சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 12 )

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 12 )

— பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —

1970 இல் தேர்தல் காலத்தில், காபந்து அரசின் பிரதமராயிருந்த  டட்லி சேனானாயக்கா அவர்களும், அவரின் ஐக்கிய தேசியக் கட்சியும், அந்தத் தேர்தலில் தமிழரசுக்கட்சித் தலைவர்களை தோற்கடிப்பதற்காக மிகுந்த முயற்சிகளை  மேற்கொண்டார்கள். 

1965 இல் அரசாங்கத்தை அமைக்க தமிழரசுக்கட்சி ஐ.தே.கட்சிக்கு ஆதரவுகொடுத்து, அரசாங்கத்தில் இணைந்திருந்தது.  அமைச்சுப்  பதவி ஒன்றையும் பெற்றிருந்தது. மேற்சபை உறுப்பினராகவிருந்த மு.திருச்செல்வம் அவர்கள் உள்ளூராட்சி  அமைச்சர் பதவியில்  அமர்த்தப்பட்டார். 

இடைநடுவில் தமிழரசுக்கட்சி, ஆதரவை விலக்கிக்கொண்டு  அரசில் இருந்து வெளியேறியது. அதனால் இரண்டு கட்சிகளின்  தலைவர்களுக்குமிடையே காலங்காலமாக நிலவிவந்த உள்ளார்ந்த நட்பில் விரிசல் ஏற்பட்டு, அது அரசியல் பகைமையாக உருவெடுத்திருந்தது. தேர்தல் காலத்தில் அந்தப் பகைமை முற்றியிருந்தது.  

“தாங்கள் இல்லாமல் எவராலும் தனித்து ஆட்சியமைக்க முடியாது” என்றவாறு தமிழ்த் தலைவர்கள் சிலர் 1965 இலிருந்து கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தனர். அது தென்னிலங்கையின் பெரும்பான்மையின மக்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.  

அதனால், 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனித்த அறுதிப்  பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வேண்டும் என்று  அந்தக்கட்சிகள் மும்முரமான முயற்சிகளை எடுத்தன. அதன் விளைவு தேர்தல் முடிவில் பிரதிபலித்தது. 

இப்படிப்பட்ட காரணங்களாலும், இன்னும் சில உள்ளூர் சம்பந்தப்பட்ட காரணங்களாலும் பட்டிருப்புத் தொகுதியிலும்  தமிழரசுக்கட்சி வெற்றியைப் பெறமுடியாமல் போயிற்று. தலைவர் இராசமாணிக்கம் அவர்களும் தோல்வியைத் தழுவவேண்டி ஏற்பட்டுவிட்டது. 

தேர்தலுக்கு மறுநாள் “தினபதி” நாளிதழில் தடித்த எழுத்துக்களில் தலைப்புச்செய்தி இப்படி வந்திருந்தது: 

“தமிழரசுக்கட்சித் தலைவர், செயலாளர், பொருளாளர் தோல்வி.  தமிழ்க் காங்கிரஸ் தலைவர் மூன்றாவதாக வந்து தோற்றார்” 

ஆம்! அந்தத் தேர்தலில் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.மூ.இராசமணிக்கம் அவர்கள் மட்டுமன்றி, கட்சியின் செயலாளராகவிருந்த அ.அமிர்தலிங்கம் அவர்கள் வட்டுக்கோட்டைத் தொகுகியிலும், பொருளாளர் ஈ.எம்.வீ.நாகநாதன் அவர்கள் நல்லூர் தொகுதியிலும், தமிழ்க்காங்கிரஸ் கட்சியின் தனிப்பெரும் தலைவராக இருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் யாழ்ப்பாணத் தொகுதியிலும் தோல்வியடைந்தனர்.  

யாழ்ப்பாணத் தொகுதியில் வெற்றிபெற்ற சி.எக்ஸ்.மாட்டின் அவர்கள் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்தவராயிருந்த போதும், அங்கே காங்கிரஸ் தலைவர் தோல்வியடைந்தார் என்பதே பத்திரிகைககளில் பரபரப்பைக் கொடுக்கும் செய்தியாயிற்று.  

அதிலும் சீ.எக்ஸ்.மாட்டின் அவர்களுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குக்களை அல்பிரட் துரையப்பா அவர்கள் பெற்றிருந்தார். 

ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருந்தார். 

அந்தத் தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு எதிரான பரப்புரைகளுக்குக் களம் அமைக்கும் கைங்கரியத்தில் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளும், அவற்றின் பிரதம ஆசிரியர் எஸ்.டீ.சிவநாயகம் அவர்களும் ஈடுபட்டிருந்தமையைத் தமிழ்கூறும் நல்லுலகம் நன்கு அறியும். 

இதில், மிகவும் கவலைக்குரிய வேடிக்கை என்னவென்றால்  தமிழரசுக் கட்சியின் தலைவரான அமரர் இராசமாணிக்கம்  அவர்களைத் திட்டமிட்டுத் தோற்கடிப்பதில் வியூகம்  வகுத்தவர்களும், நேரடியாக ஈடுபட்டவர்களும், அதுவரை தங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழரசுக்கட்சிக்கு எதிராகச் செயற்பட்டவர்களும், அத்தகைய குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் பிற்காலத்தில் அதே தமிழரசுக் கட்சியில்  பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பதவிகளைப் பெற்றார்கள் என்பதுதான்! 

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைப் பீடத்தின் பெருவாரியான  ஆதரவுடனும், கவனிப்புடனும் பட்டிருப்புத் தொகுதியில்  வெற்றிபெற்ற திரு. சோ.உ.தம்பிராசா அவர்கள் மிகக் குறுகிய  காலத்தில் எவரும் எதிர்பார்க்காத வகையில்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்துகொண்டார். அவ்வாறு அவர் அரசாங்கக் கட்சியில்சேர்ந்துகொண்டமையினால்  அபிவிருத்திப் பணிகள் சிலவற்றைத் தொகுதிக்காக அவரால் செய்ய முடிந்தது என்பதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். அத்துடன், கட்சி வேறுபாடின்றிப் பலருக்குத் தொழில் வாய்ப்புக்களையும் அவர் ஏற்படுத்திக்  கொடுத்தார். 

1970 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இலங்கையில்  தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார  நிலைமைகளில் பாரிய தாக்கத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்தன. அரசுக்குக் கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை, அதன்மூலம் இலங்கையை ஒரு குடியரசாகப் பிரகடனம் செய்ய முடிந்தமை, 1972 ஆம் ஆண்டின் குடியரசு அரசியல் அமைப்பு கொண்டுவரப்பட்டமை, அந்த அரசியலமைப்பை மாற்றி 1978 இல் மற்றொரு அரசியல் அமைப்பு வந்தமை, இவற்றினால் சில அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டமை, இவை எல்லாம் நடைபெறுவதற்குக் கால்கோள் இட்டது 1970 ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகளே என்று கூறினால் எதிர்வாதம் அதற்கு இருக்க முடியாது. 

முழு இலங்கையின் எதிர்காலத்தையும் மாற்றியமைப்பதற்கான  முதலாவது சுழியைப் போட்ட அந்தத் தேர்தலே,  இலங்கைத் தமிழ் மக்களின் அரசியலும் இன்னுமொரு களத்தை நோக்கிச் செல்வதற்கான தளத்தை உருவாக்கும் ஏதுவாய் அமைந்தது எனலாம். 

…….   ……   ……. 

அமரர் சி.மூ.இராசமாணிக்கம் அவர்கள் மிகவும் உயர்ந்த மனிதர். மிகவும் இக்கட்டான காலகட்டங்களில் இரண்டு தடவைகள் தமிழரசுக்கட்சியின் தலைவராகப் பணியாற்றிக் கட்சிக்கும், தமிழ் மக்களுக்கும் வழிகாட்டியவர்.  

கட்சியின் நான்காவது தலைவராக, 1961 ஆம் ஆண்டு ஜனவரி 21 முதல் 1964 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21 வரை, மூன்றரை ஆண்டுகளும், பின்னர் ஏழாவது தலைவராக,  1969 ஏப்ரல் 8 முதல் 1973 செப்டம்பர் 6 வரை கிட்டத்தட்ட நாலரை ஆண்டுகளுமாக, இரண்டு தடவைகள், ஏறத்தாழ எட்டு வருடங்கள், தலைமைப்பதவியில் இருந்து கட்சியை வழி நடாத்தியவர்.  

தமிழரசுக்கட்சியின் நான்கு மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிய  தனித்துவம் மிக்க பெருமையும் அவருக்கு உள்ளது.  கட்சியின் ஏழாவது, எட்டாவது, பதினோராவது தேசிய மாநாடுகளும் மற்றும் 1972 இல் நடைபெற்ற சிறப்பு மாநாடும் அவரது தலைமையிலே நடைபெற்றன. 

1965 ஆம் ஆண்டு, தமிழரசுக்கட்சி ஐக்கியதேசியக் கட்சியின் அரசில் அங்கம்வகித்தபோது, அவரை நோக்கி வந்த அமைச்சர் பதவியை, கட்சியின் கட்டுக்கோப்பைப் பேணுவதற்காக ஏற்காமல் விட்டதுடன், மிகவும் சாதுரியமாகத் மு. திருச்செல்வம் அவர்களது பெயரை முன்மொழிந்து அந்தப் பதவியில் குறிவைத்தோரையும் எதிர்க்கருத்துக் கூறமுடியாமல் ஏற்கவைத்தவர். 

1970 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற காலத்திலும் அவர் தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்தார். தமிழரசுக் கட்சியில் செல்வாக்கு மிகுந்த தலைவராகவும், மாற்றுக் கட்சியினராலும் சிங்களத் தலைவர்களாலும் மதிக்கப்பட்ட அரசியல் மதியூகியாகவும் விளங்கிய இராசமாணிக்கம் அவர்களது அருமையையும், பெருமையையும் உள்ளூர் மக்கள் பலர்  அப்போது உணர்ந்துகொள்ளாமை உண்மையிலேயே  வேதனைக்குரிய  விடயமாகும். அதன் பிரதிபலிப்பாகவே அந்தத் தேர்தல் முடிவு அமைந்திருந்தது. 

தலைவர் இராசமாணிக்கம் அவர்களோடு தீராத விருப்புக்கொண்ட சில ஆதரவாளர்கள் இருந்தார்கள். தங்களது விசுவாசத்தைக்  காண்பிப்பதற்காக அவர்கள் எங்கும், எதிலும், எப்பொழுதும் இராசமாணிக்கம் அவர்களை முன்னிலைப்படுத்தும் முயற்சியிலேயே ஈடுபட்டு வந்தார்கள். தலைவருக்கு நல்லது செய்வதாகவும், அவரை மகிழ்ச்சிப்படுத்துவதாகவும் எண்ணிக்கொண்டு, அவர்கள் செய்த செயல்களால்  இராசமாணிக்கம் அவர்களது செல்வாக்கிற்குக் குந்தகம்  ஏற்படுவதை அவர்கள் சற்றும் உணரவில்லை. உணர  முடிந்தவர்களும் உணர விரும்பவில்லை. தலைகால் புரியாமல்  நடந்துகொண்டார்கள். தங்களது செயல்களால் தலைவருக்கு  மிகவும் அணுக்கமானவர்கள் தாங்கள்தான் என்று  பிரசித்தப்படுத்துவதில் பிரியம் உள்ளவர்களாக அவர்கள்  இருந்தார்கள். பிரபல்யமானவர்களாகத் திரிந்தார்கள்.  அவர்களது செயல்களத் தவறென்று சொன்னவர்களைத்  தலைவரையே  தவறென்று சொல்வதாக நினைத்தார்கள். 

உள்ளூரில் இருந்த சின்னச் சின்ன அமைப்புக்களிலும் இராசமாணிக்கம் அவர்களையே தலைவராக்கி மகிழ்ந்தார்கள்.  அதன் விளைவுகளை எண்ணிப் பார்க்க ஏனோ மறந்தார்கள்.  ம.தெ.எ.பற்றுக் கிராமச் சபைத்தலைவர், கிராமச் சபை உறுப்பினர், கூட்டுறவுச் சங்கத் தலைவர், களுவாஞ்சிகுடி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், சைவமகா சபைத் தலைவர்……  இப்படிப் பல அமைப்புக்களில் அவரை நேரடியாக ஈடுபடுத்தி தங்களது விசுவாசத்தை காட்டிக்கொள்ள அவரது  நெருங்கிய ஆதரவாளர்கள் சிலர் செய்த காரியங்கள் தலைவர்  இராசமாணிக்கம் அவர்களுக்கு  உள்ளூர்ப்  பிரமுகர்களிடையே  கனத்த வெறுப்பையும், பலத்த எதிர்ப்பையும் உருவாக்கி விட்டிருந்தன.  

இப்படிப்பட்ட பதவிகளில் ஏற்கனவே இருந்தவர்களும் எதிர்காலத்தில் இருக்க விரும்பி முயற்சி எடுத்தவர்களும் இராசமாணிக்கம் அவர்களது ஆதரவாளர்களாக இருந்தவர்களே! அத்தகையவர்களில் பொறாமை கொண்டவர்கள், அவர்கள் அவ்வாறான பதவிகளில் இருப்பதை விரும்பாதவர்கள், அல்லது அத்தகைய பதவிகளுக்குத் தங்களால் வருவதற்கு இயலாதவர்கள் என்று இப்படியான சிலர், அவர்களை முறியடிப்பதற்கு தலைவர் இராசமாணிகம் அவர்களைப் பயன்படுத்தினார்கள். 

எந்த நோக்கமோ சிந்தனையோ இல்லாமல், தலைவரே, எங்கும்  தலைவராய் இருக்கவேண்டும் என்ற குருட்டுத்தனமான  பக்தி  கொண்ட இன்னும் சில அப்பாவி ஆதரவாளர்களும் இவர்களோடு நின்றார்கள். அவ்வவர்களை அவ்வந்தப் பதவிகளில் அமர்த்தி வைத்திருந்தால், இராசமாணிக்கம் அவர்களின் விருப்பத்திற்கும், ஆணைக்கும் கட்டுப்பட்டு அவ்வந்தப் பதவிகளில் அவர்கள்  செயற்பட்டிருப்பார்கள், காலம் உள்ளவரை தீவிர விசுவாசிகளாக அவர்கள் இருந்திருப்பார்கள், இராசமாணிக்கம் அவர்களுக்குத் தோல்வியே ஏற்பட்டிருக்காது, என்றெல்லாம் தெளிவாகச் சிந்தித்தவர்களும், அதற்காக முயற்சி எடுத்தவர்களும் கணிசமானளவு இருந்தார்கள் என்றாலும் அவர்களது கருத்துக்களும், முயற்சிகளும் சபையேறாமற் போயிற்று. 

சிற்றமைப்புக்களின் தலைவர்களோடு போட்டி என்று வந்துவிட்டதால், அவர்களில் சிலர், தங்களின் அளவுக்கு  சி.மூ.இராசமாணிக்கம் அவர்கள் தாழ்ந்துவிட்டது போலவும்,  தங்களுக்கு அவர் சமாமானவர் ஆகிவிட்டது போலவும் அவரை  நினைக்கும் போலிக் கௌரவப் போர்வைக்குள் புகுந்துகொண்டு  நேரடியாக நின்று அவரை எதிர்க்கும் அளவுக்கான  சூழ்நிலை ஒன்று மெல்ல மெல்ல உருவாகி, நிலைபெறலாயிற்று. 

அதன் பிரதிபலிப்பால், தங்களைச் சூழ்ந்துள்ள மக்களிடையே செல்வாக்குப் பெற்றவர்களாகவிருந்த உள்ளூர்த் தலைவர்கள் மற்றும், தங்களது சொற்கேட்டு நடக்கும் உற்றார்,  உறவினர்களையும், சுற்றங்களையும் கொண்டிருந்த பிரமுகர்கள்  என்போரது ஆதரவை இராசமாணிக்கம் அவர்கள் இழக்கவேண்டி  ஏற்பட்டது. 

உள்ளூர்க் கிராமச்சபையில், சின்னசிறு வட்டாரங்கள்  இரண்டைக்கொண்ட களுவாஞ்சிகுடியில், தனது சொந்த வட்டாரத்தில் அந்தப் பென்னம்பெரிய தலைவருக்குப் போட்டியாக இன்னொருவர் தேர்தலில் களத்தில் இறங்கும் அளவுக்கு  உள்ளூரில் எதிர்ப்பு வளர்ந்திருந்தது. 

இவ்வாறு, தலைவர் இராசமாணிக்கம் அவர்களுக்கு நல்லது  செய்வதாக நினைத்துக்கொண்டு, அறிவுபூர்வமாகச்  சிந்திக்காமலும், திட்டமிடாமலும் எதேச்சாதிகாரமாக  நடந்துகொண்ட ஆதரவாளர்கள் சிலரின் தொடர்ந்த  செயற்பாடுகளால் காலத்திற்குக்காலம் விதைக்கப்பட்டு, வளர்ந்துகொண்டிருந்த எதிர்ப்பு உணர்வும் 1970 தேர்தலில் தலைவர் இராசமாணிக்கம் அவர்களின் வெற்றியைத் தடுக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாய் அமைந்தது. 

அதனை உறுதிப்படுத்துவதுபோலவே அவர் பெற்ற வாக்குக்களின் தொகையும்  சான்றாக அமைகின்றது. 1970 தேர்தலில் இராசமாணிக்கம் அவர்கள், தம்பிராசா அவர்கள் ஆகிய இருவர் மட்டுமே போட்டியிட்டார்கள். தொகுதி வாரியான தேர்தல் நடக்கும் அந்தக்காலத்தில் அது ஒரு நேரடிப்போட்டியாகும். 

தம்பிராசா அவர்கள் பெற்ற வாக்குகள் 13,370. இராசமாணிக்கம் அவர்கள் பெற்ற வாக்குகள் 12,723.  தம்பிராசா அவர்களுக்குக் கிடைத்த அதிகப்படியான வாக்குகள் 647 மட்டுமே! எனவே, இராசமாணிக்கம் அவர்களுக்கு, எதிராக விழுந்த வாக்குகளில் 324 வாக்குகள் சார்பாகக் கிடைத்திருந்தால் அவரே வெற்றிபெற்றிருப்பார்.   

எனவே,  கட்சி அடிப்படை, சாதி அடிப்படை, தேசிய அரசியல்  நிலைப்பாடு என்பவை எல்லாவற்றுக்கும் மேலாக, உள்ளூரில்  அவருக்கு எதிராக விழுந்திருக்கக்கூடிய வாக்குகள் அவரின்  வெற்றியைத் தடுப்பதில் மிகுந்த செல்வாக்கைச்  செலுத்தியிருந்தன என்பதை மறுக்க முடியாதுள்ளது.  

………   ………    ……… 

தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் திரு இராசமாணிக்கம் அவர்கள் பஸ்ஸில்தான் பிரயாணம் செய்தார். பஸ்வண்டியை அவரது வீட்டுக்குமுன்னால் நிறுத்தி அவரை ஏற்றிச்செல்லும் மரியாதையை இலங்கைப் போக்குவரத்துச்சபைச் சாரதிகள் எல்லோரும் கொடுத்தார்கள். அப்போதெல்லாம் தனியார் பஸ்சேவைகள் இருந்ததில்லை. 

1972 ஆம் ஆண்டு. அப்போது எனக்குப் பத்தொன்பது வயது. நான் மட்டக்களப்பு கச்சேரியில் எழுதுவினைஞராகக் கடமையாற்றிக்கொண்டிருந்தேன். காலை நேரம் கடமைக்குச் செல்லும்போது ஒருநாள் மட்டக்களப்பு செல்லும் பஸ்வண்டியில் சாரதிக்குப் பின்னால் உள்ள இருவருக்கான  ஆசனத்தில் நானும் இன்னும் ஒருவரும் இருந்தோம். பஸ்வண்டி  இராசமாணிக்கம் அவர்களது வீட்டுக்குமுன்னால் நின்றது.  இராசமாணிக்கம் அவர்கள் வண்டியின் முன்பக்க  நுழைவாசலால்  ஏறிவந்தார். அவரைக்கண்டதும் அவருக்கு இடம் கொடுப்பதற்காக நான் எழுந்தேன். அவர் என்னையே அமரும்படி சைகை செய்தார். 

நான் அவரை அமருமாறு சொன்னேன். அவர் உடனே, “சரி இரண்டு பேரும் இருக்கலாம், நீயும் வா” என்று சொல்லிக்கொண்டே அமர்ந்தார். பின்னர் எனது கையைப்பிடித்து இழுத்து – அப்போதும் தயங்கிய என்னை வற்புறுத்தி – அவருக்கும் மற்றவருக்கும் இடையில் அமரச்செய்தார். இருவர் அமரக்கூடிய இருக்கையில் மூவர் அமர்ந்தோம்.  

அகில இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், சின்னஞ்சிறியவனான என்னைத் தன்னருகே அமர்ந்திருக்க வைத்தமை என்னைமிகவும் கூச்சப்பட வைத்தது. அதேவேளை அவரை என் மனதில் இமயமாக உயர்த்தி வைத்தது. 

இப்போது இருப்பதைப்போல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தால் வாகனவசதிகளோ, வாகன இறக்குமதிச் சலுகைகளோ அப்போது இருந்ததில்லை. ஏன், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்கூட அந்தக்காலதில் இருக்கவில்லை. சிலவருடங்களுக்குப் பின்னரே அது அறிமுகப்படுத்தப்பட்டது. 

(அமரர், திரு. பூ. கணேசலிங்கம் அவர்கள், 1977 இல் பட்டிருப்புத்தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் ஆனபின்னர் கூட ஒருநாள் பஸ்வண்டியில் பயணம் செய்ததையும் நான் பார்த்திருக்கிறேன். அந்த வண்டியில் அவரோடு நானும் பயணித்திருக்கிறேன்.)