— சிவா பரமேஸ்வரன் (மூத்த விளையாட்டுச் செய்தியாளர்) —
கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில் இரண்டு தோல்விகளுக்குப் பிறகு ஒரு ஆறுதல் வெற்றி. முதல் இரண்டு போட்டிகளின் தோல்வியை ஒப்பிடும் போது இது பெரிய வெற்றி இல்லை. எனினும் இந்திய அணிக்கு இந்த வெற்றியில் ஈஸ்வரனைப் போல் துணையிருந்து வெற்றியைத் தேடித் தந்தவர் ஒரு சாமானியர்.
ஆஸி ஆடுகளத்தில் தனது `பாசுபதாஸ்த்திரத்தை` எய்து அணியின் வெற்றிக்கு அடிகோலிட்டவர் `நம்மவர்`, தமிழர், நடராஜன்.
அவர் தான் இந்திய அணியின் ஆபத்பாந்தவனான `யார்க்கர் மேன்`. இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் இன்றைய கிரிகெட் உலகில் துல்லியத்துக்கு உதாரணமாகத் திகழ்கிறார். யார்க்கர் வீசுவது சாதாரணமான விஷயம் அல்ல. அது பல விஷயங்களை உள்ளடக்கியது. ஒரு நபரின் உயரம், அவரது கையின் வீச்சு, உடலியக்கம், ஆடுகளத்தில் அளவாக வீசுதல், பந்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற பலது அதில் அடங்கும்.
யார்க்கர் கலையை சிறப்பாக கற்று அதன் மூலம் எதிரணியை திணரடித்து மிரட்டியதில் வல்லவர்கள் மேற்கிந்திய தீவுகள் அணியினர். வெஸ் ஹால், சார்லி க்ரிஃபித், ஆண்டி ராபர்ட்ஸ், மைக்கெல் ஹொல்டிங், ஜோயல் காரணர். மால்கம் மார்ஷல் என்று பட்டியல் நீளும்.
அவர்கள் பெயரைக் கேட்டாலே `சும்மா அதிருதில்ல` கதை தான்.
இந்தியாவில் கபில் தேவ் மட்டுமே மேற்கிந்தியத் தீவுகள் அணியினருடன் ஓரளவுக்கு ஒப்பிடும் நிலையில் இருந்தார். அவருக்கு பிறகு இப்போது தங்கராசு நடராஜன். அவரிடம் வேகம் விவேகம் இரண்டும் இருப்பது சிறப்பம்சம்.
நூற்பாலை தொழிலாளியின் மகன்
ஆடம்பரமில்லாத சாமானியரான அவரின் வெற்றிக்கான மந்திரம் அடிப்படைகளை சிறப்பாகச் செய்வது, அதற்காக கடினமாக உழைப்பது மட்டுமே.
இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் அவரது திறமையை உலகம் அறிந்தது. `யார்க்கர்` கலையை அவர் ஒரே இரவில் கற்கவில்லை. அதற்கான வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை.
தமிழகத்தின் சேலம் மாவட்டத்திலுள்ள சின்னம்பட்டி அவரது சொந்தவூர். சமூக பொருளாதார ரீதியாக அவரும் அவரது ஊரும் பின்தங்கிய நிலையே. தந்தை உள்ளூர் நூற்பாலையில் அன்றாடம் வேலைக்குச் செல்லும் கூலித் தொழிலாளி. தாய் சாலையோரம் தேநீர் கடை நடத்தி வந்தார். ஐந்து பிள்ளைகளில் தலைமகன் நடராஜன். கிரிக்கெட் மீது ஆர்வமுள்ள ஏழை எளியோர்களின் கனவை ஓரளவுக்கு நிறைவேற்றுவது சாலைகளிலும், முட்டுச் சந்துகளிலும் விளையாடப்படும் டென்னிஸ் பால் கிரிக்கெட். அதாவது டென்னிஸ் விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் பந்தைக் கொண்டு, யார் புண்ணியத்திலாவது கிடைத்த பழைய மட்டையைக் கொண்டு, ஆங்காங்கே விளையாடுவது.
அப்படியானவர்களுக்கு தொலைக்காட்சியின் தமது கனவு நாயகர்கள் ஆடுவதைப் பார்ப்பதே அதிகபட்ச மகிழ்ச்சியளிக்கும். ஆனாலும் திறமையை நீண்ட நாள் கவனிக்காமல் புறந்தள்ள முடியாது. அப்படியான வாய்ப்பொன்று நடராஜனுக்கு கிட்டியது. அவரது திறமையைக் கண்ட உள்ளூர் கிரிக்கெட் வீரர் ஜெயபிரகாஷ் அவருக்கு உதவ முன்வந்தார்.
சேலத்திலிருந்து சென்னைக்கு வந்த அவருக்கு நல்ல தொடர்புகள் கிடைக்க தனது திறமைகளையும் மேம்படுத்திக் கொண்டார் நான்காண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய தமிழ்நாடு பிரீமீயர் லீக் கிரிக்கெட் போட்டியின் முதல் பதிப்பிலேயே தனது முத்திரையைப் பதித்தார் நடராஜன். அந்தப் போட்டியில் அவரது திறமைகளை கவனித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை அடுத்த ஆண்டு-2017 ஐபிஎல் போட்டிகளில் தமது அணிக்கு விளையாட மூன்று கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அது அவரது வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
அந்தப் பணத்தில் தனது சகோதரிகளுக்கு நல்ல கல்வியையும் பெற்றோருக்கு வசதியான வீடொன்றையும் அவரால் அளிக்க முடிந்தது.
சேலத்தில் பயிற்சி மையம்
அதுமட்டுமின்றி சேலத்தில் ஒரு பயிற்சி மையத்தை துவக்கி இளம் வீரர்கள் தமது திறமையை மேம்படுத்திக் கொள்ள வழி ஏற்படுத்தினார்.
பஞ்சாப் அணிக்காக விளையாடிய போது அவர் பெரிதாகச் சாதிக்கவில்லை என்றாலும், அவரது திறமையை கண்டுகொண்டார் முத்தையா முரளிதரன். கிரிக்கெட் உலகில் டெஸ்ட் போட்டிகளில் மிக அதிகளவு விக்கெட்டுகளை எடுத்துள்ள முரளிதரனுக்கு நடராஜனின் திறமை மீது ஆழமான நம்பிக்கை பிறந்தது. இதையடுத்து தான் பயிற்சியாளராக இருக்கும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு நடராஜனை இழுத்துக் கொண்டார் முரளி.
எனினும் 2018 மற்றும் 2019 சீசனில் அவருக்கு விளையாட வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனால் இந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றப் போட்டிகளில் அவரது பந்துவீச்சில் தீப்பொறி பறந்தது. அவரது திறமையைக் கண்ட இந்திய அணியின் தேர்வுக் குழு அவரை தற்போது ஆஸ்திரேலியவுக்கு எதிராக நடைபெறும் தொடருக்காக தேர்வு செய்தது.
இத்தொடரின் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைய கடைசிப் போட்டியில் ஆடும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. முதல் போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இனி அவருக்கு ஏறுமுகமாகவே இருக்குமென்று நம்புவோம்.