எஸ்.பொன்னுத்துரை : மனிதாபிமானப் பாலியலை எழுத்துக்குள் கொண்டு வந்தவர்

எஸ்.பொன்னுத்துரை : மனிதாபிமானப் பாலியலை எழுத்துக்குள் கொண்டு வந்தவர்

— ஏ.பீர் முகம்மது —

உலகளாவிய தமிழ் இலக்கியப் படைப்பியல் வரலாற்றில் எஸ்.பொ. எனப் பலராலும் அறியப்பட்ட எஸ்.பொன்னுத்துரை பெரும் ஆளுமையாக இருந்தவர். சிறுகதை, நாவல், நாடகம், நனவிடை தோய்தல், அரசியல், திறன்நோக்கு, வரலாறு, மொழிபெயர்ப்பு என்று பல துறைகளிலும் தனது எழுத்தூழியத்தினால் சிகரம் தொட்டவர். அவரளவில் இலக்கியத்தில் சாதனைகளையும் சோதனைகளையும் சந்தித்த பிறிதொரு எழுத்தாளர் நம்மிடையே இல்லை.

யாழ். நல்லூரிலே பிறந்து மட்டக்களப்பு வாசியாகவே வாழ்ந்து சாதனைகள் தொட்ட இந்த எழுத்துலகச் செம்மலின் இறுதி மூச்சு அவுஸ்திரேலியாவிலே 2014 நவம்பர் 26 இல் அடங்கி ஆறு வருடங்கள் முழுமையடைந்துள்ளன.

இருட்டுறைந்த முடுக்குகளிலிருந்து அவர் கண்டெடுத்த பிரச்சினைகளை எழுத்தில் கொண்டு வந்த அதேநேரம் பாலியல் உந்துதல்களையும் பின்னமளவில் குழைத்து தந்தார். இன்ப நுகர்ச்சியன்றி மனிதாபிமானமே அவரின் புனைவுகளின் மையமாக இருந்தது. இந்த அணுகுமுறை இலக்கியப் பரப்பிலிருந்து அவரை ஓரங்கட்ட நினைத்தவர்களுக்கு அவலாக வாய்த்தது. கொக்கோகம் எழுதுகிறார் எனக் குற்றஞ்சாட்டினர். எழுவான் திசைப் பல்கலைக் கழகமொன்று பச்சை, மஞ்சள் எழுத்தாளர் என்று வர்ணம் தீட்டி வசை பாடியது.

அகலிகை மீதான சாபம் எதனைப் பேச எத்தனித்தது? வள்ளுவருக்கு காமத்துப்பால் பற்றிப் பேசவேண்டிய தேவை என்ன? உலக இலக்கியங்களைப் பொறுத்தவரையில் பாலியல் சமாச்சாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல்களாக ஜேம்ஸ் சாய்ஸ் எழுதிய ‘உலுசிஸ்’, டி.எச்.லோரன்ஸின் ‘லேடி சட்டலின் லவேர்ஸ்’, அல்பட்டோ மொராவியாவின் ‘வுமன் ஒப் ரோம்’ ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றனர். கீழைத்தேச நாடுகளைப் பொறுத்தவரையில் அவ்வாறான நாவல்களை எழுதியோருள் பாகிஸ்தானைச் சேர்ந்த உருதுமொழி இலக்கியக்காரரான சதாத் ஹசன் மொண்டோ குறிப்பிடத்தக்கவர். மராட்டிய எழுத்தாளரான வீ. காண்டேகர் எழுதி தமிழுக்குப் பெயர்ந்து வந்த கருகிய மொட்டுகள் (1941) தமிழில் பாலியலைத் தொட்டெழுதி முதலில் வெளிவந்த நாவல் ஆகும். புதுமைப்பித்தனின் விபரீத ஆசை அவர் எழுதிய முதலாவது பாலியல் நாவல் ஆகும். தி.ஜானகிராமனின் மோகமுள் பட்டும் படாமல் பாலியலையே பேசியது. சாணக்கியாவின் அவ்வாறான ஒரு கதைக்கு தமிழ்நாடு அரசு முதற்பரிசு வழங்கியிருந்தது.

ஒளித்து மறைத்துப் பேச வேண்டிய ஆணியர் யோனியர் சமாச்சாரத்தை எஸ்.பொன்னுத்துரை பச்சைபச்சையாக எழுதுகிறார் என்றும் நிர்வாண இலக்கியத்தை மேயவிடுகிறார் என்றும் மீண்டும் மீண்டும் அவர்மீது குற்றம் எழுந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர் அதனை மறுத்துரைத்தார். விரசம் வேண்டியோ கிளுகிளுப்புக்காகவோ தான் எழுதவில்லையென்றும் உடல்சார்ந்த ஆக்கினைகளை வெளிக்கொண்டுவரும் எத்தனமே தனது எழுத்துக்கள் என்றும் வாதாடினார்.

அவரின் வீ என்ற சிறுகதைத் தொகுதிக்கு அணிந்துரை எழுதிய வ.அ.இராசரத்தினம் தொகுதியில் உள்ள விலை என்ற கதையில் ‘இடஞ்சல் வந்து மூண்டு நாலு நாள். கோயிலுக்குப் போறதுக்காக முழுகினனான்’ எனத் தொடங்கி பாவாடையெல்லாம் ஒரே துவால என்று வரும் பகுதிவரை ஆபாசமாக இருப்பதாக அவரிடம் குறிப்பிட்டபோது நீங்களோ நானோ வாழும் தளத்திலிருந்து பார்ப்பதினாலேதான் ஆபாசமாகத் தெரிகின்றது. என் பாத்திரம் வாழும் தளத்திற்கும் களத்திற்கும் வாருங்கள் அப்பொழுது அவர்களின் நினைவுகள் இதிலும் பார்க்கக் கொச்சையாக இருப்பதைக் காணலாம் என்பது எஸ்.பொவின் பதிலாக இருந்தது என்று குறிப்பிடுகின்றார். மேற்படி இராசரத்தினத்தின் கூற்று எஸ்.பொவின் பாலியல் தரிசனம் மீதான நியாயத்தை விளக்குகின்றது.

அவா என்ற கதையில் எஸ்.பொ. உடலுறுப்புகளைப்பற்றி எழுதினார். விஞ்ஞான பாடத்தில் இதயம், மூளை, சிறுநீரகம் என்று எழுதலாம். ஏன் கலாரசனையோடு பிறப்புறுப்புகளைப்பற்றி எழுதக் கூடாது? அது மறைக்கப்பட வேண்டியது அல்ல என்று ஆதரவு தேடினார். மலம், சலம் போன்ற இயற்கை உபாதைகளைப் போலவே இச்சைகளும் உரிய காலத்தில் தீர்க்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் தனக்குத் தோதுப்பட்ட வகையில் தீர்வை எட்ட முனையும்போதுதான் பிரச்சினையாக மாறுகிறது. தீர்க்கப்படும் முறையில்தான் பிரச்சினை வருகிறது என்று தனது கட்சியை நிறுவினார்.

முதியவர் ஒருவருக்கு வாழ்க்கைப்பட்ட ஒரு இளம்பெண் தனது எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிலையில் கணவனின் கருவாகவே மாற்றானின் கருவைச் சுமக்கும் முடிவுக்கு வருகிறாள். அந்த இளம்பெண்ணை ஈரா என்ற கதைக்குள் கொண்டு வந்து அவளுக்கு ஆதரவாக நின்றார்.

உரிய வயது வந்தும் தனது மகள் பூப்படைய மாட்டாள் என ஜாதகம் சொன்னதை நம்பி ஒரு தந்தை கவலைப்படுகிறார். அதனை ஆண்மை–3 என்ற கதையில் அறிமுகம் செய்து இப்பிரச்சினைக்குத் தீர்வாக ஆணினச் சேர்க்கையில் நாட்டம் கொண்ட ஒருவனை மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் தந்தையின் முடிவை பரிந்து பேசுகிறார். மனிதாபிமான அடிப்படையிலேயே இவற்றை எழுத்துக்குள் கொண்டு வந்தார். இக்கதைகள் சோற்றுப் பருக்கையான எடுத்துக்காட்டுகளே.

சிறுகதைகளைப் போலவே எஸ்.பொ.வின் தீ, சடங்கு ஆகிய இரண்டு நாவல்களும் பல்வேறு வாதப் பிரதி வாதங்களை ஏற்படுத்தின. தமிழ்நாட்டிலிருந்து 1961 இல் அவரது தீ வெளிவந்தது. விடுதியில் தங்கியிருந்தபோது மதகுரு ஒருவரின் அணைப்புக்குள்ளாகி இச்சையுடன் வாழ்வுப் பயணம் ஆரம்பமானதாகக் கூறும் கதாநாயகன் தான் ஆறு பெண்களுடன் கொண்டிருந்த ‘கிசுகிசுக்களை’ பின்னோக்கிப் பார்க்கிறான். அதனை நனவோடை உத்தியில் கதையாக நகர்த்தினார். தீ நாவலை தீயிட்டுக் கொழுத்த வேண்டும் என்ற கோசங்களுக்கு மத்தியில் பலர் இரகசியமாக நூலை வாங்கி வாசித்து இன்பம் சுகித்தனர். அச்சடித்த பிரதிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. மனிதத் தேவையொன்று தீ நாவலை வாசிப்பதன் மூலம் நிறைவேறுகின்றது என்பதையே இந்த விற்பனை நமக்கு எடுத்துக் கூறுகின்றது. அதுமட்டுமல்ல சதைப் பிடுங்கல்களின் தொந்தரவுகளுக்கு வடிகால் தேடும் தேவை ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும்தான் எனக் கூறும் ஆவணமாகவும் தீ தன்னை அடையாளப்படுத்தியது.

சடங்கு என்ற நாவலின் முதல் பதிப்பு இளம்பிறை எம்.ஏ.ரஹ்மானின் அரசு வெளியீடாக வந்தது. இந்தியாவிலிருந்து ராணிமுத்து பத்திரிகை இரண்டாவது பதிப்பாக அதனை வெளியிட்டபோது இலட்சக் கணக்கில் விற்பனையாகி சாதனை படைத்தது. ஐந்து நாள் விடுமுறை பெற்று ஊருக்குப் போய் மனைவியைச் சேரமுடியாமல் கொழும்பு திரும்பும் அரச ஊழியன் ஒருவனின் கதை.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாதச்சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன் எவ்வாறு தன் ஆசைகளையும் தேவைகளையும் அடக்கி வாழ்கிறான் என்பதை பதிவு செய்யும் சமூக ஆவணம் இந்த நாவல்.

தமது இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள மனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சியைப் படம்பிடிக்கின்ற தீ, சடங்கு ஆகிய இவ்விரண்டு நாவல்களும் உடலின் பசி என்பதற்கும் அப்பால் மனிதாபிமான அடிப்படையில் எழுந்தவையாகும்.

இந்தப் புனைவுகளைத் தவிர 2011 இல் வெளிவந்த அவரது கவிதைத் தொகுப்பு ஒன்று பற்றியும் பேச வேண்டியுள்ளது.

பதினாறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வத்ஸாயனர் என்பவர் வடமொழியில் காம சூத்திரம் என்ற நூலை வெளியிட்டார். இரண்டு பாகங்களைக் கொண்ட இந்நூல் ஆண் பெண் உடலியல் உறவில் உச்சப் பயன் பெறும் வகையை விளக்குகின்றது அதனை விஞ்ஞான ரீதியில் சரிகண்ட சேர் ரிச்சாட் பேட்டன், ஆர்பட்ஹோனட் ஆகியோர் இணைந்து அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர். எஸ்.பொன்னுத்துரை மேற்படி இரண்டு பாகங்களினதும் சுவாரஸ்யமான பகுதிகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கவிதையாகவே மொழி பெயர்த்தார். அதனூடாக குடும்ப நலவாழ்வுக்கு வழிகாட்டினார்.

எஸ்.பொ வின் முறுவல் என்ற நாடகம்பற்றிப் பேசிய ஒருவர் அது பசி, காமம் ஆகிய இரண்டையும் கருவாகக் கொண்டது என்ற ஒரு குறிப்பைச் சொல்லியிருக்கிறார்.

இவ்வாறாக பாலியல் என்பதே பாவம் என்ற நிலையைப் போக்கி தனது எழுத்துக்களாலும் குறிப்புகளாலும் அதனைச் சுற்றியிருந்த பிசுறுகளை நீக்கி அதற்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்க முயன்றார். ஆனால் புலமைத் திமிர் கொண்டவர்களும் அவர்களைச் சூழ இருந்த சீடர்களும் எஸ்.பொ.வி.ன் எழுத்துக்களைத் தீட்டு நோக்கில் பார்த்தார்களே தவிர மனிதாபிமானப் பாலியல் என்னும் செவ்வியல் கருத்தையே அவர் உரத்துப் பேசினார் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. பாலியல் கல்வியை பாடசாலைக் கலைத் திட்டத்தில் அறிமுகம் செய்யலாமா என்று விவாதம் செய்யும் இன்றைய காலகட்டத்தில் எஸ்.பொ. முன்மொழிந்த மனிதாபிமான எழுத்துக்களுக்கான அங்கீகாரத்தை உலகம் விரைவில் காணும் என்பதே இக்கட்டுரையின் எதிர்பார்ப்பாகும்.