பூகோள அரசியல்: மற்றொரு விடுதலைப் போராட்டம் மௌனித்தது….!(வெளிச்சம்: 059)

பூகோள அரசியல்: மற்றொரு விடுதலைப் போராட்டம் மௌனித்தது….!(வெளிச்சம்: 059)

— அழகு குணசீலன் —

தேசிய விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் பூகோள சமூக, பொருளாதார, அரசியலின் தாக்கம் மிகவும் அதிகமானது. 1990களில் சோவியத் யூனியனில் ஏற்பட்ட சிதைவும், உலகமயமாக்கத்தில் ஏற்பட்ட வளர்ச்சி உலகின் இரண்டு அணிகளான சோவியத், அமெரிக்க அணிக்கட்டமைப்புகளை தகர்த்து அரசியல், பொருளாதார, பாதுகாப்பு தேசிய நலன்கள் சார்ந்தும், பிராந்தியங்கள் ரீதியாகவும் ஒருங்கிணைந்திருப்பதும் இதற்கு  ஒரு காரணமாகிறது. 

இந்த சர்வதேச, பிராந்திய பூகோள அரசியல் மாற்றங்களை கவனித்தல் கொள்ளாத- மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப தாம் சார்ந்த விடுதலைப் போராட்டப்பயணத்தில் மாற்றங்களை உள்வாங்கி, இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளாத விடுதலை இயக்கங்கள் தப்பி பிழைப்பது  சமகாலத்தில் பெரும் சவாலாகியுள்ளது.  அமெரிக்க இரட்டைகோபுரம் 2001 செப்டம்பர் 11, தாக்குதலுக்குள்ளான  பின்னரான “பயங்கரவாதத்திற்கு” எதிராக அமெரிக்கா தலைமையில் மேற்குலகத்தின் யுத்தப் பிரகடனம் இதற்கு முக்கிய பங்களிப்பை செய்திருக்கிறது.

இந்த வகையில் 2025 மே மாதத்தில் மற்றொரு ஆயுதப்போராட்ட கைவிடல்  அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. குர்திஷ்ரான் விடுதலை இயக்கம் -PKK என்ற குர்திஷ் தொழிலாளர் கட்சி ஆயுதங்களை கைவிட்டு ஜனநாயக அரசியலுக்கு திரும்பவும், துருக்கி அரசிடம் ஆயுதங்களை ஒப்படைக்கவும் தயார் என்று மே 12ம்திகதி அறிவித்திருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் வடக்கு ஈராக்கில் இடம்பெற்ற PKK யின் 12வது இரகசிய தேசிய மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இந்த முடிவு துருக்கி சிறையில் 25 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்திஷ் விடுதலை இயக்கத்தின் தலைவர் அப்துல்லா ஒச்சலான்  ( ABDULLA ÖCALAN) கடந்த ஏப்பிரலில் வெளிட்ட  விருப்பத்தின்  அடிப்படையிலானது என்றும்   அச்செய்தி கூறுகிறது. துருக்கி அமைச்சர் ஒருவர் ஒச்சலான் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றால் PKK  முழுமையாக கலைக்கப்பட்டு, ஆயுதங்கள் ஒப்படைப்பு இடம்பெறவேண்டும் என்று அறிவித்திருந்தார். இதன் அடிப்படையிலேயே இந்த காய்நகர்வு நடந்தேறியிருக்கிறது.  இதன் மூலம் 1984 முதலான 40 ஆண்டுகால குர்திஷ் விடுதலை இயக்கத்தின் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வருகிறது.

   இதன் முக்கியத்துவம் என்னவெனில்  ஐரோப்பா 1945 மே 8 இல் அடோல்வ் கிட்லரை தோற்கடித்த  நினைவை கொண்டாடுகிறது. யூத இனப்படுகொலைக்கு உள்ளான  யூதர்களால் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் அரசு கிட்லர் பாணியில் பலஸ்தீனமக்களை கொன்று குவிக்கிறது. பூகோள அரசியலை அசட்டை செய்து பிராந்தியத்திலும், சர்வதேசத்திலும் தவறான   இராணுவ, அரசியல் இராஜதந்திரத்தை கையாண்டு ஈழப்போராட்டத்திற்கு  ஒரு பகுதி எதிரிகளை  தானாகவே உருவாக்கிகொண்டு, முள்ளிவாய்க்காலில் மௌனித்த ஆயுதங்களை நினைவுகூரும் சூழலில் இந்த அறிவிப்பு பூகோள அரசியல் இராஜதந்திர முக்கியத்துவத்திற்கு மேலும் வலுச்சேர்ப்பதாக உள்ளது. 

முள்ளிவாய்க்காலை நினைவுகூருவது மட்டும் அன்றி விடுதலைப்புலிகளின், அதன் தலைமைத்துவத்தின் கடந்த கால இராணுவ, அரசியல் நகர்வுகளும், சர்வதேச மத்தியஸ்த முயற்சிகளில் புலிகள் எடுத்த தவறான முடிவுகளும் பூகோள அரசியல் சூழலை முற்று முழுதாக நிராகரித்து எடுக்கப்பட்டவை என்பதும் மீளாய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். ஈழத்தமிழர்களின்  எதிர்கால அரசியல் நிர்ணயத்திற்கு இது காலத்தின் கட்டாயம். ஆனால் போர் ஓய்வுக்கு  பின்னரான கடந்த 16 ஆண்டுகளில் இது நிலத்திலும் சரி புலத்திலும் சரி நடக்கவில்லை. முக்கியமாக நோர்வே சமாதான முயற்சிகளின்போது எரிக்சொல்கைம் வாக்குறுதியளித்த “சமஸ்டி” தீர்வுக்கு சாட்சியாக இன்று அன்ரன் பாலசிங்கம் இல்லாவிட்டாலும் இன்னும் கருணா அம்மான் மட்டும் அல்ல அண்மையில் பேட்டியொன்றில் இதை அவிழ்த்து விட்ட  வ.ஜ.ஜெயபாலனும் இருக்கிறார்கள். 

 இது பற்றி  காலாவதியான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்று தன்னை இன்னும் அழைத்துக்கொள்ளும் உருத்திரகுமாரன் இதை அறிந்திருந்தார் என்பதை கருணா அம்மான் வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே  கருணா சொன்ன உண்மையை ஜெயபாலன் உறுதிப்படுத்தி இருக்கிறார். அரசியல் ஆலோசகர்  அன்ரன் பாலசிங்கம், உருத்திரகுமாரன் போன்றவர்களின் கையாலாகாத்தனமும், ஒரு விடுதலை இயக்கத்தின் ஆலோசகர்களாக அவர்களின் பலவீனமும் முள்ளிவாய்க்கால் அழிவுகளுக்கு காரணம் என்பது வெளிப்படை.  “தம்பிமார்” தாய்லாந்தில் இரவுப் பொழுதில் எப்படி இன்பம் கண்டார்கள் என்பதும், சந்திரிகாவின் சாறிக்குள் என்ன இருக்கிறது என்பது போன்ற மூன்றாந்தர வார்த்தையாடல்களால் ஈழத்தமிழர்களுக்கு அன்ரன் பாலசிங்கம் சொல்ல வந்த ஆலோசனை என்ன?

1984 இல் இருந்து குர்திஸ்தான் தனி நாட்டுக்காக ஆயுதப்போராட்டம் நடாத்தும் PKK  40 ஆண்டுகள் போராடி , 45,000 மக்களை இழந்த பின்னர் சமகால பூகோள அரசியலை கருத்தில் எடுத்திருக்கிறது. ஈராக், ஈரான், சிரியா, துருக்கி ஆகிய நான்கு நாடுகளுக்குள் குர்திஷ் மக்கள் பிரிக்கப்பட்டு, அவர்களின் தாயகம் துண்டாடப்பட்டு கிடக்கிறார்கள். இவர்களின் போராட்டம் பெருமளவு துருக்கி அரசுக்கு எதிரானது. அரபுலகில் – மத்திய கிழக்கில் ஏற்பட்டு வரும் பூகோள அரசியலை கணக்கில் எடுக்காது தொடரமுடியாத நிலை. சிரியத்தலைவர் அசாத் ரஷ்யாவுக்கு தப்பியோடிய பின்னர், அசாத்துக்கு எதிராக போராட்டம் செய்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் ஒரு பிரிவினர் ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழிக்கு வரவிரும்பினர். இதற்கான நகர்வுகள் அமெரிக்க ஆதரவுடன் இடம்பெற்றன. சிரியா அசாத் அரசுக்கு வழங்கிய ஆதரவை உக்ரைன் யுத்தம் காரணமாக ரஷ்யாவால் வழங்க முடியவில்லை. இதனால் டமஸ்கஸ்ஸில் ஏற்பட்ட பலவீனத்தை பயன்படுத்தி புதிய குழுவினர் 24 மணித்தியாலங்களில் டமஸ்கஸ்ஸை கைப்பற்றினர். அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்தார்.

புதிய குழு ஜனநாயக நடைமுறைகளுக்கான  சைகைகளை மேற்குலகிற்கு வழங்கியது. ஜனநாயக தேர்தல், பெண்கள், சிறார்களுக்கான உரிமைகள், சிறுபான்மை இனங்கள், மதங்களுக்கு பாதுகாப்பு என பல விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்  சிரியாவில் மிகக்குறுகிய காலத்தில் அமைதியேற்படுத்தப்பட்டது. விளைவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பயங்கரவாத அமைப்பாக சர்வதேசம் பிரகடனம் செய்த ஒரு குழுவினரின் தலைமையுடன் – சிரியாவின்  புதிய ஜனாதிபதிபதியுடன் கைகுலுக்கி இருக்கிறார். சிரியாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட சகல பொருளாதார தடைகளும் நீக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இது முற்று முழுதாக சர்வதேச, பிராந்திய பூகோள அரசியலை புரிந்து கொண்டதன், பயன்படுத்தியதன் இராஜதந்திர விளைவு. இந்த நகர்வும் குர்திஷ் விடுதலை இயக்கத்தின் ஆயத மௌனிப்புக்கு உந்து சக்தியாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈராக், சிரியாவுக்கு எதிரான அமெரிக்க அணி யுத்தத்தில் குர்திஸ்தான் போராளிகள் அமெரிக்காவின் குர்திஸ்தான் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு  நிபந்தனையில் அமெரிக்காவுக்கு ஆதரவுவழங்கினர். ஆனால் தனது அலுவல்முடிந்த பின்னர் அமெரிக்க குர்திஷ் போராளிகளை கை கழுவி விட்டது. இதற்கிடையில் பிராந்தியத்தில் துருக்கி மேற்குலகிற்கு வேண்டிய ஒரு நாடாக இருக்கிறது. ஜனாதிபதி RECEP ERDOGAN இன் ஆட்சி மிகவும் இலகுவாக ராஜபக்சாக்களின் ஆட்சியின் குணவியல்புகளைக்கொண்டது. துருக்கி பொருளாதாரம் வீழ்ச்சி போக்கை காட்டுகிறது. என்றாலும் மத அடிப்படைவாத நிலத்திலும், புலத்திலும் உள்ள துருக்கியர்கள் ஜனாதிபதியின் கட்சியை சிறுபான்மை குர்திஷ் தேசிய இனத்திற்கு எதிராக ஆதரிக்கின்றனர். இது தென்னிலங்கை சிங்களமக்கள் தமிழ்த்தேசிய இனத்திற்கு எதிராக கடும்போக்கு சிங்கள தலைமைகளை ஆதரிப்பதற்கு சமமானது.

  துருக்கி இராணுவபலம் கொண்டு இருப்பதுடன் நேட்டோ அங்கத்துவத்தையும் கொண்ட ஒரு நாடு. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விண்ணப்பம் செய்துள்ளது. குறிப்பாக கனடாவில், இங்கிலாந்தில் ஈழத்தமிழர்கள் போன்று, பலமான  டயஸ்போராவை துருக்கி ஐரோப்பாவில் -ஜேர்மனியில் கொண்டுள்ளது. இராணுவ ரீதியில் – நேட்டோ அங்கத்துவம் காரணமாக  பிராந்தியத்தில் துருக்கியை தவிர்த்து அமெரிக்காவோ, ஐரோப்பாவோ, நேட்டோவோ தனித்து ஓடமுடியாது. இது குர்திஷ் விடுதலைப்போராட்டத்தில் தொடர்ச்சியான பாதிப்பை ஏற்படுத்திவந்துள்ளது. ஒருவகையில் ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியாவை தவிர்த்து ஓடமுடியாமல் சர்வதேசம் இருப்பதுடன் ஒப்பிடக்கூடியது. இந்த பூகோள அரசியலை புரிந்து கொண்டதன் வெளிப்பாடே குர்திஷ் விடுதலை இயக்கத்தின் ஆயுத மௌனிப்பு.

குர்திஷ் விடுதலை அமைப்பு PKK,  விடுதலைப்புலிகள் அமைப்பு போன்று பயங்கரவாத அமைப்பாக துருக்கி, ஐரோப்பிய ஒன்றிய 27 நாடுகள், மற்றும் அமெரிக்காவிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆயுத மௌனிப்பின் மூலம்  இந்த தடைகளை இராஜதந்திர ரீதியாக அகற்றி முதல் கட்டமாக தென்கிழக்கு துருக்கியில் தனிநாட்டிற்கு மாற்றாக ஒரு சுயாட்சி பிரதேசம் ஒன்றை சர்வதேச அனுசரணையுடன் நிறுவ PKK மேற்கொள்ளும் சர்வதேச அரசியல் நகர்வே இந்த ஆயுத மௌனிப்பு. விடுதலைப்புலிகள் சர்வதேச, பிராந்திய பூகோள அரசியலை சரியாக விளங்கிக் கொண்டிருந்தால், மாவிலாற்றிற்கு முன்னராக கிடைத்த  இந்திய -இலங்கை முதலான, சந்திராகாவின்  தீர்வுப்பொதி, நோர்வே சமஸ்டி யோசனை வரை பல்வேறு சந்தர்ப்பங்களை  கவனத்தில் கொண்டு பயன்படுத்தி இருந்தால் ஈழத்தமிழர்கள்  முள்ளிவாய்க்காலை 

அனுபவித்திருக்க வேண்டியதில்லை (?). 

ஓடு மீன் ஓடி உறுமீன் வரும்வரை காத்திருந்து….. காத்திருந்து, இறுதியில் வெள்ளைக்கொடி ஏந்தியும்  ஈழப்போராட்டம்  சர்வதேச, பிராந்திய பூகோள அரசியலுக்குள் புதைக்கப்பட காரணமாயிற்று. 

இதற்கு சிங்கள பௌத்த பேரினவாதம் மட்டும் காரணமா….? 

தமிழ்த்தேசிய ஆயுத அரசியல் – அரசியல் தற்கொலைக்கு வழங்கிய வகிபாகம் என்ன….?

இதை இன்னும் கூட கேள்விக்கு உட்படுத்தாமல்  கனடாவில், இங்கிலாந்தில் நடக்கின்ற அரசியல் கண் காட்சிகள் குறித்து ஏட்டிக்கு போட்டியாக தற்பெருமை கொள்கிறோம். இவர்கள் முள்ளிவாய்க்காலின் போது என்ன செய்தார்கள் என்று கேட்கின்ற திராணி கூட இல்லை. 

தோல்வியை வெற்றியாகக் காட்சிப்படுத்துவது வெறும்  கட்சி அரசியல். இதற்கு நிலம், புலம் என்று வேறுபாடில்லை. இந்த அரசியலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க போர்வீரர்களை வெற்றி வீரர்களாக நினைவுகூருகிறார். தமிழ்த்தேசியம் புலிப்போர்வீரர்களை தோற்றுப்போனவர்களாக நினைவுகூருகிறது.  மொத்தத்தில் யுத்தம் மீண்டும் … மீண்டும்…எதிர்கால அரசியலுக்கு மூலதனமாகிறது.