வீழ்வோமென நினைத்தாயோ???

வீழ்வோமென நினைத்தாயோ???

— யாரோ இவன் —

எண்பது தொண்ணூறுகளில் எட்டுத் திக்கிலும் எவராலும் எட்டமுடியாத அளவிற்கு தனக்கென ஒரு பெயரை ஸ்தாபித்த ஒரு கல்லூரி. கல்வியிலும் சரி, விளையாட்டிலும் சரி, எதை எடுத்துக் கொண்டாலும் ஏனையவர்களுக்கு சவாலாய் இருந்து தன்னை முன் நிறுத்திக் கொண்ட ஒரு கல்லூரி. மன்னிக்கவும் ஒரே ஒரு கல்லூரி. உயர்தரக் கல்வி என்றால், அனைவரினதும் முதலாவது விருப்புத் தெரிவாக இருந்தது இந்த மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மட்டுமே. பல வைத்தியர்கள், பல பொறியியலாளர்கள், பல அரசியல்  தலைவர்கள், இன்று முன்னணியில் திகழும் பல கல்விமான்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறுபட்டவர்களை பல்வேறு துறைகளில் உருவாக்கியது இந்த மட்டக்களப்பு இந்துக் கல்லூரி.  

இதனை ஒரு கல்லூரி என்பதை விட கிட்டத்தட்ட  பல்கலைகழகம் என்றுதான் சொல்ல வேண்டும்.  சோதனைகளை எல்லாம் தன் சாதனைகளாய் மாற்றி சரித்திரப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்த இக் கல்லூரி, சிறிது காலங்களாக சரிவை சந்தித்து வந்தது. என்பதை மறுத்துவிட முடியாது. ஏனெனில் “எவன் தன்  தவறுகளை ஒப்புக் கொள்கின்றானோ, அவனே நாளைய தலைவனாக  மாறுகின்றான்”. 

சரிவு என்பது உண்மை தான். ஆனால் அந்த சரிவு இப்போது சீர்செய்யப்பட்டு வருகின்றது. உதாரணமாக, 2018ஆம் ஆண்டு ஒரு மாணவன் க.பொ.த. (சா/த) பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்று 10 வருடங்களுக்குப் பின் பாடசாலையில் இந்த சாதனையைப் புரிந்திருந்தான்.  இப்போது, கல்லூரியின் இளைய சமுதாயத்தினால் மற்றுமொரு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுரையை எழுத நான் ஆரம்பித்ததற்கு காரணமே இந்த சம்பவம் தான்.  

இந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கடந்த 15.11.2020 ஆம் திகதி வெளியாகி இருந்தது. அதிலே, பல மாணவர்கள், பல பாடசாலைகள் பல்வேறு சாதனைகளைப் புரிந்திருந்தாலும் இந்துக் கல்லூரியின் சாதனை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. ஏனெனில், பரீட்சைக்கு தோற்றிய 36 மாணவர்களில் 6 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாது 100 – 159 புள்ளிகளுக்கு இடையில் 21 மாணவர்கள் பெற்றுள்ளனர். 70 – 99 புள்ளிகளுக்கு இடையில் 6 மாணவர்கள் பெற்றுள்ளனர். அதாவது, இவர்களின் சித்தி வீதம் 91.7% ஆகும். ஏனைய பாடசாலைகள் 100%யை பெற்றபோது ஏன் இதனை மட்டும் இவன் பெரிதாய்க் கதைக்கிறான் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.  

அதற்கும் காரணம் உள்ளது. இந்துக் கல்லூரிக்கு மாணவர்களின் அனுமதியானது ஏனைய பாடசாலைகளில் நிகழ்வது போல் நடைபெறுவதல்ல. தன்  பாடசாலையின் கௌரவத்திற்காக திறமையானவர்களை மாத்திரம் தெரிவு செய்யும் பல பிரபல்ய பாடசாலைகளில் இருந்து (நான் குறிப்பிடுவது உங்கள் பாடசாலையை அல்ல.) நீ வேண்டாம் என நிராகரிக்கப்பட்ட மாணவர்கள் தான் இங்கு சேர்கின்றனர். அவர்களையும் வடிகட்டித்தான் இந்த சாதனையை புரிந்துள்ளது மட்டக்களப்பு இந்துக் கல்லூரி.  

ஒரு கட்டடம் உறுதியாக வேண்டும் என்றால் அதன் அடித்தளம் உறுதியாக இருக்க வேண்டும், அவ்வாறே, மாணவர்களின் கல்வி உறுதியாக வேண்டும் என்றால் ஆரம்பக்கல்வி உறுதியாக இருக்க வேண்டும். அந்த உறுதி இங்கு ஆரம்பிக்கப்பட்டு உள்ளது என்பது இந்தப் பெறுபேற்றின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யார் என்ன சொன்னாலும், எவர் என்ன பண்ணிணாலும் தன் தனி வழியால் கல்லூரியை தலை நிமிர வைத்த ஆசிரியருக்கு எமது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

சாதனைகளைப் படைத்த இந்த மாணவர்கள் இந்துக் கல்லூரியின் சரித்திரத்தை நாளை மாற்றி அமைக்கப் போகிறார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.  

ஆஆஆ… அதிலும் ஒரு சந்தேகம் தான். இனி எமது பெற்றோர்கள் இன்னொரு மாயைக்குள் போய் விடுவார்கள். அது என்னவென்றால், மாணவர்களை வேறு பாடசாலைக்கு மாற்றுவது. நீங்கள் சற்று சிந்தித்து பாருங்கள். நீங்கள் வேண்டாம் என்று உங்களை துரத்தியவர்களிடம் சரணடையப் போகின்றீர்களா? இல்லை, உங்களை நம்பி அரவணைத்த பாடசாலைக்கு கை கொடுக்கப் போகின்றீர்களா? முடிவு உங்கள் கையில். அப்படி பாடசாலையை மாற்றுவது என்றால் எமது முன்னைய சமுதாயம் செய்த அதே தவறை தான் நாமும் செய்யப் போகின்றோம். எம் கல்லூரியின் வீழ்ச்சிக்கு இது தான் முக்கிய காரணம். இங்கு விதைக்கப்பட்ட விதைகள் அங்கு அறுவடை செய்யப்படுவதனால் தான் எம் கல்லூரி வீழ்ச்சியடைந்து செல்கின்றது. இந்தத் தவறை நாம் மீண்டும் செய்யக் கூடாது. உங்கள் குழந்தை வேறு பாடசாலைக்கு சென்றிருந்தால் கூட்டத்தில் ஒருவராக இருப்பார். இங்கு கற்றதால்தான் தனி ஒருவராக இருப்பார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.  

அன்பார்ந்த பெற்றோர்களே, கற்ற கல்லூரியிலிருந்து மாணவர்களை மாற்றுவதும் புதிய பெண்ணைக் கண்டு பெற்ற தாயை மறப்பதும் ஒன்று தான். வன்மையாகக் கதைகின்றேன் என்று கோவப்பட வேண்டாம். வரலாற்றை மாற்றியமைக்க எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை. 

இதுவரை தெரிவித்தது நான். இனி தீர்மானிக்கப் போவது நீங்கள்.  

இந்த இளைய சமுதாயம் இருக்கும் வரைக்கும், குறைந்தது இன்னும் 10 வருடங்களில் இந்துக் கல்லூரி புதிய பாதையில் பயணிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.