வலி — உருவகக்கதை

வலி — உருவகக்கதை

— செங்கதிரோன் —

அந்த அடர்ந்த காட்டில் பொந்து ஒன்றில் ஓர் ஆமையும் புதர் ஒன்றில் ஒரு நரியும் அருகருகே அயலவர்களாக வசித்து வந்தன. 

அயலவனான அப்பாவி ஆமையை நரி எப்போதும் அட்டகாசமாகவே நடாத்தி வந்தது. 

ஒவ்வொரு நாள் காலையிலும் புறப்பட்டு வெளிச்செல்லும்போது ஆமையை வெளியே அழைத்து அதன் தலையிலே ஒரு குட்டுக் குட்டிச் செல்கின்ற வீம்புத்தனத்தை நரி தன் நாளாந்த வழக்கமாகக் கொண்டிருந்தது. 

ஒரு நாள் ஆமை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நரியிடம் ‘நரி அண்ணாவே! நீங்கள் ஒவ்வொரு நாளும் குட்டிக்குட்டி என் தலை வலிக்கிறது. இனிமேல் குட்டவேண்டாம்’ என்று அடக்கமாகக் கேட்டது. 

நரி அட்டகாசமாகச் சிரித்து ‘ஆமைத் தம்பியே! வலிக்கிறதா? வலியென்றால் என்ன? அது எப்படியிருக்கும் என எனக்குக் காட்டு. அதன் பின் நான் குட்டுவதை நிறுத்திக் கொள்கிறேன்’ என்று நையாண்டியாகப் பதில் சொல்லிற்று. 

ஆமையும் அடங்கிப் போயிற்று. நாட்கள் வழமைபோல் நகர்ந்தன. ஒரு நாள் காலை ‘ஆ! வலிக்கிறதே’ என்ற நரியின் அலறல் சத்தம் பொந்துக்குள் இருந்த ஆமைக்குக் கேட்டது. ஆமை அவசரமாக வெளியே வந்து நரியிடம் ‘என்ன அண்ணா நடந்தது?’ என்று வினாவியது. 

‘என் காலைப்பார். நான் நடந்து வரும் போது தேள் ஒன்று என் காலைக் கவ்வித் தன் கொடுக்கினால் கொட்டிவிட்டது. சரியாக வலிக்கிறது’ என்று கண்ணீர் சிந்தியபடி நரி கூறிற்று. இதுதான் தக்க தருணம் என எண்ணிய ஆமை நரியைப் பார்த்து ‘நரி அண்ணாவே! இப்போது வலி என்றால் என்ன? அது எப்படியிருக்கும் எனத் தெரிகிறதா? ஒவ்வொன்றும் தனக்குத் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்றது. 

நரி தன் தவறை உணர்ந்ததற்கு அடையாளமாய்த் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டது.