— வி.சிவலிங்கம் —
தமிழ் அரசியலின் இன்றைய போக்குக் குறித்த இவ் விவாதங்களில் பலர் இணைந்து வருவது மகிழ்ச்சி தருகிறது. குறிப்பாக முக நூலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தோழர். நிக்ஸன் பாஸ்கரன் உமாபதிசிவம் அவர்களின் கருத்துக்கள் புதிய அரசியல் கட்டுமானத்தின் அவசியத்தை நோக்கித் திருப்பப்பட்டுள்ளமை மேலும் பல விவாதங்களைத் திறக்கும் என நம்புகிறேன்.
கடந்த விவாதங்களில் வெளியிடப்பட்ட கருத்துகள் பல தமிழ் அரசியலை, மக்களை நாசப்படுத்தி வரும் தமிழ் – குறும் தேசியவாதம் வெறுமனே பாராளுமன்ற அரசியலை நோக்கியதாக மாற்றமடைந்துள்ளதால் பரந்த தமிழ்பேசும் மக்களின் நலன்களிலிருந்து தூர விலகிச் செல்வதாகவே நாம் கருத வேண்டும். அது மட்டுமல்லாது இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் போக்கிலிருந்து விலகிச் செல்லும் ஆபத்து நிலையும் காணப்படுகிறது. இதில் முக்கியமானது தமிழ் அரசியலின் அடுத்தகட்ட நகர்வு எவ்வாறாக அமைதல் அவசியம்? என்ற கருப்பொருள் ஆகும்.
பிரிவினை வாதம்
தமிழ்- குறும் தேசியவாதம் பிரிந்து செல்லும் அல்லது நாட்டின் ஒட்டுமொத்த தேசிய அரசியலிலிருந்து விலகிச் செல்வதற்கான பாதைக்குள் தமிழ் மக்களைத் தள்ளியிருக்கிறது. அதன் காரணமாக பிரிந்து செல்வதைத் தவிர மாற்று வழி இல்லை என்ற ஒற்றைத் தெரிவிற்குள் தள்ளப்பட்டுள்ளோம். பாராளுமன்ற அரசியல் பாதை என்பது போட்டி அரசியலாக மாற்றம் பெற்றுள்ள சூழலில் அதுவும் பாராளுமன்ற ஆசனங்களின் தொகை மேலும் குறைந்து செல்லும் பின்னணியில் போட்டி என்பது தீவிரமடைய வாய்ப்பு உண்டு. அவ்வாறெனில் தமிழ் அரசியல் என்பது தமக்கான பொது எதிரி குறித்து குறிப்பாக சமாதான சகவாழ்வு என்பது கிஞ்சித்தும் சாத்தியமில்லை என்பதாகவும், மறுபுறத்தில் சர்வதேச ஆதரவுடன் உரிமைகளைப் பெறலாம். அதற்கான வழி பாராளுமன்ற விவாதங்களின் மூலமான சர்வதேச ஆதரவைக் கோருதல் என்பதாக அமைகிறது.
ஜனாதிபதி உரை
சகல தரப்பினரும் பாராளுமன்ற ஆசனங்களை நோக்கியே இந்த அரசியலை நகர்த்துகின்றனர். ஆனால் மறுபக்கத்தில் சிங்கள பௌத்த பெருந் தேசிய அரசியலும் இப் போக்கினைத் தனது நலனுக்கு நன்கு பயன்படுத்துகிறது. அதாவது நாட்டின் சிங்கள மக்களிற்கும், பௌத்த மதத்திற்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகக் கூறியே தனது குறுகிய அரசியலைத் தொடர்கிறது. சமீபத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை அதனையே எமக்கு உணர்த்துகிறது.
1995ம் ஆண்டு முதல் இன்று வரை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியே தொடர்கிறது. அக் கட்சியைச் சார்ந்தவர்களே ஜனாதிபதியாக தொடர்ந்து உள்ளனர். ஆனால் ஜனாதிபதி உரையில் தீவிரவாதிகளினதும், பயங்கரவாதிகளினதும் நடவடிக்கைகள் காரணமாக பல உயிர்கள் பலியாகியதாகவும், பாதாள உலகச் செயற்பாடுகள் தீவிரமடைந்திருந்ததாகவும், நாடு முழுவதும் கொலைகளின் அலை ஆரம்பமாகியிருந்ததாகவும், நாடு சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களின் மையமாக மாறியிருந்ததாகவும், புலனாய்வு மற்றும் பாதுகாப்புத்துறை பலவீனமடைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். அவ்வாறானால் அதற்கான காரணம் யார்? சிறீலங்கா சுதந்திரக்கட்சியைத் தவிர யாரையும் குற்றம்சாட்ட முடியாது. ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறுகையில் மறு புறத்தில் தமிழ் – குறும் தேசியவாதம் பாராளுமன்ற அரசியலின் மூலம் உலக தலையீட்டைக் கோருவதாகவும் அரசியல் நடத்துகிறது.
இக் குறும் தேசியவாத தீவிரவாதக் கருத்துக்கள் ஒரு சாராரைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பும் அரசியலாகவும், இன்னொரு சாராரை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தும் அரசியலாகவும் முடிவடைந்துள்ளது. இந்த அரசியலில் வாக்களித்த மக்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள். இதற்கான மாற்றம் என்பது இந்த இரண்டு குறுந்தேசியவாத அரசியலிற்குள் சிக்கியுள்ள மக்களின் புரிந்துணர்வின் மூலம்தான் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் என்பது நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்களுக்கு எதிரானதாகவும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. அதே போலவே தமிழ் – குறும் தேசியவாதம் சிங்கள மக்களுடன் வாழ முடியாது. பிரிந்து செல்வதைத் தவிர மாற்று வழியில்லை என்ற குறும் தேசியவாத அரசியலின் மூலம் தனது பாராளுமன்ற பதவிகளைக் காப்பாற்றி வருகிறது.
இன்றைய சிங்கள பௌத்த பெருந் தேசியவாதிகள் நாட்டை இவ்வாறு ஜனநாயக விரோத வழியில் தொடர்ந்து எடுத்துச் செல்ல முடியாது என யாராவது கருதுவார்களாயின் அதே அளவில் தமிழ் – குறும் தேசியவாதத்தின் குறுகிய அரசியல் வாழ்வும் தமிழ் மக்களைக் காப்பாற்றாது என்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் இவை இரண்டுமே ஜனநாயக அரசியலுக்கு விரோதமானவை மட்டுமல்ல தேசத்தின் சிறந்த எதிர்காலத்திற்கு முற்றிலும் முரணானவை.
ஜனநாயகமும், சுயநிர்ணய உரிமையும்
இப் புரிந்துணர்வின் அடிப்படையில்தான் ‘சுயநிர்ணய உரிமை’ குறித்த விவாதங்கள் அவசியமாகின்றன. தமிழ் – குறும் தேசியவாதம் ‘சுயநிர்ணய உரிமை’ இன் அடிப்படைகள் குறித்து முழுமையாகப் பேசுவதில்லை. அதன் ஜனநாயக அடிப்படைகளை மறைத்தே விவாதிக்கின்றன. கட்டுரைகளில் ஏற்கனவே குறிப்பிட்டது போல ‘ஜனநாயகமும், சுயநிர்ணய உரிமை’ யும் இணைந்தே பயணிக்கின்றன. அத்துடன் எமது தாயகத்திலுள்ள ஏனைய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து அல்லது அங்கீகரித்து இணைந்து பயணிக்காத வரை தமக்கான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு ஏனையவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. உதாரணமாக முஸ்லீம் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுக்கும் ஓர் அரசியல் தனது சுயநிர்ணய உரிமையை ஏனையவர்கள் அங்கீகரிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. இங்கு அங்கீகரித்தல் என்பது வெறுமனே ஒரு செயற்பாடு அல்ல. பரஸ்பர ஜனநாயக இணைப்பு ஆகும். இந்த ஜனநாயக இணைப்பிற்கான அடிப்படைகள் இல்லாத நிலையில் சமஷ்டி ஆட்சி அல்லது சமஷ்டிக் கட்டுமானத்தை ஏற்படுத்துவதும் சாத்தியமில்லை.
தமிழ் – குறும் தேசியவாதம் வெறுமனே ‘சமஷ்டி’ என்ற சொல்லாடலை மட்டும் பயன்படுத்துகிறதே தவிர சமஷ்டிக்கான அடிப்படைகளைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளில் அல்லது தயாரிப்புகளில் ஈடுபடவில்லை. ‘சமஷ்டி’ கோரிக்கை என்பது நாட்டின் பல்லின சமூகங்களின் சகவாழ்வை உறுதி செய்யும் அரசியல் பொறிமுறையாகும். அவ்வாறெனில் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைக்கும் அரசியல் தரப்பினர் அச் சமஷ்டிக்குள் வாழும் ஏனைய சமூகங்களினது சம்மதத்தைப் பெறுவது அவசியமாகிறது. இக் கோரிக்கையை ஒருதலைப்பட்சமாகக் கோரியபடி மாற்றங்களைக் காண முடியாது. இதற்கான ஆதரவை ஏனைய சமூகங்களிடமிருந்தும் பெற வேண்டும். தமிழ் -குறும் தேசியவாதம் ஏற்கனவே இதர தேசிய இனங்களிடையே பிளவுகளை உற்பத்தி செய்த பின் எவ்வாறு சமஷ்டியைக் கோர முடியும்? சமஷ்டி என்பது ஏனைய சமூகங்களுடன் சக வாழ்வு என்பதாயின் அதற்கான அடிப்படைகளைத் தோற்றுவிக்காமல் சமஷ்டி எவ்வாறு சாத்தியமாகும்?
சமஷ்டிக்கான வெற்றுக்கோசம்
சமஷ்டி என்பது வெறுமனே ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான தீர்வு அல்ல. அது பல்லின சமூகத்தின் முன்னேற்றத்திற்கான வழிமுறையாகும். அவ்வாறாயின் ஜனநாயக அடிப்படைகள் தோற்றுவிக்கப்படாமல் சமஷ்டி சாத்தியமில்லை. இங்கு முன்வைக்கப்படும் தர்க்கம் எதுவெனில் நாடு முழுவதற்குமான ஜனநாயகம் தோற்றுவிக்கப்படாமல் சமஷ்டி சாத்தியமில்லை. அதே போலவே சுயநிர்ணய உரிமையும் சாத்தியமில்லை. எனவே முதலில் இலங்கையில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட வேண்டும். ஆகவே தமிழ் – குறும் தேசியவாதம் தமக்குள் எதுவித ஜனநாயக அடிப்படைகள் எதுவும் அற்ற நிலையில் சமஷ்டியைக் கோருவது போலியானது. இதனைச் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் நன்கு அறியும். அதன் காரணமாகவே சமஷ்டிக் கோரிக்கையை பிரிவினை அரசியலுடன் அது இணைத்துச் செல்கிறது. தமிழ் – குறும் தேசியவாதமும் அதற்கு ஏற்றாற் போலவே பிரிவினையை எவ்வித தயாரிப்பும் இல்லாமல் வெறும் கோஷமாக முன்வைத்துச் செல்கிறது. உண்மையில் தமிழ் – குறும் தேசியவாதம் சமஷ்டியில் அல்லது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையில் கரிசனை கொண்டிருக்குமாயின் 13வது திருத்தத்தின் மூலம் ஏற்பட்டுள்ள மாகாணக் கட்டுமானத்தைப் பலப்படுத்தி அப் பிரதேசங்களின் அபிவிருத்தியை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்திருக்க வேண்டும்.
சுமார் 30 ஆண்டுகள் கடந்துள்ள மாகாணசபை முறைமையை தமிழ் -குறும் தேசியவாதம் அதாவது 13வது திருத்தத்தினை ஆரம்பமாகக் கொள்ளலாம் என 30 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதனை இன்னொரு படிநிலைக்கு எடுத்துச் செல்லாமல் ஆரம்பம் என இன்னமும் பேசுகிறது. ஆனால் அந்த ஆரம்பத்தை நாம் இன்னமும் காணவில்லை. அதன் ஆரம்பமே ஊழலும், விரயமுமாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இதற்குப் பிரதான காரணம் பதவிகளே தவிர மக்களின் சேவைக்குரியதாக மாற்றி அமைக்க எண்ணமே இல்லை. இதில் மக்களே ஏமாற்றப்பட்டுள்ளனர்.
சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் தமிழ் – குறும் தேசியவாதத்தின் உள் முரண்பாடுகளை நன்கு தெரிந்த காரணத்தினால் அதற்கான தேர்தல்களை நடத்தி அதன் பலவீனங்களை அம்பலப்படுத்தத் தயாராகிறது. உதாரணமாக வடமாகாண தேர்தலை நடத்தி அதன் நிர்வாகத்தைப் பொறுப்பெடுத்தார்கள். அதன் விளைவாக தமிழ் அரசியலில் பிளவுகள் ஏற்பட்டு இன்னொரு கட்சி உதயமாகி பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் யார் வெற்றி பெற்றார்கள்? குறும்தேசியவாத சக்திகளே வெற்றி பெற்றார்கள். குறும் தேசியவாத சக்திகளை உற்சாகப்படுத்தி தனது சர்வாதிகார அரசியலை அதாவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற போர்வையில் அவற்றை ஒடுக்குவதற்கான ஓர் முயற்சியாகவே இப்போதும் தேர்தல் தயாராகிறது.
தமிழ் தேசிய நீக்க அரசியல்
கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் தமிழ் அரசியல் மேலும் பிளவுகளுக்குள் தள்ளப்பட்டுள்ளது. தமிழர் தேசியக் கூட்டமைப்பிற்குள் காணப்பட்ட உட் பிளவுகள் ‘தமிழ் தேசிய நீக்க அரசியல்’ என்ற விவாதத்திற்குள் தள்ளப்பட்டுள்ளன. தற்போது தமிழ் அரசியலில் பாரிய பிளவு காணப்படுகிறது. குறிப்பாக போரிற்குப் பின்னர் தமிழ்ப் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி, சுகாதார பின்தங்கல்கள் போன்றன தமிழ் – குறும் தேசியவாதத்தின் மேல் பெரும் தாக்குதல்களைத் தொடுத்திருந்தன. 2015 – 2019ம் ஆண்டு காலத்தில் காணப்பட்ட அரசுடனான உறவு பல வேலை வாய்ப்புகளையும், அபிவிருத்திக்கான பண உதவிகளையும் பெற வாய்ப்பளித்தது. அதேவேளையில் உள்ளுராட்சி அதிகாரமும் பணப் புழக்கத்திற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தியது. இதனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பண ஒதுக்கீடுகள் மறைமுகமாக ஊழல்களின் உறைவிடமாக மாறின. இதனால் உட்கட்சிக் கலாச்சாரம் பாரிய அளவில் மாற்றமடைந்தது. ஒப்பந்தகாரர்கள் பலர் அரசியல் முகவர்களாக மாறினர். ஓர் குறுகிய காலத்தில் ஏற்பட்ட இம் மாற்றங்கள் அதிகாரத்தின் அவாவை ஏற்படுத்தத் தவறவில்லை.
இதன் காரணமாக அபிவிருத்தி அரசியல் என்பது குறும் தேசியவாத சக்திகள் மத்தியில் அரசை அணுகுவது குறித்த விவாதமாக மாற்றமடைந்தது. ஒரு புறத்தில் தமிழ் – குறும் தேசியவாத சிந்தனைகள் மேலும் கூரிய அடிப்படைவாத அரசியலாக மாற்றமடைந்தன. இதுவே ‘இரு தேசம், ஒரு நாடு’ என்ற குரல்களாகும். அதிர்ஸ்டவசமாக நாட்டிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ தேர்வு முறை அவர்களுக்கும் பாராளுமன்ற ஆசனங்களை வழங்கியுள்ளது.
கடந்த 2015 – 2020 ஆண்டு காலப் பகுதியில் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகள் குறித்த எவ்வித ஒப்பந்தமோ அல்லது நிபந்தனைகள் இல்லாமல் மைத்திரி – ரணில் அரசை கூட்டமைப்பினர் ஆதரித்தனர். சுமார் 5 வருடங்கள் அந்த ஆட்சியைக் காப்பாற்றிய போதிலும் தேசிய இனப் பிரச்சனைகள் குறித்து காத்திரமான மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. இருப்பினும் சில சலுகைகளை அவர்கள் அனுபவித்தனர். எனவே தேசிய இனப் பிரச்சனையைக் கைவிட்டுச் சென்றதாக தமிழ் – குறும் தேசிய அடிப்படைவாதிகள் குற்றம் சுமத்தினர். ஆனால் அரசுடன் 5 வருடங்களாக இணைந்திருந்தமையால் நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்றியதாக கூட்டமைப்பின் ஒரு பிரிவினர் வாதிட்டனர். மறு பிரிவினர் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைச் சிங்கள பெருந் தேசியத்திற்கு விற்றுவிட்டதாகக் குற்றம் சுமத்தினர்.
இந்த விவாதங்கள் தேர்தலில் வெளிப்பட்டன. கூட்டமைப்பிற்குள் பிளவுகள் தென்பட்டன. அரசை ஆதரித்து விவாதித்தவர்கள் தமிழ் தேசியத்தின் எதிரிகளாக அடையாளம் காட்டப்பட்டனர். தமிழ் அரசியலில் உள்ள தமிழ் – குறும் தேசியக் கூறுகளை சிங்கள பௌத்த பெருந் தேசியத்துடன் சமரசம் செய்ததாகக் குற்றம் சாட்டினர். அவர்களையே தமிழ் தேசிய நீக்க அரசியல்வாதிகள் என அடையாளம் காட்டினர். இதன் விளைவாக தமிழ் -குறும் தேசியவாதம் பிளவுபடுத்தப்பட்டு பாராளுமன்ற ஆசனங்களைப் பெறும் நிலை ஏற்பட்டது. இங்கும் தமிழ் – குறும் தேசியவாத அரசியலை மேற்கொள்ளும் சக்திகள் மேலும் பிளவுபட்டுச் சென்றதற்கான காரணம் பாராளுமன்ற ஆசனங்கள் என்பதையே நாம் காண வேண்டும்.
மேற்குறித்த போக்குகளிலிருந்து அவதானிக்கையில் எவ்வாறு சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் தனது காய்களை நகர்த்துவதற்கு தமிழ் – குறும் தேசியவாதத்தின் நகர்வுகளைப் பயன்படுத்துகிறதோ அதே போலவே தமிழ் – குறும் தேசியவாதம் பிளவபட்ட போதிலும் பாராளுமன்றக் கதிரைகளை நோக்கி தனது அரசியலை நகர்த்துகிறது. இவ்வாறே தமிழ்-குறும் தேசியவாத அரசியல் நகர்த்தலுக்கான புறச் சூழல் உருவாக்கப்படுகிறது.
தமிழ், சிங்கள குறும் தேசியவாத சக்திகள் அதிகாரத்தை நோக்கிய பாதையில் மக்களை இழுத்துச் செல்லும் போது இதனால் பாதிப்படைபவர்கள் சமான்ய மக்களே. குறிப்பாக நாம் தமிழ் – குறும் தேசியவாத சக்திகளைத் தொடர்ந்து அனுமதித்தால் அதனால் மேலும் பாரிய அழிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதனையே சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் உணர்த்திச் செல்கிறது. அவ்வாறானால் மாற்று வழி என்ன? என்ற கேள்வி எழுகிறது. அவை தொடர்பாக ஏற்கனவே சிலவற்றை அடையாளப்படுத்திய போதிலும் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள சிங்கள பௌத்த பெருந்தேசியவாத எதிர்ப்பு சக்திகளுடன் கைகோர்த்துச் செல்வது இன்றைய சூழலில் அவசியமானது. அவ்வாறாயின் அதற்கான நிபந்தனைகள் என்ன? என்ற கேள்வி எழுகிறது.
கடந்த 70 வருடகால அரசியல் சில பாடங்களை எமக்கு உணர்த்தியிருக்கிறது. அதன் பிரகாரம் பார்க்கையில் எமது அரசியல் நடவடிக்கைகள் கோட்பாட்டு அடிப்படையில் இறுக்கமானதாகவும், விட்டுக்கொடுக்க முடியாததாகவும் அதேவேளை ஒட்டுமொத்த நாட்டின் நலன்களைக் கருத்தில் கொண்டு இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகளையும் கண்டறிதல் அவசியம். நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்கள் என்ற வகையிலும், தேசத்தின் வளர்ச்சியில் பிரதான பங்காளர் என்ற வகையிலும் எமக்கான கடமைகளையும், உரிமைகளையும் நாம் வரையறுப்பது அவசியமாகிறது.
அந்த வகையில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் சமஷ்டியை அல்லது சுயநிர்ணய உரிமையை மறுக்குமாயின் அல்லது பயமூட்டுதல், அரச பயங்கரவாதம், ஒடுக்குமுறை போன்றவற்றினை ஏவிவிடத் தயாராக இருக்குமாயின் அதனைத் தடுப்பதற்கான உபாயங்களுடன் செயற்பட வேண்டும். எமது நிலைப்பாடு கோட்பாடு அடிப்படையிலானதாகவும், சர்வதேசம் ஏற்றுக்கொண்ட நிலைப்பாடுகளாகவும், தீர்வு என்பது ஐக்கிய இலங்கைக்குள் தேசிய சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துவதாகவும், சமஷ்டிக் கட்டமைப்பிற்குள் பகிரப்பட்ட இறைமை அடிப்படையில் பல்லினங்கள் வாழும் நாடாக மாற்றமடைதல் அவசியம்.
இலங்கைக்கு சமஷ்டி பொருந்துமா?
இங்கு சிலர் இலங்கை போன்ற சிறிய நாட்டிற்குச் சமஷ்டித் தீர்வு பொருத்தமற்றது என விவாதிக்கின்றனர். இங்கு சமஷ்டி அரசியல் என்பது நாட்டின் அளவு குறித்த பிரச்சனை என்பதை விட பல்லினங்கள் வாழும் நாட்டில் ஜனநாயகம் தோற்கடிக்கப்படுமாயின் பல்லினங்களின் ஜனநாயக அடிப்படைகளைப் பாதுகாக்க சமஷ்டி முறைமை பொருத்தமானது என்பதே எமது பதிலாகும். சமஷ்டி என்பதும், அதற்கான ஸ்தாபன வடிவமைப்பும் ஜனநாயக விஸ்தரிப்பு ஆகும். இங்கு சமஷ்டி என்ற பெயர் குறித்த வாதங்களை விட பல்லின சமூகங்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளையே சமஷ்டி என்கிறோம். ‘உள்ளக சுயநிர்ணய உரிமை’ என்ற அடுத்த விவாதத்தில் நாம் இவற்றை ஆராயலாம்.
சமஷ்டி அடிப்படையிலான ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வுகளைக் கோருகையில் சில குறும் -தேசியவாத சக்திகள் பிரிந்து செல்லும் உரிமை பற்றிப் பேசுவதையும் காண முடிகிறது. இது பிரிந்து செல்லும் உரிமை பற்றிப் பேசுவதற்கான தருணம் அல்ல. லட்சோப லட்சம் மக்களின் வாழ்வை பிரிந்து சென்று வாழ்வதற்கான எவ்வித ஏற்பாடுகளுமற்ற நிலையில் அவ்வாறான கற்பனைக் கோஷங்களை எழுப்பித் தீர்வுகளைப் பின்தள்ளும் இத்தகைய சதி முயற்சிகளை மக்கள் முறியடிக்க வேண்டும். இதன் அர்த்தம் பிரிந்து செல்லும் உரிமையை நிராகரிப்பது அல்ல. பதிலாக அதற்கான தருணம் ஏற்படுமாயின் எதிர்காலச் சந்ததியினர் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும். பிரிவினை சாத்தியமில்லை எனில் இன்றைய வாழ்வைச் சீரழிக்கும் முயற்சிகளுக்கு நாம் எவ்வாறு துணைபோக முடியும்?
தற்போதுள்ள அரசியற் சூழலில் நாம் முதலில் மனித அந்தஸ்தை வலியுறுத்தியும், சமத்துவம், பாதுகாப்பு, சுயாதீனம், ஜனநாயக சுதந்திரம் என்பதற்காக சகலருடனும் இணைந்து செயற்படுதல் அவசியம். அரசுடன் அல்லது சிங்கள பௌத்த பேராதிக்க சக்திகளுடனான எவ்வித சமாதான பேச்சுவார்த்தைகளிலும் சகல தரப்பாரும் சகல தரப்பினருக்கும் தனிநபர் அல்லது கூட்டுச் சுயநிர்ணய உரிமை உள்ளது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே முதல் நிபந்தனையாக அமையும்.
இங்கு சமஷ்டி என்பது பல்லின மக்கள் வாழும் தேசத்தில் அத் தேசிய இனங்களுக்கான சுயாதீனத்தையும், ஜனநாயக சுதந்திரத்தையும் அதன் அடிப்படையிலான தேசிய ஜனநாயக அபிலாஷைகளைச் சகல மக்களுக்கான முன்னேற்றத்தை, சக வாழ்வை நோக்கிய அடிப்படைகளைக் கொண்டிருப்பதாகும். இதனை ஏற்றுக்கொள்ள மறுப்பதோ அல்லது ஏற்பதோ அவரவர் நிலைப்பாடு. ஆனால் இவற்றில் நாம் விட்டுக்கொடுக்க முடியாது. இக் கோரிக்கைகள் ஜனநாயக விரோதமானது எனில் அதனை விளக்குவது அதிகார வர்க்கத்தின் கடமையாகும்.
வாசகர்களே!
இத் தொடர் விவாதங்களின் நோக்கம் மிகத் தெளிவானது. குறும் தேசியவாதம் எமது மக்களின் வாழ்வைத் தொலைத்து விட்டது. இந் நிலை தொடர இடமளிக்க முடியாது. இங்கு பெரும்பான்மை என்ற பேச்சுக்கு இடமில்லை. சகல மக்களினதும் முன்னேற்றம் என்பதை பெரும்பான்மை, சிறுபான்மை விவாதங்களால் தீர்க்க முடியாது. எனவே நாம் எண்ணிக்கை பெரும்பான்மை விவாதங்களிலிருந்து வெளியேற வேண்டும். நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அம் மக்களின் ஜனநாயக வாழ்வுரிமை மறுக்கப்பட முடியாதவை. இப் போராட்டம் என்பது ஒடுக்குமுறையாளருக்கு எதிராக ஒடுக்கப்படுவோரால் நடத்தப்படும் போராட்டமாகும் அல்லது ஜனநாயகவாதிகளுக்கும், ஜனநாயக விரோத சக்திகளிடையே ஏற்பட்டுள்ள போராட்டமாகும். எனவே ஜனநாயக அரசியல் தீர்வு என்பது சுயநிர்ணய உரிமை சார்ந்ததாகும். இது ஒவ்வொருவரினதும் ஜனநாயக உரிமை சார்ந்தது.
இலங்கை அரசு குடியேற்ற ஆட்சி அனுபவங்களைப் பெற்றுள்ளது. பிரித்தாளும் தந்திரத்தை அவர்கள் நன்கு அறிவார்கள். சிங்கள பௌத்த பேராதிக்க மனோபாவம் தனது இருப்பிற்காக தனது மக்களையும் இழக்கத் தயாராக அல்லது கொலை செய்யத் தயாராக உள்ளது. இவ்வாறான அரசு ஜனநாயக தீர்வுகளைத் தரும் என்ற கற்பனையில் நாம் வாழ முடியாது. எனவேதான் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு என்பது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதிலிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்கிறோம். இவ் அணுகுமுறை புதிதானது அல்ல. திம்பு பேச்சுவார்த்தைகள் அவ்வாறான அடிப்படைகளிலிருந்தே ஆரம்பித்தன. இதன் மூலமே இதர தேசிய இனங்களும் ஜனநாயக உரிமையோடு வாழ முடியும். எனவே தமிழ் மக்களின் உரிமைகள் என்பது உயர்ந்த ஜனநாயக இலட்சியங்களின் மீது கட்டப்பட வேண்டும் என்கிறோம்.
பிரிவினை என்பது சூழ்ச்சி அரசியல்
சகல மக்களினதும் அதாவது பல்லின மக்கள் வாழும் நாட்டில் சமஷ்டித் தீர்வு என்பது ஏற்கனவே குறிப்பிட்ட உயரிய கோட்பாடுகளின் அடிப்படையிலானது. அது மட்டுமல்ல, எமது இந்த நிலைப்பாடு தேசத்தின் ஐக்கியத்தையும், இறைமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதோடு, இத் தேசியத்திற்குள் வாழும் சகல மக்களின் சுயாதீன செயற்பாட்டையும், கலாச்சார, சமூக அடையாளங்களையும் பாதுகாத்து நிற்கிறது. ஜனநாயக அடிப்படையில் தீர்வுகள் எட்டப்படுமாயின் பிரிவினைக்கான வாய்ப்புகள் நிச்சயமாக இல்லை. எனவே சமஷ்டி என்பது பிரிவினை என்ற வாதம் தமிழ் மற்றும் சிங்கள குறும் தேசியவாத, பெருந்தேசியவாத சிந்தனைவாதிகளின் சூழ்ச்சி அரசியல் சார்ந்ததாகும்.
உள்ளக சுயநிர்ணய உரிமை
எனவே சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலான சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டிலமைந்த தேசத்தைக் கட்டி எழுப்பும் வகையில் நாம் புதிய அரசியல் பாதையை வகுக்க வேண்டும். அவை உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சர்வதேசம் ஏற்றுக்கொண்ட வகையிலான தீர்வுகள் என்பதாலும், எமது அணுகுமுறைகள் பல விதத்திலும் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் சூழ்ச்சி அரசியலைத் தோற்கடிக்கும் என்பதாலும் நாம் அடுத்து ‘ உள்ளக சுயநிர்ணய உரிமை’ குறித்துப் பேசலாம்.
தொடரும்.