சொல்லத்துணிந்தேன் – (சிறப்பு)

சொல்லத்துணிந்தேன் – (சிறப்பு)

— தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —

‘அரங்கம்’ பத்திரிகையில் நான் எழுதிவருகின்ற ‘சொல்லத்துணிந்தேன்’ தொடர் அரசியல் பத்தி எழுத்துகளைப் படித்த அன்பரொருவர் தன்னுடைய முகநூலில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். 

அரசியல் ஆய்வாளர் இதுவரை கூட்டமைப்பை மட்டுமே விமர்சித்து கட்டுரைத் தொடர் அரங்கத்தில் எழுதிவருகின்றார். 

அவர் ஆதரிக்கும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் கருணா ஆகியோரது விரிசல் நிலையை ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதுவாரா?  

அவ்வாறு அவர் ஆதரிக்கும் கிழக்குக் கட்சிகளின் இயலாமைசார் பிரச்சனைகள் பல உண்டு. 

அவர்களுக்கு எதிராகவும் சொல்லத்துணிவாரா?’ 

இம் முகநூல் பதிவிற்கான எனது பதிலே இத்தடவை எனது பத்தி எழுத்தாகும். 

தமிழரசுக்கட்சிக் காலத்திலிருந்து இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காலம்வரையிலான தமிழ்த் தேசிய அரசியல் என்று நாம் மயங்கியது உண்மையில், யாழ்குடாநாட்டிற்குள்ளே வதியும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைப் பேணுவதற்காக யாழ்குடாநாட்டுக்கு வெளியே வன்னிப்பிரதேசம் உட்பட கிழக்குமாகாணத்தின் விவசாய மனோபாவம்  கொண்ட விளிம்புநிலைத் தமிழ்மக்களின் நலன்களைப் பலி கொடுப்பதற்கான யாழ் மேட்டுக்குடி வர்க்கத்தின் மேலாதிக்க அரசியல்தான் என்பதே இப்பத்தி எழுத்தாளரின் பட்டறிவு. 

இப்பத்தி எழுத்தாளராகிய நான் ‘உண்மை’யான தமிழ்த் தேசிய அரசியலின்பால் கொண்ட ஈர்ப்பினாலும் ஈடுபாட்டினாலும் எனது பதினெட்டு வயதிலேயே தமிழரசுக்கட்சியின் உறுப்பினராகித் (இப்போது வயது எனக்கு எழுபது)  தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து, தமிழ்த் தேசியத்தளத்தில் நின்று உழைத்தவன். தமிழ்த்தேசிய அரசியல் ஈடுபாட்டின் காரணமாக எனது அரசாங்கப் பதவியை இழந்துள்ளேன். ஓய்வூதியம் இன்னும் கிடைக்கவில்லை.  

பயங்கரவாதத்தடைச் சட்டத்தின்கீழ் கைதாகித் தடுப்புக் காவலிலும் விளக்கமறியல் கைதியாகவும் சிறைவாசம்  அனுபவித்தேன். புலம்பெயர்ந்து சென்று அஞ்ஞானவாசம் செய்யும் நிலையும் எனக்கு ஏற்பட்டது. இவற்றையெல்லாம் விரிவஞ்சி நான் விரித்துக் கூறவிரும்பவில்லை. ஆனாலும், சுருக்கமாக இவ்வாறு என்னைப்பற்றிக் குறிப்பிடக்காரணம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை நான் கூடுதலாக விமர்சிப்பது வெறுமனே அரசியல் காழ்ப்புணர்ச்சியினாலோ அல்லது கட்சி அரசியலுக்காகவோ அல்லது தேர்தல் தேவைகளுக்காகவோ அல்ல என்பதைக் காட்டவும், எனது பத்தி எழுத்துகளுக்கு ஓர் அரசியல் அனுபவப் பின்புலம் – நான் வாஞ்சை கொண்டுள்ள கிழக்கு மண்ணினதும் அம் மண்ணின் மக்களினதும் நலன் சார்ந்த ஒரு குறிக்கோள் – ஒரு தத்துவார்த்த அரசியல் தளம் – ஒரு தார்மீகம் – ஒரு ‘யோக்கியாம்சம்’ இருக்கின்றது என்பதை வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவுந்தான். 

கடந்த எழுபது வருடகாலத் தமிழர் அரசியல் கற்றுத்தந்துள்ள பாடம் என்னவென்றால், வடக்கைத் தளமாகக் கொண்ட அரசியற்கட்சிகள் எவற்றுக்குமே கிழக்குமாகாணத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் நலன்களை வென்றுகொடுப்பதில் எந்தவிதமான உளப்பூர்வமான கரிசனையும் கிடையாது என்பதுதான்.  

வடக்குக்கும் கிழக்குக்கும் ஒரு பொதுவான அரசியல் சமன்பாடு பொருந்தாது. குறிப்பாக இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாகவேனும் இணக்கப்பட்டிருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி நிர்வாகங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்டுள்ள கிழக்கின் களநிலையைப் பொறுத்தவரை,  வடக்குக்குரிய அரசியல் சமன்பாடு கிழக்குமாகாணத்திற்கு அறவே பொருந்தமாட்டாது. கிழக்குமாகாணத் தமிழர்கள்  தாங்கள் எதிர்நோக்கும் தனித்துவமான பிரச்சனைகளுக்குத் தீர்வுகண்டு தங்கள் சமூக பொருளாதார அரசியல் இருப்பைத் தக்கவைத்துப் பேணிப் பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டுமாயின் பலகட்சி அரசியலுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்த ஒன்று திரண்ட அரசியல் சக்தியாக மேற்கிளம்புவதினூடாகவே இது சாத்தியம். 

அதனாற்தான் கிழக்கில் செயற்படுகின்ற அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு கூட்டுப் பொறிமுறையின் கீழ் ஒன்றிணைத்துச் செயற்படுவதற்காகவே ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் ஓர் அரசியல் கூட்டமைப்பு (Political Alliance) உருவாக்கப்பெற்றுக் கடந்த இரண்டு வருடங்களாகச் செயற்பட்டுவருகின்றது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான புரிதல் இல்லாமல் வழமைபோல் தனது வர்க்கக்குணாம்சம் காரணமாகவும் தேர்தல் மைய அரசியல் தேவைகளுக்காகவும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பைத் தனது எதிரியாக அல்லது ‘துரோகி’யாகப் பார்க்கின்றது. 

இந்த நிலையில் கிழக்குமாகாணத் தமிழர்களின் எதிர்கால நலன் கருதி கிழக்குமாகாணத் தமிழர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மேலாதிக்க அரசியல் பிடியிலிருந்து முதலில் விடுவிக்க வேண்டியுள்ளது.  

ஒட்டுமொத்தத் தமிழர்களைப் பொறுத்தவரையிலும்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல அரசியல் தவறுகளை இழைத்தபோதிலும் அவை ஒருபுறம் இருக்க, இதனாலேயும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் தேவைப்பாடு எழுந்துள்ளது. கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் ஸ்தாபகத் தலைவராகவும் நான் இருப்பதால் இந்தச் செயற்பாட்டைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டியுமுள்ளது. இச்செயற்பாடு உண்மையான தமிழ்த் தேசியத்திற்கு எதிரானதல்ல. இதனை ஏற்கெனவே இப்பத்திகளில் நான் தெளிவுபடுத்தியுள்ளேன். 

அடுத்தது, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் கருணா பற்றியது. கிழக்கின் அரசியல் அரங்கிலே இவர்கள் செயற்படுபவர்கள் என்றவகையில் எதிர்காலத்தில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பில் இவர்களையும் உள்வாங்கி இணைத்துச் செல்ல வேண்டுமென்ற பரந்தபட்ட எண்ணம் உள்ளதே தவிர இவர்களுடைய அனைத்து அரசியல் செயற்பாடுகளுக்கும் நான் ஆதரவளிப்பவனல்ல. நான் இவர்களுடைய கட்சிக்காரனும் அல்ல. கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிலொன்றானதும் கிழக்கைத் தளமாகக் கொண்டதும் தேர்தல்கள் ஆணையத்தினால் அங்கீகரிக்கப் பெற்றதுமான ‘அகில இலங்கை தமிழர் மகாசபை’ எனும் தனியான அரசியல் கட்சியொன்றின் முன்னாள் செயலாளர் நான். அன்றியும் அரசியல் கூட்டணியான  கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவராகவும் இருக்கின்றேன். ஆகவே என்னை இவர்களுடைய அரசியலுடன் பிணைத்துப் பார்க்காதீர்கள். அது தவறான கணிப்பீடு ஆகும். இவர்களை மட்டுமல்ல  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட கிழக்கில் செயற்படும் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் கிழக்குத்தமிழர் கூட்டமைப்பு உள்வாங்கி ஒன்றிணைத்துப் போக உளப்பூர்வமாக முயற்சிக்கிறதே தவிர தனிப்பட்டமுறையில்  நானோ அல்லது கிழக்குத் தமிழர் கூட்டமைப்போ எந்தத் தனிநபரையோ அல்லது தனிப்பட்ட கட்சியையோ அரசியல் ரீதியாகக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இல்லை. கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் அரசியல் தனிநபர் அரசியலும் அல்ல; கட்சி அரசியலும் அல்ல. அது முழுக்க முழுக்க மக்களுக்கான அரசியல். 

மேலும், உலகில் எந்த ஒரு விடயமும் எந்த ஒரு நபரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. தேவையேற்பட்டால் மக்கள் நலன்கருதி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனையோ அல்லது கருணாவையோ அல்லது வேறு எவரையுமோ விமர்சிப்பதற்குச் ‘சொல்லத்துணிந்தேன்’ பத்தி தயங்கமாட்டாது. இப்போதைக்கு அத்தேவை எழவில்லை. வில்லங்கத்திற்கு எவரையும் விமர்சிக்கவும் தேவையில்லை.