— தொகுப்பு: வி.சிவலிங்கம் —
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் இலங்கை விஜயத்தின் பின்னணியில் கூட்டமைப்பு நெருக்கடிக்குள்?
– அரசியல் தீர்வை வற்புறுத்தி அபிவிருத்தியைக் கைவிடுவதா?
– அபிவிருத்தி முயற்சியில் மக்கள் அபிப்பிராயம் என்ன?
– உலக பூகோள அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் காண முடிகிறதா?
– இதில் இந்திய தேவைகள் மாறியிருப்பதைக் கூட்டமைப்பு புரிந்துள்ளதா?
சில தினங்களுக்கு முன்னர் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இலங்கை வந்திருந்தார். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரைச் சந்தித்த அவர் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலைவரையும் இந்திய தூதுவராலயத்தில் சந்தித்திருந்தார்.
இச் சந்திப்புத் தொடர்பாக வெளிவந்துள்ள செய்திகளை அவதானிக்கும்போது இந்திய வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூட்டமைப்பைச் சந்தித்த வேளையில் தெரிவித்த கருத்துக்களை ஒத்ததாகவே அவை காணப்படுகின்றன. அதாவது கூட்டமைப்பினர் தமது அணுகுமுறைகளை மக்களின் அபிவிருத்தித் தேவைகளில் செலுத்தவேண்டும் என்ற வகையில் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் கூட்டமைப்பினர் இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனத்தில் கொண்டிருப்பதாகக் தென்படவில்லை. அவர்கள் இன்னமும் இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்தில் வாழ்வதாகவே தெரிகிறது.
அந்த வேளையில் இந்திய அமெரிக்க உறவுகள் பிரச்சனைக்குரியதாக அமைந்திருந்தன. ஆளும் ஐ தே கட்சி அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தது. அத்துடன் உலகம் அமெரிக்க – ரஷ்ய முகாம்களாக மாற்றமடைந்திருந்தன. பாகிஸ்தானை அமெரிக்கா ஆயுதங்கள் மூலம் பலப்படுத்தி வந்தது. எனவே இந்தியா “அமெரிக்க” எதிர்ப்பு நிலைப்பாடுகளை எடுத்திருந்த வேளை, இலங்கையும் அமெரிக்க சார்பாகச் செல்வதை இந்தியா விரும்பவில்லை. இதனால் அமெரிக்க சார்பு அரசு இலங்கையில் அமைவதைத் தடுக்கும் விதத்தில் அந்த அரசிற்கு உள்நாட்டு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் தமிழ் அரசியலை இந்தியா தனது தேவைக்குப் பயன்படுத்தியது.
ஆனால் தற்போது பூகோள அரசியலில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சீனா பல வகைகளிலும் சக்தி மிக்க நாடாக மாற்றமடைந்துள்ளது. அமெரிக்க நலன்களுக்கு இடையூறாக சீனா செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேவேளை இந்திய எல்லைக்குள் சீன ஊடுருவல் உள்ளதாக அடிக்கடி முறையிடப்படுகிறது. போர் ஏற்படும் நிலை அடிக்கடி காணப்பட்டது. தற்போதுள்ள இந்திய ஆட்சியாளர்கள் அமெரிக்க சார்பு நிலையை எடுத்து வருகின்றனர். ஆனால் தற்போது இலங்கை ஆட்சியாளர்கள் சீனாவை நோக்கிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு இலங்கை சீனாவை நோக்கிச் செல்வதற்கான நியாயங்கள் பல உண்டு. இலங்கையின் அபிவிருத்திக்கான பண உதவியை இந்தியாவால் செய்ய முடியவில்லை. அவ்வாறாயின் சீனா வழங்கும் உதவியை இந்தியா தடுக்க முடியாது. இலங்கையில் துறைமுகம், விமானத் தளம் போன்றன சீன உதவியுடன் அமைக்கப்பட்டிருந்தாலும் அவை பரந்த இந்திய நலன்களுக்கு எதிராகப் பயன்படுத்த இடமளிக்கக்கூடாது என்பது இந்தியாவின் கவலையாகும். அதேவேளை தனது பக்கத்து நாடுகளுடன் நட்பைப் பேணுவதும் அவசியமாகியுள்ளது. இதன் காரணமாக இலங்கை அரசுடன் நெருக்கமான உறவுகளைப் பேண இந்திய அரசு முயற்சிக்கிறது. இதனால் 13வது திருத்தம் பற்றிப் பேசி அரசிற்குத் தேவையற்ற அழுத்தங்களைக் கொடுக்க இந்திய அரசு விரும்பவில்லை என்பது சமீபத்தைய பேச்சுவார்த்தைகளில் வெளிப்படும் உண்மைகளாகும்.
அபிவிருத்தியில் அக்கறை காட்டச் சொன்ன இந்தியா
இவ்வாறான இந்திய அரசின் தேவைகளின் பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகள் 13வது திருத்தம் பற்றி மட்டும் பேசி காலத்தைக் கடத்த முடியாது. மக்களுக்கான அபிவிருத்தி தேவைகள் அதிகம் காணப்படுகின்றன. இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் சந்திப்பின் பின்னர் கிடைத்த தகவல்களின் பிரகாரம் பார்க்கையில் கூட்டமைப்பினர் தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அர்த்தமுள்ள விதத்தில் பொறிமுறைகளை வகுத்துச் செயற்பட வேண்டுமென அவர் வற்புறுத்தியதாகத் தெரிகிறது.
தமிழ் அரசியல் தலைமைகள் எதிர்பார்ப்பதைப் போல இந்திய அரசு இலங்கைமேல் அழுத்தங்களை மேற்கொள்ள முடியாது என்பதை அவர் உணர்த்தியிருப்பதாகத் தெரிகிறது. அதன் காரணமாகவே வடக்கு- கிழக்கு அபிவிருத்திக்குக் குறிப்பாகப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை நோக்கி செயற்பாடுகள் அமைதல் அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியில் அக்கறை காட்டாத கூட்டமைப்பு
ஆனால் கூட்டமைப்பினர் மத்தியில் வடக்கு – கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தி குறித்து எவ்வித திட்டங்களும் இதுவரை இல்லை. பல்வேறு துறை சார்ந்த நிபுணர் குழுவை நியமித்து பிரதேச அபிவிருத்தியில் மக்களையும் ஈடுபடுத்தும் விதத்திலான திட்டங்களையும் உள்ளடக்கிய அரசியல் அணுகுமுறைகளை ஆரம்பிக்குமாறு அவர் உணர்த்தியுள்ளதாகத் தெரிகிறது.
இந்திய அதிகாரியின் உரையாடல்களை அவதானிக்கும்போது அவர் இலங்கை அரசின்மேல் அழுத்தங்களைத் தற்போதைய சூழலில் பிரயோகிப்பது எதிர்பார்த்த பலனைத் தராது என்பதே முடிவாக உள்ளது.
குறிப்பாக சிங்கள பௌத்த பெருந்தேசியவாத சக்திகளின் பலமான ஆதரவுடன் உள்ள அரசு தனது ஆதரவாளர்களுக்கு வழங்கிய அவ் வாக்குறுதிகளிலிருந்து விலகிச் செல்வதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை என்பதையே அவர் உணர்த்தியுள்ளார். எனவேதான் அதிகார பரவலாக்கம், அதிகார பகிர்வு போன்ற உள்நாட்டுப் பிரச்சனைகளில் அதிகம் தலையிடுவதற்கான தருணம் இதுவல்ல எனக் கருதுகிறார்.
பாதுகாப்பு ஆலோசகர் பிரதமரைச் சந்தித்த வேளையில் மலையகப் பகுதிக்கு வீட்டு வசதிகளை வழங்கியது போல சிங்களப் பகுதிகளுக்கும் உதவிகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் கேட்டிருந்தார். அதே போலவே ஜனாதிபதியும் தமக்குக் கடன் தேவையில்லை. அபிவிருத்தியில் முதலீடு செய்யுங்கள் என வெளிநாடுகளைக் கேட்டுள்ளார். தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் இலங்கை வெளிநாடுகளிடம் அபிவிருத்தியைக் கோரியுள்ள பின்னணியில் தமிழர்களையும் பொருளாதார அபிவிருத்தியில் கவனம் செலுத்துமாறு கோரியிருப்பது புதிய தகவலை வழங்குவதாகவே நோக்க வேண்டியுள்ளது. அதாவது இந்தியா இலங்கைக்கான அபிவிருத்தி உதவிகளை நோக்கிச் செல்லும் வேளையில் அதற்கான வாய்ப்புகளைத் தமிழர்கள் பயன்படுத்துவதற்குத் தயாராக இருத்தல் வேண்டும் என்ற செய்தியே அதுவாகும்.
ஆனால் தமிழ் அரசியல் தலைமைகள் அரசியல் கோரிக்கையைத் தவிர வேறு எதனையும் கொண்டிராத நிலையிலுள்ளதை பாதுகாப்பு ஆலோசகர் நன்கு அறிந்துள்ளதாகவே தோன்றுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது ஜெனீவா மனித உரிமை ஆணையத்திலிருந்து விலகுவதற்குக் கடிதம் எழுதியது போல இலங்கை – இந்திய ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக உங்களால் கடிதம் எழுத முடியுமா? என சுமந்திரன் அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தார். இது அரசின் இயலாமையை வெளிப்படுத்த எழுப்பிய கேள்வியாக இருப்பினும், மறுபுறத்தில் தமிழ் மக்கள் மீதான இந்திய ஆதரவைத் தவறாகப் பயன்படுத்தி சிங்கள மக்களுடன் சவாலுக்குச் செல்வதாகவும் கருதப்படுகிறது.
இரா. சம்பந்தன் அவர்களுடனான இப் பேச்சுவார்த்தைகளின்போது அஜிற் டோவல் அவர்கள் 13வது திருத்தம் தொடர்பாக பேசிய போதிலும் புதிய அரசியல் யாப்பு ஏற்படும் பட்சத்தில் அத் திருத்தத்தின் எதிர்காலம் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை. ஆயினும் அதன் எதிர்காலம் குறித்த அறம் சார்ந்த கடமை இந்தியாவிற்கு உண்டு என்பதை சம்பந்தன் அவர்கள் வற்புறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் இந்தியாவின் கவனம் அரசியல் தீர்வை விட அபிவிருத்தியை நோக்கிச் சென்றிருக்கும் தற்போதைய நிலையில் தமிழ் அரசியல் தலைமைகளால் அபிவிருத்தியை நோக்கியதாக அரசியலை மாற்ற முடியுமா? என்பதே பெரும் கேள்வி ஆகும். ஏனெனில் அபிவிருத்தி அரசியல் என்பது ‘தமிழ் தேசிய நீக்க அரசியல்’ என வர்ணிக்கப்பட்டு அதனைக் கோருபவர்கள் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படும் நிலை காணப்படுகிறது. தமிழ் அரசியல் தற்போது பாராளுமன்றப் பதவிகளை நோக்கியதாக மாற்றமடைந்துள்ளன.
விக்னேஸ்வரனின் மாகாணசபைக் குழறுபடிகள்
போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை மேற்கொள்வதாகக் கூறியே விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்தார். கூட்டமைப்பினரால் அழைத்து வரப்பட்ட அவர் மாகாண நிர்வாகத்தைத் தனது அரசியல் தேவைக்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டார். அதன் 5 வருட ஆயுட்காலம் முழுவதும் எதுவித ஆக்கபூர்வமான அபிவிருத்தியையும் மேற்கொள்ளாது, அரசிற்கு எதிராகவும், தம்மைப் பதவிக்குக் கொண்டுவந்த கூட்டமைப்பிற்கு எதிராகவும் புதிய கட்சியை ஸ்தாபித்து இன்று அவரும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுள்ளார்.
ஆனால் இவரது நிர்வாக காலத்தை மீட்டிப் பார்க்கையில் பல்வேறு தேவைகளுக்கென அனுப்பப்பட்ட பணம் மீள திறைசேரிக்கு அனுப்பப்பட்ட வரலாறுகளே உள்ளன. வடமாகாண நிர்வாகம் இவ்வாறு சிதைக்கப்பட்டதற்கான எவ்வித வருத்தங்களையும் கூட்டமைப்பினர் தெரிவிக்கவில்லை. ஏனெனில் மாகாணசபை எவ்வித அதிகாரங்களையும் கொண்டிருக்கவில்லை என்பதை நிருபிப்பதே அவர்களின் நோக்கமாகவும் இருந்தது. அதனை விக்னேஸ்வரன் செவ்வனே நிறைவேற்றியுள்ளார். மக்களே இதற்கான விலையை வழங்கினர். பாதகத்தை அனுபவித்தனர்.
இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் சந்திப்புத் தொடர்பாக நாம் அவதானிக்கையில் அவர் இலங்கை – இந்திய ஒப்பந்தம் தொடர்பாக எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது. அவ்வாறாயின் தமிழ் அரசியல்வாதிகள் 13வது திருத்தம் பற்றி இனியும் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்தாமல் ஒட்டு மொத்த நாடும் பொருளாதாரப் பற்றாக்குறையாலும், கொரொனா நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பணியில் அரசுடன் ஏதாவது ஒரு வகையில் புதிய பொறிமுறைகளை உருவாக்கிச் செயற்படும்படி ஆலோசனை வழங்கியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.