— ஏ.பீர் முகம்மது —
இலங்கை நாட்டுக்கு முதல் முஸ்லிம் பெண் ஆசிரியரை அறிமுகம் செய்த பெருமை கிழக்கு மாகாணத்தில் சாய்ந்தமருது என்ற ஊருக்கே உரியது. அந்த மண்ணின் வேரிலிருந்துதுதான் மஜீத் தம்பதிகளின் ஐந்தாவது புதல்வியாக இலக்கியச் செயற்பாட்டாளர் கலைமகள் ஹிதாயா ரிஷ்வி 01 .04.1966 இல் பிறப்பெடுத்தார்.
பிரபல கல்லுரிகளான கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரி, கொழும்பு பம்பலப்பிட்டி மகளிர் கல்லூரி ஆகியன அவரின் ஆளுமையை கட்டியெழுப்பியதில் பெரும் பங்குவகித்தன. தொடர்ந்து கல்லெலிய மகளிர் அரபுக் கல்லூரியில் மார்க்கக் கல்வி பெற்றார். இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு பங்கம் வராமல் சங்கையான இலக்கியத்தை வளர்த்தெடுத்தமைக்கான காரணம் இந்த அரபுக் கலாபீடம் எனலும் தகும்.
கவிதாயினியாக இலக்கியத்தில் முளைவிட்ட இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், நாடகம் மெல்லிசைப் பாடல் என்று பல தளங்களிலும் தன்னை வலுப்படுத்தினார்.
தினகரன், வீரகேசரி, தினக்குரல், தினபதி, சிந்தாமணி, மித்திரன், நவமணி போன்ற தேசிய தமிழ்ப் பத்திரிகைகளில் இவரின் ஆக்கங்கள் பிரசுரம் கண்டன.
மல்லிகை, சிரித்திரன், யாத்ரா போன்ற பிரபல இலக்கிய சஞ்சிகைகளில் இவரது ஆக்கள் வெளிவந்தன.
ஞானம் சஞ்சிகை வெளிவர ஆரம்பித்த காலத்தில் அதன் இரண்டாவது இதழில் இவரது கவிதை பிரசுரமானது என்பது அவரின் கனதியை ருசுப்படுத்தும்.
தூது, அல் ஹஸனாத் போன்ற சமயம் சார்ந்த சஞ்சிகைகளும் இந்தியாவின் சமரசம், அவுஸ்திரேவியாவின் தூண்டில் போன்ற வெளிநாட்டு சஞ்சிகைகளும் இவரது ஆக்கங்களைப் பெற்றுப் பிரசுரித்தன.
“நாளையும் வரும்” என்ற புதுக்கவிதைத் தொகுதியும் “தேன் மலர்கள்” என்ற மரபுக்கவிதைத் தொகுதியும் இரு தலைமுறைகளுக்கான கவிஞர் இவர் என்பதை நிறுவுகின்றன.
இவரது “வாழும் வழி” என்ற கவிதை அரசுப் பாடநூலிலும் இடம்பெற்றுள்ளது.
கவிதைப்போட்டியில் வென்று 1988 இல் ஜனாதியிடம் விருதையும் 2002 இல் இளம் படைப்பாளருக்கான விருதையும் பெற்றவர்.
இவரது இலக்கியச் செயற்பாட்டின் உச்சமாகக் கணிக்கப் பெறுவது தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஊடாக அவர் ஆற்றிய பணிகளாகும்.
வயது வேறுபாடு பாராது மூவினத்துக் கலைஞர்களினதும் சேவைகளைப் பாராட்டி விருது வழங்கியதன் மூலம் கலைத்துறையில் எல்லோராலும் அறியப்பட்டவராகவும் பாராட்டப்பட்டவராகவும் கைதட்டல் பெற்றார். அவர் கடந்த திங்கள் இரவு (23.11.2020) இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
அவரின் பிரிவால் இலங்கையில் மட்டுமல்ல இந்தியா, மலேசியா போன்ற நாடுகளின் தமிழ் நிலம் கவலையில் ஆழ்ந்துள்ளது.