இலங்கையின் அரசியலமைப்பு மாற்றம் ‘அ’ முதல் ‘ஔ’ வரை – (பாகம் 3)

இலங்கையின் அரசியலமைப்பு மாற்றம் ‘அ’ முதல் ‘ஔ’ வரை – (பாகம் 3)

— மல்லியப்புசந்தி திலகர் —

‘அ’ முதல் ‘ஔ’ வரையான அரசியலமைப்பு மாற்றத்திற்கான  ஆலோசனைக் கோரிக்கைகளில்  ‘எ’ வில் கோரப்படுவது ‘வாக்களிப்புத் தத்துவம் மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பு உள்ளடங்கலாக தேர்தல்கள்’ தேர்தல் முறைமைகள் குறித்த இந்த ‘எ’ கோரிக்கை குறித்த விவாதத்தை  புதிய தொகுதிகளை  உருவாக்க பெருந் தேசிய கட்சிகள் தயாராக உள்ளனவா ?  எனும்  கேள்வியை முன்வைத்தே முன்னகர்த்த நினைக்கிறேன். 

முதலில் இந்த அறிவித்தலின் மொழிமாற்றமே சிக்கலுக்கு உரியது. இந்தக் காலத்தில் தேர்தல்கருத்துக்கணிப்பு எனும்  பெயரில்  பெருங்களேபரங்கள் நடைபெற்று வருகின்றன.  தொலைக்காட்சிகளும், ஜோதிடக்காரர்களும் சம அளவில்  போட்டிப்போட்டுக்கொண்டு கருத்துக்கணிப்புபளை  வெளியிட்டுவருகின்றன.  

திட்டமிட்ட அடிப்படையில், ஒரு வேட்பாளரை அல்லது ஒரு கட்சியை ஊதிப் பெருப்பித்து மக்கள் அலையை உருவாக்கும் முயற்சிகள் இந்தக் கருத்துக் கணிப்புகள் நகைச்சுவை  நாடகங்களாகி வருகின்றன.  

இந்த நிலையில் அரசியலமைப்பு மாற்றத்திற்கான  கோரிக்கைகளில் ஒன்றாக தேர்தல் முறைமை மாற்றம் மாற்றம் கருத்தறியும் வாக்கெடுப்பு (சர்வஜன வாக்கெடுப்பு) என்பதை  இவ்வாறு கருத்துக் கணிப்பு எனமொழிமாற்றம் செய்து  வைத்துள்ளனர். எத்தனை ஆலோசனை முன்மொழிவுகளில்  கருத்துக் கணிப்புப் பற்றி ஆலோசனை வழங்கப்படுமோ தெரியவில்ல! 

இந்த தேர்தல் முறைமை மாற்றம் பற்றி இலங்கையில் பல  வருடங்களாகப் பேசப்பட்டு வருகின்றது. முழுமையான விகிதாசாரத் தேர்தல் முறைமையில் (100% Proportionate Representative)  பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடைபெற்று வந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் மூலம் கலப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 

இதனால் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை  ஏறக்குறைய இருமடங்காக அதிகரித்து உள்ளூராட்சி மன்ற  கூட்டசபைகளில் இடம்போதாமை, மேந்தலைச் செலவுகள்  அதிகரிப்பு, தற்காலிக கட்டடங்களில் சபை ஒன்று கூடல் என பல  சிக்கல்கள் வந்து சேர்ந்துள்ளன.  

அதனைவிட பாரிய சிக்கல் தேர்தல்லின்போது வட்டார  அடிப்படையில் போட்டியிட்டு வெற்றி பெறாத ஒருவர் விகிதாசார  அடிப்படையில் தெரிவாகி சபைத் தலைவர்களாகவும் செயற்படுகின்றனர். அதேநேரம் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில் வட்டாரத்தில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமே  ஒதுக்கீடுகளைச் செய்ய முடியும் என்றும் அவர்களே கூறியும் செயற்படுத்தியும் வருகின்றனர். (உதாரணம் நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பிரதேச சபை).  

இவ்வாறு கலப்பு முறை தேர்தல் முறை நடைமுறைக்கு கொண்டு  வருவதற்கு ‘எல்லை மீள் நிர்ணயம்’ (delimitation) மிக முக்கியமான விடயமாகிறது. 2012 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்ற எல்லை மீள்நிர்ணயங்களின் போது ‘வட்டாரங்களை’ நிர்ணயிப்பதில், ‘இனவாதம்’ எவ்வாறு ஒரு பிரமாணம் (Criteria) ஒன்றானது என்பதை நேரடியாக பார்த்த அனுபவம்  எனக்கு உண்டு.  

உள்ளூராட்சி சபைக்கே இந்த நிலைவரம் என்றால், மாகாண  சபைகள், நாடாளுமன்றம் என்பவற்றுக்கான தொகுதிகளைத்  தீர்மானிப்பதில் எந்தளவு தூரம் ‘இனவாதம்’ பிரதான இடம்  வகிக்கும் என்பதனை ஊகிக்க முடியும். 

மாகாண சபைகள் தேர்தல்களிலும் கலப்பு முறையைக் கொண்டு  வருவதற்கான இணக்கப்பாடு மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் 2017 இலங்கை பாராளுமன்றத்தில் நிபந்தனையுடன்  நிறைவேற்றப்பட்டது.  

அதன்போது அமைக்கப்பட்ட ‘எல்லை மீள்நிர்ணய குழுவின்  அறிக்கை’ அதனை அடுத்து வந்த வாக்கடுப்பின்போது சட்ட திருத்தத்தை முன்வைத்த அமைச்சர் (பைசர் முஸ்தபா) உள்ளிட்ட  அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்த வரலாற்றுச் சம்பவம் இலங்கையில் பதிவாகி உள்ளது.  

இந்த நிலையிலேயே இலங்கையில் தற்போது மாகாண சபைத்  தேர்தல்கள் நடைபெறாமல் உள்ளன. ஏனெனில் அதற்கான சட்டத்திருத்த நிறைவேற்றம் முழுமைபெறாமல் உள்ளது.  

இப்போது மாகாண சபை முறைமை குறித்த கேள்வியும்  எழுந்துள்ளது. ஒன்பது மாகாணங்கள் என்பதற்கு பதிலாக மூன்று மாகாணங்களை உள்ளடக்கிய ஒரு அலகினை உருவாக்கி  மொத்தமாக மூன்று அலகுகளைக்கொண்ட இரண்டாம்  நிலை சபை ( பெயர் எதுவாகவும் இருக்கலாம்) ஒன்றை  உருவாக்குவது உள்ளக  அரசியல் நிகழ்ச்சி நிரலாக உள்ளது. இதன்படி இப்போதை மாகாண சபைகள் பின்வருமாறு எல்லை மீள்நிரணயம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. 

  1. வட + வடமத்தி + வடமேல் = புதிய பெயர் 
  2. கிழக்கு  + ஊவா + சப்ரகமுவ = புதிய பெயர் 
  3. மேல் + மத்திய + தென்  = புதிய பெயர்  

    இந்த கணிப்பு ஒரு ஊகம்தான் ஆயினும் இதற்கான  சாத்தியப்பாடுகள் அதிகம் உள்ளது. இத்தகைய இரண்டாம் கட்ட சபை முறைமை ஒன்றுக்கு வெளிநாட்டு சக்தியொன்று  வரைபைக்  கொடுத்துள்ளதான கதை ஒரு புறம் இருக்க, கூறப்படும்  நியாயம் ஒவ்வொரு சபையும் கடலோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பது. (!?).  

    எது எவ்வாறாயினும் இந்த முறைமை குறித்த யோசனையின்  உள்நோக்கம்  என்னவாக இருக்கும் என்பது வெளிப்படை. பிரிக்கப்பட்ட வட கிழக்கு மாகாணத்தை நிரந்தரமாகப் பிரிப்பது மாத்திரமின்றி வடக்கை,  வடமத்தி, வடமேல்  மாகாணங்களுடன் இணைப்பதன் ஊடாக அதன் அங்கத்தவர்  உறுப்புரிமை  மாற்றத்தை ஏற்படுத்துவது. இதன் மூலம்  இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தை மாற்றலாம்.  

    அதே போல கிழக்கை ஊவா, சப்ரகமுவ மாகாணத்துடன் இணைத்துவிடுவதன் மூலம் உறுப்புரிமை விகிதாசாரத்தை மாற்றி அமைத்தல். இதன் மூலம் முஸ்லிம் மக்களின்  பிரதிநிதித்துவத்தை மாற்றலாம். மத்திய மாகாணத்தைத் தென், மேல் மாகாணத்துடன் இணைப்பதன் மூலம்  மலையகத் தமிழர்களின் பிரிதிநிதித்துவ எண்ணிக்கையை மாற்றலாம். எல்லோரும் கடலிலும் கலக்கலாம்! 

    இப்படி ஒரு நிகழ்ச்சி நிரல் பற்றிய ஊகம் இருக்கத் தக்கதாகவே வடக்கில் இருந்து வரும் முன்மொழிவுகள் வடகிழக்கு  தமிழர் தாயகம் என்ற அடிப்படையில் அமையக் கூடும்.  

    கிழக்கு கடற்கரை மாவட்ட தனியலகு பற்றியும் முன்மொழிவு முஸ்லிம் தரப்பில் இருந்து வரலாம்.  

    நுவரெலியா + பதுளை + இரத்தினபுரி மாவட்டங்களை இணைத்த மலையக தனி அலகு குறித்த கோரிக்கையும் நமது தரப்பு முன்மொழிவுகளாக இருக்கக் கூடும். 

    மேற்படி உத்தேச ஊக அரசில் நிகழ்ச்சி நிரலில் இருந்து நமது முன்மொழிவுகள் வேறுபடக்கூடிய மையப்புள்ளி எது? 

    இங்கே தேர்தல் முறை மாற்றம் குறித்து பேசும்போது அதிகார பகிர்வும் இயல்பாக வருவதை அவதானிக்கலாம். மத்திய மற்றும் சுற்றயல் அதிகார பகிர்வு குறித்த குழுவில் அங்கம் வகித்தவன் என்றவகையில் மாகாண சபை முறைமை இலங்கையில் கேள்விக்குரிய ஒன்றாகவே உள்ளது என்பதை உணரக்கூடியாதாக உள்ளது. இந்தியா அறிமுகம் செய்த ஒன்றை இல்லாமல் ஆக்க இந்தியா ஒரு போதும் சம்மதிக்காது எனும் நமது வறட்டு நம்பிக்கையை தமிழர் தரப்பு முதலில் கைவிட வேண்டும். கொழும்பு  துறைமுகத்தில் கிழக்கு முனையத்துக்காக இடம்பெறும் போராட்டங்களை அவதானித்துக் கொள்வதே சிறந்தது. 

    இனி நாடாளுமன்ற தேர்தல் முறைமை பற்றி பார்க்கலாம். இப்போது உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமை ‘கலப்பு முறை’ ( வட்டாரம் + விகிதாசாரம்) வந்துவிட்ட நிலையில்,  மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமும் கலப்பு முறை நோக்கி நகர்ந்துவிட்ட நிலையில் (தேர்தலை நடாத்தும் எண்ணம் இருந்தால் இந்த சட்டம் நிபந்தனைகள் இன்றி நிறைவேற்றப்படுவதற்கான 2/3 பெரும்பான்மை அரசாங்கத்துக்கு தாராளமாக உண்டு) நாடாளுமன்ற தேர்தல்களை கலப்பு முறையில் கொண்டு வருவது இலகுவாக இருக்கும்.  

    உண்மையில் 20 வது திருத்தம் என 2020 கொண்டு வந்ததற்கும், 20 வது திருத்தம் என 2015 ஆம் ஆண்டு வர்த்தமாணி அறிவித்தல் ஒன்றின் மூலம் செய்த முன்மொழிவுக்கும் தொடர்பு ஏதும் இருக்கவில்லை.  

    2015 ஆம் ஆண்டு 19 வது திருத்தத்துக்கு தமது ஆதரவு தேவை எனில் 20 வது திருத்தமாக நாடாளுமன்ற தேர்தல் முறையை மாற்றி அமைக்க வேண்டும் எனும் நிபந்தனையை அப்போதைய சுதந்திர கட்சி முன்வைத்தே இணங்கியது. அது சாதாரண இணக்கப்பாடாக அல்லாது தேர்தல் முறைமை மாற்றத்திற்கான வரைபாக இருக்க வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டது. அதன்படி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் கூட விடுக்கப்பட்டு உள்ளது.  

    இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலையே கலப்பு முறையில் நடாத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. எனினும் இணக்கப்பாடுகள் எட்டப்படாத நிலையில் 2015  ஆகஸ்ட்டில் 100% விகிதாசார- விருப்பு வாக்கு  முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. 

    எனினும் 2016-2019 காலத்தில் தேர்தல் முறைமை மாற்றம் குறித்த தீவிர கலந்துரையாடல் ஒன்றை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சித்து இருந்தார். வெளிநாட்டு நிபுணர்களை அழைத்து கலப்பு முறை குறித்த கலந்துரையாடல்கள் பலவற்றை செய்தும் இருந்தார். அப்போதைய அரசியலமைப்பு மாற்றத்திற்காக வழிப்படுத்தல் குழு (Steering Committee ) தேர்தல் முறைமை விடயத்துக்கு பொறுப்பாக இருந்தது. உப குழுக்கள் வசம் அது ஒப்படைக்கப்படவில்லை. எனினும் புதிய அரசியலமைப்பும் வரவில்லை. தேர்தல் முறைமையும் மீறவில்லை. 2019 தேர்தலும் 2015 போலவே முடிவடைந்தது. 2020 ல் 20 வது திருத்தம், தேர்தல் முறைமை பற்றி பேசாமலேய வேறு விடயங்களில் கவனம் செலுத்தியது.  

    அப்படியானால் தேர்தல் முறைமை மாற்ற யோசனையை கைவிட்டு விட்டார்களா? அதுதான் இல்லை. அதனை நிறைவேற்ற அவர்களுக்கு 2/3 பலம் தேவைப்பட்டது. இப்போது அதனை நிரூபித்துக் கொண்டுள்ள நிலையில் புதிய அரசியலமைப்பு மாற்ற செயன்முறைகளில் பிரதான இடத்தை நாடாளுமன்ற தேர்தலில் ‘கலப்பு தேர்தல் முறையை’  அறிமுகம் செய்வார்கள். அதன் விகிதாசாரம் 70:30 ஆக இருக்கலாம். அதாவது 70 வீதாமன உறுப்பினர்கள் தொகுதி முறையில் இருந்து தெரிவு செய்யப்படுவார்கள். 30 வீதமானவர்கள் விகிதாசார முறைமையில் இருந்து தெரிவு செய்யப்படுவார்கள்.  

    இங்கு 70 வீதமான உறுப்பினர்கள் 160 தொகுதிகளிலும் (இரட்டை அங்கத்தவர் உட்பட 164) இருந்து தெரிவாகி 70 சதவீத பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வர். எஞ்சியோர் விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்) போட்டியிட்டு தெரிவு செய்யப்படுவர். இதுதான் முறைமை என வருமிடத்து இது குறித்து விரிவாக கலந்துரையாடலாம்.  

    இப்போது இங்கே உள்ள சிக்கல் அந்த 160 தொகுதிகளும் எவை என்பதுதான். இலங்கையில் விகிதாசார விருப்புமுறை தேர்தல் முறைமை வந்த பின்னரும் கூட, தொகுதிகள் கைவிடப்பட்டு மாவட்ட தேர்தல் முறை வந்த பின்னரும் கூட இரண்டு பிரதான கட்சிகளிலும் இன்னும் ‘தொகுதி முறை’ கலாசாரம் கைவிடப்படவில்லை. ‘ஆசன சங்விதாயக்க’ என்ற முறைமையில் 160 தொகுதி அமைப்பாளர்களைக் கொண்டதாகவே ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி ஆகிய இரண்டு கட்சிகளினதும் கட்டமைப்புகள் உள்ளன. (பொதுஜன பெரமுன தற்காலிகமாகவே இதனைப் பேணி வருகிறது)  

    எனவே புதிய தேர்தல் முறைமை ஒன்றுக்காக தொகுதி எல்லை மீள்நர்ணயம் செய்யப்படுமிடத்து ‘ இனவாத’  பரிமாணங்கள் மாத்திரமின்றி கட்சிக் கட்டமைப்பு குறித்தும் கடந்த காலங்களில் சிந்திக்கப்பட்டது. அதற்கு இருபெருந்தேசிய கட்சிகளும் பெருமளவில் உடன்பாடு கொண்டிருக்கவில்லை. அவர்கள் இருக்கின்ற அந்த 160 தொகுதிகளையும் அப்படியே இருக்கத்தக்கதாக தொகுதிவாரி கலப்பு தேர்தல் முறைமை ஒன்றையே வலியுறுத்தினர். அந்த இரு தேசிய கட்சிகளன ஐக்கிய தேசிய கட்சியும், ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் இப்போது தமது கட்சிக் கட்டமைப்பின் தொகுதிகளை பெருமளவில் இழந்து நிற்கின்றன. இதில் ஐக்கிய தேசிய கட்சி 100 சத வீதமும் சுதந்திர கட்சி 90 சத வீதமும் தமது தொகுதிகளில் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்து நிற்கின்றன. அதேநேரம் அவற்றில் இருந்து தங்களை உருமாற்றிக் கொண்டுள்ள பொதுஜன பெரமுனவும் (சுதந்திரக் கட்சியின் மறுவடிவம்), ஐக்கிய மக்கள் சக்தியும் (ஐக்கிய தேசிய கட்சியின் மறுவடிவம்) புதிய கட்சிகள் என்ற வகையில் புதிய தொகுதி நிர்ணயத்தில் அக்கறை காட்ட ஆர்வம் காட்டலாம். எனவே நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்த புதிய எல்லை மீள் நிர்ணயம் இடம்பெறும் சாத்தியம் இந்த புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையோடு இடம்பெற வாய்ப்பு உள்ளது.  

    இதில் உள்ள சிக்கல் முஸ்லிம், மலையகத்தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமும் மக்கள் விடுதலை முன்னணி போன்ற சிங்கள சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவமும் எவ்வாறு தக்கவைக்கப்படப் போகிறது என்பதுதான்.  

    ( தொடரும்)