— தோழர் ஜேம்ஸ் —
உலகின் தலை சிறந்த கால்பந்து வீரன், அதவேக ஓட்டக்காரனை ஆர்ஜன்டீனா இழந்துள்ளது. உலகம் இழந்துள்ளது. சுமார் நூறு அடி தூரத்தில் இருந்து அத்தனை விளையாட்டு வீரர்களையும் கடந்து பந்தை இலக்கை நோக்கி தனியாக நகர்ந்தி கோல் போட்ட வீரன். இங்கு சாதனைகளை நான் பட்டியல் இடவில்லை; அதற்கு அப்பால் உள்ளவற்றை பட்டியலிடுகின்றேன்.
சமூக விஞ்ஞானதிற்கு கார்ல் மாக்ஸ்;
சோசலிச புரட்சிக்கு விளாடிமிர் லெனின்;
கலாச்சாரப் புரட்சியிற்கு மாவோ சேதுங்;
இயலுமைக்குள் போராடுதலுக்கு ஹோ சி மின்
கெரில்லாத்தாக்குதலுக்கு சேய் குவேரா
மக்கள் நலத் தொண்டிற்கு பிடல் காஸ்ரோ
எளிமையான நாட்டின் தலைவருக்கு ஜோஸ் முஜிகா
அகிம்சைக்கு மகாத்தமா காந்தி
சகிப்புத் தன்மையிற்கு நெல்சன் மன்டேலா
மனிதாபிமானத்திற்கு பத்மநாபா
ஆடல் பாட்டிற்கு மைக்கல் ஜாக்சன்
அழகுக்கு கிளியோபாட்ரா
இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங்
கிரிக்கட்டிற்கு ஹரி சோபர்ஸ்
குத்துச் சண்டையிற்கு முகமட் அலி
கூடைப் பந்துக்கு மைக்கேல் ஜோர்டன்;
கால்பந்தாட்டத்திற்கு மரடோனா…… டியாகோ அர்மாண்டோ மரடோனா

உலகின் பலவேறு துறைகளில் பலரும் அடையாளப்படுத்தப்பட்டாலும் சிலர் மாத்திரமே இங்கு அத்துறையை சொன்னவுடன் எம் நினைவிற்கு வருவார்கள்.
அந்த வகையில் உலகில் கால் பந்தாட்டம் என்றவுடன் சாதித்தவர்கள்…. வென்றவர்கள்… கவர்ந்தவர்கள் என்று பலரும் இருந்தாலும் முதலில் எம் மனதில் உதிப்பவர் மரடோனா. இதற்கு பல காரணங்கள் உண்டு. இந்த விளையாட்டு வீரரிடம் காணப்பட்ட அந்த விசேட தன்மைகள் தான் என்ன..(விளையாட்டுக்கு அப்பால்)….?
இதற்கு, அவரின் கால்பந்தாட்டம் மட்டும் காரணம் அல்ல. அதற்கு அப்பால் அவர் சார்ந்திருந்த தென் அமெரிக்க நாடு, அவர் நேசித்த தலைவர்கள்… அவர் நேசித்த மக்கள்…. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு விலை போகாத தன்மை…. உலகில் விடுதலைக்காக போராடிய அமைப்புக்களுக்கு உதவிய செயற்பாடு என்று பலதையும் கூறலாம்.
விளையாட்டு மைத்தானத்தில் எவ்வளவு இலாவகமாக பந்தை காலா(கையா)ளுகின்றார் என்பதுடன் அந்த விளையாட்டில் இருக்கும் நளினம் நேர்த்தி தனது குழுவின் சகபாடிகளிடம் இருக்கும் விளையாட்டுப் புரிந்துணர்வு என்பன இங்கு பிரதானப்பட்டு நிற்கின்றன.
மற்றைய எந்த விளையாட்டையும் விட கிராமங்களில் இருந்து பட்டினம், நகரம் என்று யாவருக்கும் – வட துருவத்தில் இருந்து தென் துருவம் வரை கிழக்கு மேற்காக சகல நாடுகளிலும் விளையாடப்படும் விரும்பப்படும் விளையாட்டு கால்பந்தாட்டம்.
ஒரு சிறிய ஒழுங்கை… திடல்..வெட்டைக் கலட்டி இருந்தால் போதும் கால்பந்து விளையாடி விட முடியும். ஒரு குழு எதிர்க்க மற்றக் குழு உதைக்க, பின்பு மாறி உதைக்க பந்தை இரண்டு கம்புகளுக்கு இடையால் அடித்தால் போதும் என்ற வகையில் மிக இலகுவான ஆட்டம்.
வயது வேறுபாடின்றி யாரும் இந்த உதையில் இணையலாம். பார்பவர்களும் யார் வென்றார்கள் என்று தீர்மானத்தை இலகுவில் எடுக்கலாம். வெறும் விரல்விட்டு எண்ணும் எண்ணிக்கைக்குள் மாத்திரமே புள்ளிகளும் அடங்கிவிடும். இப்படியாக இலகு ஆட்டம் இது. இதமான ஓட்ட ஆட்ட ஆட்டம். இரண்டு மணி நேரம் கடக்காத ஆட்டம். மாலையில் ஆரம்பித்து பொழுதுபட முன்பே முடிந்துவிடும். போகிற போக்கில் ஆடிவிட்டு பார்த்துவிட்டு வரக் கூடிய ஆட்டம் இது.
அதனால் இது பலராலும் அதிகம் விரும்பப்படும் ஆட்டம். உலகின் மிக வறிய நாடுகள் கூட உலகின் மிகச் சிறந்த விளையாட்டு ஜம்பவான்களாக தெரியப்படும் பாமர மக்களின், விளிம்பு நிலை மக்களின் விளையாட்டு. அமெரிக்காவிற்கு சரணடையாத நாடுகளாக தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகள் தங்களை உலக அரங்கில் நிலை நிறுத்தும் அருமையான ஆட்டம் இது.
எப்படி என் பால்ய சிறு வயதில் இந்தியாவின் கிரிக்கெட்டை முதலில் யாழ் ‘இந்து’வில் அறிந்த போது அந்த நாட்டிற்கு இன்றுவரை ஆதரவு தெரிவிப்பதுபோல், ஆஜன்டீனாவை நான் அறிந்த நாளில் இருந்து எனது ஆஜன்டீனாதான் என் கால்பந்தாட்ட நாடு, அதுவும் மரடோனாதான் அந்த கால்பந்தாட்ட தலைவன் என்றாகிவிட்டது.
ஐந்து அடியை விட சற்று உயரமான தோற்றம் என்றாலும் பந்தை ஒரு இடத்தில் இருந்து மற்றவருக்கு தட்டி, மற்றவர் தட்டிய பந்தை இலாவகமாக நேரத்துடன் தானே மீண்டும் பெற்றும் ஆடும் ஆட்டமே அபாரம். இதற்குள் மற்றவர்களிடம் கொடுக்காமல் தானே தொடர்ந்தாற் போல் நூறு அடிவரை துரத்திச் சென்றடிக்கும் மூச்சடைக்கும் ஓட்டமும் இவரிடம் அதிகம் காணப்படும் திறமைகள்.
அதுவும் மடோனா, கனிகியா என்ற நடுநிலை ஆட்டக்காரரிடம் இருந்து பந்தை பெறும் அந்த நேரக்கணக்கான ஆட்டம் பல போட்டிகளில் அவரின் வெற்றியை தனதாக்கிக் கொள்ள ஆதாரமாக இருந்ததை நாம் மறந்துவிடக் கூடாது.
மேசி, ரொனாட்டோ என்று பலரும் இந்த விளையாட்டிற்கு வந்தாலும் இந்த ஜம்பவானை யாரும் முந்த முடியவில்லை. அறுபது என்ற சிறு வயது மரணம் என்னை சற்றே நிலைகுலைய வைத்துவிட்டது.
போதைப் பொருளுக்கு அடிமை…? இத்தாலிய மாபியாக்களின் வலையில்..? என்ற சுட்டு விரல் நீட்டலுக்குள் நான் தற்போது செல்ல விரும்பவில்லை… ஐந்து பிள்ளைகளின் தந்தையின் மரணம் அவசரமானது என்பதை உணர்கின்றேன். அவருக்கு எனது வணக்கங்கள். எனது மரியாதைகள்.
தனது 16 ஆவது வயதில் தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக அறிமுகமான மாரடோனா, கால்பாந்தாட்ட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்தார்.
1986ஆம் ஆண்டில் அர்ஜென்டீனாவுக்கு இரண்டாவது உலக கோப்பை கிடைத்ததற்கு மாரடோனாவின் அபாரமான ஆட்டம் காரணமாக இருந்தது. அப்போது அவரது தாய்நாடான அர்ஜென்டீனா மேற்கு ஜெர்மனியை எதிர்கொண்டது.
அவரளவுக்கு வேறெந்த வீரரும் துல்லியமாகவும் லாவகமாகவும் கோல் அடிக்கும் திறனை பெற்றிருக்கவில்லை. கால்பாந்தாட்ட உலகில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தமது தாயக அணியின் சிறப்பு பயிற்சியாளராக மாரடோனா இருந்தார். இந்த நிலையில், கால்பந்தாட்டத்துறையில் வெற்றிடத்தை ஏற்படுத்தும் வகையில் அவரது உயிரிழப்பு அமைந்து விட்டதாக அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.
கியூபப் புரட்சியின் நாயகன் காஸ்ரோ, கால் பந்தாட்டத்தின் நாயகன் மரடோனா இருவரும் ஒரே தினத்தில் பல வருட இடைவெளியில் எம்மை விட்டுப் பிரிந்துள்ளனர். இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமான உறவில் இருந்தவர்கள். பரஸ்பரம் நல்ல நட்பிலும் உறவிலும் மரியாதையிலும் இருந்தவர்கள். மாரடோனாவுக்கோ பிடலின் கருத்துக்கள் மீது அதிக ஈர்ப்பு எப்போதும் இருந்திருக்கின்றது.

மரடானோ பிடல் காஸ்ட்ரோவை சந்தித்த நாளில் பின்வருமாறு கூறினார்..
‘நான் அவரைச் சந்தித்தது என் கைகளால் வானத்தைத் தொடுவது போன்றது. அவர் எனக்காக என்ன செய்தார் என்பது விவரிக்க முடியாதது. கடவுளுடன் சேர்த்து நான் உயிருடன் இருப்பதற்கு அவர்தான் காரணம்.’ இருவரிடையேயான நட்பு உறவு மரியாதையை இது எடுத்தியம்பி நிற்கின்றது.

எங்கெல்லாம் ஒடுக்குமுறை நிலவியதோ மக்கள் ஒடுக்கப்பட்டார்களோ, அந்த ஒடுக்கப்பட்ட மக்களுடன் அவர் நின்றார். உதாரணமாக, பலஸ்தீன போராட்ட அமைப்புகளுடன் நெருக்கமாவிருந்தார். தன்னாலான பொருளாதர உதவிகளையும். தனது பிரபலத்தை பலன்படுத்தி, பிரச்சாரங்களையும் போராட்ட அமைப்புகளுக்காக செய்தார். அமெரிக்கா ஏகாதிபதிபத்தியத்துக்கு எதிராக செயற்பட்ட கியூபா, வெனிசுவெலா, நிக்கரகுவா, உருகுவே, கடாபியின் லிபியா போன்ற நாடுகளுடனும் நெருக்கமாக இருந்தார். அமெரிக்க பொருளாதார தடைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார்.
இவ்விடத்தில் என் பாடசாலை காலத்து யாழ் இந்துவின் உதை பந்தாட்ட வீரர் நீக்கிரோ, மகாஜனா கல்லூரியின் முயல் என்ற 5 அடி உயரமான விளையாட்டு வீரர்களும் என் நினைவில் வந்து போகாமல் இல்லை.
ஊரில் ஆடு மாடுகளை மேயவிட்டு விட்டு கிடைக்கும் இடைவெளியில் மேய்சல் நிலத்தில் ஆடிய அந்த பந்தாட்டம்.. கால் பந்தாட்டம் எம்மையெல்லாம் மரடோனாவாக உருவகப்படுத்தி ஆடியவையேதான். அந்த ஆட்டங்கள் எல்லாம் எம்மில் பலருக்கும் உடலளவில் அடங்கினாலும் உள்ளத்தில் ஆடிக்கொண்டுதான் இருக்கின்றது. ஆடிக்கொண்டுதான் இருக்க வேண்டும். வாழ்க்கை கொண்டாட்டத்திற்குரியது.

