(பிரிட்டனின் “த கார்டியன்” பத்திரிகையில் வெளியான தகவலை தழுவியது. தமிழில் சீவகன் பூபாலரட்ணம்)
போர்கடந்த பூமிகளில் அமைதி என்பது ஒரே நாளில் வந்துவிடுவதில்லைதான். ஆனால், ஆப்கானிஸ்தானில் அது என்றாவது ஒரு நாள் வருமா என்ற நம்பிக்கை இன்னும் ஏற்படவில்லை. அது ஒரு சபிக்கப்பட்ட பூமியாகவே இன்னமும் தொடருகின்றது.
அனைத்து முக்கிய சக்திகளும் கொலைக்களமாக பயன்படுத்திய பூமி ஆப்கான். அமெரிக்கா மாத்திரமல்ல ரஷ்யாவும் அங்கு பல ஆண்டுகள் படுகொலைகளை செய்துவிட்டுத்தான் போனது. அடுத்துவந்த அமெரிக்காவும் அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் நடவடிக்கையில் ஈடுபட்டது. ஆனால், இவற்றைவிட அங்குள்ள இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் தமது சொந்த மக்களை படுகொலை செய்ததும் மிக அதிகம். எப்போதும் இயக்கங்கள் ஆயுதம் தூக்கும் போது அவற்றல் அதிகமாக அழிக்கப்படுவது அவர்களின் சொந்த மக்கள்தான் என்பதுதான் ஆப்கானிஸ்தானுக்கும் பொருந்துகிறது. எமது நாட்டின் கடந்தகால நிலையையும் இது நினைவூட்டுகின்றது.
ஆடிக்களைத்துப்போன அமெரிக்கா, ஆப்கானில் இருந்து வெளியேறுவதற்கு இப்போது வழி தேடுகிறது. அதற்காக ஏதோ அமைதி நடவடிக்கைகள் அங்கு நடப்பதாக காண்பிக்க அது முனைகிறது. ஆனால், அங்கு இன்னமும் தொடரும் படுகொலைகள் ‘உண்மை அதுவல்ல’ என்று உறுதி செய்கின்றன.
எல்யாஸ் டாயி ஒரு செய்தியாளர். செய்திகளை தேடி அவர் ஓடிக்கொண்டிருந்த காலங்களில் அவருக்கு மகிழ்வான நேரம் மனைவியுடன் சமைப்பது, மலர்களை நேசிப்பது, தனக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் எஞ்சியிருக்கும் ஒரே குழந்தையுடன் விளையாடுவது. ஆம் அவரது கைக்குழந்தையான மகளுடன் விளையாடுவது அவரது சந்தோசம். ஆனால், இப்போது தனது தந்தை நிறைய நாளாக தன்னோடு விளையாட வீடு வரவில்லை என்று அந்தக் குழந்தை ஏங்குகின்றது. அது ஏன் என்று புரியும் வயது அதற்கு கிடையாது.
ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக தொடரும் “இலக்கு வைத்துப் படுகொலை செய்யும்” நடவடிக்கைகளின் இறுதிப் பலி எல்யாஸ் டாயி. கடந்தவாரம் அவரது காரின் மீது கைக்குண்டு வீசப்பட்ட போது, 34 வயதான அவர் இறந்துபோனார். தலைநகரான ஹெல்மண்ட் மாகாணத்தின் லக்ஸர் ஹா என்ற இடத்தில் இது நடந்தது.
நாடெங்கிலும், செய்தியாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், மிதவாத மத அறிஞர்கள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் தமது அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்காக வெளியில் செல்லும்போது, அவர்களின் கார்கள் மீது பெரும்பாலும் கைக்குண்டு வீசி, அவர்கள் கொல்லப்படுகின்றார்கள்.
2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இந்த மாதிரியான படுகொலைகள் சடுதியாக அதிகரித்திருப்பதாக ஐநாவும், ஆப்கானுக்கானிஸ்தானின் சுதந்திர மனித உரிமைகள் ஆணைக்குழுவும் ஆவணப்படுத்தியுள்ளன.
ஒரு சமாதான உடன்படிக்கையை கொண்டுவருவதற்காக நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் கட்டாரில் ஆப்கான் அரசாங்கமும் தலிபான் அமைப்பும் முயற்சித்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்தத் தொடர்ச்சியான படுகொலைச் செய்திகள் நாடெங்கும் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளன.
கிளர்ச்சிக்காரர்கள் இந்த எல்லா தாக்குதல்கள் குறித்தும் உரிமை கோரவில்லையாயினும், இந்த இரண்டும் இடையில் இருக்கும் தொடர்பு குறித்து பலரும் பேசுகிறார்கள்.
“இந்தக் கொலைகளின் ஒரு பகுதிக்கு தலிபான்கள்தான் காரணம் என்று நாம் ஊகித்தாலும், ஒரு செய்தி தெளிவாக சொல்லப்படுகின்றது: அதாவது ‘எங்கள் ஆட்சிக்கு தயாராக இருங்கள், எங்களிடம் மண்டியிடத் தயாராக இருங்கள், நாங்கள் மீண்டும் வருகின்றோம்’, என்பதுதான் அந்தச் செய்தி” என்கிறார் காபூலை தளமாகக் கொண்ட அறிஞர்கள் குழுவான AREU என்ற அமைப்பின் இயக்குனரான ஒர்சாலா அஸ்ரஃப் நேமட்.
“ஜனநாயக பெறுமானங்கள், பேச்சுச்சுதந்திரம், கல்வி ஆகியவற்ரோடு, அறிவொளியைத் தரக்கூடிய மதப் புலமை ஆகியவற்றுக்குமான ஒன்றுபட்ட போராட்டத்தை இந்த நிகழ்வுகள் ஊக்கமிழக்கச் செய்கின்றன. தமது ஆட்சியானது பயத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பதால், அவர்கள் பயத்தை உருவாக்கும் நோக்கிலேயே இந்த தாக்குதலைச் செய்ய முயலுகிறார்கள்.” என்கிறார் அவர்.
அங்கு நடக்கும் பல கொலைகளைப் போலவே நவம்பர் 12 ஆம் திகதி நடந்த டாயியின் கொலையும் தெளிவற்ற ஒன்றாகவே இருக்கின்றது. இந்தக்கொலையில் தமக்கு சம்பந்தமில்லை என்று தலிபான்களின் பேச்சாளர்களில் ஒருவரான குவாரி யூசுஃப் அஹ்மதி கூறுகிறார். ஆனால், இதனை தமது ஒரு “சாதனை” என்று கூறும் உள்ளூர் தலிபான்கள், அதனைக் காட்டி, சமூக ஊடகங்களில் ஏனைய செய்தியாளர்களை மிரட்டுகிறார்கள்.
சுயாம்புவான டாயி, தனது கிராமத்தில் இருந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக தலைநகருக்கு வந்து, அங்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களுடன் வேலை செய்யத் தொடங்கினார். ஆப்கானிஸ்தானின் பயங்கரம் நிலவும் மூலைமுடுக்குகளில் இருந்து தகவல்களை உலகுக்கு சொல்வது அவரது பணி.
“அவர் மாற்றீடு செய்ய முடியாத ஒருவர்” என்கிறார் அவருக்கு அஞ்சலி செலுத்தும் மற்றுமொரு செய்தியாளரான ஜாவட் தவாரி. டாயி நகைச்சுவையானவர் என்பது அவரது கருத்து.
ஹெல்மண்டில் பணியாற்றும் ஏனைய செய்தியாளர்களைப் போலவே டாயியுக்கும் தொலைபேசி, வட்ஸ்ஸப் மற்றும் டுவிட்டர் மூலம் நிறைய மிரட்டல்கள் வருவது வழக்கம். ஆனால், அவர் அதனையெல்லாம் புறக்கணித்துவிட்டு தனது பணியைப் பார்த்துவந்தார்.
அவரது படுகொலையையடுத்து, தாம்தான் அடுத்த நபரோ என்ற பயம் ஏனைய செய்தியாளர்களுக்கு. தாம் கொல்லப்பட்டால் தமது குடும்பங்கள் பெரும் பயங்கரத்துக்குள் மாட்டிக்கொள்ளும் என்ற அச்சம் காரணமாக பல செய்தியாளர்கள் ஹெல்மண்டில் இருந்து வெளியேறிவிட்டனர். இது ஹெல்மண்டில் உள்ள ஊடகங்களுக்கு தொழில் ரீதியாக பெரிய இழப்பு.
நாடெங்கும் நடக்கும் இப்படியான கொலைகள் ஏனைய இடங்களிலும் இதேமாதிரியான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளன. பலியானவர்களில் இளம் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் முதல் மத்திய வங்கியின் ஆலோசகர்கள் வரை அடங்குகிறார்கள். இவர்கள் எல்லோரும் ஏதோ தேசிய மட்டத்தில் பிரபலமானவர்கள் என்றோ முக்கியஸ்தர்கள் என்றோ அல்லது தலிபான்களை வெளிப்படையாக விமர்சிப்பவர்கள் என்றோ சொல்ல முடியாது.
இவர்களுடைய படுகொலைகள் ஆப்கானிஸ்தான் சமூகத்தில் ஒரு ஸ்திரமற்ற நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் தாமும் இலக்கு வைக்கப்படலாமோ என்று பல தொழில்சார் பணியாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஆண்- பெண் இரு பாலாரும் ஒன்றாக பணியாற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளரும் பயப்படுகிறார்கள். இப்படி இரு பாலாரும் ஒன்றாக வேலை செய்யும் அலுவலகங்களை தாம் ஆட்சிக்கு வந்தால் ஒழிக்கப்போவதாக தலிபான்கள் கூறுகிறார்கள்.
“யாரும் கொல்லப்படலாம் என்ற ஒரு எழுந்தமானமான நிலையே அங்கு காணப்படுகிறது. எந்த வகையான ஆட்கள் கொல்லப்படலாம் என்பதில் எழுந்தமானம் கிடையாது. அனைத்து வகையான ஆட்களும் கொலை செய்யப்படலாம். புத்திஜீவிகள், ஆய்வாளர்கள், செயற்பாட்டாளர்கள், செய்தியாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் என்று நாம் அழைக்கும் அனைவரும் இலக்கு வைக்கப்படுகிறார்கள்” என்கிறார் ஆப்கான் ஆய்வுகள் வலையமைப்பு என்னும் நிறுவனத்தில் இணை இயக்குனரான கேட் கிளார்க்.
“தலிபான்களின் அதிகாரத்தை எதிர்ப்பவர்கள் மாத்திரமல்ல, தலிபான்களது கொள்கைகள் மற்றும் அவர்கள் உலகைப் பார்க்கும் பார்வைக்கு முரணானவர்களும் இலக்கு வைக்கப்படுகிறார்கள்.”
ஏற்கனவே ஆட்டங்கண்டிருக்கும் மத்திய அரசு மீதான நம்பிக்கையையும் இந்த கொலைகள் குறைத்து மதிப்பிடுகின்றன, என்று கூறுகிறார் ஆப்கானிஸ்தானின் பெரிய தனியார் ஊடக நிறுவனமான மோபி குறூப்பின் இயக்குனர் சாட் மொஹ்செனி. தலிபான்களின் தாக்குதல்களில் இந்த நிறுவனம் பல செய்தியாளர்களை இழந்துள்ளது.
“தமது பழைய ஆட்சிக்கால நிலைமைகளுக்கு எல்லாவற்றையும் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது தலிபான்களுக்கு முக்கியமாகும்” என்கிறார் அவர். ஆனால், இந்த இரத்தக்களரிகள் மிகுந்த சமூக செய்திகளுக்கு ஒரு இராணுவ காரணமும் இருக்கின்றது. “இந்தச் செய்தியின் இன்னுமொரு பரிமாணம் என்னவென்றால், ‘நாம் விரும்பும் எவரையும் எந்த இடத்தில் வைத்தும் நாம் தாக்குவோம். உங்கள் அரசாங்கம் உங்களை பாதுகாக்க முடியாது.” என்கிறார் அவர்.
பெப்ரவரியில் கைச்சாத்திடப்பட்ட அமெரிக்க படை விலகலுக்கான ஒப்பந்தத்தின்படி, தமது தாக்குதல்களை குறைத்துக்கொள்வோம் என்று தலிபான்கள் உடன்பட்டுள்ளார்கள் என்று அமெரிக்கா கூறுகிறது. தேசமெங்கிலும் பரந்துபட்ட அளவில் வன்செயல்கள் அதிகரித்திருந்தாலும், நகரப்பகுதிகளில் நடக்கும் பாரிய வன்செயல்கள் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளன.
இலக்கு வைத்து நடத்தப்படும் படுகொலைகள் அமெரிக்காவின் பதில் நடவடிக்கைகளை ஈர்ப்பதற்கு வாய்ப்பு குறைவு. அமெரிக்கப் படைகள் பேசாமல் இருக்கின்றன. அவை குறித்த செய்திகளும் இப்போது ஆப்கானின் எல்லைக்கு அப்பால், பேசப்படுவதும் குறைந்துவிட்டது. ஆனால், இவை ஆப்கானின் நகரப்பகுதிகளில் ஒரு நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளன. அங்கெல்லாம் பாதுகாப்பற்ற ஒரு உணர்வு பரவியுள்ளது.
படுகொலைகளால் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வு, கொலைகள் குறித்த புலன் விசாரணைகள் நடக்காததன் காரணத்தினால் அதிகரித்துள்ளது.
டாயிக்கும் 5 நாட்கள் முன்னதாக படுகொலை செய்யப்பட்ட மத்திய வங்கியின் ஆலோசகரும் முன்னாள் தொலைக்காட்சி வழங்குனருமான யாமா சியாவாசின் குடும்பத்தினர், கொலையாளிகளை கண்டுபிடிக்க மேலும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கத்தவறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பகிரங்க கடிதம் ஒன்றில் மிரட்டியுள்ளனர்.
“அரசாங்கம் இந்தக் கொலைகள் குறித்து உரிய புலனாய்வுகளை செய்யவில்லை என்பது ஆபத்தில் இருக்கும் மக்களின் ஒரு முக்கிய கவலையாகும். யாருடைய உத்தரவின் பேரிலாவது, இவற்றை யார் செய்தார்கள் என்பதை அறிய ஒரு கரிசனையுடனான விசாரணைகள் நடக்கின்றன என்று யாராவது நம்பினால்தால், அவர்களுக்கு அரசு தம்மை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை வரும். அது நடக்கவில்லையானால், கஸ்டந்தான்” என்கிறார் நேமட்.
இந்தக் கொலைகளுக்கு எதிராக தலிபான்கள் பேசவேண்டும் என்றும் அரசாங்கம் கொலைகள் குறித்து விசாரிக்க பலமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ஆப்கானின் சுதந்திர மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சஹர்சாட் அக்பர் கூறுகிறார்.
“சமூக மட்டத்தில் காணப்படும் இப்படியான போக்கின் தாக்கம் குறித்து நாம் மிகுந்த கவலையில் உள்ளோம். சமாதான பேச்சுவார்த்தைகளில் பொதுமக்கள் பங்களிப்பும் கிடையாது. இந்தக்கொலைகள் முழுமையாக புலனாய்வு செய்யப்படவில்லை என்பதும் கவலைக்குரியது.” என்று அவர் லண்டனின் த கார்டியன் பத்திரிகைக்கு கூறியுள்ளார்.
“டோகா கட்டாரில் இருக்கும் தலிபான்கள் இவற்றை மறுப்பது குறித்து மேலும் ஈடுபாட்டை காண்பிக்க வேண்டும். பொதுமக்களை தாக்கக்கூடாது என்று அவர்கள் தமது படையினருக்கு தெளிவான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இந்தக் கொலைகள் குறித்து புலனாய்வு செய்வதற்கு அரசாங்கம் மேலதிக நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். அத்தோடு, சூத்திரதாரிகளை கைது செய்து சட்டத்துக்கு முன்பாக நிறுத்த வேண்டும்.” என்பதும் அவர் கோரிக்கை.