சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 11)

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 11)

— பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —

“இது என் கதையல்ல,

என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை”

1970 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல்தான் என் வாழ்வில் நான் பங்குபற்றிய முதல் தேர்தல். அதற்கு முன்னர் 1965 ஆம் ஆண்டுத் தேர்தலின்போது நான் சிறுவனாயிருந்தேன். அந்தத் தேர்தலுக்காக களுவாஞ்சிகுடி வீரபத்திரர் ஆலய வீதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திற்கு பன்னிரண்டு வயதுச் சிறுவனாக நான் சென்றிருந்தமை நினைவில் இன்னும் நிற்கின்றது. அண்ணாந்து பார்த்துக்கொண்டு, நான் மேடைக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தமை நெஞ்சில் இப்போதும் நிலைத்திருக்கிறது. திரு. அ.அமிர்தலிங்கம் அவர்களும், திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களும் குழந்தைப் பருவத்தில் இருந்த தங்களின் ஒரு மகனையும் அந்தக் கூட்டத்திற்குக் கொண்டு வந்திருந்தார்கள்.

1970 ஆம் வருடம், சிறுவனாக இருந்த நான் இளைஞனாக மாறிக்கொண்டிருந்த பருவம். மே மாதம் 27 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. அப்போது எனக்கு வயது பதினேழு. வாக்குரிமை கிடைக்கப் பதினெட்டு வயது பூர்த்தியாக வேண்டும். அதனால் எனக்கு அப்போது வாக்குரிமை இல்லை. ஆனால், என் வாக்குக்கு வலிமை இருந்தது. நானும், நண்பர்கள் சிலரும் தேர்தல் பரப்புரையில் சிட்டுக்களாய் பறந்து திரிந்தோம். எங்களுக்கு உயிரினவியல் ஆசிரியராக இருந்தவர் மயிலங்கூடலூர் பி.நடராசன் அவர்கள். எங்கள் மனதிற்குகந்த ஆசிரியரான அவர் தமிழ் மொழியில் மிகுந்த பற்றுள்ளவர். ஆற்றல் மிக்க எழுத்தாளர். எழுதும் திறமை எனக்குள் கொஞ்சம் இருப்பதாக எப்படியோ அவர் இனம் கண்டுகொண்டார். பழுதுபடாமல் அதனை வளர்ப்பதற்கு எனக்குத் தெரியாமலே பல்வேறு வழிகளில் ஊக்கம் கொடுத்தார்.

1968 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் நான் படித்துக்கொண்டிருந்தபோது பாடசாலையால் வெளியிடப்பட்ட “உயிர்ப்பு” என்ற சஞ்சிகைக்கு ஆசிரியராக என்னை நியமித்து, எழுத்துப் பணிக்கு என்னை இழுத்துக் கொண்டுவந்து சேர்த்தவர் அவர்தான்! அவரால் சுதந்திரன் பத்திரிகையின் தொடர்பு எனக்குக் கிடைத்தது. அவரின் உறவினரோ அல்லது நண்பரோ ஆன, உமாபதிசிவம் அவர்கள் சுதந்திரனில் முகாமையாளராக இருந்தார். அவர் என்னைக் களுவாஞ்சிகுடிப் பகுதியின் நிருபராக நியமித்தார். கோவை மகேசன் அவர்கள் சுதந்திரனுக்கு ஆசிரியராக இருந்தார். எழுதினேன் – சுதந்திரனிலும் எழுதினேன்! அங்கே இங்கே என்று சுதந்திரமாகவும் எழுதினேன்,

நான் சார்ந்திருந்த தமிழரசுக் கட்சிக்காகவும், தலைவர் திரு.சி.மூ.இராசமாணிக்கம் அவர்களுக்காகவும், சுதந்திரனிலும், தேர்தல் கால உள்ளூர்ப் பத்திரிகைகளிலும், பிரசுரங்களிலும், நான் எழுதிய பரப்புரைக் கட்டுரைகளும் அரசியல் செய்திகளும், எதிர்க்கட்சியினரை எள்ளிநகையாடும் விமர்சனங்களும் நல்லதொரு பிரபல்யத்தை நம்மவர் மத்தியில் எனக்கு ஏற்படுத்தின.

தலைவர் திரு இராசமாணிக்கம் அவர்களின் நேரடிக்கவனத்தை எனது கட்டுரைகள் ஈர்த்தன. அதனால், அரசியல் துண்டுப்பிரசுரங்கள், பரப்புரைகள், பதாகைகள் என்பவற்றை எழுதிக்கொடுக்கும் பணியில் இந்தப் பதினேழுவயது இளைஞன் படு”பிசி”யானான்! இளமையின் வாசலில் எடுத்தடிவைக்கும் பருவத்தில் இருந்த எங்களின் நண்பர்கள் கூட்டத்தை ஊர்மக்கள் “குளவிப்படை” என்று குறிப்பிட்டு அழைத்தார்கள். இராசமாணிக்கம் அவர்களின் ஆதரவாளர்கள் விருப்பத்தோடு செல்லமாகவும், எதிர்ப்பாளர்கள் வெறுப்போடு கேவலமாகவும் எங்களுக்கு வைத்த பெயர் “குளவிப்படை!”

தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக திரு. இராசமாணிக்கம் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டவர் திரு. சோ. உ. தம்பிராசா அவர்கள். இவர் முன்னாள் பட்டிருப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சோ. உ. எதிர்மன்னசிங்கம் அவர்களின் சகோதரர்.

——— ———- ———

இந்த இடத்தில் ஒரு விடயத்தை நான் கூறியே ஆகவேண்டும். எனக்கு அப்போது பன்னிரண்டு வயதிருக்கும் என்று நினைக்கிறேன். அப்போதுதான், முதன்முதலாக களுவாஞ்சிகுடிக்கு மின்சாரம் வந்தது. பட்டிருப்புத் தொகுதியில் முதன்முதல் மின்சாரம் எட்டிப்பார்த்ததே களுவாஞ்சிகுடியில்தான். அப்போது இராசமாணிக்கம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். களுவாஞ்சிகுடிக்கு மின்சாரம் வழங்குவதற்கான மின்மாற்றி (Transformer) பட்டிருப்புக்குச் செல்லும் வீதியில், இப்போதைய பொதுச்சந்தை இருக்கும் இடத்தைத் தாண்டியதும் எதிரே வருகின்ற வளைவில், வலப்பக்கமாகக் கிடந்த வளவில் நிறுவப்பட்டது. அப்போது அந்த இடம், சுசீலா அக்கா (ஆசிரியை திருமதி இரவீந்திரன்) அவர்களின் குடும்பத்தவருக்குச் சொந்தமாக இருந்தது.

அந்த மின்மாற்றியின் ஆளியை அமுக்கி முதன்முதலாக மின்சாரத்தை வழங்கும் நிகழ்வு நடைபெற்றபோது சின்னஞ் சிறுவனாக நானும் அங்கே நின்றிருந்தேன். அந்த நிகழ்வில்தான் முதல்முதலில் திரு. இராசமாணிக்கம் அவர்களும், திரு எதிர்மன்னசிங்கம் அவர்களும் ஒன்றாகக் கலந்துகொண்டார்கள். களுவாஞ்சிகுடிக்கு மின்சாரம் வருவதற்குக் கால்கோள் இட்டவர் எதிர்மன்னசிங்கம் அவர்கள் என்பதால் அவரையும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அழைத்திருந்தார் இராசமாணிக்கம் அவர்கள். இருவருமாக மின்சார வழங்கலை ஆரம்பித்து வைத்தார்கள்.

அப்போது, அமரர் கராஜ் ராஜா அண்ணனின் தந்தையார் மாணிக்கம் அவர்கள், சொன்ன வசனம் இன்னும் மறக்காமல் எனது காதுகளில் ஒலிக்கிறது. இராசமாணிக்கம் அவர்களையும், எதிர்மன்னசிங்கம் அவர்களையும் பார்த்து, “ஐயாமார் நீங்க ரெண்டுபேரும் எப்பவும் இப்பிடியே இரிக்கோணும்.” என்று அவர் சொன்னார், அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த இருவரும் மக்கள் நலன் சம்பந்தமான அந்த நிகழ்ச்சியில் இணைந்து கலந்துகொண்டமை எவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை, மாறாக எல்லோருக்கும் மகிழ்ச்சியையே கொடுத்தது.

ஆனால், அதுதான் அவர்கள் இருவரும் இணைந்து கலந்துகொண்ட இறுதி நிகழ்ச்சியும் ஆயிற்று. அடுத்த தேர்தலுக்கு முன்னரே எதிர்மன்னசிங்கம் அவர்கள் அமரர் ஆகிவிட்டார்.

இந்த இடத்தில் இன்னும் ஒரு விடயத்தையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். இராசமாணிக்கம் அவர்களது வீடு இருந்தது களுவாஞ்சிகுடியில். எதிர்மன்னசிங்கம் அவர்களதும், பின்னர் தம்பிராசா அவர்களதும் இல்லம் இருந்தது எருவிலில். இராசமாணிக்கம் அவர்கள் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை எருவிலில் நடாத்துவதில்லை, தம்பிராசா அவர்களின் கூட்டங்களும் களுவாஞ்சிகுடியில் நடாத்தப்படுவதில்லை. அது மாத்திரமல்ல, ஒருவர் மற்றவரது ஊருக்கு வாக்குக்கேட்டுச் செல்வதும் இல்லை. வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்காக இப்படி நடந்துகொண்டார்கள் என்று சொல்லமுடியாது. இத்தகைய பண்பாடு பேணப்பட்டதால் வீணான வன்முறைகள் தவிர்க்கப்பட்டன என்று வேண்டுமானால் சொல்லலாம். அந்த அளவிற்கு அரசியல் நாகரிகம் அந்தக்காலத்தில் நிலவியது.

——— ———- ———

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுத் தேர்தலுக்குத் திகதி குறிக்கப்பட்டுவிட்டால், ஊரெல்லாம் ஒரே பரபரப்புத்தான். இப்போதும் அப்படித்தான் என்றாலும், பத்து வருடங்களுக்கு முன்புவரை ஏறத்தாழ இருபது வருடங்கள் செத்துப் பிழைக்க வேண்டியதே தேர்தல் காலத்து நிலைமை! அப்போதெல்லாம் உயிராபத்துக்கள் அதிகமாக இருந்தன. அச்சுறுத்தல்கள், வாய்திறந்து பேசமுடியாத பதற்றம், எந்தக் கோணத்திலிருந்து, யாருக்கு ஆபத்து வரும் எந்த உருவத்தில், எந்த நேரத்தில், எவரால் வரும் என்று தெரியாத வகையில், அஞ்சி அஞ்சி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அலமந்து வாழ்நாளைக் கடத்தவேண்டிய சூழ்நிலை! இவைகளையெல்லாம் எதிர்நோக்க வேண்டிய நிலைமை எண்பதுகளின் நடுப்பகுதி வரை இருந்ததில்லை.

தேர்தல் காலத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர்களைக் காண்பதற்கும், அவர்களது உணர்ச்சிமிக்க பேச்சுக்களைக் கேட்பதற்கும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். தென்னிந்திய சினிமா நடிகர்களைக் காண்பதற்கு இப்போது மக்களிடம் இருக்கின்ற ஈர்ப்புணர்வைப்போல வடக்கில் இருந்துவரும் தலைவர்களைக் காண்பதற்கு கிழக்கிலும், கிழக்கிலிருந்து செல்லும் தலைவர்களைக் காண்பதற்கு வடக்கிலும் மக்கள் மிகுந்த ஆர்வத்தைக் காட்டினார்கள்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களின் ஒவ்வொரு தொகுதிக்கும் பெரும்பாலும் எல்லாத் தலைவர்களும் செல்வார்கள். அவ்வாறே பட்டிருப்புத் தொகுதிக்கும் அனேகமானோர் வந்தார்கள். பல ஊர்களில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன. அந்தக் கூட்டங்களில் பலவற்றுக்கு நான் சென்றேன். தலைவர்களின் பேச்சுக்களையும், கூட்டங்களின் சிறப்புக்களையும், அலைகடலெனக் கூடிய மக்களின் எழுச்சிகளையும் பற்றி பலப்பல செய்திகளையும், கட்டுரைகளையும் பத்திரிகைக்காக அனுப்பிக்கொண்டிருந்தேன்.

வழமைபோல, மாபெரும் பிரசாரக் கூட்டம் ஒன்று களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது. வீரபத்திரர் ஆலய வீதியில் திரு. இராசமாணிக்கம் அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்திற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். தந்தை செல்வா அவர்கள், கட்சியின் செயலாளரும் வட்டுக்கோட்டை வேட்பாளருமான அ. அமிர்தலிங்கம் அவர்கள், உடுவில் வி.தர்மலிங்கம் அவர்கள், அடலேறு ஆலாலசுந்தரம் அவர்கள், பருத்தித்துறை க. துரைரத்தினம் அவர்கள், திருகோணமலை பா. நேமிநாதன் அவர்கள், மட்டுநகர் செ. இராசதுரை அவர்கள், மன்னார் சூசைதாசன் அவர்கள், மருதமுனை மசூர் மௌலானா அவர்கள், கல்முனை உதுமாலெப்பை அவர்கள் ஆகியோரெல்லாம் கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார்கள்.

இவர்களுடன் திருமதி. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களும் இன்னும் சில சிறப்புப் பேச்சாளர்களும் எழுச்சிமிகு உரைகளை வழங்கினார்கள்! அந்தக்கூட்டத்தில் வழமைபோலவே மிகவும் உணர்ச்சிகரமாகப் பேசியவர்களில் மிகவும் குறிப்பிடத் தக்கவராக விளங்கிய மசூர் மெளலானா அவர்கள், அந்தக் கூட்டம் நடைபெற்று ஒரு வாரகாலத்தில் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்துகொண்டார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

அடுத்தவாரம் ஒரு பத்திரிகையில், “கேட்கின்ற கட்சியை விட்டு, கொடுக்கின்ற கட்சிக்குச் சென்றேன்” என்ற அவரது அறிக்கை பிரசுரமாகியிருந்தது. ஆனால், அவர் சென்று சேர்ந்த ஐ. தே. கட்சி அந்தத் தேர்தலில் படுதோல்வியடைந்தது. அதுவரை, வரலாறுகாணாத வெற்றியைப் பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் ஸ்ரீமாவோ பண்டாரநாயாக்கா அம்மையார் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியில் அமர்ந்தது என்பதுதான் நடந்தேறிய வரலாறு.

எத்தனை கூட்டங்கள்! எத்தனை சம்பவங்கள்! எத்தனை தொடர்புகள்! எத்தனை நகர்வுகள்! எல்லாமே முடிவுக்கு வந்தன. 1970 தேர்தல் முடிந்தபின்னர், அன்றிரவு நாங்கள் தூங்கவேயில்லை. கூட்டம் கூட்டமாக வீதியில் நின்றுகொண்டிருந்தோம். நள்ளிரவு தாண்டிய வேளையில் அமரர் க. அருமைலிங்கம் அவர்கள் (பின்னாளில் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினராக இருந்தவர்) அவசரமாக எங்களிடம் வந்து சொன்னார், “எல்லாரும் வீட்டுக்குப் போங்க தம்பி…நாம தோற்றுப்போயிற்றம்!” என்னால் அந்தச் செய்தியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. முதலாவது தேர்தல், முதலாவது அனுபவம், முடிவு தோல்வி!

எப்படி அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியும்?

தலைவர் இராசமாணிக்கம் அவர்கள் தேர்தலில் ஏன் தோற்றார்? எப்படித் தோற்கடிக்கப்பட்டார்?

என்ற விபரங்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(நினைவுகள் தொடரும்)