(மூத்த செய்தியாளர் பி.கே. பாலச்சந்திரன் அவர்கள் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு எழுதிய குறிப்பு. தமிழில் சீவகன் பூபாலரட்ணம்)
பிரிட்டிஷ்காரர்கள் இலங்கையை ஆண்டபோது, நெல்லை முக்கிய பயிராகச் விளைவித்த உள்ளூர் விவசாயிகளின் பயிர்ச்செய்கையை திட்டமிட்டபடி பலவீனப்படுத்தி, அவற்றை தமது ஏகபோகத்துக்கு உட்பட்ட பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையாக மாற்றினார்கள்.
சரித்திர ரீதியாக நடந்த இந்தப் புறக்கணிப்பு காரணமாக இன்றுவரை இலங்கையின் உள்ளூர் விவசாயம் அதிலிருந்து மீளவில்லை. அதனால், அங்கு இன்றும் உள்ளூர் தேவைகளுக்கு போதுமான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகம் இல்லாத காரணத்தினால், இலங்கை அரசாங்கம் அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
உதாரணமாக 2018இல் தானியம், பால், மற்றும் ஏனைய உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்யவேண்டியிருந்தது. அது மொத்த இறக்குமதியின் 7.2 வீதமாகும்.
உள்ளூர் விவசாயிகளின் பயிர்ச்செய்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி, உடனடியாகவே சுதேச மக்கள் மத்தியில் பெரும் வறுமையை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் அந்தக் காலப்பகுதியில்தான் இலங்கையில் துரிதமாக வளர்ந்த பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையில், பிரிட்டிஷ் தோட்ட முதலாளிமாரும், சிவில் அதிகாரிகளும், அவ்வளவு ஏன் கவனர்களும்கூட முதலீடு செய்து பெரும் லாபம் சம்பாதித்துக்கொண்டிருந்தனர்.
இலங்கை பொருளாதாரத்துக்கு கொடுங்கோன்மைச் சட்டம்
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையை டச்சுக்காரர்களிடம் இருந்து பிரிட்டிஷ்காரர்கள் கைப்பற்றிய போது, பொருளாதார நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் தலையீடு இல்லாத ஒரு சுதந்திர போக்கே (laissez-faire) ஐரோப்பாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்தது. ஆனால், இலங்கையில் உள்ள மக்கள் தேவையான உயர்மட்ட அபிவிருத்தியை அடையவில்லை என்றும் ஆகவே அங்கு ஒரு நன்மை நோக்கிய கடுமையான சர்வாதிகாரப் போக்கே தேவை என்றும் கூறி பிரிட்டிஷ்காரகள் இலங்கையில் சுதந்திர வணிகத்துக்கு அனுமதியளிக்கவில்லை.
இந்த சித்தாந்தத்தை காண்பித்து இலங்கையில் இருந்த மனித மற்றும் இயற்கை வளங்களை முற்றுமுழுவதுமாக பிரிட்டிஷ்காரர்கள் பிரிட்டனின் நலனுக்காக மாத்திரம் பயன்படுத்தினார்கள். மக்களுக்கு எந்தவிதமான நல உதவிகளும் மறுக்கப்பட்டன. இதன்மூலம் உள்ளூர் மக்களுக்கான அபிவிருத்தியை செய்வதைவிட அவர்களிடம் இருந்து வருவாயை பெறுவது மாத்திரமே காலனித்துவ ஆட்சியாளர்களின் கொள்கையாக இருந்தது.
காணி, வரி, தொழிலாளர் மற்றும் ஏகபோகம் குறித்து கொழும்பிலும் லண்டனிலும் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் “பழைய மற்றும் அடக்குமுறையை மையமாக கொண்டதாகவே இருந்ததாகவும், இலங்கையில் நடந்த போர்த்துக்கேய மற்றும் ஒல்லாந்த ஆட்சிகளை ஒத்ததாகவே இருந்ததாகவும் ‘Confrontations with Colonialism, 1796-1920 Vol I.’ என்ற தனது நூலில் பேராசிரியர் பி. வி. ஜயசேகர கூறியுள்ளார்.
இலங்கைக்கான வருவாய் இலக்கு
1796 முதல் 98 வரையில் இலங்கைக்கான “வருவாய் இலக்கு” ஒன்றை லண்டனில் பிரிட்டிஷ் நிர்வாகம் நிர்ணயித்தது. அளவுக்கு அதிகமாக வரி செலுத்திய மக்களுக்கான சேவைகள் எதுவும் வழங்கப்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டில் நடந்த முக்கிய நிர்மாணப்பணி என்பது வீதிகளை அமைப்பது மாத்திரமே. ஆனால், இவை ஒன்றும் உள்ளூர் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படவில்லை. வளர்ந்துவரும் பெருந்தோட்ட பொருளாதாரத்தை மேம்படுத்த, பிரிட்டிஷ் வணிக நலன்களை இலக்காக கொண்டே வீதிகள் அமைக்கப்பட்டன.
பழைய மன்னர்களால் இலவச அரச சேவையின் உதவியுடன் அமைக்கப்பட்ட நீர்ப்பாசன திட்டங்கள் பிரிட்டிஷ்கார்களின் இராணுவ மற்றும் பொருளாதார தேவைகளுக்காக புறக்கணிக்கப்பட்டன. (குறிப்பாக பெருந்தோட்ட துறையின் நலனுக்காகவே அவை செய்யப்பட்டன.)
இலங்கையின் ஆளுனராக அனுப்பப்பட்ட ஹரி நோர்ட் அவர்கள் 1855இல் இலங்கையை அடைந்தபோது, நீர்ப்பாசனத்தை வழங்குமாறு கோரி பெருமளவு கோரிக்கைகள் அவரிடம் முன்வைக்கப்பட்டன. நீர்ப்பாசனத்தின் தேவையை அவர் உணர்ந்தபோதிலும், பிரிட்டிஷ் தோட்ட முதலாளிமார் “உள்ளூர் விவசாயம்” வளர்வதையோ அல்லது அது ஏற்றுமதி அந்தஸ்தை அடைவதையோ விரும்பவில்லை. ஆகவே அவர்கள் ஹரி நோர்ட்டின் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
1849இல் நீர்ப்பாசன அபிவிருத்திக்கு நிதி வழங்க அரசாங்கம் முன்வந்தது. ஆனால், அந்த நிதி வட்டியோடு திரும்பச் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன், அரசாங்க பொது வணிக நிறுவனங்களின் விவசாயிகள் இலவசமாக வேலை செய்யவும் வேண்டும். இந்தப் பணிகள் எல்லாம் பிரிட்டிஷாரின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட பெரும்பாலும் உள்கட்டுமானப் பணிகள் ஆகும்.
புராதன இலங்கை மன்னர்களின் நிர்வாகத்தில் மிகை வரி செலுத்துதல் மாத்திரமல்லாமல், விவசாய மற்றும் நீர்ப்பாசன திட்டங்களை பராமரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக பேராசிரியர் ஜயசேகர கூறுகிறார். காணிகள் மீது அரசருக்கே அதிகாரம் என்ற பாரம்பரியத்தைத்தான் பின்பற்றுவதாக கூறி பிரிட்டிஷ்காரர்கள் தமது நடவடிக்கையை நியாயப்படுத்தினார்கள். மன்னராட்சிக்காலத்தில் மன்னர் காணிகளை விவசாயிகளுக்கு வழங்குவார். அவர்கள் அதற்குப் பதிலாக சில சேவைகளை அரசுக்கு வழங்க வேண்டும். நீர்ப்பாசனம் போன்ற பொதுச்சேவைகளே விவசாயிகளிடம் எதிர்பார்க்கப்பட்டன. சிறப்புச் சேவைகள் குறித்த நபரின் ஜாதியை அடிப்படையாகக் கொண்ட சேவைகளாக இருந்தன. ஆனால், பிரிட்டிஷ்கார்கள் காணியை ஒட்டுமொத்தமாக பயன்படுத்துவது மற்றும் உரிமை கோருவது ஆகியவற்றை நிராகரித்தனர். கண்டி தலைவர்களுடன் பிரிட்டிஷ்காரர்கள் 1815 இல் செய்துகொண்ட கண்டி ஒப்பந்தத்துக்கு இது முற்றிலும் முரணானதாகும் என்று ஜயசேகர கூறுகிறார். மக்களின் வழக்கமான உரிமைகள் புதிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அந்த ஒப்பந்தம் தெளிவாகக் கூறுகின்றது.
விவசாயிகளுக்கு கடின வரிகள்
அரசாங்கத்துக்கு மக்கள் சேவையை பெறும் உரிமையை 1801 இல் சிலோனின் முதலாவது பிரிட்டிஷ் ஆளுனர் ஃபிரறிக் நோர்த் மீண்டும் கொண்டுவந்தார். ஆனால், காணிகளில் விளையும் பொருட்களுக்கு அவர் ஒரு நேரடி வரியையும் அறிவித்தார். மக்கள் ஆத்திரமடைந்தனர். மன்னராட்சி காலத்தில் மக்கள் மன்னருக்கு செய்த இராஜகாரியமானது பெரும்பாலும் நீர்ப்பாசன திட்டங்களுக்கானதாக இருந்தது. ஆனால், பிரிட்டிஷ்கார்கள் அந்த முறையை தமது இராணுவ மற்றும் வணிக தேவைகளுக்காக பயன்படுத்தினார்கள். இதன் விளைவாக அரிசி உற்பத்தி தேவையான அளவைவிட 50 வீதத்தால் குறைந்தது. இறக்குமதி மூன்றுமடங்காக அதிகரித்தது.
“இதன் மூலமான ஆபத்தான விளைவாக, விவசாயிகளின் பயிர்ச்செய்கை ‘பங்கீட்டு வளர்ப்பு’ முறைக்கு மாறியது. அதாவது, தமது விளைச்சலில் அரைவாசியை விவசாயிகள் காணி உரிமையாளருக்கு கொடுக்க வேண்டும். காணியை 25 – 50 வீதம் வரையிலான வட்டிக்கடனில் வாங்க வேண்டும் என்ற நிலை உருவானது.” என்றார் ஜயசேகர.
“கறுவா” உற்பத்தி மற்றும் விற்பனையில் பிரிட்டிஷ்ஷாருக்கு இருந்த ஏகபோகம்(அது ரத்துச் செய்யப்படும் வரை) லாபகரமான மேற்கத்தைய சந்தையில் விவசாயிகளை நலிவடையச் செய்தது. அங்கு வசூலிக்கப்பட்ட தீர்வையும் வெறுமனே பிரிட்டிஷாரின் நன்மைக்காக மாத்திரமே அறவிடப்பட்டது. பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தீர்வைகள் 50 வீதத்தால் குறைக்கப்பட்டன. பெருமளவு பொதுமக்களால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கு 8 முதல் 12 வீத இறக்குமதி வரி வசூலிக்கப்பட்டது. புகையிலை மற்றும் பாக்கின் மீதான ஏற்றுமதி வரி, பரந்துபட்ட இந்தியச் சந்தையில் இலங்கை விவசாயிகளை பாதித்தது. பிரிட்டிஷ் கப்பல் போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பிரிட்டிஷாருக்கு சொந்தமல்லாத கப்பல்களில் ஏற்றிவரப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக 50 வீத வரி விதிக்கப்பட்டது.
பிரிட்டிஷ்காரருக்கு தனிச் சலுகை
வணிக உற்பத்திப் பொருட்களான கோப்பி, பருத்தி மற்றும் கரும்பு ஆகியவற்றை பயிர் செய்ய பிரிட்டிஷ்காரர்களுக்கும் பறங்கியருக்கும் காணி இலவசமாக வழங்கப்பட்டது. இப்படியான தொழில்துறையில் ஈடுபடும் வணிக நிறுவனங்களுக்கு 5 முதல் 10 வருடங்களுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டது. அரசருக்கான சேவையில் ஈடுபடுவதில் இருந்து அந்த நிறுவனங்களின் ஊழியருக்கும் விலக்கு அளிக்கப்பட்டது. பெருந்தோட்டம் பணம் கொட்டும் ஒரு இயந்திரம்போல ஆன பின்னர், “நெற் பயிர்ச்செய்கை என்பது ஒரு விரையம் என்றும் அரசாங்க ஊக்குவிப்பை பெறுவதற்கு அதற்கு அருகதை கிடையாது” என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆளுனர்களும் அதனை ஏற்றார்கள்.
பெருந்தோட்ட பொருளாதாரம் பெரும் வளர்ச்சி கண்டதற்கு ஒரு முக்கிய காரணம், அதன் முதலீட்டாளர்களில் பிரிட்டிஷ் அதிகாரிகளும் அடங்குவர் என்பதாகும். அவ்வளவு ஏன், ஆளுனர்களே பெருந்தோட்டங்களில் முதலீடு செய்தனர். ஒரு சட்டமன்றம் உருவாக்கப்பட்டபோது, அதில் பெருந்தோட்ட முதலாளிகளும் பிரிட்டிஷ் வணிகர்களும் கணிசமாக பிரதிநிதித்துவம் பெற்றனர். பிரிட்டிஷ் அரசாங்கத்திலும் பெருந்தோட்ட முதலாளிமாரின் நலன்கள் பெரிதும் பிரதிபலிக்கப்பட்டன. இலங்கையில் இருந்த பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் உள்ள பெருந்தோட்ட பொருளாதாரத்தின் ஆளுமை காரணமாக இந்தியாவில் இருந்ததைவிட இலங்கையில் 19 ஆம் நூற்றாண்டில் காலனித்துவ அரசாங்கம் மிகவும் பலமாக இருந்தது என்கிறார் பேராசிரியர் ஜயசேகர.
ஒருவருக்கு முன்னதாக வழங்கப்பட்டிராத அனைத்துக்காணிகளும் பிரிட்டிஷ் முடியாட்சிக்கு சொந்தமானதாகும் என்ற அடிப்படையிலேயே 1840 ஆம் ஆண்டின் கொடுங்கோல் காணிச்சட்டம் 5 உருவாக்கப்பட்டதாகும். இது காணி அபகரிப்பவர்கள், பெருந்தோட்ட முதலாளிமார் மற்றும் சிவில் அதிகாரிகள், ஆளுனர்கள் போன்ற பலதரப்பட்ட வெள்ளை இனத்தவர்கள் ஆகியோர் காணிகளை பிடிப்பதற்கான திறவுகோலாக அமைந்தது. அங்கீகரிக்கப்படாதவகையில் காணியை வைத்திருக்கும் உள்ளூரவர் சிறைக்கு அனுப்பப்பட்டனர் அல்லது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 1848 ஆம் ஆண்டின் புரட்சிக்கு இதுவும் ஒரு காரணமாகிற்று. அந்தப் புரட்சி இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது. 1848 ஆம் ஆண்டு புரட்சிக்கான காரணத்தை ஆராய ஒரு பாராளுமன்ற குழு அமைக்கப்பட்டது. ஆனால், அதனால் எந்தவிதமான மாற்றமும் வரவில்லை.
சிறிய விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் கோப்பி தரமாக இருந்த போதிலும் பிரிட்டிஷ் நிறுவனங்களால் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படும் கோப்பிக்கே பிரிட்டிஷ் அரசாங்கம் ஆதரவாக இருந்தது. இந்தியாவின் மதராஸ் பட்டிணத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மலிவான மற்றும் பணிவான தொழிலாளர்களைக் கொண்டு கோப்பி நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டின.
பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களை சிறையில் வைப்பதுபோல பிடித்து வைத்து வேலைவாங்குவதில் ஆர்வம் கொண்ட பிரிட்டிஷ் தோட்ட முதலாளிமார் உள்ளூர் சிறுவிவசாயிகளின் விவசாய வளர்ச்சிக்குத் தடையாக இருந்தனர். அவர்களுக்கான பாசன வசதியை மேம்படுத்த மறுத்தனர். மன்னர் ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பாரம்பரிய பாதுகாப்பு மறுக்கப்பட்டது. இதன் காரணமாக சிறு விவசாயிகள் தமது காணிகளைவிட்டு வெளியேறி வேலைக்காக பெருந்தோட்டங்களுக்கு செல்லச் நேர்ந்தது. இவற்றைவிட பெருந்தோட்டங்களுக்கும் வீதி அமைப்புக்கும் தொழிலாளர்கள் கட்டாயமாக பணியில் அமர்த்தப்பட்டனர்.
குடிசை வரி
1832 இல் வீதி நிர்மாணம் தவிர்ந்த ஏனைய கட்டாய சேவைகள் ஒழிக்கப்பட்டன. எப்படியிருந்த போதிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆளுனர் மக்குல்லம் அவர்களால் ஒரு குடிசை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஏற்பாட்டின் கீழ், சிங்கள விவசாயிகள் இந்த குடிசை வரியில் இருந்து விலக்கு பெறவேண்டுமானல், தமது குடும்பத்தில் இருந்து ஒருவரையாவது பெருந்தோட்ட வேலைக்கு அனுப்பவேண்டும். இருந்தபோதிலும் குறைந்த வேதனத்தில் பெருந்தோட்டங்களில் வேலை செய்ய சிங்கள விவசாயிகள் மறுத்தனர்.
சிங்கள விவசாயிகள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் என்ற காரணத்தினாலேயே, இந்தியாவில் இருந்து ஆட்களை அழைத்துவரவேண்டும் என்ற பிரிட்டிஷாரின் பிரச்சாரம் பொய்யானது என்கிறார் பேராசிரியர் ஜயசேகர. பொருத்தமான ஊதியம் கொடுக்கப்பட்டபோது சிங்கள விவசாயிகள் பெருந்தோட்டங்களில் வேலை செய்ய தயாராக இருந்தனர். உதாரணமாக 1890களில் 18,000 முதல் 23,000 வரையிலான சிங்கள விவசாய தொழிலாளர்கள் பெருந்தோட்டங்களில் பணியாற்றினர்.
இந்திய தொழிலாளர்
எப்படியிருந்தபோதிலும், பட்டினியால் பாதிக்கப்பட்ட மதராஸ் பட்டினத்தின்(பெரும்பாலும் தற்போதை தமிழக பகுதிகள்) மாவட்டங்களில் இருந்து மலிவான தமிழ் தொழிலாளர்கள் பெருமளவில் கிடைக்கத்தொடங்கிய பின்னர் சிங்கள தொழிலாளர்களை பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. மதராஸில் அப்போது இருந்த பிரிட்டிஷ் ஆட்சியும் விவசாயத்தை புறக்கணிப்பதன் மூலம் சிறுவிவசாயிகள் பிரிட்டிஷ் பெருந்தோட்டங்களுக்கு வேலைக்கு போவதை ஊக்குவித்தது.