புலமைப் பரீட்சை தரவரிசையை தவிர்ப்போம்

புலமைப் பரீட்சை தரவரிசையை தவிர்ப்போம்

— சிவா மு. ஈஸ்வரமூர்த்தி — 

புலமைப்பரீட்சை : முதலாவது… இரண்டாவது….  மூன்றாவது….. இந்தப் பாகுபடுத்தலைத் தவிர்ப்போம்

குழந்தைகளுக்கான புலமை முடிவுகள் புலமை பரீட்சை  முடிவுகளாக வெளிந்திருக்கின்றன. இணையத்தளம் எங்கும்  தனிப்படவும் பாடசாலைகள் குறித்தும் கிராமங்கள் குறித்தும்  சோதனையில் வெற்றி பெற்றதற்கான விபரிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன.  

அவை அனேகமாக புகழ் மாலையாகவும்…. பெருமை கூறலாகவும்…. வாழ்த்துக் கூறலாகவும்…. அடையாளப்படுத்தலாகவும். 

அண்மைய காலங்களில் ஒவ்வொரு வருடமும் இந்த ஐந்தாம்  வகுப்புக் குழந்தைப் புலமைப் பரீட்சை ஒரு போட்டி  நிகழ்வு போல் கொண்டாடப்படுகின்றது. இங்கு வெற்றி  பெற்றவர்கள் புள்ளிகளை அதிகம் பெற்ற மாணவர்கள், அதற்கான  பாடசாலைகள், கிராமங்கள் தமது வெற்றிகளை புள்ளிகளின் அடிப்படையில் கொண்டாடி வருகின்றன. 

அடிப்படையில் இந்த போட்டிப் பரீட்சைகளில் எனக்கு உடன்பாடு  இல்லை. அது பாலர் வகுப்பாக இருக்கலாம்  பல்கலைக்கழகமாக  இருக்கலாம் ஏன் கல்விக்கு அப்பால் விளையாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி என்ற எல்லாவற்றிலும் முதலாம் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் என்று தரப்படுத்துவதில் அடையாளப்படுத்துவதில் எனக்கு அதிகம் உடன்பாடு இல்லை. 

வென்றவர்களை பாராட்டும் போது…. போற்றிப் புகழும் போது இந்த முதலாம் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் என்ற  வரையிறையிற்குள் வராத உள்ளங்களின், குறிப்பாக பிஞ்சு உள்ளங்களின் இதய நொருங்கல்களே என்னை அதிகம்  பாதிக்கின்றன. 

அதுவும் பாலராக இருக்கும் எம் மாணவச் செல்வங்கள்..  பிள்ளைகள்… வெற்றியின் விளிம்பு நிலையை நோக்கி ஓடி  தடுக்கி  வீழ்ந்த போது…. தொலைபேசியில், பாடசாலை பொது நிகழ்வில், இணையத்தளத்தில் என் பிள்ளை, என் பாடசாலை மாணவன், என் கிராமம், முன்னிலை வெற்றி பெற்றுவிட்டது என்ற செய்திகள் பரவும் போது தடக்கி வீழ்ந்தவரின்  உணர்வலைதான் எனக்குள் மிகவும் கவனதை  பெறுகின்றது. 

பிறக்கும் போது யாவரும் ஓரே மாதிரியாக பிறந்தார்கள் பின்பு  எவ்வாறு வளர்ந்து தம்மை நிரூபிக்க முற்படும் போது   மட்டும் ஏன்  இந்த வேறுபாடு ஏற்படுகின்றது…? 

இதற்கு முக்கிய காரணம் அந்த மாணவச் செல்வங்களுக்கு  கிடைக்கும் வாய்ப்பு… கல்வி வாய்ப்பு… என்பதில் காணப்படும் பாகுபாடு… பேதம். இந்தப் பாகுபடுத்தப்பட்ட வெற்றிகளை தோல்விகளை அவர்களுக்கு அவை கொடுக்கின்றன. 

இதற்கான முக்கிய காரணம் இந்த சமூக அமைப்பில் உள்ள  ஏற்றத்தாழ்வே. அது குடும்பப் பின்னணி அளவில், பாடசாலை  அளவில், பிரத்தியேக கல்வியை பாடசாலைக்கு அப்பால் பெறுதல் அளவில், ஏன் இவை எல்லாம் சமமாக கிடைத்தாலும்  ஆசிரியர்கள் பாகுபடுத்தி கவனமெடுக்கும் விடயம்… இவைகளால் இந்த பாரிய  எற்றத் தாழ்வுகள் ஏற்படுகின்றன. 

நாம் சிந்திக்க வேண்டியது கற்றலுக்கான வாய்புகள் எல்லாப்  பிள்ளைகளுக்கும் சமமாக சமூக அளவிலும், பாடசாலை  அளவிலும், ஆசிரியர் அளவிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தே. 

இதற்கான வழி முறைகளை நாம் ஓரளவாவது சீர் செய்ய முற்பட  வேண்டும். நாம் பாடசாலைச் சீருடையில் ஒரு  சமத்துவத்தை ஏற்படுத்வில்லையா இதனைப் போன்றதே அதுவும். 

இங்கு தோற்றவர்களாக சுட்டிக் காட்டுதலை விட வெற்றி  பெற்றவர்களாக மற்றவர்கள் கொண்டாடும் போது  தோற்றவர்களின் மனநிலையில் ஏற்படும் உளவியல் தாக்கத்தை, அதுவும் 10  வயதாகும் ஐந்தாம் வகுப்பு பிள்ளைகளின் நிலையில் என்னை இருத்திப் பார்கின்றேன். இவற்றை கடந்து வந்தவர்கள் நாம். அந்த அனுபவங்களில் இருந்தும் ஒரு ஆசிரியராக 45 வருடங்களாக என்னைத் தகவமைத்துக் கொண்டு, செயற்படும் அனுபவத்தின் அடிப்படையிலும் இதனைப் பேச விளைகின்றேன். 

எனவே இந்த முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்பதை நாம் தவிர்போம் எல்லாப் பிள்ளைகளுக்கும் சமமான கல்வியை  கொடுத்து ஓரளவிற்கு எல்லோரும் சம மதிப்பீடுகளை  வெளிப்படுத்தும் கல்வி வெளிப்பாட்டை தற்போது  இருக்கும் கல்வி முறைக்குள் கொண்டு வர முயற்சிப்போம். 

பிரதியேக வகுப்பிற்கு செல்லாத இந்த புலமை பரீட்சார்த்திகளை நாம் காண்பது மிக அரிது. இதற்காக பெற்றோர் கொடுக்க வேண்டிய விலை, வினை, பணத்திற்கு அப்பால் தமது  உழைப்பு, அர்ப்பணிப்பு என்பன அதிமானது. இது  பிழையான விடயம் என்பதற்கு அப்பால் சாமான்ய மக்களால் இது முடியாத  காரியம் என்பது எமக்கு புரியவேண்டும். 

பாலர் பாடசாலையிலேயே ஆரம்பிக்கும் இந்த சுமை பெற்றோரை அதிகம் அழுத்துகின்றது, அழவைக்கின்றது. அதனையும்  விட பிள்ளைகளை அதிகம் அழுத்தி, அவர்களுக்கு இயல்பான கற்றலை இல்லாது ஒழிக்கின்றது. 

குழந்தைக் கல்வித் திணிப்பு அதனால் ஏற்படும் புள்ளி  அடிப்படையிலான தகமை.. புலமை போன்றவை ஒரு சமூக  அந்தஸ்தாக காட்டப்படுவதினால், தனது பிள்ளையை வைத்து  தமக்கான அடையாளத்தை பெற பெற்றோர்கள்  முயல்கிறார்கள். இதனால் இந்த பிஞ்சுகளை விஞ்சும் மன உழைச்சல் அவர்களுக்கு ஏற்படுகின்றது. 

உலகில் மிகச் சிறந்த கல்வி முறையை உடைய பின்லாந்தில் ஏழு  வயதிற்கு பின்பே பாடசாலை என்ற அமைப்பிற்குள்  பிள்ளைகளை கொண்டு வருகின்றார்கள். முன் பள்ளி, முதற்பள்ளி  என்றும் ஏதும் அங்கு கிடைக்காது. 

அதற்காக அப் பிள்ளைகள் ஏழு வயதிற்கு பின்னால் தான் கற்க  புறப்படுகின்றனர் என்பதல்ல. பள்ளியில் போட்டு கற்பித்தல்  என்பது ஏழு வயதிற்கு பின்பே ஆரம்பமாகின்றது. அந்த கல்வி  முறைபற்றி கருத்துக்களை முழுமையாக இங்கு பதிவு  செய்தால் நீண்டுவிடும் என்பதால் அதனை வேறு ஒரு இடத்தில்  தெரிவிகின்றேன்.  

நாமும் அந்த கல்வி முறையைப் போன்று எம் கல்வி முறையை மாற்றியாக வேண்டும். கியூபாவின் கல்வி முறைமைகளை நாம் எமது தேசத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். 

சிறந்த கல்வி முறையை நாம் எமக்குள் உருவாக்கும் வரையில்  பெற்றோர், உற்றோர், ஆசிரியர்கள், அக்கறையாளர்கள்  இந்த  முதலாவது… இரண்டாவது…. மூன்றாவது….. என்ற பாகுபடுத்தலை, பிரச்சாரப்படுத்தும் முறைகளைத் தவிர்ப்போம். வெற்றி பெற்ற மாணவ பிஞ்சுகளை விட, அதனை நோக்கி ஓடி தடக்கி வீழ்ந்தவர்களின் உணர்வலைகளே எமக்கு  முக்கியம்.  

தடக்கி வீழ்ந்தவர்களின் கரம் பற்றி மனஉறுதியை கொடுத்து  அவர்களையும் சேர்த்து எல்லோரையும் சமமாக  புலமை பெறும் வகையிலான கற்பித்தலுக்குள் நாம் எம்மை ஈடுபடுத்துவோம்.