்தை அதிகரித்துள்ள பிரிவினரின் வாழ்க்கைக் காலத்தை அவதானித்தால் ஏனையோரின் வாழ்வுக் காலம் மிகவும் குறைந்ததாக உள்ளது. போதிய போஷாக்குள்ள உணவைப் பெற முடியாத காரணத்தால் நோய்களுக்கு முகம் கொடுக்கின்றனர். நோய்களுக்கான மருந்து வகைகளின் விலை அதிகரிப்பு மேலும் அம் மக்கள் மீது தாக்குதலைத் தொடுக்கிறது.  

இதற்கான பிரதான காரணம் நாட்டில் காணப்படும் பல்வேறு துறைகளில் காணப்படும் ஏற்றத்தாழ்வு ஆகும். எனவே நாட்டில் நடைமுறையிலுள்ள அரசியல், சமூக, பொருளாதாரக் கட்டுமானம் என்பது ஒரு சிறு பிரிவினரின் நலன்களை நோக்கியதாக உள்ளது என்றே நாம் கூறலாம். இவர்களே நாட்டின் பொருளாதாரத் திட்டங்களைத் தீர்மானிக்கின்றனர். இச் சிறு பிரிவினரின் ஆதிக்கத்தில் நாட்டின் சகல துறைகளினதும் தீர்மானங்கள் தங்கியிருப்பதால் அவர்களே நாட்டின் உற்பத்தியையும், விநியோகத்தையும், ஏற்றுமதியையும் மற்றும் பல முடிவுகளை மேற்கொள்கின்றனர். இதன் விளைவாக இன்றைய பெற்றோர் தமது காலத்தை விட தமது பிள்ளைகளின் எதிர்காலம் மிகவும் மோசமாகச் செல்லலாம் என்ற அச்சநிலையில் உள்ளனர். இவை குறிப்பாக கல்வியில் பின்தங்கிய பிரிவினர் மத்தியில் அதிகமாகக் காணப்படுகிறது.  

அச்சத்தினால் சூழப்பட்டுள்ள போதிய கல்வி அறிவற்ற மக்களுக்கும், கல்வியில் உயர் மட்டங்களை அல்லது அதிகார உச்சங்களை எட்டிய மக்களுக்குமிடையே ஏற்பட்டு வரும் இடைவெளி அரசு தொடர்பான சந்தேகங்களையும் அதிகமாக்கியுள்ளது. நாட்டின் சிறு பிரிவினர் ஏனைய மக்களிடமிருந்து தம்மை அந்நியப்படுத்திச் செல்வதாக உணர்கின்றர். தமக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் படிப்படியாக இப் பிரிவினரே  நீக்குவதாகவும் உணர்கின்றனர்.  

தேசாபிமானம் அல்லது தேசப்பற்று என்ற கோஷங்கள் தற்போது மிக அதிக அளவில் ஒலிக்கிறது. ஒரு புறத்தில் தேசத்தின் வளங்களைச் சிறு பிரிவினரின் ஆதிக்கத்துக்குள்  எடுத்துச் செல்லும் அதேவேளையில், அவற்றை மக்கள் மத்தியில் மறைக்கும் வகையில் வேறு பக்கங்களை நோக்கி கவனம் குவிக்கப்படுகிறது. இதற்கு இன்றைய ஊடகங்கள் அதாவது இச் சிறு பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் உதவிபுரிகின்றன.  

நாட்டின் நீண்ட எதிர்காலத்திற்கு எவ் வகையான அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் பொருத்தமானது என்பது தொடர்பான வாதங்கள் மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் நசுக்கப்பட்டு ஜனரஞ்சக அரசியல் முன்வைக்கப்படுகிறது. உதாரணமாக, நாட்டின் வரவு செலவுத் திட்டம் தொடர்பான வாதங்கள் பாராளுமன்றத்தில் நிகழ்கையில் சிறைச்சாலை சம்பவங்களை ஊடகங்கள் முன்னிலைப்படுத்தி கவனத்தை இடம்மாற்றுகின்றன. நாட்டில் ‘கொரொனா’ நோயின் தீவிரம் காரணமாக பல பொருளாதார மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல ஆயிரம் மக்கள் தொழில்களை இழந்து, வருமானத்தையும் இழந்துள்ளனர். இதனால் பாரிய கடன்களுக்குள் அமிழும் நிலை ஏற்பட்டுள்ளது. தொற்று நோயின் பாதிப்புகள், வருமானப் பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஏற்றுமதி, இறக்குமதிப் பாதிப்பு என பல பிரச்சனைகளுக்கு மத்தியில் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.  

ஆனால் இவ் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்கு முன்பதாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மிகவும் கவனத்திற்குரியன. அதாவது புதிய அரசியல் யாப்பு விரையில் சமர்ப்பிக்கப்படும் என்ற மத்தாய்ப்புடன் 20வது திருத்தம் முன்வைக்கப்பட்டது. இத் திருத்தம் நாட்டின் அரசியல் வழிமுறையை முற்றாக மாற்றும் வகையில் ஜனாதிபதிக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் என்பது ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிற்குள் செயற்படும் விதத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் நிர்வாக யந்திரம் முழுமையாகவே ராணுவத்தின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.  

இங்கு இரண்டு அரசியல் வழிமுறைகள் காணப்படுகின்றன. அதாவது ஏற்கனவே கூறப்பட்டது போல நீண்ட எதிர்காலத்திற்கான அரசியல், பொரளாதார வழிமுறை என்ன? என்பதும், அதற்குப் பதிலாக நாட்டிற்குப் பாரிய பாதுகாப்பு  ஆபத்து நேர்ந்துள்ளதாகவும், பயங்கரவாதம், அந்நிய தாக்குதல்கள் நெருங்கியுள்ளதாகவும் கூறி ஒரு புறத்தில் பொருளாதார நலன் சார்ந்த சக்திகளின் நிகழ்ச்சி நிரலை மக்களின் எதிர்ப்புகளைக் கவனத்தில் கொள்ளாது நடைமுறைப்படுத்துவது, மறு பக்கத்தில் ராணுவ அதிகாரத்தை மக்கள் தவிர்க்க முடியாத விதத்தில் ஏற்றுக்கொள்ள வைப்பது என்பதாகும்.  

“பொருளாதார ஜனநாயகம்” 

இவ்வாறான பின்புலத்தில் சமீபத்தில் வட பகுதியிலுள்ள பொருளாதார அறிஞர் பிரிவினர் ‘பொருளாதார ஜனநாயகம்’ என்ற அடிப்படையில் நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து தம்மை விடுவிப்பதற்கான புதிய அணுகுமுறைகளின் அவசியம் குறித்து கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த அறிக்கை தேசிய அளவிலான வகையில் உள்நாட்டுப் பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்காக உற்பத்தியாளர், நுகர்வோர், விற்பனையாளர் என்போரினதும், விவசாயிகள், விவசாய மற்றும் கூலித் தொழிலாளர்களின் வருமானங்களைப் பாதுகாப்பது குறித்ததுமான விபரங்களை வழங்கியிருந்தது.  

ஓட்டு மொத்தமான இலங்கையின் எதிர்கால, கொரொனாவிற்குப் பின்னதான பொருளாதார கட்டுமானம் குறித்துப் பேசப்படும் தமிழ்ப் பிரதேசத்திலிருந்து வெளியாகியுள்ள அறிக்கை இதுவாகும். தமிழ் அரசியல் இதுவரை நாட்டின் பொதுவான பொருளாதார கட்டுமானம் தொடர்பாகவோ அல்லது தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தியை ஒட்டுமொத்த தேச அபிவிருத்தி திட்டங்களுடன் எவ்வாறு இணைத்துச் செல்வது? என்பது குறித்தோ பேசியதில்லை. அந்த வகையில் தற்போது வரவு செலவுத் திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறும் தருணத்தில் அவை குறித்த விபரங்களை மையமாகக் கொண்ட தொகுப்பாக இக் கட்டுரை அமைகிறது.  

நவ தாராளவாத அடிப்படைகள் 

1977ம் ஆண்டில் ஜே ஆர் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட நவ தாராளவாத பொருளாதார கொள்கைகள் நாட்டின் உற்பத்தித் துறையைப் பன்முகப்படுத்தி உலகின் பல்வேறு சந்தைகளுக்கான ஏற்றுமதிக்குரிய வகையில் பொருளாதாரக் கட்டுமானங்களை மாற்றி அமைப்பதாகவே கூறப்பட்டது. குறிப்பாக இலங்கையை இன்னொரு சிங்கப்பூராக மாற்றுவதாக அவர் உறுதியளித்திருந்தார். ஆனால் நாடு 43 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இருந்தும் வாக்குறுதியளிக்கப்பட்ட சிங்கப்பூராக மாற்றும் திட்டம் இம்மியளவும் நகர்ந்ததாக இல்லை. மக்களின் வருமானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பெருமளவானை நாட்டின் ஒரு சிறு பிரிவினர்களின் கைகளில்தான் குவிந்திருக்கிறது. தற்போது கொரொனா நோயின் தாக்குதல்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் அதுவும் ஏற்றுமதி வர்த்தகத்தில் தங்கியுள்ள பொருளாதாரம் மேலும் சிக்கலுக்குள் மாட்டியுள்ளது.  

நவதாராளவாத கொள்கைகள் என்பது சுதந்திர வர்த்தக நடவடிக்கைகளிலும், அதற்கான நிதி ஏற்பாடுகளிலும், நாட்டின் முக்கிய வளங்களைத் தனியார் மயப்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பதையும் பிரதான நோக்கங்களாகக் கொண்டிருந்தது. ஆனால் இன்றுள்ள நிலையில் அவை யாவுமே மிகவும் நிச்சயமற்ற நிலையிலிருப்பதை நாம் காண்கிறோம். அவ்வாறெனில் கடந்த 43 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட பொருளாதாரம் மிகவும் ஆட்டம் கண்டுள்ளதை நாம் உணரலாம். ஏற்கனவே குறிப்பிட்டது போல சுதந்திர வர்த்தகம் என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. 

அமெரிக்க பொருளாதாரம் 

 ‘அமெரிக்காவுக்கே முதன்மை’ என்ற கோஷத்துடன் அமெரிக்க பொருளாதாரம் சுதந்திர ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தைத் தடுத்துள்ளது. அமெரிக்க பொருளாதாரம் சீனாவின் இறக்குமதியிலேயே அதிகம் தங்கியிருக்கிறது. ஏனெனில் அமெரிக்க மூலப் பொருட்களைப் பயன்படுத்தி தனது மலிவு கூலியை மூலதனமாக்கி சீனா தனது ஏற்றுமதியை அதிகரித்தது. அதே போலவே பிரித்தானியா, ஐரோப்பிய சந்தையிலிருந்து விலகி தனது பொருளாதாரத்தை மூடியநிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது. அவ்வாறே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது பொருளாதாரத்தையும் மூடிய நிலையில் வைத்திருக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளன. அவ்வாறாயின் இலங்கையின் ஏற்றுமதிகள் எங்கு செல்வது? அமெரிக்காவே தற்போது சீனாவிடம் கடன் கேட்கும் நிலையிலுள்ளது. அமெரிக்க நுகர்வோர் மிக அதிக அளவில் வங்கிகளிடம் கடன் பெற்றுள்ளனர். ஆனால் வருமானம் அதிகரிக்காமையால் கடன்களைத் திரும்பச் செலுத்துவதில் பிரச்சனைகள் எழுந்துள்ளன. இதனால்  2008ம் ஆண்டில் பெரும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டது. மிக அதிக அளவில் கடன்களின் அடிப்படையில் வீடுகளை வாங்கியிருந்த மக்கள் கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் வங்கிகள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டன.  

நிதித்துறை தாக்குதல்கள் 

உலகின் நிதி நிறுவனங்கள் மிக அதிக அளவிலான நிதிளைக் குவித்து வைத்திருந்தன. இதன் காரணமாக நிபந்தனைகளைக் குறைத்து கடன்களை வழங்கின. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தத்தம் நாட்டில் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளான இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், சீனா போன்ற நாடுகள் வெளிநாட்டு  மூலதனங்களை ஊக்குவித்தன. ஆனால் முதலீடு செய்யும் நாடுகள் குறுகிய காலக் கடன்களையே வழங்கத் தயாராக இருந்தன. ஏனெனில் நீண்ட காலத்தில் ஏற்படப்போகும் நெருக்கடிகளை இந்த நாடுகள் உணர்ந்திருந்தன. இதன் காரணமாக சில குறிப்பிட்ட துறைகளில் மட்டும் முதலீடுகளை மேற்கொண்டனர். குறிப்பாக நகர்ப்புறங்களில் வீட்டுத் திட்டங்கள், தைத்த ஆடைப் பொருட்களை ஏற்றுமதி செய்தல் போன்றன மேற்கொள்ளப்பட்டன. பலர் இவற்றை ஒரு வகை முதலீடு எனக் கருதிப் பங்குபற்றினர். ஆனால் தற்போது அவர்களின் தொழில்கள் நிச்சயமற்ற நிலையை அடைந்துள்ளதால் வீட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தவது பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது. இவ்வாறு பல்வேறு லாபம் தரும் துறைகள் எனக் கருதி முதலீடு செய்தவர்கள் கடன் பளுவுக்குள் சிக்கியுள்ளனர். எனவே கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கு நாடுகளால் முன்வைக்கப்பட்ட சுதந்திர, கட்டுப்பாடற்ற வர்த்தகம் என்பது கலாவதியாகிவிட்டது என்ற முடிவுக்கே நாம் செல்ல முடியும். 

தனியார் மயமாக்கல் 

ஏற்கனவே குறிப்பிட்டது போல நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கியதாக அமைந்ததால் அரச கட்டுப்பாட்டிலிருந்த,  அதுவும் தேசிய மூலவளங்களைப் பயன்படுத்திச் செயற்படும் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசினால் லாபம் தரும் வகையில் அவற்றை நிர்வகிக்க முடியாது என்ற விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. தனியார் நிறுவனங்களே மூல வளங்களை தரமான, சர்வதேச உற்பத்திகளுடன் போட்டியிடும் வகையில் உற்பத்தி செய்ய முடியும் என பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.  

உலக நிதி நிறுவனங்களான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றன நாட்டின் பொருளாதார கட்டமைப்புகளை மாற்றி அமைக்கும்படி வற்புறுத்தின. அதேவேளை அதற்கு ஏற்றவாறான விதத்தில் அரசியல் கட்டுமானங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்துமாறு வற்புறுத்தின. இதன் விளைவாகவே இலங்கையில் 1977இல் புதிய அரசியல் யாப்பு என்ற பெயரில் நவதாராளவாத பொருளாதாரக் கட்டமைப்பிற்கு ஏற்ற வகையிலான அரசியல் கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது.  

இன்று உலகம் முழுவதும் நவதாராளவாத பொருளாதாரக் கட்டமைப்புகள் தோல்வியை நோக்கிச் சென்றுள்ள நிலையில் அரசியல் கட்டுமானமும் தோல்வியை நோக்கிச் செல்வதை நாம் காணலாம். திறந்த பொருளாதார நடவடிக்கைகள் கடந்த 40 ஆண்டுகளில் சமூகத்தின் மத்தியில் பாரிய இடைவெளிகளை ஏற்படுத்தியிருப்பதை நாம் காண்கிறோம். குறிப்பாக நாட்டின் ஒரு சிறிய பிரிவினர் பொருளாதாரத்தில் பாரிய கட்டுப்பாடுகளை வைத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. 30 ஆண்டுகால போர் நிலமைகளும் இவ்வாறான மூலதனக் குவிப்பிற்கான வாய்ப்பாக அமைந்தன. அத்துடன் அரசியல் கட்டமைப்பு அதாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறை படிப்படியாக ஒரு சிறு குழுவின் கைகளில் அதிகாரக் குவிப்பை மேற்கொள்ள உதவியது.  

திறந்த பொருளாதார கொள்கைகளால் சிறு பிரிவினரின் ஆதிக்கத்திற்குள் சென்றுள்ள மூலதனக் குவிப்பும், ஏற்கனவே காணப்பட்ட நிறைவேற்று அதிகாரமிக்க ஆட்சிமுறை அச் சிறு குழுவினரின் கைளில் அரசியல் அதிகாரத்தைக் குவித்திருப்பதும், 30 ஆண்டுகாலப் போர் இச் சிறு குழுவினரின் ஆதிக்க இருப்பிற்கு மிகவும் உதவிகரமாக செயற்பட்டிருப்பதையும் கவனிக்கும்போது தற்போது காணப்படும் அரசியல் மாற்றங்கள் எவ்வாறான திசையை நோக்கிச் செல்லலாம் என்பதை உறுதி செய்யமுடியும். 

பொருளாதார நடவடிக்கைகளை மூடும் நாடுகள்  

சர்வதேசமயமாக்கல் என்ற பெயரில் ஆரம்பித்த நவதாராளவாத கோட்பாடுகள் தற்போது தோல்வியடைந்துள்ளதால் செல்வந்த நாடுகள் படிப்படியாக மீண்டும் தத்தமது பொருளாதாரத்தை மூடிய நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளதை நாம் அவதானித்தோம். இந் நிலையில் கடந்த 40 ஆண்டுகளாக இலங்கையில் நிலவி வரும் நவதாராளவாத பொருளாதாரத் தோல்விகள் யாரின் கைகளில் அதிகாரத்தை ஒப்படைக்கும் நிலைக்குச் செல்லலாம் என்பதை இலகுவாகவே கண்டு கொள்ளலாம். 

ஏற்கனவே குறிப்பிட்டது போல கடந்த 40 ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக ஒரு சிறு பிரிவினரின் ஆதிக்கத்திற்குள் சென்றுள்ள நிலையில் நவதாராளவாத பொருளாதாரம் என்ற குமிழ் தற்போது வெடித்திருக்கிறது. இதனால் பாதித்திருப்பவர்கள் பல கோடி மக்களாகும். எனினும் இவ் வர்த்தக நிலமைகளைப் பயன்படுத்தி பலகோடி பணங்களை முதலீடு செய்துள்ள இச் சிறு பிரிவினர்களும் அச்சத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.  

அவ்வாறாயின் தமது மூலதனங்களைப் பாதுகாப்பதாயின் அவர்கள் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பது ஆச்சரியமானது அல்ல. நாட்டின் பெரும்பாலான மூலவளங்களைக் குவித்து வைத்திருக்கும் இப் பிரிவினர் அம் மூலவளங்களைப் பாதுகாப்பதாயின் இரண்டு பிரதான ஆயுதங்களைக் கையிலெடுக்க வேண்டும். அதாவது நாட்டின் சொத்து சட்ட விரோத சக்திகளிடம் கிடைக்க மக்கள் அனுமதிக்கக் கூடாது என்பதும், அதனைப் பாதுகாக்க நாட்டின் தேசபாதுகாப்பு சக்திகள் செயற்பட வேண்டும் எனக் கோருவதும் தற்போது காணப்படுகிறது. 

நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களை நன்கு அவதானித்தால் இன்று விவாதிக்கப்படும் தேசிய பாதுகாப்பு என்ற அரசியலின் உள்நோக்கங்களை நாம் தெளிவாக அடையாளம் காண முடியும். எனவே ஏற்கனவே ஒரு சிறு பிரிவினரின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ள நாட்டின் பொருளாதார மையங்கள் நவதாராளவாத செயற்பாடுகளின் தோல்வியால் ஆபத்தை நோக்கியுள்ள நிலையில் அம் முதலீடுகளைப் பாதுகாப்பதாயின் அந்நிய நாடுகளின் தாக்குதலுக்குள் நாடு அகப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பிற்காக மிகவும் கட்டுப்பாடான சமூகம் ஒன்றை நிர்மாணித்தல் அவசியம் என்பதாலும், தேசிய செல்வத்தைச் சூறையாடும் நோக்கில் நாட்டின் சமூக விரோத சக்திகளும், உள்நாட்டு தேசவிரோத சக்திகளும் இணைந்து செயற்படுகின்றன எனவும், அவ்வாறான ஆபத்தைத் தடுக்க மிகவும் இறுக்கமான ராணுவ கட்டுப்பாடு மிக்க அரசியல் யாப்பு அவசியம் என்ற விவாதங்கள் இன்று எழுந்துள்ளன. இவ் வழி முறைகளில் சொத்துப் பாதுகாப்பே முதன்மை பெறுகிறது.  

(ஆகவே இந்தக் கட்டுரையின் அடுத்த இறுதிப் பகுதியில் இந்த சிக்கல்களின் மேலதிக பரிமாணம் குறித்தும், அதிலிருந்து விடுபடுவதற்கான பரிந்துரை குறித்தும் பார்ப்போம்.) 

(தொடரும்)